Wednesday 27 January 2010

சிக்குன்குன்யா-10

சிக்குன்குன்யா காய்ச்சல் என்பது தமிழகத்தில் மிக அதிகமாகப் பரவி வரும் நேரம் இது. பொதுவாக தினமும் கேள்விப்படும் சொல்லாக இருந்தாலும் இதில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்கள் உள்ளன.

1.காய்ச்சல் (இல்லாமலும் வரலாம்), மூட்டுக்களில் வலி, முகம் மற்றும் உடல் தோல் கருத்தல்.

2.பொதுவாக மூட்டுவலி, பாதங்கள், கணுக்கால்,கை, விரல்கள் ஆகியவற்றிலும் தோள்பட்டையிலும் வரும்.  

3.இது இளையோருக்கு குறைந்த நாட்களும்(5-15), நடுத்தர வயதினருக்கு மாதக்கணக்கிலும்(1-2.5), முதியோருக்கு இன்னும் அதிக் நாட்களும் இருக்கும். கர்ப்பிணிகளை அதிகம் தாக்குவதில்லை. மிகச்சிலருக்கு மூட்டுவலி 1 வருடத்தைத் தாண்டியும் இருக்கும்.

4.எலிசா, பி.சி.ஆர் பரிசோதனைகளில்  இதனைக் கண்டறியலாம். டெங்கு, லெப்டோஸ்பைரோசிஸ் போன்றவற்றிலிருந்து பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

5.வலி,காய்ச்சல் ஆகியவற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். மூட்டுக்களில் வீக்கமும் வலியும் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து குளோரோகுயின் மாத்திரைகள் சாப்பிடலாம்.

6.கொசுக்களை ஒழிப்பதுதான் ஒரே வழி. கை நீளச்சட்டை,முழு நீளக் கால் சட்டை அணிவது நலம்.

7.கொசு கடிக்காமல் இருக்க ஓடாமாஸ் போன்ற களிம்புகள் தடவலாம்.

8.தண்ணீர் வீட்டருகில் தேங்க விடக்கூடாது. பூந்தொட்டி, மீன் தொட்டிகளில் தண்ணீர் இருந்தல் வாரம் ஒருமுறை மாற்றிவிடவேண்டும்.

9.சிக்குன் குனியா வந்தவர்கள் கொசுக்கடி உடலில் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த நபரைக் கடித்த கொசு வேறு யாரையும் கடிப்பதன் மூலம் காய்ச்சல் பரவும்.

10.சிக்குன்குனியா வைரஸ் அமெரிக்காவின் ராணுவத்தில் உயிரியல் ஆயுதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது உலகம் முழுவதும் ரசாயன,உயிரியல் ஆயுதங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

Sunday 24 January 2010

கீட்டமைனும் போதைக்கலாச்சாரமும்!

கீட்டமைன், கீட்டமின், என்று பலவாறாக உச்சரிக்கப்படும் மருந்தைப் பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

அறுவை அரங்கில் மயக்கத்துக்காகக் கொடுக்கப்படும் மயக்கமருந்துகளில் ஒன்றுதான் கீட்டமைன். இந்தக் கீட்டமைன் தற்போது தவறாக போதைப்பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது.

இது பற்றி தமிழ் மக்கள் அதிகம் அறியாவிட்டாலும் தமிழகத்திலிருந்து இது பெருமளவில் கடத்தப்படுகிறது என்பது சமீபத்தில் செய்தியாக வந்தது. 

தமிழகத்திலும் இதை உபயோகிப்போர் அதிகமாகி வருவதால் நாம் இதுபற்றி நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

முன்பெல்லாம் பணக்கார வீட்டு இளைஞர்கள்தான் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிக் கிடப்பார்கள். இன்றைய நிலை அப்படி இல்லை., கால்சென்டரும், பி.பி.ஓ.வும் பெருகிய சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில்   பணக்காரர்களில் மட்டுமல்லாது நடுத்தர வர்க்கத்து குடும்பங்களைச் சேர்ந்த ஆண்/பெண் இரு பாலரிடமும் கூட போதை பழக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது. சென்னையிலும் கீட்டமைன் உபயோகித்தல் அதிகமாகி வருவது உண்மையில் கவலைகொள்ள வைக்கிறது.

ஆகையால் இதைப்பற்றி அறிவது மிக அவசியம்.

இது பொடியாகவும், ஊசிமருந்தாகவும் கிடைக்கிறது.

இதன் உபயோகங்கள்:

1.குழந்தைகளுக்கு மயக்கம் தருவதற்கு.

2.அறுவை சிகிச்சையில் பிற மருந்துகளுடன் சேர்த்து உபயோகிக்க.

3.சிறு மற்றும் அவசர அறுவை சிகிச்சையில்.

4.கால்நடை அறுவை சிகிச்சையில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கீட்டமைன் பிற மயக்க மருந்துகளைப்போல் இருந்தாலும்:

1.பிற மருந்துகளைவிட மூச்சுவிடுதலைக் குறைவாகவே தடுக்கிறது.

2.இதயத்துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.

இதன் விளைவுகள்:

1.ஹாலுசினேஷன்( தமிழில் இதற்கு என்ன பெயர் என்று தெரிந்தால் சொல்லவும்!)- நடக்காத ஒன்று நடப்பதுபோல் இருப்பது- கயிறு பாம்புபோல் தெரிவது, யாரோ தன்னைக் கூப்பிடுவதுபோல் கேட்பது.. ஆகியவை( இவை ஹெராயின்,கொக்கைன் போன்ற போதைப் பொருட்களிலும் உண்டாகும்).

2.கே-ஹோல்(K-HOLE)- உடலிலிருந்து தனியே பிரிந்து செல்வது போல் இருப்பது.

3.பறப்பதுபோலும், பிரபஞ்சத்தில் உலாவுதல் போலவும், கடவுள் காட்சி தருவது போலவும் மாயத் தோற்றங்களை விளைவிக்கிறது.

நீண்ட கால விளைவுகள்:

1.ஞாபக மறதி மற்றும் நரம்புக்கோளாறுகள்!

2.சிறுநீரகக்கோளாறுகள்

சென்னை டி.டி.கே. புனர்வாழ்வு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 20 புதிய போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒரு மருத்துவமனையிலேயே இவ்வளவு என்றால் பிற மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு வராத போதை அடிமைகளும் எவ்வளவு இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

Monday 18 January 2010

என் இரவுகள்!!

 

சூரியன் மறைந்ததும்

உருக்கொண்டது எனக்கான உலகம்.

பிரும்ம ராட்சதனின் கைகள் போல்

நீளும் அதன்

விரல்களில்

வித விதமான புனைவுகள்.

ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு

உருக்கொள்ளும் அதன் வசீகரத்தில்

பயம் அகன்ற குதூகலம்!

 

பள்ளியிலும், விளையாட்டினுள்ளும்

ஒளிந்திருந்தது,

என் அடுத்த இரவுக்கான

காத்திருத்தல்.

 

இரவுகளின் கருவெளிகளில்

சொல்லப்பட கதைகளின்

பூக்களையும், மலைகளையும்

நதிகளையும் சேகரித்து

ஒரு நந்தவனமாக்கினேன்!!

 

காலச்சரிவுகளில் எல்லாம்

மாறிப்போனாலும்

இன்னும் இரவுகளில்

விரல் பிடித்து

நுழைந்து விடுகிறேன்

எனக்கேயான அவ்வுலகில்!!

Thursday 14 January 2010

சில பொங்கல்களும் அர்ச்சனைகளும்!!

பொங்கலும் அர்ச்சனையுமா? என்று ஆச்சரியப்படுகிறீர்களா?

ஆமாங்க! எல்லோருக்கும் இது நடந்து இருக்கும்.   என்னன்னு மேட்டருக்குப்போவோம்!!

நான் ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன்.  என் மனைவி” ஏங்க பாத்துக்குங்க! 5 நிமிடம் வந்துவிடுகிறேன்”  ன்னு சொன்னது அரைகுறையாகக் காதில் விழுந்தது.( நமக்கு எது முழுசா விளங்கியிருக்குங்கிறீங்களா?)

எதைப் பார்த்துக்கச் சொல்றா? இவ எங்கே போறா? என்ற கேள்வி எழுந்தாலும் படிக்கிற சுவாரசியத்தில் அது அமுங்கிப் போய் ”சரி என்னத்தையாவது இவ பாட்டுக்குச் சொல்லுவா” என்று அரைச் சமாதானத்துடன் பத்திரிக்கையை மேய ஆரம்பித்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து ”ஏங்க பாத்தீங்களா?”  இதோ வந்து விட்டேன்! என்ற  குரல் அறைக்குள்ளிருந்து வந்தது.

குரல் காதில் விழுந்து மண்டையில் சில சிக்கலான சர்க்கியூட்டுகளில் புகுந்து வெளிவந்து நமக்கு உறைப்பதற்குள் என் மனைவி அறைக்குள்ளிலிருந்து வெளியே வந்து விட்டாள்.( அவ்வளவு வேகம் நம்ம மூளை…….நம்ம இல்லை… உங்களையும் ஏன் இதில் சேர்க்க…..என் மூளை!!)

என்ன நடக்கப்போகிறது என்று இப்போதே உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் அனுபவசாலி!!

நேராக அடுப்படிக்குப் போனவள் ஒரு கருப்புக்கலர் சட்டியுடன் வெளியே வந்தாள்.

”என்ன இது சட்டி கருப்பா இருக்கு?” என்று கேட்கும்போதே மூளைக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்தது.. சம் திங் ராங்க்…என்று…

ஏங்க பாலை அடுப்புல வச்சிட்டு  பாத்துக்கங்கன்னு சொன்னனே!! பார்க்கலையா நீங்க?  பால் அப்படியே அடிப்பிடித்துப் போச்சே….அப்படி என்னதான் இருக்கு இந்தப் பேப்பரில்.. என்று நான் சுதாரிப்ப்அதற்குள் காளி அவதாரம் எடுத்து என் கையிலிருந்த பேப்பரைப் பிடுங்கி இரண்டாகக் கிழித்தாள். அடுத்து என்ன நடக்குமுன்னு  நமக்குத்தான் தெரியுமே!! அதுக்கு மேல் அங்கே  நின்னா உடம்பு புண்ணாப்போகுமே……….

இந்தப் பொங்கல் அடிக்கடி நம்ம வீட்டில் நடக்கும்!! ஹி!! ஹி!!!

சரி!! உங்க வீட்டில் பால் பொங்கி விட்டதா? 

Wednesday 13 January 2010

கொலை செய்ய முடியுமா?

ஒருவரைக் கொலை செய்வது மிகவும் கடினமான காரியம்.

”சிரிஞ்சில் காற்றை இழுத்து தமனிக்குள்(vein) செலுத்தினான்-படுத்திருந்த அவன் கொஞ்சம் கொஞ்சமாக துடித்து இறந்து போனான்”

என்பதுபோல் இறப்பு என்பது எளிமையானதா?

இத்தகைய இறப்புகள் நடைமுறையில் சாத்தியமா?

இறப்பின் காரணங்களில் ஒன்றாக கிரைம் நாவல்கள் சிலவற்றில் ’ஏர் எம்பாலிசம்’ என்று நாம் படித்திருப்போம். ஏர் எம்பாலிசம் என்றால் நம் இரத்தக் குழாய்க்குள் காற்று செல்வதைக் குறிக்கிறது.

இரத்தம் எடுப்பதற்கு நாம் சாதாரணமாக 5 அல்லது 10 மில்லி சிரிஞ்சுகளை உபயோகிக்கிறோம். இத்தகைய சிரிஞ்சில் தவறுதலாக இரத்தம் எடுக்கும்போது காற்றை உள் செலுத்திவிட்டால் மரணம் ஏற்படுமா?

1.இரத்தம் எடுக்கும் சிரிஞ்சுக்குள் காற்று இருந்தது. அதை உள்ளே செலுத்தியதால் 10 நாள் கழித்து கை வீங்கி இறந்து போனார் என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை. சில பத்திரிக்கைகளில் இப்படி செய்திகள் வருவது வருந்தத்தக்கது.

2.ஒருவருடைய இரத்தக் குழாய்க்குள் 100-300 மில்லி காற்றைச் செலுத்தினால்தான் ஒருவருக்கு மரணம் ஏற்படும்.

3.  1.ஏர் எம்பாலிசம் இறப்புகள் ஆழ்கடலில் மூழ்குவோருக்கு ஏற்படுகின்றன.

3.2.பெரிய இரத்தக் குழாய் அறுவை சிகிச்சைகள்.

3.3.சிசேரியன் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை போன்றவை.

3.4.விபத்துக்களில் நெஞ்சில் பலத்த காயம் ஏற்படுதல்.

ஆகிய காரணங்களாலேயே ஏர் எம்பாலிச இறப்புகள் ஏற்படுகின்றன.  அதிலும் நீரில் மூழ்கும் ( SCUBA DIVERS) களிலேயே இது அதிகம்.  

ஒருவரை தெரிந்தோ தெரியாமலோ கையில் ஊசிபோடும்போதோ, இரத்தம் எடுக்கும்போது தவறுதலாக காற்று உள்ளே சென்றோ இறப்பை ஏற்படுத்துவது இயலாத செயல்.

Monday 11 January 2010

ஊசியைப் போட்டு முடித்து விடுங்கள்!!

மருத்துவமனைக்கு வரும் வயதானவர்களில் பலர் ”நடந்து ஆஸ்பத்திரிக்குக்கூட வரமுடியவில்லை. இனி நான் இருந்து என்ன செய்யப்போகிறேன். எல்லாம் முடிந்து விட்டது டாக்டர். ஒரு ஊசியைப்போட்டு என்னைக் கொன்று விடுங்கள்” என்று கூறுவார்கள்.

அதற்கு நாங்கள் “உங்களுக்கு ஊசியைப்போட்டா நீங்கள் நிம்மதியாகப் போய்விடுவீர்கள், நாங்க இல்ல கம்பி எண்ணனும்” என்று சிரித்துக்கொண்டே சொல்வது வழக்கம்.

அப்படி என்ன கால்வலி? உயிரை விடும் அளவுக்கு என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

சமீபத்தில் அதை உணருவதற்கு வாய்ப்பு வந்தது. ஆம் மோசமானவைங்கள்ளேயே முக்கியமானவைங்க!!!இடுகையைப் போட்டதில் கொசுக்களுக்கு என்மேல் கோபம் வந்து மூட்டுவலியுடன்கூடியவைரஸ் காய்ச்சலைத் தந்துவிட்டன. வலியென்றால் இடதுபுறக்கால் பாதம்,கணுக்காலில்    ஆரம்பித்தது, இரண்டு கைகளிலும் விரல்களிலும் மடக்கமுடியாத அளவுக்கு வந்துவிட்டது. சுத்தமாக நடக்க முடியவில்லை. தரையில் படுத்தால் எழுந்திரிக்க நாம் படும்பாடு சொல்லிமாளாதது. ஊசி போட்டுக்கொண்டுதான் நடக்கவே முடியும் என்ற நிலை. மாறி மாறி மூட்டுக்களில் வலி. தற்போது கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆகியும் முழுவதும் குணமடையவில்லை. கொஞ்ச நாள் இருந்த இந்த மூட்டுவலி, நடக்க இயலாமையை நம்மால் தாங்க முடியவில்லை. இப்படியே தினமும் வலியுடன் நடக்கமுடியாகல் இருப்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை.

ஒரு மருத்துவர் வேடிக்கையாகச் சொன்னார்.” கொசு போல் நன்றியில்லாத ஜீவன் எதுவுமில்லை. நம் இரத்தத்தையே குடித்துவிட்டு நன்றி சொல்லிவிட்டுப் போகாமல் வியாதியையும் கொடுத்துவிட்டுப் போகுது பாருங்க!”

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பெரும்பாலும் எல்லா வகையான எளிதில் தொற்றும் காய்ச்சல்கள் வந்துவிடும். ஏனெனில் காய்ச்சல் தொற்றும் காலத்தில் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 1000- 1500 நோயாளிகள் வந்து செல்லுவார்கள்.

மலேரியா, டைபாய்டு காய்ச்சலெல்லாம் எனக்கு வந்துள்ளது. ஆனால்  இதுபோல் ஒரு தாங்கமுடியாத மூட்டு வலியுடன் கூடிய காய்ச்சலை நான் இதுவரை பார்த்ததில்லை.

முதியவர்கள் தனியாக வசிப்பதும், தனியே அரசு மருத்துவமனைக்கு மூட்டு வலிகளுடன் வந்து செல்வதும் எவ்வளவு கடினம் என்பதை உணரமுடிகிறது.

”நீங்கள் 100 வயது வாழ விரும்புகிறீர்களா?” என்று சில வயதானவர்களிடம் நான் கேட்பது வழக்கம்!

இதைப் படிக்கும் நீங்கள்  100 வயது வாழ விரும்புகிறீர்களா?

Friday 8 January 2010

வெளிநாடு வாழ் இந்தியர் தினம்- வாழ்த்துக்கள்!!

இன்று வெளிநாடுகளில் வாழும் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஜனவரி 9ம் தேதியும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியரின் ஆக்கப்பூர்வமான செயல்கள், பொருளாதார வளர்ச்சி, உதவும் மனப்பான்மை ஆகியவற்றை பாராட்டும் வகையிலும் அங்கீகாரம் வழங்கும் வகையிலும் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் இந்த வெளிநாடுவாழ் இந்தியர் தின விழா கொண்டாடப்படுகிறது.

ஒரு வெளிநாட்டில் வாழும் இந்தியராக தென் ஆப்பிரிக்காவில் 20 ஆண்டு வசித்து வந்த மகாத்மாகாந்தி 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி நாடு திரும்பினார். இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9-ந் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.

1.வெளிநாட்டில் இருந்து தமிழ்ப்பணியாற்றும் அனைத்து மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

2.வெளிநாடுவாழ் மக்கள் அடுத்த தேர்தலில் வாக்குரிமை பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்!

3.25000 வெளிநாடுவாழ் இந்திய மருத்துவர்கள் புதிதாகத் துவங்க உள்ள மருத்துவமனைகளில்  சேவைசெய்ய வருகிறார்கள். வருக எம் கரத்தை வலுப்படுத்த!!

4.வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் மனவருத்தம் அளிக்கின்றன.

அனைத்து வெளிநாட்டுப்பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!

Thursday 7 January 2010

பிரேதப்பரிசோதனை-சூப்பர் இம்போசிஷன்

பிரேதப்பரிசோதனை-சூப்பர் இம்போசிஷன்

பிரேதப் பரிசோதனையில் அடையாளம் தெரியாத் உடலை அடையாளம் காண உபயோகப்படுத்தப்படும் முறைகளில் ஒன்றுதான் சூப்பர் இம்போசிஷன்.

பொதுவாக

1.அடையாளம் தெரியாமல் சிதைந்த முகத்துடன் சிதைந்த உடலையும் அடையாளம் காணவும்

2.தலைதனியாகவும் உடல் தனியாகவும் உள்ள சிதைந்த பிரதங்களை அடையாளம் காணவும் பெருமளவில் இது பயன்படுகிறது.

3.இதற்கு இறந்த நபரின் புகைப்படம் தேவை. புகைப்படம் புதிதாக இருத்தல் நலம்.

4.புகைப்படத்தில் முகம் நேராக இருக்கவேண்டிய அவசியமில்லை. பக்கவாட்டுத்தோற்றமாக இருந்தாலும் ஒப்பிட முடியும்.

5.இறந்த பிரேதத்தில் உள்ள கபால எலும்புகளின் அளவுக்கு முகத்தின் புகைப்படம் பெரிதாக்கப்பட்டு இரண்டிலும் முக எலும்புகள் ஒப்பிட்டுப்பார்க்கப்படுகின்றன.

6.கண்கள் இருக்கும் பகுதி,மூக்கெலும்பின் இடம்,மேல்தாடையின் கீழ்பாகம்,தாடை எலும்பு,பற்கள், காதுக்குழி ஆகியவை முக்கியமாக ஒப்பிட்டுப்பார்க்கப்படுகின்றன.

7.இந்தச் சோதனையின் மூலம் இறந்தவரின் தலை இதுவல்ல என்பதையே உறுதியாகக் கூறமுடியும்.

8.இறந்தவரின் தலை அடையாளம் தெரியாத பிரேதத்தின் புகைப்படத்தில் உள்ள தலையுடன் ஒத்துப்போகிறதா என்பதனை மட்டுமே நாம் கண்டு பிடிக்க முடியும். ஒரே அளவுள்ள இரட்டையர்கள், அல்லது அதே உடல் அமைப்புள்ளவர்களின் முக எலும்புகளும் ஒத்துப்போகலாம்.

9.இந்த முறையில் இறந்தவரின் கபால எலும்புகளின் பகுதிகள் கிடைத்தால் கூட இறந்தவரின் புகைப்பத்துடன்   ஒப்பிட்டுப்பார்க்க முடியும்.

10.இந்த முறையில் குறைகள் சில இருந்தாலும் இன்னும் பல இடங்களில் இது உபயோகப்படுகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் இது அதிகம் பயன்படுகிறது.

விரிவாகப் படிப்பதற்கு சுட்டி:

1.http://www.fbi.gov/hq/lab/fsc/backissu/oct2004/case/2004_10_case01.htm

Friday 1 January 2010

பெங்களூர்-உள்மன யாத்திரை-2

நான் வசித்த ஸ்ரீராம புரம் தமிழர்கள் நிரம்பிய பகுதி என்று சொல்லியிருந்தேன். தமிழர்கள் என்றால் அப்படி ஒரு மக்களை நாம் பார்க்க முடியாது. ஏன் என்று பிறகு சொல்லுகிறேன்.

அப்போது நாங்கள் வசித்த வீடுகளின் பின்புறம்தான் கழிப்பறை இருக்கும். பெரும்பான்மைத்  தெருக்களில் அப்படித்தான் அதனால் இரண்டு தெருக்களின் வீடுகளின் பின்புறம் சந்திக்கும் பகுதி மலம் அள்ளுவதற்காக சந்துபோல் அது ஒரு தனி வீதியாக இருக்கும். அந்தத் தெரு முழுக்க சிறுவர்கள் திறந்தவெளிக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவர். 

மலமாவது! கிலமாவது! அந்த சந்துதான் எங்களுக்கு விளையாட்டுக்குத் தோதான இடம். மதியம் சாப்பிட்டவுடன் பாயை விரித்து அம்மா, நான், தங்கை, தம்பி அனைவரும் வரிசையாகத் தூங்க வேண்டும். நம்ம தூங்கினாத்தானே! வேலைக் களைப்பில் அம்மாதான் முதலில் தூங்குவார்கள். சத்தமில்லாமல் எழுந்து வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டால், என்னைப் போல் தூங்காமல் வீட்டில் டிமிக்கி கொடுத்துவிட்டு வந்து கும்பலுடன் ஐக்கியமாகி விடலாம்.

   இங்குதான் பைனி, பேதி ஆகிய என் அருமைத் தெரு நண்பர்கள் ( பைனி- பழனி என்பது பெங்களூர் பைந்தமிழில்!!!, பேதி- அடிக்கடி வயிற்றைக் கலக்கும் சரவணனின் பட்டப்பெயர்!!!)   காத்திருப்பார்கள்!

நான் சொன்ன அந்தத் தெருவில்தான் பட்டத்துக்கு மாஞ்சாப் போடும் வேலை நடக்கும். இதற்கெனவே கடையில் கண்ணாடித்தூள் விற்கும். இல்லையென்றால் பியூசான டியூப் லைட்டை கல்லில் வைத்து அரைக்க வேண்டும். வஜ்ஜிரம் என்று பச்சைக் கண்ணாடி போல் கடையில் விற்பார்கள்.  அந்த வஜ்ஜிரத்தை தண்ணீர் சேர்த்து டால்டா டப்பாவில் வைத்து நெருப்புமூட்டினால் கரைந்து பாகாக வரும். அந்தப்பாகாகக் காய்ச்சிய டப்பாவில் நூல் கண்டைப் போட்டு நுணியை தந்திக்கம்பத்தில் கட்டி விடுவோம். அதிலிருந்து இழுத்துக்கொண்டே நூலுக்கு சாயம் போடுவதற்குக் கட்டுவது  போல் ( நூலுக்கு மாஞ்சா போடுவது பெரிய டெக்னிக்குங்க!! ) அடுத்த தந்திக்கம்பதில் நூலை சுத்தி இந்தக் கம்பத்துக்கும் அந்தக்கம்பத்துக்கும் நூல் கண்டு தீரும்வரை சுத்திக் காயவிட வேண்டும். சும்மா காஞ்சா சரியா வருமா? நூலைச் சுத்திக்கொண்டு வரும்போதே ஒருவன் துணி சுத்திய கையில் கண்ணாடித்தூளை அள்ளி நூல்மேல் மெல்லிய படலமாக இழுத்துக்கொண்டே வந்தால் வஜ்ஜிரம் தடவிய அந்த நூலில் கண்ணாடித்தூள்கள் ஒட்டிக்கொள்ளும். இப்படியே நூல் முழுவதும் ஒட்டிக் காய்ந்த்தவுடன் ராட்டையிலோ( நாங்களும் ராட்டையில் நூல் சுத்தியிருக்கோம்!!! காந்தி மாதிரி….ஹி!! ஹி!!!) அல்லது குச்சியிலோ சுத்திக்கொள்ளுவோம்.    எவ்வளவு பெரிய ப்ரொசிஜர் பார்த்தீர்களா? நாங்களெல்லாம்  பல மத்தியானங்களில் தூங்காமல் அப்பிரண்டிசாக இருந்து கற்றுத் தேர்ந்தவர்கள்!

பட்டத்துக்கு நூல் தயாரிப்பே கண்ணைக்கட்டுதில்ல. பட்டம் விடுவது ஒரு பெரிய கலை. அதுக்கு நம்ம ஏரியாவில் பட்டம் நிறைய விற்கும். பெங்களூரில் ஒரு விசேஷம் என்னவென்றால் பெங்களூரின் ஒரு மூலையில் வரிசையாக ஒரே நூலில் மூன்று நான்கு பட்டங்களை இணைத்து காலையில் ஏற்றினார்கள் என்றால் தேசியக் கொடிபோல் சாயங்காலம்தான் இறக்குவார்கள். வானத்தில் மிக உயரத்தில் பறக்கும் பட்டங்கள் அவை. மிக மிக உயரத்தில் ஏறக்குறைய விமானம் பறக்கும் உயரத்தில் பறப்பதுபோல் தெரியும்.

நம்ம பட்டமெல்லாம் அவ்வளவு  உயரம் பறக்காது. நம்ம நூல்கண்டு சின்னதுதானே.

பட்டத்தில் பல சூட்சுமங்கள் உண்டு. பொதுவாக பெங்களூரில் வால் வைத்த பட்டம்தான் விடுவார்கள். பட்டம் செய்வது ஒரு கலை. எல்லோருக்கும் வராது. இளமையில் கற்ற அக்கலை இன்று வரை எனக்கு மறக்கவில்லை. வாலுள்ள பட்டம், வாலில்லாத லாண்டா பட்டம் இரண்டும் நான் இப்போது கூட செய்வேன்; செய்கிறேன்.

இங்கு காரைக்குடியில் பட்டம் விடுவோர் யாருமில்லை. இங்கு ஒரு பட்டம் கூட யாரும் விடாததில் எனக்கு வருத்தம். பட்டத்தின்மேல் உள்ள ஆசை என்னை இப்போதும் விடவில்லை. ஓய்வு நேரத்தில் பட்டம் நாமே செய்து விடுவேன். என் மகன் பட்டம் விட வரமாட்டான். டிவியிலேயே அவர்கள் பொழுது கழிகிறது. ஆகையினால் அடிக்கடி  நானே மொட்டை மாடிக்குச்சென்று பட்டம் விட்டு என் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறேன். (தொடரும்..)

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory