
தற்கால சூழ்நிலையில் படித்த பெண்கள் வினோதமான சில பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்! சாதாரணமாக வேலைக்குச் செல்லும் இந்தியப் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சினைகள் இவைதான் என்று அறிய முடியாமல் தடுமாறுகிறார்கள்.
பெண்கள் இதுவரை ஆண்கள் செய்து வந்த பொறுப்புகளைக் கூடுதலாக ஏற்றுக் கொள்ளும்போது ஏற்படும் வாழ்வியல் வியாதிகள் சாதாரணமானவை அல்ல. அவை அவர்களால் வாழ முடியாத சூழ்நிலைக்குக் கொண்டுசெல்லும் அளவுக்கு தற்போது பூதாகாரமாக வடிவெடுத்துள்ளன!
68% இந்திய வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்வியல் வியாதிகளான
1.Anxiety-மன நிலைக் கலக்கம்
2.Fear-பயம்
3.Uneasyness-இயல்பாக இருக்கமுடியாமை
4.Hysteria-ஹிஸ்டீரியா- வீட்டிலும், அலுவலக டென்ஷன்களிலும்!
இவற்றால் உறவுகளை சரிவர பராமரிக்க முடியாமை(Battling Relationship Issues),
பணியிடச் சுமைகளைச் சமாளிக்க இயலாமை ( Not able to copeup with job and studies pressure)
வீட்டிலிருப்போரிடமிருந்தும், அலுவலகத்தில் உள்ளோரிடமிருந்தும் விலகிப்போதல் ஆகியவை ஏற்படுகின்றன.
இத்தகைய நோய்க்குறிகளை மிகவும் படித்த பெண்கள், மற்றும் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், கணவன் ஆகியோர் கூட உணர முடிவதில்லை. அப்படிக் கூறினாலும் தான் படித்தவர், தனக்குத் தெரியாததா? என்ற அதீத நம்பிக்கையினால் பிறர் கூறுவதை ஒத்துக்கொள்ளவோ, அதனைக் கேட்டு அதன்படி சீரமைப்பு முயற்சிகளிலோ ஈடுபடுவதில்லை. அவர்கள் தங்களுடைய மனநிலைக் குழப்பங்கள், மனநிலைமாற்றம் ஆகியவற்றை உணருவது இல்லை என்பது ஒருபுறமிருக்க, தன்னுடைய பிரச்சினைகளுக்குப் பிறர்தான் காரணம் என்று எண்ணி அதீத கோபம் வெறுப்பு ஆகியவற்றைத் தன் குடும்பத்தாரிடம் காட்டி அவர்களிடமிருந்து விலகிச் செல்கிறார்கள்.
பெரும்பாலான பெண்கள் குடும்பம்,வேலை ஆகிய இரண்டின் அழுத்தத்தையும் தாங்க முடியாமல் அவதியுறுவதே இன்றைய பெண்களின் மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது.
இத்தகைய பிரச்சினைகள் இன்றைய இந்திய குடும்ப அமைப்பில் மிகப்பெரும் விரிசல்களை ஏற்படுத்துவதே மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
முந்தைய இந்தியக் குடும்ப அமைப்பில் குழந்தைகளைக் கவனிக்கவும், வீட்டைக் கவனித்துக் கொள்ளவும் பெற்றோர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய நகர்ச் சூழ்நிலைகள் அப்படி அமைவதில்லை.
பெண்களே பெரிய பொறுப்பான அலுவலகங்களின் உயரிய வேலையையும், கணவன், குழந்தைகள் என்ற குடும்பத்தின் பொறுப்புக்களையும் சுமக்கும்போது ஏற்படும் மனவியல் அழுத்தங்கள் இன்றைய பெண்கள் முன் உள்ள மிகப்பெரிய சவால்! இதில் எத்தனை பேர் வெல்கிறார்கள், எத்தனை பேர் தோற்கிறார்கள் என்பதே எதிர்காலத்தில் குடும்ப அமைப்புகள் இருக்குமா? மெல்ல அழியுமா? என்ற கேள்விகளின் விடையாக அமையும்!
இந்தப் பிரச்சினைகள் என்ன விளைவுகளை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படுத்துகின்றன என்பதனை அடுத்தடுத்த பகுதிகளில் அலசுவோம்!
