Saturday 2 February 2013

சர்க்கரை நோய்- பரிசோதனை!


நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்பது இன்சுலின் குறைவதனால் ஏற்படுகிறது என்று அறிவோம்.
அதற்கு மாத்திரை வடிவிலும் ஊசி மருந்துகளின் வடிவிலும் சிகிச்சைகள் உள்ளன. சிலர் மாத்திரை மட்டும் சாப்பிட விரும்புவர். இன்சுலின் போடாமலேயே உணவுக் கட்டுப்பாட்டிலேயே நான் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வேன் என்றும் கூறுவார்கள்.
பொதுவாகவே சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு இன்சுலின் போட்டுக்கொள்வது பிடிக்காது, அதனாலேயே அவர்கள் மாத்திரை மட்டும் போதும் என்று மருத்துவரிடம் வாதாடுவார்கள்.
 டாக்டர் இன்சுலின் போடச் சொன்னார் ஆனால் நான் மாத்திரையில் அரை மாத்திரை கூட்டி சாப்பிட்டேன் இப்போது உடம்பு நன்றாக இருக்கிறது என்று சொல்லக்கூடியவர்களும் உண்டு.
நீரிழிவு நோய்க்கான சிகிச்சை எதன் அடிப்படையில் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது அவசியம்.
நீரிழிவு நோய்க்கான சிகிச்சை ரத்த்த்தில் சர்க்கரையின் அளவைப் பொறுத்ததா?
 என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
நீரிழிவு நோயாளியின் கணையம் எந்த அளவுக்கு வேலை செய்கிறதோ அதை வைத்துதான் நோயின் தீவிரம் அறியப் பட்டு அதற்கான சிகிச்சையும் தீர்மானிக்கப்படுகிறது.
மாத்திரை மருந்துகளின் அளவை கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ முன் கணையம் எப்படி வேலை செய்கிறது, இன்சுலின் எவ்வளவு சுரக்கிறது என்று அறிந்து கொள்வதே சிறந்தது.

முதலில்
1.இன்சுலின் சுரப்பு இருக்கிறதா? இல்லையா?
2.குறைவாக இருக்கிறதா? அதிகமாக இருக்கிறதா?
என்று  தெரிய வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக இதைத் தெரிந்து கொள்ளும் பரிசோதனைகளில் ஒன்று சி-பெப்டைட் பரிசோதனை. இந்த சி-பெப்டைடானது ரத்த்த்தில் இன்சுலின் எவ்வளவு உள்ளதோ அதே அளவுதான் இந்த சி-பெப்டைடும் இருக்கும். பெரும்பாலும் சர்க்கரைக்கான இரத்தப் பரிசோதனைகளில் இதுவும் இருக்கும்.
1.சி பெப்டைட் உதவியுடன் நாம் நீரிழிவு நோய் முதல் வகையா அல்லது இரண்டாவது வகையா என்பதனை அறியலாம்.
2.நோயாளிகளின் சர்க்கரை அளவு திடீரெனக் குறைவதற்கான காரணம் அறிய.

நீரிழிவு நோய் முதல் வகையில் கணையம் இன்சுலினை சுரக்காது. அந்த நோயாளிகளில் சி.பெப்டைடு அளவு இரத்தத்தில் மிகக்குறைவாக இருக்கும்.
இரண்டாம் வகை நீரிழிவு நோயில் சி.பெப்டைட் அளவு சரியாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்.


Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory