Friday 1 January 2010

பெங்களூர்-உள்மன யாத்திரை-2

நான் வசித்த ஸ்ரீராம புரம் தமிழர்கள் நிரம்பிய பகுதி என்று சொல்லியிருந்தேன். தமிழர்கள் என்றால் அப்படி ஒரு மக்களை நாம் பார்க்க முடியாது. ஏன் என்று பிறகு சொல்லுகிறேன்.

அப்போது நாங்கள் வசித்த வீடுகளின் பின்புறம்தான் கழிப்பறை இருக்கும். பெரும்பான்மைத்  தெருக்களில் அப்படித்தான் அதனால் இரண்டு தெருக்களின் வீடுகளின் பின்புறம் சந்திக்கும் பகுதி மலம் அள்ளுவதற்காக சந்துபோல் அது ஒரு தனி வீதியாக இருக்கும். அந்தத் தெரு முழுக்க சிறுவர்கள் திறந்தவெளிக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவர். 

மலமாவது! கிலமாவது! அந்த சந்துதான் எங்களுக்கு விளையாட்டுக்குத் தோதான இடம். மதியம் சாப்பிட்டவுடன் பாயை விரித்து அம்மா, நான், தங்கை, தம்பி அனைவரும் வரிசையாகத் தூங்க வேண்டும். நம்ம தூங்கினாத்தானே! வேலைக் களைப்பில் அம்மாதான் முதலில் தூங்குவார்கள். சத்தமில்லாமல் எழுந்து வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டால், என்னைப் போல் தூங்காமல் வீட்டில் டிமிக்கி கொடுத்துவிட்டு வந்து கும்பலுடன் ஐக்கியமாகி விடலாம்.

   இங்குதான் பைனி, பேதி ஆகிய என் அருமைத் தெரு நண்பர்கள் ( பைனி- பழனி என்பது பெங்களூர் பைந்தமிழில்!!!, பேதி- அடிக்கடி வயிற்றைக் கலக்கும் சரவணனின் பட்டப்பெயர்!!!)   காத்திருப்பார்கள்!

நான் சொன்ன அந்தத் தெருவில்தான் பட்டத்துக்கு மாஞ்சாப் போடும் வேலை நடக்கும். இதற்கெனவே கடையில் கண்ணாடித்தூள் விற்கும். இல்லையென்றால் பியூசான டியூப் லைட்டை கல்லில் வைத்து அரைக்க வேண்டும். வஜ்ஜிரம் என்று பச்சைக் கண்ணாடி போல் கடையில் விற்பார்கள்.  அந்த வஜ்ஜிரத்தை தண்ணீர் சேர்த்து டால்டா டப்பாவில் வைத்து நெருப்புமூட்டினால் கரைந்து பாகாக வரும். அந்தப்பாகாகக் காய்ச்சிய டப்பாவில் நூல் கண்டைப் போட்டு நுணியை தந்திக்கம்பத்தில் கட்டி விடுவோம். அதிலிருந்து இழுத்துக்கொண்டே நூலுக்கு சாயம் போடுவதற்குக் கட்டுவது  போல் ( நூலுக்கு மாஞ்சா போடுவது பெரிய டெக்னிக்குங்க!! ) அடுத்த தந்திக்கம்பதில் நூலை சுத்தி இந்தக் கம்பத்துக்கும் அந்தக்கம்பத்துக்கும் நூல் கண்டு தீரும்வரை சுத்திக் காயவிட வேண்டும். சும்மா காஞ்சா சரியா வருமா? நூலைச் சுத்திக்கொண்டு வரும்போதே ஒருவன் துணி சுத்திய கையில் கண்ணாடித்தூளை அள்ளி நூல்மேல் மெல்லிய படலமாக இழுத்துக்கொண்டே வந்தால் வஜ்ஜிரம் தடவிய அந்த நூலில் கண்ணாடித்தூள்கள் ஒட்டிக்கொள்ளும். இப்படியே நூல் முழுவதும் ஒட்டிக் காய்ந்த்தவுடன் ராட்டையிலோ( நாங்களும் ராட்டையில் நூல் சுத்தியிருக்கோம்!!! காந்தி மாதிரி….ஹி!! ஹி!!!) அல்லது குச்சியிலோ சுத்திக்கொள்ளுவோம்.    எவ்வளவு பெரிய ப்ரொசிஜர் பார்த்தீர்களா? நாங்களெல்லாம்  பல மத்தியானங்களில் தூங்காமல் அப்பிரண்டிசாக இருந்து கற்றுத் தேர்ந்தவர்கள்!

பட்டத்துக்கு நூல் தயாரிப்பே கண்ணைக்கட்டுதில்ல. பட்டம் விடுவது ஒரு பெரிய கலை. அதுக்கு நம்ம ஏரியாவில் பட்டம் நிறைய விற்கும். பெங்களூரில் ஒரு விசேஷம் என்னவென்றால் பெங்களூரின் ஒரு மூலையில் வரிசையாக ஒரே நூலில் மூன்று நான்கு பட்டங்களை இணைத்து காலையில் ஏற்றினார்கள் என்றால் தேசியக் கொடிபோல் சாயங்காலம்தான் இறக்குவார்கள். வானத்தில் மிக உயரத்தில் பறக்கும் பட்டங்கள் அவை. மிக மிக உயரத்தில் ஏறக்குறைய விமானம் பறக்கும் உயரத்தில் பறப்பதுபோல் தெரியும்.

நம்ம பட்டமெல்லாம் அவ்வளவு  உயரம் பறக்காது. நம்ம நூல்கண்டு சின்னதுதானே.

பட்டத்தில் பல சூட்சுமங்கள் உண்டு. பொதுவாக பெங்களூரில் வால் வைத்த பட்டம்தான் விடுவார்கள். பட்டம் செய்வது ஒரு கலை. எல்லோருக்கும் வராது. இளமையில் கற்ற அக்கலை இன்று வரை எனக்கு மறக்கவில்லை. வாலுள்ள பட்டம், வாலில்லாத லாண்டா பட்டம் இரண்டும் நான் இப்போது கூட செய்வேன்; செய்கிறேன்.

இங்கு காரைக்குடியில் பட்டம் விடுவோர் யாருமில்லை. இங்கு ஒரு பட்டம் கூட யாரும் விடாததில் எனக்கு வருத்தம். பட்டத்தின்மேல் உள்ள ஆசை என்னை இப்போதும் விடவில்லை. ஓய்வு நேரத்தில் பட்டம் நாமே செய்து விடுவேன். என் மகன் பட்டம் விட வரமாட்டான். டிவியிலேயே அவர்கள் பொழுது கழிகிறது. ஆகையினால் அடிக்கடி  நானே மொட்டை மாடிக்குச்சென்று பட்டம் விட்டு என் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறேன். (தொடரும்..)

13 comments:

அப்பாதுரை said...

பட்ட(க்) கதை அருமை. பட்டம் காத்துல சரியா குத்தி நிக்கணும்னு குருட்டாம் போக்குல சின்ன சின்ன பேப்பரை ஒட்டி வெயிட் ஏத்தியது உண்டா? சிறு பிராயத்தில் எதையுமே பொருட்படுத்தாமல் அன்றைய பொழுதுக்கு வாழ்ந்த விதம் வளர்ந்ததும் மாறிவிடுகிறது. நூலுக்கு மாஞ்சா போட முடியாம போனா என்ன, நெஞ்சுக்கு மாஞ்சா போடும் செட்டினாட்டு சாப்பாடு கிடைக்குமே குடியில்? டின் கட்டுங்க.

தேவன் மாயம் said...

அப்பாதுரை said...

பட்ட(க்) கதை அருமை. பட்டம் காத்துல சரியா குத்தி நிக்கணும்னு குருட்டாம் போக்குல சின்ன சின்ன பேப்பரை ஒட்டி வெயிட் ஏத்தியது உண்டா? சிறு பிராயத்தில் எதையுமே பொருட்படுத்தாமல் அன்றைய பொழுதுக்கு வாழ்ந்த விதம் வளர்ந்ததும் மாறிவிடுகிறது. நூலுக்கு மாஞ்சா போட முடியாம போனா என்ன, நெஞ்சுக்கு மாஞ்சா போடும் செட்டினாட்டு சாப்பாடு கிடைக்குமே குடியில்? டின் கட்டுங்க.
//
நீங்க சொன்னது போல் நேரா நிற்க பேப்பர் ஒட்டுவதும், துணியைக் கிழித்து கட்டுவதும் உண்டு.

அப்போது வாழ்ந்ததுபோல் இன்பம் இப்போதில்லை!!

கார்த்திகைப் பாண்டியன் said...

அமர்க்களமான கொசுவத்தி தேவா சார்.. தொடரட்டும்..

ஷங்கி said...

பட்டத்தில பெரிய பட்டம் வாங்கின ஆளுன்னு சொல்லுங்க!

jothi said...

பட்டம் வாங்குவது எளிது. செய்வதுதான் கஷ்டம். காரைக்குடியில்தான் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளதே. யாருமா விடலை.

பின் நீங்கள் காரைக்குடியா? நான் CECRIயில் கொஞ்ச நாள் பணி செய்தேன்

சிங்கக்குட்டி said...

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "மாரடைப்பு வருமா? ஒரே ஒரு சோதனை!" இடுகையை பார்த்தேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் தேவன் மாயம்.

S.A. நவாஸுதீன் said...

சிறுவயது குறும்புகள் சுவாரசியமா இருக்கு. பட்டம் விட்டதும், பம்பரம் விட்டதும் இன்னும் மறக்கமுடியாத நினைவுகள்தான் எனக்கும்.

சைவகொத்துப்பரோட்டா said...

//டிவியிலேயே அவர்கள் பொழுது கழிகிறது.//

இப்பொழுது அனைவரின் நேரங்களும் டிவியிலேயே கழிகிறது. சிறு பிள்ளைகள் இந்த மாதிரி கூடி விளையாட வேண்டும்.அப்பொழுதுதான் ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் ஏற்படும்.ம்..ம்.. நல்ல மலரும் நினைவுகள், தொடரட்டும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

அமர்க்களமான கொசுவத்தி தேவா சார்.. தொடரட்டும்..//

repeat.

Jerry Eshananda said...

தொடர் பதிவு,அருமை,தொடர்கிறேன்.

Henry J said...
This comment has been removed by the author.
கண்ணகி said...

நல்லா பட்டம் விட்டுருக்கீங்க...இப்பல்லாம் யார் விளையாடுறாங்க...கதை நல்லாருக்கு....

குலவுசனப்பிரியன் said...

//"பெங்களூர்-உள்மன யாத்திரை-2"//
வாழும் கலை வியாபாரிகளைப் பற்றிய செய்தியோ என்று படிக்க வந்தேன்.

பட்டம் விட்டிருக்கிறேன், செய்ய கற்றுக் கொள்ளவில்லை. இன்றும் சிறார்களுக்கு பட்டத்துக்கு தந்தி அனுப்பும் வித்தை காண்பிப்பது உண்டு.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory