Wednesday, 31 March 2010

இவரை மறக்கலாமா? (காலத்தை வென்றவர்!!)

நோபல் பரிசு என்பது ஒரு உயரிய பரிசாக இருக்கலாம். ஆனால் அது கிடைக்கப்பட வேண்டியவர்களுக்குக் கிடைத்ததா என்பது சில நேரங்களில் கேள்விக்குறிதான். ஏன் இப்படிச்சொல்கிறேன் என்றால் இன்று அணுவில் உள்ள உள் அணுத் துகள்களான போஸான் களை உடைத்து பிரபஞ்சத்தின் ஆரம்பத்துகள்களைக் கண்டுபிடிக்கும் சோதனை முதல்கட்ட வெற்றியடைந்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது.

ஹிக் போஸான் என்றழைக்கப்படும் இந்தப் பொருளுக்கு ’போஸ்’  என்ற பெயர் எப்படி வந்தது? யார் அந்த போஸ் என்று கேட்டால் பலருக்கும் தெரியாது.போஸான் என்கிற துகள்கள் இருப்பதைக் கணித்த  அந்த மேதை இந்தியாவைச் சேர்ந்தவர்தான்.

அவரது முழுப்பெயர் சத்தியேந்திரநாத் போஸ்! கல்கத்தாவில் 1894ல் பிறந்தார். 1916 முதல் 1921 வரை கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1.போஸான்கள் என்பவை ஒரு வகை அணுத் துகள்கள். அவை போஸ் ஐன்ஸ்டீன் விதிகளுக்கு உட்பட்டவை.

2.அவற்றை அவர் 1924ல் கண்டுபிடித்துச்சொன்னபோது அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

(போஸின் Planck's Law and the Hypothesis of Light Quanta என்ற் கட்டுரையை அறிவியல் உலகம்  தவறானது என்று ஏற்றுக் கொள்ளவில்லை!! )

2.ஆனால் அவருடைய பிளான்க்ஸ் குவாண்டம் ரேடியேஷன் விதி பற்றிய மேற்சொன்ன கட்டுரை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால்  புரிந்துகொள்ளப்பட்டது. அவர் அதை ஜெர்மனில் மொழிபெயர்த்து பிரசுரித்தார்.!!!

3.அதன் பிறகே அறிவியல் உலகம் அவர் சொன்ன துகள்கள் இருக்கலாம் என்று ஏற்றுக் கொண்டது.

4. 70 வருடங்கள் கழித்து 1995ல்தான்  போஸான்கள் என்ற துகள்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டது!!

5.போஸின் தவறு என்று கருதப்பட்டது தற்போது போஸ் ஐன்ஸ்டீனின் விதி(Bose-Einstein statistics) என்று அழைக்கப்படுகிறது.

6.அந்த போஸான்களை உடைத்தால் இந்தப் பிரபஞ்சத்தின் ஆதிமூலப் பொருளைக்( கடவுளின் துகள்) கண்டுபிடித்து விடலாம் என்கிறது அறிவியல்.

7.போஸின் கருத்தை வைத்து ஆராய்ச்சி செய்து பலரும் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

7.ஆனால் 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன் பிரபஞ்சம் தோன்றக் காரணமான மூல்ப் பொருளைக் கண்டு சொன்ன இந்திய மேதைக்கு இறுதிவரை நோபல் பரிசு (1974ல் அவர் இறந்தார்) கொடுக்கப்படவில்லை.  

நோபல் மறுத்த போஸை இந்தியர்களும் மறந்து விட்டோம். 9.4 பில்லியன் செலவில் அணுக்கருவை உடைக்கும் இந்நாளில் போஸைப் பற்றிச் சொல்வதில் பெருமை கொள்கிறேன்.

மேலும் படிக்க:

http://en.wikipedia.org/wiki/Bose–Einstein_statistics

http://en.wikipedia.org/wiki/Satyendra_Nath_Bose

Sunday, 28 March 2010

தமிழ் வலைப் பதிவர் குழுமம்!!

கடந்த 27/03/10 சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு வலைப் பதிவர்கள் ஒரு அடி முன்னெடுத்து வைத்திருப்பதைக் காட்டுகிறது.

1. “சென்னைப் பதிவர் சந்திப்பு” ”மதுரைப்பதிவர் சந்திப்பு” என்பதைவிட ”தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்- சந்திப்பு மதுரை!’ என்பது பரந்து பட்டதாக இருக்கும். வரவேற்கவெண்டிய விசயம்.

2.சங்கம் என்று அமைந்தால் நாம் இணைய மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்ளவும், நமக்கு என்று ஒரு பங்கையும் பெறவும் மிகவும் ஏதுவாக இருக்கும்.

3.ஆங்காங்கு உலவும் சிங்கங்களை விட  குழுவாகச்சேர்ந்த எருதுகள் பலம் மிகுந்து இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம் ( நம்ம எல்லோருமே சிங்கந்தான் என்கிறீர்களா? அப்படியாயின் சிங்கங்களின் கூட்டம் இன்னும் பலமாக இருக்கும்.

4.சென்னை தவிர பிற பகுதிகளில் இருக்கும் எங்களையும் “தமிழ் வலைப்பதிவர் குழுமம்” என்ற பெயரில் ஒன்று சேர்ந்தார்ப்போல் எனக்குத் தோன்றுகிறது. இது மிக்க மனமகிழ்ச்சியை அளிக்கிறது.

5.இருக்கும் சிறு கருத்து வேறுபாடுகள் இயல்புதான். அவை நம்மை இன்னும் சிறப்பாகச் செயல்பட வைக்கட்டும்.

6.இப்போதைக்கு இந்த முயற்சியை வாழ்த்தி வரவேற்போம்.

( வலை படிப்போர் குழுமம் ஒன்று வேண்டும் என்று நிறையக் கோரிக்கைகள் வருகின்றன… இஃகி!! இஃகி!!!)

தமிழ்த்துளி!!

Thursday, 25 March 2010

இவர் மனிதர்!

James Harrisonநீங்கள்( நாம்) மனதுக்குள் எடுத்த உறுதிமொழியை எவ்வளவு வருடம் காப்பாற்றுவீர்கள்?

நீங்கள் எத்தனை முறை இரத்தம் கொடுப்பீர்கள்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஜேம்ஸ் ஹாரிசனின் வாழ்க்கை ஒரு நம்ப முடியாத் உறுதி வாய்ந்த பதிலாக உள்ளது.

ஆஸ்திரேலியர் ஜேம்ஸ் ஹாரிசன் செய்துள்ள செயற்கரிய செயலைப் பாருங்கள்.

’ஆன்டி டி’ ஊசி என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். தாயின் இரத்தம் –Rh negative வகையாகவும், தந்தையின் இரத்தம்  Rh positive ஆகவும் இருக்கும் பட்சத்தில்

 • குழந்தை Rh negative இரத்த வகையாக இருந்தால் குழந்தை பிரசவம் ஆகிவிடும்.
 • குழந்தையின் இரத்தவகை Rh positive ஆக இருந்துவிட்டால்,  குழந்தையின் இரத்தமும் தாயின் இரத்தமும் பிரசவத்தில் கலந்துவிடக்கூடாது- ஏனெனில் பிளஸ் மைனஸ் இரண்டும் சேர்ந்தால் இரத்தம் முறிந்துவிடும். அது ஆபத்து.

இதன் விளைவுகளைத்  தடுக்கத்தான் ஆன்டி டி ஊசி போடுகிறோம்.

அந்த தடுப்பு ஆண்டிபாடிக்கள் ஹாரிசனின் இரத்தத்தில் இருந்தது.

அவர் உடலில் ஆர்.எச் பாசிடிவ்  இரத்தத்தை ஊசியால் செலுத்துவார்கள். இது இவர் உடலில்   இரத்தத்தில் ஆண்டிபாடிகளை உருவாக்கும். பின் இவருடைய  இரத்திலிருந்து  ஆண்டிபாடிகளை பிரித்து  எடுத்து மருந்தாக உபயோகிப்பார்கள்!!!

18 வயதில் இரத்தம் கொடுக்க ஆரம்பித்த இவர் (தற்போது 74 வயதாகிறது), கடந்த 56 வருடங்களாக சில வாரங்களுக்கு ஒருமுறையென இரத்தம் கொடுத்து இதுவரை 984 முறை இரத்தம் கொடுத்திருக்கிறார்!!!  ( அவசரத்துக்கு ஒரு தடவை இரத்தம் கொடுக்கவே இங்கு தயங்குகிறோம்!!!!)

சரி அவர் எடுத்த உறுதிமொழி என்ன? என்கிறீர்களா?

அவருடைய 14ம் வயதில் அவருக்கு மார்பு அறுவை சிகிச்சைக்கு 13 பாட்டில் இரத்தம் தேவைப்பட்டதாம். அன்றே அவர் தன் இரத்தத்தை இருக்கும்வரை தானம் செய்யவேண்டும் என்று உறுதிகொண்டாராம்.( எவ்வளவு உறுதியான மனம் பாருங்கள்)   அதை 74 வயதுவரை கடைப்பிடிக்கிறார்!!!!

( 74 வயதிலும் இரத்தம் கொடுக்கிறார் என்றால் நம்பமுடியவில்லை!!)

இவருடைய இரத்தத்தால் 2.2 மில்லியன் குழந்தைகள் உயிர்பிழைத்துள்ளன!!

வாழ்க்கையில் வெறுப்பு, தோல்வி ஆகியவற்றால் தன்னிரக்கத்தால் வாடும் இளைஞர்களே ஜேம்ஸ் ஹாரிசனைப் பாருங்கள்!

வாழ்க ஹாரிசன்!!

தமிழ்த்துளி தேவா.

Wednesday, 24 March 2010

தேன்நிலவு நோய் !-Honeymoon disease!

தேன்நிலவு வியாதி பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்! ஆம்! பொதுவான ஆங்கிலத்தில் மேல் சொன்னவாறு அழைக்கப்படும் இந்த பிரச்சினைபற்றி தம்பதியினர் தெரிந்து கொள்வது நல்லது.

1.திருமணம் ஆன இளம் தம்பதிகளுக்கு அதிகம் ஏற்பட்டதால் இந்தப்பெயர் வந்தது.

2.தம்பதியினர் அதிக உறவில் ஈடுபடும் காலங்களில் இது அதிகம் ஏற்படுகிறது.

3.அறிகுறிகள்:

 • வலியுடன் சிறுநீர் கழித்தல்
 • அடிக்கடி அவசரமாக சிறிநீர் வருதல்
 • இரவில் அடிக்கடி சிறுநீர் வருதல்
 • சிறுநீர் கலங்கலாக இருத்தல்
 • சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்
 • சிறுநீர் காட்டமான நெடியுடன் இருத்தல்

4.இது பெண்களுக்குத்தான் அதிகம் வரும்.

5.இது என்ன வியாதி என்கிறீர்களா?  தொடர்ந்த உறவால் சிறுநீர்ப்பையில் கிருமிகள் தொற்றால் உண்டாவதுதான்!

என்ன சரிதானா!

தமிழ்த்துளி.

Tuesday, 23 March 2010

வாழ்த்துக்கள் திரு.தருமி!!

maduraibloggermeet 24-5-2009 009

திரு. தருமி அவர்கள் சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணைந்து நடத்தியமணற்கேணி 2009, அரசியல்/சமூகம் பிரிவின் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படுள்ளார்.

கடும் போட்டிகளுக்கிடையில் திரு.தருமி அவர்களின் ”சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் – தருமிhttp://dharumi.blogspot.com/என்ற கட்டுரை பரிசுக்குறிய கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மதுரை வலைப்பதிவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

வாழ்த்த வயதில்லை’ வணங்குகிறோம்’-

ஹ!! ஹ!! அரசியல் பாணியில் வாழ்த்துகிறோம் என்று பார்க்கிறீர்களா?-- திரு.தருமி அய்யா அவர்கள் அரசியல் பிரிவில்தானே வென்றுள்ளார்!!

உங்கள் வாழ்த்துக்களையும்  சொல்லலாமே!!

தமிழ்த்துளி தேவா..

Friday, 19 March 2010

பித்தப்பைக் கற்கள்

Gallbladder

 

பித்தப்பை கற்கள் தற்போது நம் நாட்டில் தற்போது அதிகரித்து வருகிறது. பித்தப்பை (Gall bladder)என்பது கல்லீரலின் கீழ் உள்ள ஒரு சிறு பை போன்ற அமைப்பு.இது மொத்தக் கொள்ளளவே 50மில்லிதான்!! ஈரல் சுரக்கும் பித்தச்சுரப்பு இதில் வந்து சேர்கிறது. சேரும் பித்தநீரிலிருந்து நீரை வடிகட்டி நல்ல கெட்டியான திரவமாக இது மார்றுகிறது. சில நேரங்களில் இப்படி வடிகட்டும்போதுதான் கஷாயம் போல் கெட்டியான பித்தம் உறைந்து சின்னச்சின்னக் கூழாங்கற்கள் போல் ஆகி பையில் தங்கிவிடுகின்றன. இதன் பெயர்தான் பித்தப்பைக்கல்!

சில கற்களின் படங்கள்:

1.இது பெண்களுக்கு 9.2% மும் ஆண்களுக்கு 3.3% மும் ஏற்படுகிறது.

2.இது வருவதற்கான காரணங்கள்?

 • கலோரி அதிகமான உணவு.
 • கொலஸ்ட்ரால், கொழுப்பு அதிகமான உணவு.
 • உடல் எடை அதிகமானவர்கள் அதிகம் டயட்டிங்கில் இருப்பது.
 • பித்தப்பைத் தொற்று நோய்கள்.
 • நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிகம் வரும்.
 • கொலஸ்ட்ரால் குறைப்பதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள்!!!

2.இதன் அறிகுறிகள்?

 • வலதுபுற நெஞ்சு விலா எலும்பின் கீழ் அடிக்கடி வலி ஏற்படுதல்.
 • மேல் வயிற்றின் வலதுபுறம் வலி, வலது தோள் வலி, உமட்டல், வாந்தி, தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு மேல் வாந்தி.
 • கொழுப்பு உணவு சாப்பிட்டவுடன் வலதுபுறம் வயிற்று வலி.
 • பித்தத் தொற்றால் மூன்றில் ஒரு நோயாளிக்குக் காய்ச்சல் அதிகமாக வரலாம்.
 • நிறையப் பேருக்கு ஒரு அறிகுறியும் தெரியாது. இப்படி அறிகுறி இல்லாமல் உண்டாகும் பித்தக்கற்களை ’சைலண்ட் ஸ்டோன்ஸ்’ என்றழைப்பார்கள்.  

3.பித்தக்கல்லில் வகை உண்டா?

உண்டு.

 • கொலஸ்ட்ரால் கல்
 • பிக்மெண்டட் கற்கள்: பிரௌன் பிக்மெண்ட் கல், கருப்புக்கல்.
 • கலப்புக்கல்(MIXED STONES).

4.பித்தப்பைக்கல் வராமல் தடுப்பது எப்படி?

 • காய்கறி உணவு
 • கொழுப்புக் குறைந்த உணவு.
 • பழங்கள்,
 • நார்ச்சத்து அதிகமான உணவு
 • மீன் எண்ணை

5.இதற்கு சிகிச்சை என்ன?

பித்தப்பையை அகற்றிவிடுதல்.

6.பித்தப்பை இல்லாவிட்டால் நன்றாக சாப்பிட முடியுமா?

சாதாரண உணவை நன்றாக சாப்பிடலாம்.

தமிழ்த்துளி தேவா.

Tuesday, 16 March 2010

வலை வெளி

ஏதுமற்ற வெளியில்

சஞ்சாரிக்கிறது மனம்,

 

அறைக்குள் நுழைவதும்

கணிணியின் வெண்திரையில்

நீங்கள் எழுதியவற்றைப்

படிப்பதும்,

தினசரி நிகழவானது!

கொஞ்சம் எழுதி

நிறுத்திய

கவிதைகளையும்

கட்டுரைகளையும்

தொடர முடியாமல்

ஏதுமற்ற வெளியில்

சஞ்சாரிக்கிறது மனம்!!

 

ஆயினும் தினமும்

நீங்கள் எழுதிய எண்ணங்களைப்

படிக்காவிடில்

எதையும் செய்ய முடிவதில்லை!!

 

பின் குறிப்பு: இது கவிதை அல்ல!!

இது என் உணர்வு!! இதனை நன்றாக எழுதியிருக்கலாம். ஆயினும் என் மனதில் இருந்த எண்ணங்களே சொற்களாகியுள்ளன!!

தமிழ்த்துளி தேவா!!

Friday, 12 March 2010

இப்படியும் ஒரு பெண்!!

பொதுவாக மருத்துவமனைகளில் ரத்தத்திற்கு அலைவது தினசரி வாடிக்கை. அதுவரை ”ஏன் இன்னும் ஆபரேஷன் செய்யவில்லை?” என்று சத்தம் போடும் உறவினர்களிடம் ரத்தம் தேவை தருகிறீர்களா? என்று கேட்டால் போதும் பாதிப் பேர் முகம் பேயறைந்த மாதிரி ஆகி விடும். பத்து நிமிடத்தில் முக்கால்வாசிக் கூட்டம் மாயமாகிவிடும். மீதி இருக்கும் ஓரிருவர் வந்து” இரத்தம் விலைக்கு வாங்கலாமா?, எவ்வளவு ஆனாலும் பணம் கொடுத்து விடுவோம்” என்று கேட்பார்கள். விபரமான சிலர்” காலேஜ் பையன்களிடம் எடுக்கலாமே நீங்கள்?” என்று கேட்பார்கள்.

நாங்களே கல்லூரிக்கு போன் செய்து இரண்டு கல்லூரி மாணவர்களை வரவழைத்து இரத்தம் எடுக்கவேண்டி வரும்( இதெல்லாம் எங்கள் இரத்த வங்கியில் இரத்தம் இல்லாத பட்சத்தில்தான்!! பெரும்பாலும் கல்லூரிகளில் முகாம் நடத்தி இரத்தம் எடுத்து சேமித்து வைப்பது வழக்கம்!).

இரத்தததிற்கே இந்த நிலை என்றால் நம் மக்கள் சிறுநீரகம் தருவார்களா? சொந்த அண்ணன் தம்பிக்கே தரமாட்டார்கள். இதனால்தான் சிறுநீரகம் கிடைக்காமல், சிறுநீரகம் பழுதுபட்டு இறப்போர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும்  அதிகம்.

இத்தகைய உலகில் தெரியாத ஒரு நோயாளிக்கு மருத்துவரே தன் சிறுநீரகத்தைக் கொடுத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?  ஆச்சரியம்!! ஆனால் உண்மை!

சிகாகோவைச் சேர்ந்த டாக்டர்.சூசன் ஹூ ஒரு சிறுநீரக மருத்துவர். அவருடைய கணவரும் ஒரு மருத்துவர். உண்மையில் சிறுநீரகம் தேவைப்படும் ஒருவருக்குத் தரவேண்டும் என்று எண்ணினார். 2004 ஆம் ஆண்டு தன் சிறுநீரகத்தில் ஒன்றைத் தன் நோயாளிக்கே கொடுத்துவிட்டார்.

தற்போது சென்னை வந்த அவர் டான்கர் அமைப்பின் சார்பில் கவுரவிக்கப்பட்டார்.

“ நான் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியாது! நான் உலகின் பசியைப் போக்க முடியாது! ஆனால் சிறுநீரகம் செயல்படாத ஒருவரைக் காப்பாற்ற முடியும்”  அதைத்தான் நான் செய்தேன் என்கிறார்.

என்ன நாமும் அவரை பாராட்டுவோமா!!

தமிழ்த்துளி தேவா.

Monday, 8 March 2010

கொஞ்சம் தேநீர்- பிரிதல்!!

மவுனம் சூழ்ந்த
இரவொன்றில் பிரியங்கள்
மறைத்து நீயும், நானும்,

தவற விட்ட
குழந்தையாய் அலைகின்றன,
சமாதானத்துக்கான
சொற்கள்.

நிசப்தம் எரித்து
கண வெளிச்சத்தில்
உன்னை என்னில்
ஆழச் சொருகினாய்,


பொங்கி வழிந்தோடியது
என் ரணத்தில்
வழிந்த உன் கண்ணீர்!

என் குருதியை
அள்ளியெடுத்து
என் வர்ணங்கள்
படர்ந்த உன் உடலைக்
கழுவிக்கொண்டாய்!

மெதுவாக
வெளியேறிச் சென்றாய்
உடைந்து
சில்லுகளாய்ச்
சிதறிக்கிடந்த
நம் காதலின் மேல்!

Sunday, 7 March 2010

பெண்கள் தினத்தில் சில கவிதைகள்?

”களவும் கற்று மற”
சரிதான்,
ஆயின்
உள்ளத்தைக்
களவாடியவளை
மறப்பதெப்படி?

********************

அடுக்கடுக்காய்
நான் சொன்ன
பொய்களெல்லாம்
அழகாகிப் போயின,
நீ சிரித்த
மறு கணம்!!!

********************

உன் இதழ்
அழகைக் கண்டு
வெட்கித்தான்
நீ சூடிய ரோஜாவும்
ஒளிந்து கொண்டதொ
உன் கூந்தலின்
பின்னால்?

*******************

ஒருமை
என்பது தனிமையல்ல!
நீயும்
நானும்
சேர்ந்த பன்மை!!

+++++++++++++++++++

கவிதை படித்து விட்டீர்களா? பெண்கள் தினத்துக்கும் இந்தக் கவிதைகளுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்கக்கூடாது!!! சரியா?
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பின்னூட்டமோ ஓட்டோ
போடாமல் போகவும் கூடாது!! ஹி! ஹி!!

Thursday, 4 March 2010

நித்தியாநந்தனின் காமம்- காரணம்? மாறுபட்ட கோணத்தில்!!

நித்தியானந்தன் காமத்துக்கு என்ன காரணம்?  சாதாரண இளைஞனுக்கு இந்த வயதில் உண்டாகும் காமம்தான் என்று நாம் சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் அப்படி அல்ல.

நித்தியானந்தனின்  “கதவைத் திற………. வரட்டும்” என்ற புத்தகத்தில் உள்ள பிற்சேர்க்கை-1 பக்கம் 301,302 ல் உள்ள ஆய்வுச் செய்தி  வித்தியாசமாக உள்ளது. அதாவது நித்தியானந்தனின் மூளைப்பகுதியை நவீன் ஸ்கேன் மூலம், சாதாரண நிலை, தவம் செய்யும் நிலை போன்ற நிலைகளில் சோதித்துள்ளனர்.

அப்படி என்ன அதில் உள்ளது என்கிறீர்களா? அதில்

D- Spot- என்ற மூளையின் பகுதியில் சுரக்கும் டோபமைனைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

”டி-ஸ்பாட் என்பது மனிதன் எவ்வளவு இன்பப்படுகிறான், ஆனந்தப்படுகிறான் என்பதைக் குறிக்கும் பகுதி என்று எடுத்துக்கொள்ளலாம், அல்லது டோப்பமின் பகுதி( ஆனந்தத்தின்போது மனிதனுள் சுரக்கும் வேதிப்பொருள் / அல்லது தெய்வீகத் தன்மையின் இருப்பிடம் என்று எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.

   நித்தியா- விடம் இந்த டி-ஸ்பாட்டை அளக்கும்பொழுது கணக்கிடமுடியாத அளவு டோப்பமின் அல்லது டோப்பமைன் சுரந்து கொண்டே இருப்பது நவீன சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”

அந்தப்புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கம்:

NITHYANANTHA

என்ற மேல்குறிப்பிட்ட செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?

டோபமைன் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் வஸ்து. இது அதிகம் சுரந்தால்….. ஆனந்த நிலை அடைகிறோமோ இல்லையோ கீழ்க்கண்டவை ஏற்படும்:

 

EXCESS DEFICIENT "NORMAL"
Anxiety Anhedonia - No Pleasure, World Looks Colorless Motivated
Psychosis Inability To "Love" Feelings Of Well-Being, Satisfaction
Aggression No Remorse About Personal Behavior Pleasure, Reward In Accomplishing Tasks
Schizophrenia Depression Healthy Libido
Addictions, Compulsions Addictions (seeking relief from depression) Good Feelings Toward Others
Paraphilias (Sexual Fetishes) Antisocial behavior Healthy bonding
Sexual Addiction Low Libido Maternal/Paternal Love
Unhealthy Risk-Taking Erectile dysfunction Healthy risk taking
Gambling Lack Of Ambition And Drive Sound choices
Impulsive Sensation-Seeking   Realistic expectations
Compulsive Activities Social anxiety disorder  

dopamine drives you to have sex over most other activities. With dopamine as the driving force, biology has designed you to engage in fertilization behavior to make more babies, and urges you to move on to new partners to create greater genetic variety among your offspring.

Your primitive brain accomplishes these goals of more progeny and promiscuity by manipulating your brain chemistry, and thus your desires and thoughts. High levels of dopamine increase sexual desire, encouraging you to behave recklessly. The thrill of a new affair and the rush from using pornography are examples of high dopamine. Unfortunately, consistently high levels of dopamine lead to erratic behavior and compulsions that are not conducive to survival.

இதற்கான சுட்டி:

1.http://www.entelechyjournal.com/pulling_away_after_sex1.htm

2.http://www.reuniting.info/science/sex_in_the_brain

 • அதாவது டோபமைன் அதிகம் சுரந்தால் காம எண்ணங்கள் அதிகம் வரும்.
 • புதிய உறவுகளின் மீது ஆர்வம் உண்டாகும்.
 • அதிக உணர்ச்சி வயப்படுதல் ஏற்படும்.
 • செக்ஸ் அடிக்‌ஷன்
 • சிசோஃபிரினியா- மனப்பிறழ்வு ஆகியவை கூட ஏற்படலாம்.

நித்தியானந்தன் மூளையில் அளவுக்கதிகமாக டோபமின் சுரப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

மனப் பதட்டம், சைக்கோஸிஸ்,  போன்ற பல பிரச்சினைகளுக்கு இது காரணமாக அமையலாம்.

என்னவோ எழுத வந்தேன்! கடைசியில் இதுவும் ஒரு அறிவியல் பதிவு போல் ஆகிவிட்டது. ஆயினும் டோபமைனைப்பற்றி உங்களுக்கு விளக்க முடிந்தது. நித்தியானந்தன் போன்ற சாமியார்களின் பிரச்சினைகளுக்கு நாம் முடிவு  கூற முடியாது. ஆயினும் தொடர்ந்து எழுதுவோம். நன்றி!!

தமிழ்த்துளி.

Wednesday, 3 March 2010

நித்தியானந்தாவும்- 6 கேள்விகளும்!!

நேற்று சன் செய்திகள் பார்த்து தமிழகமே அதிர்ந்து போயிருக்கிறது. அதன் பாதிப்பைக் கண்கூடாக  பதிவுலகிலும் காண்கிறோம். இந்த விசயம் குறித்துப் பதிவு எழுதாதவர்களே இல்லை என்னும் அளவில் ஏராளமான பதிவுகள்!! அதுபற்றி சில பதில் கிடைக்காத  கேள்விகள் என் மனதில்!!

1.மதக் கருத்துக்கள் பற்றி எல்லா மதத்திலும் தேவையான அளவு புத்தகங்கள் இருக்கும் போது குமுதம், ஆனந்தவிகடன் போன்ற போன்ற புத்தகங்கள் காசுக்காகவும், விளம்பரத்துக்காகவும்  இவர்களைப் போன்ற பணம் உள்ள சாமியார்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு இவர்களின் வளர்ச்சிக்குத் துணை போவது எவ்வளவு மோசமான செயல். இதில் இவர்கள் புத்தகங்கள் எழுதி அதையும் பதிப்பிட்டு இந்தப்பத்திரிக்கைகள் காசு பார்க்கின்றன!! இவற்றை வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றைப் புறக்கணிக்கவும் வேண்டும்.

2.புலனாய்வுப் பத்திரிக்கைகளில் சிறப்பான கட்டுரைகளை எழுதும் நிருபர்களும் ஒருபுறம் இருக்க, நேரெதிர் முரண்பாடாக   இது போன்ற போலி சாமி, போலி லாட்ஜ் மருத்துவர்கள்,  மந்திரித்த தாயத்து தகடு விளம்பரங்களையும் சகட்டுமேனிக்கு வெளியிடுவதை யாரும் தடுப்பதுமில்லை. அவரவர்கள் எதை வேண்டுமானாலும் விளம்பரப்படுத்தலாம் என்பது மிகவும் ஒழுங்கீனமான ஒரு சமுதாய  அமைப்பில் நாம் வாழ்வதைத்தானே காட்டுகிறது!!

3.கடவுள் நம்பிக்கை இருக்கவேண்டியதுதான். ஆலமரத்தடியில் இருக்கும் சாமியைக் கும்பிட்டுவிட்டுப் போகாமல் பணக்காரச் சாமியார் மோகம் தலை விரித்தாடும் நம் மக்கள் எப்போது திருந்துவார்கள்!

4.நடிப்புத் துறை என்பது நல்ல துறை. எல்லாத்துறையிலும் ஒழுங்கீனங்கள் இல்லாமல் இல்லை. அந்த நடிகை நல்லவர், அந்த நடிகர் சிறந்தவர் என்று அவர்களைத் தெய்வமாகக் கொண்டாடி அவர்களை உச்சியில் தூக்கிவைத்து ஆடி ஒரு இளம் சமுதாயமே அழிவுப்பாதையை நோக்கிச் செல்வதை எண்ணி வருத்தம்தான் ஏற்படுகிறது. அவர்களைக் கோடீசுவரர்களாக்கி வேட்பாளர்களாக்கி நம்மையே அவர்கள் ஆளும் மடமை ….. கொடுமை!!!

5.காவல் துறையும், சட்டம் ஒழுங்குத் துறையும் காலையில் எழுந்தவுடன் தொலைக் காட்சிதோறும் ஒளிபரப்பப்படும் சாமியார்களின் நிகழ்ச்சிகளைத் தடை செய்தால் நல்லது!!

6.இப்போது பரப்ரப்பாக செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சி அமைப்புகள் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்று போடுகிறார்களா? இல்லை பார்வையாளர் எண்ணிக்கையைக் கூட்டும்  பப்ளிசிடி ஸ்டண்டா?   அப்படி நல்ல நோக்கில் இதை வெளியிட்டால் இவர்களைப் போன்ற போலிகளின் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியினர் புறக்கணிப்பார்களா?

இன்னும் நிறையக் கேள்விகள் உள்ளன… தொடர்வோம்..

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory