Saturday 31 January 2009

கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது!


முன்னும் பின்னும்
ஒழுங்கு இல்லாமல்
கலைந்து கிடக்கும்
எழுத்துக்கள் போல்

கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்

தூரிகைக்கும்
துணிக்கும்
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்

புரிந்தும்
புரியாமலும்
இருக்கும்
ஒரு கவிதைபோல்!

உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்!

நுகராமலும்
சூடாமலும்
இருக்கும்
ஒரு மலர் போல்!!

உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!!

எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!!

Friday 30 January 2009

கலாச்சார சீரழிவும் வன்முறையும்!!!

அண்மையில் கர்நாடக மாநிலத்தில் உணவு விடுதி ஒன்றில் இரவு நடன நிகழ்ச்சியில் ஓட்டலுக்குள் புகுந்த ஒரு அமைப்பினர், கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, நடனம் ஆடிய இளம் பெண்களையும், பார்வையாளர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.ஓட்டலுக்கு வெளியில் தப்பிச் செல்ல முயன்ற பெண்களை ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தினர்.

இது கலாச்சார சீர்கேடு என்றால் இதனை இவர்கள் அனுகிய முறை சரிதானா?
இந்த இளைஞர்களுக்கு பிறர்மீது வண்முறையை பிரயோகிக்க என்ன உரிமை உள்ளது?

இதுபோல எங்கு கலாசார சீர்கேடு என்று இவர்கள் கருதும் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கு இவர்கள் அங்கு தோன்றி கலாசாரத்தை பாதுகாப்பார்களா?

இப்படி இவர்கள் செய்துதான் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டுமா?அல்லது இப்படி செய்வதால் கலாசாரம் காப்பாற்றப்படுமா?
என்று பல கேள்விகள் எழுகின்றன!!!!

முறைகேடான ஒழுக்கக் குறைவான செயல்கள் விடுதிகளில் நடக்க இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது யார்?

அதற்குப்பொறுப்பான அந்தப்பகுதி அதிகாரிகள் மீது அல்லவா நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

தமிழகத்தில் சில வித நடன நிகழ்ச்சிகள்,குதிரைப் பந்தயம் ஆகியவை தடை செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் அனுமதி அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கண்காணிக்க வேண்டியது காவலர் கடமை..அங்கு முறைகேடுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவர்கள் பணியும் கடமையும்!!

இங்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது?அல்லது பலமுறை காவல் துறைக்கு தெரிவித்தும்,போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகளோ, விடுதி நிர்வாகமோ கண்டு கொள்ளாத்தால்தான் இந்த இளைஞர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடு பட்டார்களா?

அதிகாரிகள் கையூட்டு பெற்று கண்டும் காணாமல் விட்டால் ,அவர்களை தண்டிக்காமல் ....பேருக்கு பணிமாற்றம் என்று நாடகங்கள்தான் அரங்கேறுகின்றன.

இதில் சில கவனிக்க வேண்டியவை என்னவென்றால் இப்படி நடன நிகழ்ச்சிகள் கர்நாடகத்தில் நிறைய இடத்தில் நடைபெறுகின்றன..

இவர்கள் இப்படி செய்வதால் கலாசாரம் காப்பாற்றப்படும் என்றால் சாதாரணமாக குடித்துவிட்டு அநாகரீக செயல்களில் தினமும் ஈடுபடும் ஆண்கள் மீது என்ன நடவடிக்கை இவர்கள் எடுத்தார்கள்!!

அல்லது இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் விபச்சார விடுதிகளை என்ன செய்தார்கள்!!

இவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட விடுதியை மட்டும் தாக்க வேறு காரணங்கள் ஏதும் இருந்தனவா?
இப்படி நம்மிடம் பல கேள்விகள் தோன்றுகின்றன..

ஒன்று நிச்சயம் !!
இப்படி உணர்ச்சி வசத்தில் இளைஞர்களுக்கு மதவாத கருத்துகளை போதித்து அவர்களை வண்முறையில் ஈடுபடுத்துவது மிகத்தவறு..

இதனால் நாட்டில் சாதாரண கலவரம் ,கல்வீச்சு முதல் குண்டு வீச்சு வரையான பெரிய கொடுமைகள் நடக்கின்றன..

இதில் ஈடுபட்டு சிறை செல்லும் இளைஞர்களின் எதிர்காலம் என்ன?
எங்கு கலவரம்,குண்டு வெடிப்பு என்றாலும் அவர்களைத்தான் முதலில் கைது செய்வார்கள்!! விசாரணையில் பலிகடா ஆக்கப்படுவார்கள்..

எது எப்படியோ ...... பெண்கள் மீதோ ஆண்கள் மீதோ வன்முறையை பிரயோகிப்பது தவறு.!

பெண்கள்தான் கலாச்சார சீரழிவுக்கு காரணம் என்பதும் தவறு..

Tuesday 27 January 2009

கொஞ்சம் தேநீர்-7! தாங்க முடியவில்லை!!!

காலையில் கவிதை, இல்லாவிட்டால்
வேறு ஏதாவது எழுதுவது என்று
உக்காந்தேன்!நான் பேப்பரில் எழுதுவது
இல்லை!நேரே பிளாகில்தான் எழுதுவேன்!

இந்த நேரத்தில்,ஜாலியா எழுத முடியல.
பின் வரும் கவிதையை,நிறைய இடத்தில்
அழுது கொண்டே எழுதினேங்க!
ஒரு சிறு குழந்தையின் பார்வையில்....




அதிரும் வெடியின்
ஒலியில்
நகரும் வண்டிகளின்
கரகரக்கும் மண் அரையும்
சத்தத்தில்!!
இடிந்து கொட்டும் செங்கல்
மண் குவியலில்
அமைதியாய் நான்!!

ஷெல்லின் ஒலி பயமறியாது
சத்தம் மரத்துப்போன
காது!

எரியும் தீயின் வெம்மை
அறியாது
வெந்து போன என்
இதயம்!!

யாரும் சோறூட்ட
வேண்டாம்!
மடியில் போட்டு
தாலாட்டவும் வேண்டாம்
நான் உறங்க!

கல் தரையும்,
காய்ந்து ஓய்ந்த
கண்ணீரும் போதும்
நான் உறங்க!!

மண்ணும்,கல்லும்,
இரத்தமும்,சதையும்
ஒன்றாய்,
பயமில்லை எனக்கு!

பாதையில் என்னை
இழுத்து எறிந்தாலும்
வலிக்கவில்லை
எனக்கு!!

லண்டன் சித்தப்பா
அனுப்பிய
கரடி பொம்மையும்,

கனடா மாமா
அனுப்பிய ஏரோப்ப்ளேனும்
எங்கே?
யாராவது பார்த்தீர்களா?

அப்பா சொன்னார்
நான் படித்து
ஏரோப்பிளேனில்
வெளிநாடு போவேனாம்!
அப்பா,அம்மாவையும்
கூட்டித்தான் போவேன்!

அம்மா சொன்னா
நாளை
படகில் வேற வீட்டுக்கு
போகலாம் என்று!

பள்ளிக்கூடம்
எப்பத் திறப்பாங்க!
போய் ரொம்ப நாளாச்சு!

பள்ளிப்பையையும்
காணோம்!!
புத்தகங்களும் காணோம்!
யாராவது பாத்தீங்களா?

ஏரோப்ப்ளேனும்,
படகும்
எங்கே வரும்?
நானும்,அம்மாவும்,
அப்பாவும் போகணும்!

அம்மா சொல்லியிருக்காங்க!
பசிச்சா அழுகக்கூடாதுன்னு!
மாமாவும்,
சித்தப்பாவும்
எனக்கு பிஸ்கட்,
சாக்லேட் எல்லாம்
வாங்கி வருவாங்களாம்!

சித்தப்பாவும்,
மாமாவும் இன்னும்
வரவேயில்லை!

யாருக்கும் சொல்லதீங்க!
ஒரு காகிதக் கப்பல்
செஞ்சு
ஒளிச்சு வைச்சிருக்கேன்!
அதுல
அம்மா,அப்பா
நான் எல்லாம்
போயிருவோம்.

சரி என்
அம்மா,அப்பாவை
பார்த்தீர்களா?

ஏன் இன்னும்
வரவில்லை அவுங்க!
அவங்களை
விட்டு
எவ்வளவு நேரம்
தனியா இருப்பேன் நான்?

எனக்கு
அழுகையா வருது!
ஆனாலும்
அம்மா சொல்லியிருக்காங்க
அழுகக் கூடாதுன்னு!

என் அம்மாவையும்,
அப்பாவையும்
யாராவது
பார்த்தா சொல்லுங்களேன்!!

Monday 26 January 2009

கொஞ்சம் தேநீர்-6 முடிவில்லா வேட்கை!!


சாளரம் தாண்டி
மௌனமாய்
இழையும்
நிலவின் ஒளி!

எங்கிருந்தோ கமழும்
ஏதோ
ஒரு பூவின்
மணம்!

சாத்திய அறை
இருளில்
மின்னும்
உன் கண்கள்!

என் சுவாசமும்
உன் சுவாசமும்
ஒன்று கலக்கும்
அதிசய
சுரம்!!

உள்ளும்
புறமும்
மாறி மாறி வீசும்
உன் வாசம்!!

என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!

உனக்கும்
எனக்கும்
மட்டுமே தெரிந்த
ஆதி மொழி!

சொல்லியும்
சொல்லாமலும்
புரியும்
முடிவில்லா வேட்கை!!

Sunday 25 January 2009

இந்திய குடியரசு தினம்



இன்று
இந்திய
குடியரசு தினம்!!

இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்!.

இந்தியக்கொடியில் மலர்களைப்பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டி பின் விழாவின் போது கொடிக்கயிற்றை இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு அனைவரும் பரவசப்படும் நாள்!!.

உலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இருமுறை கொடியேற்றி இறக்கிக்கொண்டு உள்ளோம்.

இன்று
நம் நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் விதத்தில் படை அணிவகுப்பு, இந்தியத்தலைநகரில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெறும்..

மாநிலங்களில் மாவட்ட சாதனை விளக்க அலங்கார ஊர்திகள்
மற்றும் சிறந்த சேவை புரிந்தோர்க்கான விருதுகள்,பாரட்டுகள்,பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்தியா விழாக்கோலம் காணும் நாள் இது.

பள்ளிக் குழந்தைகளுக்கோ மூவர்ணகொடியை சட்டையில் அணிந்து,கொடியேற்ற பள்ளி சென்று,இனிப்பு மிட்டாய்கள் தின்ற பின் விடுமுறை சந்தோஷத்தையும் அனுபவிக்கும் நாள்..

ஏன் சுதந்திர தினம், குடியரசு தினம் என்று இரண்டு கொண்டாட வேண்டும்?
முதல்
குடியரசுதினம் எப்போது அறிவிக்கப்பட்டது தெரியுமா?

ஆயிரத்துத்தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டே, காந்திஜி
பூரண
சுயாட்சியமே நமது நாட்டின் உடனடி இலட்சியம் என்று அதற்கு முன் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின்படி,
சனவரி இருபத்து ஆறாம் தேதி ஆயிரத்துத்தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டு முதல் சுதந்திர தினமாக அறிவித்து மக்கள் அமைதியான முறையில் கொண்டாட உத்தரவிட்டார்.

அந்த நாளே சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாக அனுசரிக்கப்படுகிறது..

இந்த குடியரசுதினத்தில் அனைவரும் வாழ்வில் வளமும் நலமும் பெற வாழ்த்துகிறேன்!!!!

தேவா...


Friday 23 January 2009

பல கோடிகளும் சில குழப்பங்களும்!!!


இனிய (காலை,மதியம்&இரவு) வணக்கம்!!!!

கொஞ்ச நாள் முன்பு ஒரு செய்தி படித்தேன்!!! என்னவென்றால் மனித உடலில் உள்ள கார்பன், ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன் மூலக்கூறுகள் - 10 to the power of 32-வருடங்கள் அழியாமல் இருக்கும்.அதாவது 32’0000000000 வருடங்கள்?எவ்வளவுன்னு எண்ணிப்பார்த்தால் மூளை குழம்பிப்போயிடும்!!
அதாவது ஏதாவது ஒரு வடிவில் இருக்கும்! அத்தனை வருடங்களுக்குப்பின்புதான் அதற்கு அழிவு.
சற்று யோசித்தால்” கோடி” என்ற சொல்லை நாம்,கணக்கிலோ,பணத்திலோ எத்தனை முறை உபயோகித்து இருப்போம்.? .......குறைவாகத்தான் இருக்கும்.
அப்படியாயின் புராண காலத்தமிழர்களுக்கு- கோடி,கோடானுகோடி,அதற்கு மேலும் பயன்படுத்தவோ சிந்திக்கவோ,அவற்றை எழுத்தில் பதியவோ வேண்டிய தேவை என்ன? இதுக்கு ஏதாவது காரணங்கள் இருக்கலாம்! தெரிந்தவர்கள் சொல்லுங்க...
என்னடா இரண்டையும் போட்டுக்குழப்புகிறானே என்று நினைக்க வேண்டாம்.
இந்த சிந்தனை என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், ரொம்ப நாளா..
அதே போல இந்து மதம் மற்றும் இன்னபிற மதங்களிலும் மனிதனின் இறப்பிற்குப்பின் தொடரும் வாழ்க்கை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
என்னங்க எவ்வளவு வருடம் சிரமப்பட்டு சேர்த்த அறிவு,நினைவுகள் எல்லாம் ஒரே நாளில் மண்ணோடு மண்ணாகிப்போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!!உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுதா?
இறந்த பின்னும் நமக்கு வாழ்க்கை ஏதோவொருவடிவில் இருக்கிறது என்ற திருப்தியோடுதான் ஆன்மீகவாதியெல்லாம் இருக்கிறார்கள்.
என்னை உயிருடன் சமாதியில் வையுங்கள் என்று சில (என்ன நம்பிக்கை பாருங்கள்?) சாமியார்கள் சாவதைப் பார்க்கிறோம்!
எல்லோரும் அப்படி நம்பிக்கையோடுதான் இருக்கிறார்களா?........... இல்லை இதுக்கு மேல் ஒன்றும் இல்லை!....குடும்பம்,குழதைகள் எல்லோருடனும் இனி எந்த தொடர்போ,எதுவுமோ இல்லை என்று மனசங்கடத்துடன்சாகிறார்களா?
அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்,உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் கூறுகிறேன்............என்பதுபோல அடுத்த பிறவியில் உங்களுக்கு பதில் அளிக்கிறேன் என்று நான் எழுத முடியுமா?இஃகி. இஃகி...இஃகி...........

அடுத்த பிறவியில நீங்க எனக்கு மனைவியாகவும், நான் உங்களுக்கு கண்வனாகவும் வந்து நீங்க எனக்குச் செய்கிற கொடுமைக்கெல்லாம் பழி வாங்குவேன்னு நம்ம மனைவிமார்கள் எவ்வளவு நம்பிக்கையோடு சொல்றாங்க பாருங்க!!
சில கிராமத்து மனிதர்கள் சாகும்போது “அதோ என் புருஷன் வந்து கூப்பிடுகிறார் நான் போகிறேன்” என்று சொல்லுவதை கேட்டிருக்கிறோம்..
அப்ப ரொம்ப அறிவியல் தெரியாதவன் சந்தோசமா சாகிறானோ?

நமக்குத்தான் பயம்,குழப்பம் எல்லாமா?
அடுத்த பிறவியிலே என்னவாப்பிறக்கப்போறோம் என்று தெரியவில்லை.
நாயாவோ,காக்கையாவோ,ஓணானாகவோ ஏன், கல்,மண்ணகவோ பிறக்கும் வாய்ப்புக்கூட இருக்கும் போல........
(நாயை கல்லால எறியாதீங்கப்பா! காக்கைக்கு சாப்பாடு வைங்க!)
இதைதான்” கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன்! ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலயில் மரமாவேன்” என்று கவிஞன் பாடினானோ??

நான் குழம்பியதும் இல்லாம உங்களையும் நல்லா குழப்பி விட்டேனா?
உங்கள் கருத்தையும் போட்டு எல்லாரையும் குழப்பிவிடுங்க!!

குழப்புகிற தேவா......

Thursday 22 January 2009

இடுப்பு எலும்பு முறிவு-அன்புடன் ஒரு சிகிச்சை-1

இடுப்பு எலும்பு முறிவு-சிறு விளக்கம்-1
இடுப்பு எலும்பு முறிவு
பற்றி சிறிய அறிமுகம்.......





அன்புடன் ஒரு சிகிச்சையில் இடுப்பு எலும்பு முறிவு பற்றி மேலோட்டமாக எழுதி இருந்தேன்.அதில் இருந்த அறிவியலைவிட மனிதாபிமானமே அனைவராலும் விரும்பப்பட்டது.

ஆயினும் அது ஒரு அறிமுகமே!

இடுப்பு எலும்பு முறிவு பெரும்பாலும் வயதானவர்களுக்கு எலும்பில் சத்துக்குறைவால் ஏற்படுகிறது.சாதாரண சிறு சறுக்கல்,தடுமாறி விழுவதுகூட போதும்.

தொடை எலும்பின் மேற்பகுதி எலும்பு(FEMUR) அதாவது இடுப்புப்பகுதி இரண்டு இடங்களில் உடையும்!

1.சிகப்பு நிறத்தில் காட்டியிருக்கும் எலும்பின் கழுத்துப்பகுதி!
2.ஊதா நிறத்தில் காட்டப்பட்டு இருக்கும் ந்லும்பின் கழுத்துப்பகுதிக்கு வெளியில் உள்ள (TROCHANTER) எலும்புப்பகுதி!!

ரொம்ப சாதாரணமான விஷயங்க.

சிகப்புநிறத்தில் உள்ள எலும்பின் கழுத்துப்பகுதிக்கு இரத்த ஒட்டம் ஊதா நிறப்பகுதியில்,அதாவது மூட்டின் வெளிப்பகுதியில் இருந்துதான் போகிறது.
இந்த இடம் புரிந்தால் எல்லாம் எளிமை. இல்லை புரியாம தலை சுத்துதா?

எலும்பின் சிகப்புப் பகுதியான கழுத்துப்பகுதியில் எலும்பு உடைந்தால் அதற்கு மேல் உள்ள மூட்டு உருளை இரத்த ஓட்டம் இல்லாமல் பட்டுப்போகும்.
அப்படி ஏற்படும்போது நாம் உருளையை மாற்ற வேண்டும்!!
பக்கவாட்டில் உள்ள படம் உருளை மாற்றிய பின்...

2.மூட்டின் வெளிப்பகுதியில்-அதாவது ஊதாநிறப்பகுதியில் உடைந்த்தால் எலும்புக்கு இரத்த ஒட்டம் பாதிக்காது. ஆகையால் எலும்ப் பட்டுப்போகாது!
ஆகையால் எலும்பை மாற்ற வேண்டிய தேவை இல்லை.
தகடு, திருகாணிகள் கொண்டு சரி செய்து விடலாம்.
ஓரளவாவது நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டேனா? இல்லை சொதப்பி விட்டேனா?
எதாக இருந்தாலும் பின்னூட்டத்தில் கேளுங்கள்! விளக்க முயற்சிக்கிறேன்.

இன்னொரு சங்கதி!
எனக்கு உரைகளுக்கு நடுவே குறிப்பிட்ட இடங்களில் படத்தை சேர்க்கத்தெரியவில்லை. கணிணி மக்கள் சொல்லுங்களேன்...

அன்புடன் தேவா..




Tuesday 20 January 2009

இரண்டு பால்!!!

வணக்கம்!
கவிதை,கவிஜ எல்லாம் படிச்சு இருப்பீங்க! புதுசா ஏதாவது போட்டுக்கிட்டெ இருக்கணும்.இல்லேன்னா தமிழ் வாக்காளப்பெருமக்களிடம் நம்ம நிக்க முடியுமா?
எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தாங்க-நான் இப்ப சொல்லப்போறது!

ரெண்டு பால் மனிதனுக்கு முக்கியங்க!!
ஒன்னு தாய்ப்பால்!
குழந்தை பிறந்தவுடனேயே அம்மாவுடைய தாய்ப்பால் கொடுக்கணுங்க!ஏன்னு நம்ம எல்லாருக்குமே தெரியுமுங்க.அதுல நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்குங்க.நம்ம வீடுகள்ள மாடு கண்ணு போட்டுச்சின்னா சீம்பால்னு திக்கா பால் நமக்குத்தருவாங்க.கண்ணுக்குட்டி குடிச்சது போக மிச்சமிருக்கும்-நமக்குதருவாங்க.இப்பத்தான் வீடுகள்ள மாட்டயே காணுமே.அதுனால இப்ப உள்ள பிள்ளைகளுக்கு சீம்பால்னா தெரிய ஞாயமில்லைங்க.
அதுபோல தாய்ப்பாலும் எங்கங்க குழந்தைக்குக் கொடுக்க முடியுது! பிறந்தவுடனேயே பால் சுரக்கலைன்னு டப்பா பால் வாங்கி வந்து வச்சிடுறாங்க.”என் ரெண்டு குழந்தைக்குமே டின் பால்தான்”ங்கிறது ஃபேஷனாப்போச்சு!

சரி இந்தப்பால் கொடுக்க முடியல! விடுங்க!ரெண்டாவது பால் ரொம்ப இதேபோல ரொம்ப முக்கியங்க! நான் என்ன சொல்ல வற்றேன்னு உங்களுக்கே தெரிந்து இருக்கும்!!

ஆமாங்க! தமிழ்ப்பால்தாங்க!!தாய் மட்டுமில்லாமல்,தந்தை,சகோதரன்,சகோதரி என்று எல்லோருமே இந்தப்பால் ஊட்டலாமுங்க.களிமண் இறுகுவதற்குள்ள சட்டியாவோ,பானையாவோ புடிக்குறோம்.அதுபோல குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே தமிழைக்கத்துக்குடுத்து விடவேண்டுங்க!

நம்ம எல்லாம் சின்ன வயசிலேயே நாவல்,கதை எல்லாம் படிக்க ஆரம்பித்து இருப்போம்!இப்ப நம்ம குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்கவே சிரமபடுறாங்க! தமிழும் தெரியலெ!ஆங்கிலமும் தெரியலே!எல்லாம் பாதி பாதி!
தமிழை சின்னவயதிலேயே கத்துக்கொடுத்து விடனுங்க.அப்பத்தான் தமிழில் சிந்திக்க ஆரம்பிப்பாங்க.தமிழும்,தமிழனும் இந்த உலகத்தில் இருக்கமுடியும்!
ஆங்கிலத்தை விடுங்க! தமிழில் படித்த தமிழர்கள் ஆங்கில கணிணித்துறையையே பார்பொற்றும் விதத்தில் கட்டி ஆளுகிறார்களே!!

தமிழ்ப்பற்று தேவா...

ஒரு மாற்றத்துக்காகா உள்தலைப்பு கீழே!!

தாய்ப்பாலும் தமிழ்ப்பாலும்!

Sunday 18 January 2009

கொஞ்சம் தேநீர்-5


அன்புக்காதலிக்கு!!!

மழை பெய்த மாலை
தோட்டத்தில் நின்றிருந்தாய்!
ரோஜாக்கள் பூத்திருந்த
நேரம்!

ரோஜாக்கள்
பிடிக்குமா என்றாய்?
ஆம் என்றேன்,

இந்த பூக்களில் எது
பிடிக்கிறது என்றாய்?
உன் முகம் என்றேன்!!

தோட்டத்தில் நிற்காதே
என்றேன்!
ஏன்? என்றாய்,

உன் அழகைக்கண்டு
வெட்கி
பூக்கள் எல்லாம்
வாடி விட்டன பார்!,
என்றேன்.

உனக்கு ரோஜாக்கள்
பிடிக்குமா என்றேன்!
இல்லை! என்றாய்!
ஏன்? என்றேன்!!

பறிக்கவும், பிறர்
சூடவும்
நான் விரும்பவில்லை!
என்றாய்!!!

பின் என்ன வேண்டும்?
என்றேன்,
சிறகுகள் வேண்டும்,
பிறர் பறிக்காமல்
நான்
பறக்கவேண்டும்
என்றாய்!

நான் ஒரு கூட்டுப்புழு!
கிளிகளுக்குள்ள
சுதந்திரம் எனக்கில்லையா?
என்றாய்!

சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!

உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை
வளர்க்க வேண்டும்!

நான் தந்தால் அது
இரவல் சுதந்திரம்

என் மூச்சுக்காற்றை
நீ எவ்வளவு நாள்
சுவாசிப்பாய்?

பிறர்
இரத்தத்தில்
எவ்வளவு நாள்
துடிக்கும் உன்
இதயம்?

பிறர்
கை பற்றி
எவ்வளவு நாள்
நடக்கும் உன்
கால்கள்?

சிந்திக்கிறாயா
அன்பே!!



Friday 16 January 2009

ஜாலியா ஒரு கவிஜ !!!

நீண்ட நாளா எழுதனும்னு ஒரு கவிதை
வைத்து இருந்தேன்.
சும்மா ஜாலியான கவிதைதான்!
ஜாலி மூடில் படிங்க!

புதுசா கவிஜ எழுதுற நம் அன்பு வலை
கவிஞ்சர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.
------------------

அம்பை எடுத்து
வில்லை வருத்தினான்!
உணவு கிடைத்தது!

பல்லைக்கடித்து
உணவை வருத்தினான்
சக்தி கிடைத்தது!

உடலை வருத்தி
உடற்பயிற்சி செய்தான்
கட்டுடல் கிடைத்த்து!

உளியை எடுத்து
கல்லை வருத்தினான்
சல்லிக்கல் கிடைத்த்து!

கண்ணை வருத்தி
பாடங்கள் படித்தான்
பாஸ் மார்க் கிடைத்த்து!

இதையெல்லாம் கண்டு பின்னர்

பேனாவை எடுத்து
பேப்பரை வருத்தினான்!!
கவிதை பிறக்குமென்று!!!

படித்தவர்.........வருந்தினர்!!!!
------------------

பி.கு:
பொறுமையாக படிச்சதற்கு நன்றி!!
திட்டுறவங்க நல்லா திட்டுங்க!!
எல்லாத்தயும் பின்னூட்டமாவும்
ஓட்டாவும்
குத்துங்க!!

கவிஞ்சர்.தேவா...

Thursday 15 January 2009

உயிர்ப்பால்!!




இந்தியாவே இலங்கை என்ன
நீ கழற்றி வீசிய
காலணியா!
இல்லம் விட்டு
வெளியேற்றிய
வேண்டாத பிள்ளையா?
இரத்தம் கடலாகி
உன் பாதம்
தொடும்போது
நீ கண் விழித்து
என்ன பயன்!!!
அலைகடல் தாண்டி
அழும் ஓலம் கேட்கவில்லையா?
எழுந்திரு!!!
சுவாசிக்க மூச்சுகள்
முடியும்முன்!!
துடிக்க இதயங்கள்
மறக்கும் முன்!!!
உலர்ந்த அந்த
உயிர்களுக்கு
உன் சுவாசம் கொடு!
உன் குழந்தைகளை
அணைத்து
உயிர்ப்பால் ஊட்டு!!!!!!!

Tuesday 13 January 2009

நினைவுப் பொங்கல்!!!!!!!!


பொங்கல் வாழ்த்துக்கள்!!

என்னுடன் இந்த சிறிய வலைப்பயணத்தில் பயணித்த அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

ஆதரவு நல்கியோர்:


அதிரை ஜமால்,    

சாய் கணேஷ் ,நாகப்பன்.ஆர்

சிம்பா, கணினிதேசம்

கார்த்திக் ,வால் பையன்

பூர்ணிமா சரண், பட்டிக்காட்டான்

தமிழ் தோழி ,அபு ஜுலைஹா

தாரணி ப்ரியா, எஸ்.எஸ்.கே

அபு அஃப்ஸர் ,கிஷோர்

வெ.நாகநாதன்,ஆனந்தென்

திகழ் மிளிர்,புதியவன்

சுரேஷ்,ரம்யா

கார்த்திக்க்ரிஷ்னா,   காரூரன்

லோகு ,காயத்ரி

முனியப்பன் ,மேக்ஸிம் இந்தியா

தமிழ் சரவணன்,     தங்கரசா ஜீவராஜ்

பிரேம் குமார் ,கலாட்டா அம்மணி

Dr.முருகானந்தன்,     நசரேயன்

கிழஞ்செழியன்,        ராஜ நடராஜன்

உருப்படாது அனிமா,   மிஸஸ்.டவுட்

அமரபாரதி ,குடுகுடுப்பை

சந்தனமுல்லை,        கூல்ஸ்கார்த்தி

பழமைபேசி ,ஜீவன்

ஹேமா ,அமரபாரதி

    சிந்து,துஷாந்தினி

திவ்யா, பரிசல்காரன்

நிலாவும் அம்மாவும்,  தமிழ்பிரியன்

அமிர்த அம்மா  கலையரசன்

குமரன் ,ஆளவந்தான்

கும்க்கி ,நசரேயன்

சாந்தி ,மகேஷ்

புருனோ, துளசிகோபால்

அன்புடன் அருணா,     

வடகரை வேலன் ,குப்பன் யாஹூ

கண்மணி ,அக்னிபார்வை

வளர்பிரை,  கலை இரா கலை

ராமலட்சுமி,  மதிபாலா

இவன் ,ஆண்ட்ரு சுபாசு

நாமக்கல் சிபி, கடையம் ஆனந்த்

திவ்யா,  ராகவன் நைஜீரியா

இயற்கை, மே வீ

கவின் ,யோகேஸ்வரன்

விக்னேஸ்வரன், ஹோஷியா

சின்னக்குட்டி,  ஜாஃபர்

மேடி

பொங்கல் வாழ்த்துக்கள்!!!!!!

வாழ்த்தும் தேவா.................. 








Monday 12 January 2009

அன்புடன் ஒரு சிகிச்சை!!!

அந்த அம்மாவுக்கு 50 லிருந்து 60 வயதுக்குள் இருக்கும்! நடுத்தரமான உடலமைப்பு!களைப்பும் ,உடல் பலகீனமும் பார்த்தவுடனேயே தெரிந்தது!!கண்கள் வலியில் உக்காரலாமா என்று கெஞ்சின!!!
உள்ளே வரும்போது தன்னால் நடந்து வர முடியாமல் இரண்டு பேர் இரண்டு பக்கமும் பிடித்துக்கொண்டு கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்தார்கள்!
பார்த்த்வுடனேயே அவர்கள் நடக்க சிரமப்படுகிறார்கள் என்பது தெரிந்தது!!!கூட்டிக்கொண்டு வந்தது ஒரு ஆண் ஒரு பெண்!..... அந்த அம்மாவுக்கு மகனோ! மகளோ!முகஜாடையில் சொந்தம் போலத்தெரிந்தது!
எனக்கு அவர்கள் இருவரையும் பார்க்கும் போது கோபம்தான் வந்தது! நடக்க முடியாத பெண்மணியை சிரமப்படுத்தி நடத்தி கூட்டி வருகிறார்களே என்று!!!.
கோபம் காட்டாமல் அமைதியாக!”ஏப்பா? வலி அதிகம் இருக்கும் போல இருக்கே! வீல் சேரில கூட்டி வரலாம் இல்ல! நடக்க விடாதீர்கள்! மேற்கொண்டு பிரச்சினையாகிவிடுமே! ”என்றேன்.
இல்ல சார்! நேத்துத்தான் இரவு பாத்ரூம் போகும் போது ஸ்லிப் ஆயிட்டாங்க போல இருக்கு! நாங்க யாரும் பார்க்கவில்லை!! தன்னால எழுந்து வந்து படுத்திட்டாங்க!காலையில் கொஞ்சம் வலது இடுப்பில் வலி இருக்கு என்றார்கள்! சரியாக நடக்க முடியவில்லை!அதுதான் கூட்டிக்கொண்டு வந்தோம்!!
சரி! அந்த இருக்கையில உக்கார வைங்க! ஏம்மா கால் சறுக்கி விழுந்தீர்களா? இல்லை
இடுப்பு வலி வந்து விழுந்தீர்களா? என்று கேட்டேன்...
அவர்களுக்கு சரியாக சொல்லத்தெரியவில்லை!!

மேலே கூறிய நிகழ்வு அடிக்கடி மருத்துவமனைகளில் நாம் பார்ப்பதுதான்!
நம்மில் சிலருக்கு இது பரிச்சயமாக, சொந்தக்காரர்களுக்கோ,நண்பர்களுக்கோ ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம்!!

மேலே கூறிய பிரச்சினை இருந்தால் பெரும்பாலும் அது இடுப்பு எலும்பு முறிவு ஆகத்தான் இருக்கும்!!வயதானவர்களுக்கு எலும்புகள் பலவீனமாக இருப்பதால் கீழே விழாமலேயே கூட இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுகிறது!

இதற்கு பெரும்பாலும் நாம் நுடவைத்திய சாலையில்தான் வைத்தியம் பார்க்கிறோம்!காரணம்? வயசாகி விட்டது...இனிமேல் வைத்தியம் பார்த்து என்ன பண்ணப்போகிறோம் என்ற அலுப்பு,பணவசதியின்மை இன்ன பிற காரணங்கள்!!!

இடுப்பு எலும்பு உடைந்து சரியான சிகிச்சை பெறாதவர்கள், வெகு விரைவில் நடக்கமுடியாததால், மனம் உடைந்து,தன் சுயகௌரவம் இழந்து மன நோயாளி போல ஆகிவிடுகிறார்கள்!!தான் குடும்பத்துக்கு ஒரு பாரம் போல உணர்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அன்றாடக்கடமைகளைக்கூட அடுத்தவர் உதவி இல்லாமல் செய்ய முடிவதில்லை!

ஒரு ஆய்வின்படி 50% இடுப்பு எலும்பு உடைந்த நோயாளிகள் உடைந்து ஒரு வருடத்துக்குள் இறந்து விடுகிறார்கள்!
ஆயினும் நவீன அறுவை சிகிச்சை மூலம் நன்றாக நடக்க வைக்கவும், எவருடைய துணையும் இல்லாமல் பழைய நிலைமைபோல் வாழவைக்கவும் முடியும்!!!
நம் பாசத்துக்குரியவர்களுக்கு வயதான காலத்திலும் கௌரவமான மன நிறைவான வாழ்க்கையை அளிப்போம்! அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரும் கடமையும் உதவியும்!!!

தேவா..........

Saturday 10 January 2009

அம்மா குத்துங்க!! அய்யா குத்துங்க!!

வலை நண்பர்களே!!
பட்டாம்பூச்சி விருது அது இதுன்னு ஏதோ ஒப்பேத்தி புதிய பதிவு எதுவும் போட முடியாம மண்டை குழம்பிப்போய் கிடந்தேன்.
இரவில் முழிச்சு பின்னூட்டங்கள் போட்டு என் புருசனும் போறான் கச்சேரிக்குகிற மாதிரி ஆக்டிங்கைக் குடுத்துக்கினு இருந்தேன்!!
ஒரு பதிவர் ப்ளாகில் ஒரு விளம்பரம்!
தமிழகம்.நெட்.ன்னு ..........................
சரி உள்ளே போய் ஒரு விசிட் அடிப்போம்னு போனேன்!!
அதுவும் ஒரு பதிவு திரட்டி போல!!!
கொஞ்சம் ரெண்டு மூனு பதிவுகளை அப்படியே மேலோட்டமா மேஞ்சிட்டு(நம்மதான் பாட புத்தகத்தையே முழுசா படிக்க மாட்டமே!!!!)இதுல நம்ம பதிவு எதையாவது உள்ள தள்ளுவோம்னு பார்த்தேன். கடித்தனமான ரெஜிஸ்ட்ரேச்னை முடிச்சு உள்ள போய் .......................
ஒரு பதிவை உள்ள தள்ளினேன்!!
டுப்ளிகேட் பதிவுன்னு வருது!!!..........
நம்ம இப்பதானே வருகிறோம்!!!
நம்ம தலைப்பையே யாரும் வச்சுருக்கான்களான்னு பார்த்தேன்!!
நம்ம பதிவேதான்!!!!!!!
அதிர்ச்சி! அதிர்ச்சி!! அதிர்ச்சி!!!!!

......... என்கிற நபர் பெரும் வலை திரட்டர் போல!!!
என் பதிவையும் அவர்தாங்க போட்டு இருக்காரு!!

நம்ம வேற வலைக்கு புதுசா!! என்னடா இது ? நம்க்குத்தெரியாம நம்ம பதிவைப்போட்டுட்டாங்களேன்னு..................ஜிவ்வுனு ஏறிவிட்டது!!!!
சட சடன்னு உக்காந்து.......இன்னைக்கு சூடா ஒரு மேட்டர் மாட்டிச்சுன்னு
(எவ்வளவு முட்டாள் பாருங்க நான்?!!..........................)
இந்த பாராவுக்கு மேல உள்ளதையெல்லாம் எழுதிவிட்டேன்!!!

இன்னைக்கு மாட்டுனான்கடா வசமா!!!ன்னு(நமக்கு ஒரு பதிவு வேற
மாட்டுச்சே இதைப்பத்தி எழுத!!!!)நினைச்சா.....
ஒரு சின்ன்ச் நெருடல்!!!
சரி!! யாரிடமாவது கேட்டு விடுவோம்னு சாய் கணேஷ்க்கு ஒரு ஃபோன் போட்டேன்!!
டுஸ்ஸுனு காத்து எறங்குன பலூன் மாதிரி ஆய்ப்போச்சு!!
இப்படித்தான் நமக்குத்தெரியாம எடுத்துப் போடுவாங்களாமே!!!!நமக்கு இதெல்லாம்
தெரியாதே......
சரி இவ்வளவு நேரம் நான் கஷ்டப்பட்டு எழுதுனத சும்மாவிடவும் மனசு இல்லை!!
அதுனாலதான் இதையும் பதிவிடுகிறேன்!
சரி, நண்பர்களே!!!
நம்முடைய பதிவை தொகுக்கும் முன் நம்மிடம் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா?
சொன்னால் நமக்கும் கொஞ்ச்ம் சந்தோஷமா இருக்கும் இல்ல!!!!
என்னைப்போன்ற புதிய பதிவர்களுக்கு இது சற்று மனவருத்தத்தை அளிக்கிறது!!!
தேவா..
...

Friday 9 January 2009

பறக்கும் பட்டாம்பூச்சிகள்!!!


வலை நண்பர்களே!!
இப்ப எந்த பதிவைத்திறந்தாலும் பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்தன!!!நிறய பேர் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து ஒட்டி விளையாடிக்கொண்டு இருந்தார்கள்!!சரி நம்மளை ஆட்டத்துக்கு சேர்த்துக்கலை போல.......என்று இருந்தா ஒரு பட்டாம்பூச்சியைப்பிடித்து
நண்பர் ஜமால் அனுப்பிவிட்டார்!!அதனை மற்றவர்களுக்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும்!!!
யார் யாருக்குக்கொடுக்கலாம்!!!
யோசிக்கவே ரெண்டு நாள் ஆச்சு!!!
சரி!
கொடுத்திடுவோம்!!
1.சாய் கணேஷ்-நல்ல சின்சியரான பதிவர். பங்குச்சந்தைப் புலி!!இனிமையாக பழகக்கூடியவர்! இவரை மாதிரி ஒருத்தரைப் பார்ப்பது அரிது!
2.சுரேஷ்-இப்படிப்போட்டா உங்களுக்குத்தெரியாது! அதனால்-SUREஷ்!! கனவுகளே பதிவுல
ரஜினி படத்துக்கு திரைக்கதை எழுதிய SUPERSTAR!!!
3.புருனோ-நல்ல திறமையான பதிவர். இவருடைய பதிவுகள் அறிவு பூர்வமானவை!கட்டாயம் அனைவரும் படிக்கவேண்டிய பதிவர்...
4.நாகப்பன்.ஆர்.-வண்ணத்துப்பூச்சி என்றே வலைத்தளம் வைத்திருப்பவர்.அற்புதமான கவிதைகள் எழுதுபவர்.
5.சிந்து-வலைப்பூவில் புதிய பதிவர்.நேர்மையான எண்ணங்களும்,எழுத்துக்களும்
கொண்டவர்.
இன்னும் இரண்டு அடுத்த இடுகையில்!!

Wednesday 7 January 2009

கொஞ்சம் தேநீர்-4

அருகருகே!!!

ஆயிரம் இடைவெளிகள்
நமக்குள் இருந்தாலும்
நம்........
இதயங்கள் என்னவோ 
அருகருகேதான்!

ஆயிரம் உறவுகள்
நம்மைப்பிரித்தாலும்
நம்........
உணர்வுகள் என்னவோ
அருகருகேதான்!

ஆயிரம் வேலைகள்
நம்மை அழுத்தினாலும்
நம்.......
எண்ணங்கள் என்னவோ
அருகருகேதான்!

ஆயிரம் நிகழ்வுகள்
நம்மைத் தொலைத்தாலும்
நம்.......
இதயங்கள் துடிப்பது
ஒன்றாகத்தான்!!!!




Monday 5 January 2009

அம்மா செல்லமா!!! அப்பா செல்லமா?....


                சாதாரணமா குழந்தைகளுடன் விளையாடும் பொழுது பார்த்தால் அப்பாக்கள் தாங்கள் குழந்தைகளுக்கு நிறைய சொல்லித்தரலாம்!!!                            
                கிரிக்கெட்டை எடுத்துக்கிட்டா......
                டிபன்ஸ் ஆடுவது எப்படி....
                டிரைவ் செய்வது எப்படி.......
                கட் அடிப்பது எப்படின்னு.....
     ஆனா நிறைய இடங்களில் பார்த்தா அப்பாக்கள் “எனக்கு எங்கங்க நேரம் இருக்கு அதுதான் ஸ்கூல்ல போய் கத்துக்கிறான் இல்ல!! அவன் பிரில்லியண்ட் பாய்!!எல்லாத்தையும் ஈஸியா கத்துகிட்டு விடுவான்”னு....எஸ்கேப் ஆயிடுவாங்க!! 
                பையனுக்கும் தெரியும்!!!அவனும் ஸ்கூலில் ஆடுகிறான் இல்ல!!
வீட்டில் அவனோடு சேர்ந்தும் அண்ணன் எல்லாம் ஆடுவாங்க!!
கடைசியில என்ன ஆகும் ! 
                அம்மாகிட்ட போவான் பையன்.....
               ”அண்ணனை அவுட் ஆக்கவே முடியலைம்மா என்னைய பேட்டிங் புடிக்க விடமாட்டேன்கிறான்னு ”புகார் போகும்.
                அப்புறம் அம்மா சமாதானம் பண்ணி பந்தை போட்டு அவனை அடிக்கச்சொல்லி ஆட்டத்தில ஜெயிக்க வச்சு , அப்புறம் அவனை சமாதானப்படுத்தி சாப்பாட்டை ஊட்டி தூங்க வைப்பார்கள்!
                 அதேமாதிரி பாருங்க ஒரு குழந்தையை , இவ்வளவு நல்லா டான்ஸ் ஆடுறியே!!! யார் உனக்கு கத்துக்குடுக்கிறாங்கன்னா இந்த மிஸ்கிட்ட கத்துக்கிறேன்னு சொல்லும்!!!சரி வீட்டில் என்ன பண்ணுவேன்னு கேட்டா....“அம்மாகிட்டதான் நான் டான்ஸ் கிளாஸ் போயிட்டு வந்தா வீட்டுலயும் ஆடிக்காட்டுவேன்னு” சொல்லும்!!
                 சரி உங்க அம்மாவுக்கு டான்ஸ் தெரியுமான்னு கேட்டா “அவங்களுக்கு தெரியாதுன்னுதான் சொல்லும்!!!
                 சரி உங்க அப்பாகிட்ட ஆடிக்காட்டுவியா?
                 எங்க!! “அவர் ஆபீஸ் விட்டு வந்தா கம்பியூட்டர்ல உக்காந்துடுவாரு!!
அதை முடிச்சா டிவி பார்ப்பார்!!! அவருக்கு நேரமே இல்லை”ன்னு... ஒரு பதில் தரும்!!!!
                நான்அப்பாகிட்ட ஏதாவது கேட்டா”அப்பாவுக்கு வேலை இருக்கும்மா!.......நீ அம்மாகிட்ட கேட்டுக்கம்மான்னு சொல்லிவிடுவார்”னும் சொல்லும்!!
                 இது தாங்க நிறைய இடத்தில நடக்குது!!!!
                விளையாட்டுக்கு சொல்லவில்லை !!!”நிறைய அப்பாக்களுக்கு குழந்தை என்ன கிளாஸ் படிக்குதுன்னு தெரிஞ்சு இருக்கும்!! ஆனா செக்‌ஷன் என்னன்னு கேட்டுப்பாருங்க தெரியாது!!!
                இன்னும் நிறைய எழுதலாம்!! ஆனா இதுவே போதும்!!! உங்களுடைய சிந்தனையில் நிறைய எண்ணங்கள் இதைப்படிக்கும்ப்போது தோன்றியிருக்கும்!
நானே எல்லாத்தையும் சொல்லுவதை விட உங்க சிந்தனைக்கு சில விஷயங்களை விடுவதே சிறந்ததுன்னு நினைக்கிறேன்!!!இதுக்கு நேர்வினையோ , எதிர்வினையோ நிறைய எழுதுங்க!!!
                நாம் ஆண்கள், அம்மாவைப்போல கொஞ்சம் மாறனும்னு நினைக்கிறேன்!!!
               அன்பையும், அக்கறையையும் நம் குழந்தைகள்,குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் எல்லோரிடத்திலும் செலுத்துவோமே!!!! 
                என்னங்க நான் சொல்லுறது!!!சரிதானே?......
           
                                      தேவா.....              
                 
                 
                

Saturday 3 January 2009

தமிழ் மணம் ஒரு பகிரங்க இடுகை-2


தமிழ் மணத்துக்கு வணக்கம்!!!!
நம்ம பதிவுத்திரட்டியில் இணைந்து சந்தோஷமா தினமும் ஏதாவது எழுதி உள்ள தள்ளனும்கிற அளவுக்கு இதில ஆர்வமானவங்க நிறைய பேர் இருக்கிறோம்!!!!
அதுக்கு பின்னூட்டம் போட்டு ஆதரிக்கவே ஒரு போராளிகள் குழு ஆர்வத்த்தோட உக்காந்து இருக்கு!!!
         தமிழ்மணமும், பாராட்டும் இல்லைன்னா ஒன்னுமே இல்லை!!!
         அதுனாலதான் தமிழ் மணத்தையே பாராட்டி ஒரு பதிவு போட்டேன்!!!!
என்னடா பீடிகை பலமா இருக்கேன்னு பார்க்கிறீங்களா?
         இந்த புதுவருடத்திலே எல்லாத்திலும் மாற்றம் எதிர் பார்க்கும் நாங்க தமிழ்மணத்திலும் எதிர்பார்க்க மாட்டமா?
         முதலில் தமிழ்மணத்தில் சேர்ந்த்தையே ஒரு தொடர் பதிவாப்போடலாம்!!
நீண்ட பிரச்சினைகளுக்கு அப்புறம்தான் சேர முடிந்தது!!
          இப்ப உள்ள பிரச்சினை என்னன்னா................
         
         1. தமிழ் மணத்தில் பிற திரட்டிகளில் இணைவதுபோல எளிமையாக இணைய முடியவில்லை!!! இணைவதை எளிமைபடுத்தனும்.... நிறைய பேர் இணைய முடியாம வெளிய நிற்கிறாங்க!!!! உண்மை..

         2.இணைந்தவர்கள் நிறைய பேருக்கு பதிவுப்பட்டை இணைக்க முடியவில்லை.
        
         3.சிலருக்கு புதிதாய் சேர்ந்தவர்களுக்கே பின்னூட்டம் திரட்டப்படுவதில்லைன்னு வருது!!! 

         என் பதிவுலயே தமிழ் நண்பனுக்கு பதிவுப்பட்டை இணையவில்லையே!! தமிழ்த்துளியில் மட்டும் பட்டை இருக்கு!!!
  
         4.பிரச்சினைன்னா தெரிவிக்கச்சொல்றாங்க!! சொன்னா பதில் இல்லை!!
நடவடிக்கையும் இல்லை!!!

        5.யுனிகோடில் 3 பதிவு எழுதி அனுப்பினாக்கூட யுனிகோடில் இல்லைன்னு வருது!!!!
        
        இதெல்லாம் சரிபண்ண நிறைய நடவடிக்கைகள் தேவைப்படுதுங்க!
நான் சொன்னதுல நிறைய தவறுகள் இருக்கலாம்!!!

       நிறைய எனக்குத்தெரியாமக்கூட இருக்கலாம்!!!
   
       ஆனா அதையெல்லாம் குழந்தைக்கு தாய் சொல்லித்தருவது போல தமிழ்மணம் சொல்லித்தந்து, நிவர்த்தி செய்ய வேண்டும்!!!!
         

Friday 2 January 2009

நீ தாண்டி எனக்குப்புடிச்ச அழகி!!!!!


             ன்ன வலை நண்பர்களே!!!
புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படி இருந்தது? ஒரே பிரியாணியும்,கேக்கும்,இனிப்பும் சாப்பிட்டு நிறைய பேருக்கு சாப்பாட்டைக்கண்டாலே பயமா இருக்குங்க!!!! உங்களுக்கும் அப்படித்தானா?
             புத்தாண்டில் ஏதாவது புதியதாக நல்ல விசயம் ,நல்ல மாற்றம் நம்ம பழக்கங்களில்.... செய்யலாம்னு யோசிச்சீங்களா?
             கஷ்டம் வாழ்க்கையில் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும்!!!
கஷ்டம் இல்லாத வாழ்க்கை உண்டா?
             நான் ஒரு சின்ன முடிவு பண்ணினெங்க!!!!
 
             குழந்தைய எடுத்துக்கிட்டிங்கன்னா அம்மா,அப்பா தூக்கணும், பாராட்டனும்னு நினைக்குது.

             ஸ்கூல் பையனைப்பாருங்க வாத்தியார் பாராட்டனும்னு நினைக்கிறான்!!
             
             காலேஜ் பசங்களைப்பாருங்க- மச்சி டிரஸ் தூளா இருக்கு!!!எங்கடா வாங்கினே!!!எதாவது நண்பர்கள் பாராட்ட மாட்டமான்ன்னு எதிர்பார்க்கிறான்!!!
             பொண்னுங்க !!!!புது சாரி கட்டினவுடனே அப்படியே ஒரு ஷோ காடுவாங்க காலேஜில!! நண்பிகள் அதப்பாத்து.................. சாரி சூப்பரா இருக்குடி! எங்கடி வாங்கினே?................எப்பிட்றி இப்பிடி அழகா கட்டுற!!!!
               
              லவ்வரோ ,மனைவியோ ........எங்கேயாவது வெளியே கிளம்பும்போது திடீர்னு பழைய மேக்கப் கிட்டைப் கண்டு புடிச்சு முகத்தில பூசி.................மூஞ்சிய  ஒரு வழி பண்ணி .........ஒரு செமி கோஸ்ட் ரேஞ்சுக்கு மாறி நிற்பாங்க!!!!அந்த நேரத்துல ஒபினியன் வேற கேப்பாங்க!!!! நம்ம தப்பித்தவறி உண்மை விளம்ப்பியா மாறி ஏதாவது சொன்னோம் !..............அதோட ஒழிஞ்சோம்!!!!
              அதுக்கு பதிலா மனசக்கல்லாக்கிகிட்டு.....................கீழே உள்ள மாதிரி சொல்லனும்...
              .நீ ரொம்ப அழகா இருக்கேடி!!!!
              இந்த மேக்கப் சூப்பரா இருக்கு!!
              உண்மையாவா சொல்றீங்க?
              ஆமாம்!!!!!!!!
              அன்னைக்கு பல்லுக்குட்டி ,பல்லுக்குட்டின்னு பல்லை கிண்டல் பண்ணிங்க?................
              அது சும்மா உன்னைய வெறுப்பேத்துறதுக்காகச்சோன்னேண்டி!!!
              நீ தாண்டி எனக்குப்புடிச்ச அழகி!!!

               என்ன முடிவு பண்ணினேன்னு கேக்கிறீங்களா? எல்லாரையும் பாராட்டுறதுதாங்க அது!!!!!!!!!!!!!!!
                நீங்களும் தயாரா?
               ஓ.கே................

                தேவா........... 
             
            

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory