Tuesday 29 December 2009

பெங்களூர்-என் உள்மன யாத்திரை!

சற்று அமர்ந்து யோசித்தால், நம் வாழ்வின் ஆரம்பக்கட்டங்களில் நமக்கு மிக முக்கியமான உதவிகளை நண்பர்கள், பக்கத்துவீடுகளில் வசித்த அன்புக்குரியோர்கள்  பலரும் செய்து இருப்பார்கள். அவை மிகச்சிறிய உதவிகளாக இருந்தாலும் ”காலத்தினாற் செய்த உதவிபோல்” அவை மிகவும் உயர்ந்தவை.

அந்த உயர்ந்த உதவிகளைச் செய்தவர்களில்  தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாதவர்கள் சிலரும் இருப்பர்.

அப்படி என் வாழ்வில் அதாவது என் இளமைப்பருவத்தில் எங்களுக்கு உதவிய, நான் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தேடும்  சிலரைப்  பற்றியும் அவர்களுடன் நான் வாழ்ந்து களித்த இடங்கள் பற்றியும்  இங்கு எழுதப்போகிறேன்.

என் அப்பாவுக்கு போஸ்டல்& டெலிகிராப் அலுவலகத்தில் வேலை.

வேலை மாறுதலாகி சென்னையிலிருந்து பெங்களூர் சென்றோம். அப்போது நாம் முதல் வகுப்பு படித்ததாக ஞாபகம். நாங்கள் வீடு பார்த்த இடம் ஸ்ரீராமபுரம்! தமிழர்கள் நிறைய இருந்த இடம். பெரும்பாலும் மக்கள் ஊதுபத்தி மாவை குச்சிகளில் அதற்கென இருக்கும்  சின்ன படிக்கும் மர பென்ச் போன்ற பலகையில் உருட்டி ஊதுபத்திகளைத் தயாரிக்கும் வேலையில் அதிகம் ஈடுபடுவர்! பெங்களூரில் வசிப்போருக்கு இது நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். பத்தி சுத்தும் குடும்பத்தில் இருக்கும்  குழந்தைகளில் மூக்கில் ஒழுகும் சளியே கருப்புக்கலரில் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆணும் பெண்ணும் பத்தி சுத்தி முடித்த இடைவேளைகளில் பீடி குடிப்பதையும் அப்போது அதிகம் கண்டிருக்கிறேன்.

அதே போல் கன்னட மக்களும், தமிழர்களும் மிகுந்த அன்புடனேயே அப்போது பழகிக் கொண்டிருந்தனர். என் இளமைப் பருவத்தில் என் மனதில் பதிந்ததாலோ என்னவோ கன்னட மொழி  எனக்கு மிகவும் பிடிக்கும். அதை அவர்கள் பேசுவதும் அழகு. ”என்ன செய்கிறாய்?” என்பதனை “ஏன் கண்ணா ஏன் மாடுதித்தியா?” என்று, ’கண்ணா’ என்று அழகாக அழைப்பார்கள். என் இளம் வயது கன்னட நண்பர்கள் மிகுந்த அன்புடையவர்கள்.

நாகராஜன், பெருமாள், லாரன்ஸ், ரபெக்கா டீச்சர், காந்தி வித்யா சாலை, என்று மனதில் ஆழ் அடுக்குகளில் புதைந்து கிடக்கும் மனிதர்களும் இடங்களும் என் மனதில் ஒரு அற்புதமான உலகத்தை சிருஷ்டித்துள்ளன.

இந்த அற்புத உலகை நானே உருவாக்கிக்கொண்டேனா? ..இல்லை, “எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும்” என்பதுபோல் இவை, மறைந்து போகும்  காலம் என்னும்  மாய பிம்பம் என்னுள் விட்டுச்சென்றவை. இது எனக்கு மட்டுமே தெரிந்த உலகம். நான் என் உள்ளக் கதவைத் திறந்து அடிக்கடி இதற்குள் செல்வேன்.அந்த என் உள்மனயாத்திரைகள் அற்புதமானவை. இதே போல் எல்லோருடைய உள்ளங்களிலும் தனி உலகங்கள் இருக்கும். நான் ரசித்த என் இளமைக் காலத்தை சிறிதளவேனும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  அங்கு நான் கண்ட தமிழர்களின் வாழ்க்கை ஏழ்மையும் சுவாரசியமும் நிறைந்ததாகவே என் இளமனதில் பதிவாகியுள்ளது. அந்த நினைவுகள் அற்புதமானவை. இன்றும் என் வாழ்வின் மிகஇனிய பகுதியாகவே அதை அசைபோடுகிறேன்.

இதைப் படிக்கும் பதிவுலக நண்பர்கள் பலரும் நான் எண்ணுவது போலவே பால்ய நினைவுகளை இனிமையாக நினைக்கிறார்களா என்று தெரியவில்லை!

ஆயினும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் உங்கள் கைகளுடன் என் கைகளை இணைத்துக் கொள்கிறேன். வாருங்கள் அன்பு நண்பர்களே!!!

(நிறைய எழுதினால்தான் பதிவிடலாம் என்று எண்ணியே பலநாட்கள் பதிவிடாமல் விட்டிருக்கிறேன். சின்னப் பதிவுகளையும் பதிவுலகம் வரவேற்கும் என்று நம்புகிறேன்! )

( தொடரும்..)

16 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம்..நானும் சின்ன வயதில் பக்கத்து வீட்டில் இருந்தவர்களை நினைப்பதும், மீண்டும் பார்க்க ஆசை படுவதும், அதற்கான முயற்சியும் செய்வது உண்டு..

சைவகொத்துப்பரோட்டா said...

கண்டிப்பாக இது அனைவருக்கும் பிடிக்கும், (மலரும் நினைவுகள்) இதை படிக்குபோதே அதே பெங்களூரில் நான் வேலை செய்தபோது கிடைத்த நட்பு வட்டாரம் நினைவுக்கு வந்து விட்டது. இப்பொழுது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

புலவன் புலிகேசி said...

நினைவுகளை திருப்பி விட்டீர்கள். எனக்கும் இது பொன்றவர்கள் நிறைய இருக்கிறார்கள்...

தாராபுரத்தான் said...

நானும் எழுத வழிகாட்டியமைக்கு நன்றிங்க,,

ஷங்கி said...

தொடருங்கள் யாத்திரையை!

தேவன் மாயம் said...

Blogger அமுதா கிருஷ்ணா said...

ஆமாம்..நானும் சின்ன வயதில் பக்கத்து வீட்டில் இருந்தவர்களை நினைப்பதும், மீண்டும் பார்க்க ஆசை படுவதும், அதற்கான முயற்சியும் செய்வது உண்டு.///

மிக்க மகிழ்ச்சி நண்பரே!!

தேவன் மாயம் said...

Blogger சைவகொத்துப்பரோட்டா said...

கண்டிப்பாக இது அனைவருக்கும் பிடிக்கும், (மலரும் நினைவுகள்) இதை படிக்குபோதே அதே பெங்களூரில் நான் வேலை செய்தபோது கிடைத்த நட்பு வட்டாரம் நினைவுக்கு வந்து விட்டது. இப்பொழுது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.///

நீங்களும் பெங்களூரா? ஓகே ஓகே!!

தேவன் மாயம் said...

Blogger புலவன் புலிகேசி said...

நினைவுகளை திருப்பி விட்டீர்கள். எனக்கும் இது பொன்றவர்கள் நிறைய இருக்கிறார்கள்...//

கட்டாயம் எழுதுங்கள்!!

தேவன் மாயம் said...

Blogger அப்பன் said...

நானும் எழுத வழிகாட்டியமைக்கு நன்றிங்க,,///

நல்லா எழுதுங்க!!

தேவன் மாயம் said...

Blogger ஷங்கி said...

தொடருங்கள் யாத்திரையை!//

ஓகே! ரெடியா!!

cheena (சீனா) said...

அன்பின் தேவா

கொசுவத்தி - நல்லாவே இருக்கு

நானும் நானும் எழுதி இருக்கேனே - ஆனா தொடரல - போய்ப் பாருங்க

பாலயவயதில் மனதில் ஆழப் பதிந்த நிகழ்வுகள் இறுதி வரை நம்முடனேயே இருக்கும். அவ்வப்பொழுது நினைத்துப் பார்த்து அசை போட்டு அனுபவித்து மகிழ்வது நல்ல ச்ந்யல்.

நலவாழ்த்துகள் தேவா

நட்புடன் ஜமால் said...

ஆயினும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் உங்கள் கைகளுடன் என் கைகளை இணைத்துக் கொள்கிறேன். வாருங்கள் அன்பு நண்பர்களே!!!]]

நிச்சியம் தேவா ...

S.A. நவாஸுதீன் said...

வந்துட்டோம் சார். இனி நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் படிக்கலாம். தொடர்ந்து எழுதுங்கள் தேவா சார்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றாக இருக்கிறது.தொடருங்கள்.

நாணல் said...

தொடருங்கள் தேவா சார்

கார்த்திகைப் பாண்டியன் said...

கொஞ்ச நேரம் நான் முன்னாடி குடியிருந்த சோலைஅழகுபுரம், அங்கிருந்த நண்பர்கள் எல்லோரும் ஞாபகத்துக்கு வந்தார்கள் தேவா சார்.. ரொம்ப நன்றி

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory