Tuesday, 30 June 2009

காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!!

அன்பின் வலைமக்களே!

பெண்களிடம் பேசுவது எப்படி என்பது ஒரு கலை. அதிலும் எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். என்ன விசயங்கள் பேசலாம்,எவற்றைப்பேசக்கூடாது என்பது பற்றி நாம் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.

1.பழைய காதலியின் நினைப்பு அடிக்கடி உங்களுக்கு வரலாம். பல சுவையான சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகள் உங்களுக்கும் பழைய காதலிக்கும் இடையில் நடந்திருக்கலாம். ஆர்வக்கோளாரில் பந்தாவா மனைவியிடம் அதையெல்லாம் அவிழ்த்து விடக்கூடாது. அப்புறம் அவங்க அதையெல்லாம் வச்சு 1000 கேள்வி கேப்பாங்க பிரதர்!! மண்டை காஞ்சு போவீங்க.

2.பழைய காதலியின் நினைவுப் பொக்கிஷங்களைப் பாதுகாக்காதீர்கள் நண்ப்ர்களே.அந்தமாதிரி பொருள் ஏதாவது வீட்டிலிருந்தால் உடனே அழித்துவிடுங்கள்! புகைப்படம்,வீடியோ,சிடியிலிருந்து  பல பிறந்தநாள் பரிசு வரை காலிபண்ணிவிடுங்க. ஏன்னா எப்ப உங்க மனைவி சி.பி.ஐ ஆ மாறுவாங்கன்னு தெரியாது.

3.நம்ம நல்ல பேர் வாங்குவதற்காக நம் நண்பர்களின் குறைகளை மனைவியிடம் சொல்லக்கூடாது. “என் பிரண்டு ஒருத்தி இருந்தா.. அவ ரொம்ப மோசங்க!!” ன்னு ஒரு கொக்கி போடுவாங்க! உஜாரூ மாமே!! வாயத்தொற்க்கக்கூடாது...அதுவும் நமக்கு கம்பெனி கொடுக்கும்  ”குடி”நண்பர்களைப் பற்றி பேச்சே கூடாது!! 

4.உங்களுடைய பலவீனங்களை அவர்களே தெரிந்து கொள்ளட்டும். பலம் நிறைந்த மனிதனாக இருக்க முயலுங்கள். தைரியம் என்பது பயத்தை மறைத்துக்கொள்வதுன்னு சொல்லுவாங்க...எல்லா பயத்தையும் சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்திலிருந்து இதைக்கடைப்பிடித்தால் நீங்கள்தான் உங்கள் மனைவியின் ராஜா.. துணிந்து தாக்குங்க மச்சி!!

5.உங்கள் மனம் கவர்ந்த மங்கை உங்களை சொந்தக்காலில் நிற்பவர் அவரே தைரியமாக முடிவெடுப்பவர் என்று எண்ணுவார்கள். அதைத்தான் விரும்புவார்கள்..ஆனாலும் வயதில் மூத்தவர்களின், அப்பா,அம்மாவின் ஆலோசனை உதவி எப்பொழுதும் தேவை. சிலநேரங்களில் உங்கள் கைச்செலவு, சாப்பாடு, பெட்ரோல் எல்லாமே பெற்றோர் தயவில்தான் ஓடும். ஆனால் காதலியிடம் இதையெல்லாம் வாய் திறக்கக் கூடாது.

6.கிடைக்கும் எல்லாப் பணத்தையும் மனைவியிடம் கொடுத்துவிட்டுக் கையேந்தக்கூடாது. சம்பளம் இவ்வளவு என்று காதலிக்குத்தெரியலாம். ஆனா செய்யுகின்ற எல்லா செலவுக்கும் சின்னப்பையன்போல் கணக்குச்சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். எவ்வளவு நண்பர்களுக்கு, அப்பா அம்மாவுக்கு, சுற்றுலாவுக்கு, செலவழிக்கிறீர்கள் என்று விலாவரியாக சொல்லவேண்டாம்!!!

புதிய உறவுகள் ஆரம்பிக்கும்போது திறந்த மனதுடன் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்வது நல்லது என்பார்கள். உண்மைதான்!! ஆனால் அதுவே பின்னாளில் பெரிய பிரச்சினை ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஆசை அறுபதுநாள் என்பது போல் ஆரம்பித்தில் எல்லாமே நல்லதாகத்தெரியும். பின்னாளில் பிரச்சினை என்று வரும்போது முன்னர் செய்த சிறு தவறையும் பெரிய விசயமாக்குவார்கள்!!!

என்ன சரிதானா. இது ரொம்ப பெரிய விசயம். ஆனாசுருக்கமா உங்களுக்கு தந்துள்ளேன்.

அன்புடன் தமிழ்த்துளி தேவா.

_________________________________________________________

பதிவு பிடித்திருந்தால் தமிலிஷ்,

தமிழ்மணத்தில் ஓட்டுப் போடவும்.

_________________________________________________________

Sunday, 28 June 2009

மனிதர்கள் அழிந்தால்!

பொதுவாக எல்லோருக்கும் தோன்றும் எண்ணம்தான் இது. மதவாதிகள் கூட அடிக்கடி உலகம் அழியப்போகிறது.. என்று கூறி தேதிகளும் குறித்து விடுவார்கள்.

அப்படி  மனிதர்கள் முழுதும் அழிந்துவிட்டால்( நீங்களும் நானும் மட்டும் மிச்சம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்..)

என்ன நடக்கும்?

1.மனிதர்கள் மறைந்த இரண்டாம் நாளிலிருந்து சாக்கடை முழுவதும் வெள்ளம் ஓடும். மழை பெய்யும். நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும். அணைக்கட்டுகள் உடையும்.

2.கொசுக்கள்,பூச்சிகள் எண்ணிக்கை பெருகும்.

3.மனிதப்பேன் அழிந்துபோகும். (இஃகி!!இஃகி!!!இஃகி!!!).

4.மின்சாரம் நின்று உலகம் இருளில் மூழ்கும்.

5.ஒரு வாரத்தில் அணு உலை வெடிக்கும்.

6.நான்காமாண்டு சாலையெல்லாம் புல்பூண்டு முளைத்திருக்கும். அண்ணாசாலையில்கூட்..

7.கோயம்புத்தூர், மதுரையெல்லாம் அடர்ந்த பசுமைக்காடாக மாறியிருக்கும். சென்னை சவுக்கும் முட்புதர்களும் நிரம்பிய அதிசயக்காடாக இருக்கும்!!!

8.ஐந்தாம் ஆண்டு நகரங்கள் தீக்கிரையாகியிருக்கும்.

9.100 வது ஆண்டு கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமாகிவிடும்.

10.வீட்டுவிலங்குகள் காட்டு விலங்குகளால் தின்னப்பட்டுவிடும்.

11.மனிதனால் ஏற்பட்ட உலக வெப்பமாதல் குறையும். 15000 ஆண்டில் உலகில் பனிசூழ ஆரம்பிக்கும். நீண்ட பனிக்காலம் உலகை பீடிக்கும்.

12.மனிதனின் இடத்தை பபூன் போன்ற வாலில்லாக்குரங்குகள் பிடிக்கும். அவற்றின் எண்ணிக்கை பெருகும். அவற்றிடையே மீண்டும் மனிதன் போல புத்திக்கூர்மையுடைய இனம் தோன்றும். அந்த இனம் உலகை ஆளலாம்.

அது விஞ்ஞானத்தில் முன்னேறி மின்சாரம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சாவகாசமாக நீங்களும் நானும் பிறப்போம்!!!!!!!!!!..

Saturday, 27 June 2009

பதிவுலக மன்மதன்கள்!( +18)

அன்பின் வலைமக்களே!!

பதிவுலகில் இவ்வளவு நாள் இருக்கிறோம். நண்பர்கள் கூடும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அது போல் அவர்களுடைய பல சொந்தக்கதைகளையும் கேட்க நேரிடுகிறது. அவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவும் முடிகிறது.

நான் கார்த்திகை பாண்டியின் தங்கை திருமணத்தில் கண்ட மன்மதன்கள் பற்றி இங்கு சொல்கிறேன். இவர்கள் அனைவரும் கல்யாணம் ஆகாதவர்கள். கல்யாணத்துக்குத் தயாராக உள்ளவர்கள். விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.!!!!இஃகி!இஃகி!!

கார்த்திகைபாண்டியன் தங்கை வீடியோ முதல் பாகம் பார்க்காதவர்கள் கீழே சுட்டியை தட்டிப் பார்க்கவும்!!

அன்புப் பதிவர் வீட்டு திருமணம்- காணொளி(வீடியோ!!)

 

இந்தக் காணொளியை யூடியூபில் பார்க்க சுட்டிhttp://www.youtube.com/watch?v=SPkq8Q75KTw

1.Anbu Mathy

image

 

அன்பு என்ற அன்புமதி!!இவர்தான் மிக இளையவர். நல்ல குணம் முகத்திலேயே தெரியும். குசும்பு கொஞ்சம் உண்டு. சிரித்த முகத்துடன் இருக்கும் இவரை நீங்கள் வீடியோவில் காணுங்கள்..(அடிக்கடி போன் வருவதும் தனியாகப்போய் பேசுவதுமாக இருக்கிறார்!!..............பார்ப்போம்!!)

---------------------------------------------------------------------

2.ஆதவாகுழந்தை ஓவியம்!!

வயது:20

ஆதவா அருமையான இளைஞர்!! அமைதி! அமைதி! அமைதி!! ஆதவா என்றால் அமைதி.

கவிதைகளுக்குப் புகழ்பெற்ற இவர் திருப்பூரில் டெக்ஸ்டைலில் வேலை செய்கிறார்.

இவரைக் கைப்பிடிக்கும் பெண் அதிர்ஷ்டசாலிதான்.

வீடியோவில் இவரை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!

-------------------------------------------------------------------------

3.ஸ்ரீதர் http://sridharrangaraj.blogspot.com/

 

ஸ்ரீதர்

இவர்தான் ஸ்ரீதர். திருமணத்துக்கு தயாராக உள்ளவர். பார்த்தாலே மயக்கும் தோற்றம் கொண்டவர்.

கார்த்திக்கு மிகுந்த உதவியாக இருந்தவர்! ஜாதக ஸ்பெசலிஸ்ட்!

இவர் ஜாதகம் யார் கையிலோ?( சமையலும் தெரியுமாங்கோ!!)

-------------------------------------------------------------------

4.பாலகுமார்

பாலகுமார் சோலைஅழகுபுரம் 

என்ற தளத்தில் எழுதுகிறார்..

பாலகுமார் பக்கா ஜெண்டில்மேன் தோற்றத்தில் வந்திறங்கினார்.  வயது 24 இருக்குமா? தோற்றம் அவ்வளவுதான்.

நல்ல தெளிவான பேச்சு. தெளிவான சிந்தனை! 

எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறாங்களோ !!!!!என்ற இவருடைய பதிவைப் பாருங்கள்!!

இந்த வார கல்கி இதழில் இவருடைய கவிதை வந்துள்ளது.

இவரும் கால்கட்டுக்கு தயாராக உள்ளவர்!!

----------------------------------------------------------------------

5.கார்த்திகை பாண்டியன் -- சொல்லவே வேண்டாம். கல்யாண வீடியோவில் பாருங்க!! மாப்பிள்ளையும் ரெடியாக இருக்கிறார். பொண்ணு இருந்தா சொல்லுங்க. தங்கை திருமணம் முடிந்ததால் ரூட் கிளியர்!!

நம் மன்மதன்களை தொடர்ந்து செய்திகளை அவ்வப்போது தருகிறேன்!!

தமிழ்த்துளி தேவா..

-----------------------------------------------------------------

ஆதவாவுக்கு இன்று

பிறந்தநாளாம் !!! இப்போதான் தெரிந்தது!!!

வாழ்த்துவோம் நல்ல வளமான எதிகாலம் அமைய!!

--------------------------------------------------------------------

Friday, 26 June 2009

அன்புப் பதிவர் வீட்டு திருமணம்- காணொளி(வீடியோ!!)

அன்பின் நண்பர்களே! நம் அன்பு நண்பர் கார்த்தியின் தங்கை திருமணம் இனிதே நடைபெற்றது.

மதுரையில் பதிவர்கள் சந்திப்பது அடிக்கடி நிகழ்ந்து கொண்டு இருப்பது மிக மகிழ்வான விசயம். ஏதோ ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது சந்திக்க.

இம்முறை கார்த்தியின் தங்கை திருமணம்!!

கீழே அந்த நிகழ்ச்சி நிரல்!!

----------------------------------------------------------------------

நாள்: 24 - 06 - 09 புதன்கிழமை

முகூர்த்த நேரம்: காலை 9:45 முதல் 10:45 வரை

மணமக்கள்: நா.நாகராணி

இர.தமிழ்க்குமரன்

இடம்: அன்னை வேளாங்கண்ணி திருமண மாளிகை,

மேலப்பொன்னகரம் ஏழாவது தெரு,

மதுரை.

-----------------------------------------------------------

காலை 9 மணிக்கு முதல் ஆளாய் நான் போய் சேர்ந்தேன். அதன்பின் ஒருவர் இருவராக அனைவரும் வந்தனர்.

நண்பர் ஆதவா வை முதன் முதலாக இன்றுதான் சந்தித்தேன். மிக இளையவர், மிகுந்த அமைதியும் அடக்கமும் நிறைந்து காணப்பட்டார்.

பதிவுலக நண்பர்கள்  சீனா ஐயா மற்றும் அவரது துணைவியார்,

ஸ்ரீதர், அன்பு, சுந்தர், ஜாலிஜம்பர், பாலகுமார், சொல்லரசன், ஆதவா,

தம்பதி சமேதராக வந்த தருமி ஐயா மற்றும் நான் ( தேவன்மாயம்) என அனைத்து நண்பர்களும் வந்திருந்தோம்.

தாங்கள் வர முடியாத காரணத்தால் தங்கள் அண்ணனை அனுப்பி வைத்தார்கள் நண்பர்கள் முத்துராமலிங்கம், அன்புமணி..- எவ்வளவு பொறுப்புடன் செய்துள்ளார்கள் பாருங்கள்!

காலை உணவு, மதிய உணவு இரண்டுமே அங்குதான். பின்பு லாட்ஜுக்கு சென்றோம்!! கவிதைகளைப் பற்றி நண்பர் ஸ்ரீதர், சுந்தர்,சொல்லரசன், ஆதவா ஆகியோருடன் கலந்துரையாடல். மிகவும் இனிய சந்திப்பாக இருந்தது.

தேனி சுந்தர் நல்ல பேச்சாளர், தன் கருத்துக்களை தெளிவாக சொன்னார்.

நண்பர் ஸ்ரீதர் கார்த்திகை பாண்டிக்கு வீடு பிடித்தது முதல் கல்யாண வேலைகளில் மிகவும் பொறுப்பாக செய்து கொடுத்தார். இவர் ஒரு பரம்பரை ஜோதிடரும் கூட... இவருடைய தளத்தில் பல சூடான இடுகைகளைப் பார்க்கலாம்.

பாலகுமார் பி.எஸ்.என்.எல் மதுரையில் வேலை செய்கிறார். கவிதைகள் பற்றி தெளிவாகப் பேசினார்.

ஜாலிஜம்பர் லேட்டாக வந்து அவசர அலுவல் காரணமாக உடனே சென்று விட்டார்.

போனில்  வாழ்த்தினர்  வால்பையன், mayvee, ஞானசேகரன், இளைய கவி, ரம்யா..

நம் வேலை முடிந்தது... பணி அழைத்தது...

இனிய நினைவுகளுடன் விடைபெற்றோம்.....

காணொளியைப்பார்க்க யூடியூபிலும் பார்க்கலாம்!! யூடியூப் முகவரி :கார்த்திகைபாண்டியன் வீட்டு கல்யாண காணொளி-பகுதி-1

பகுதி இரண்டு இன்று இதே பதிவில் சேர்க்கப்படும்!

உங்கள்,

அன்பு நண்பன் தமிழ்த்துளி தேவா..

-----------------------------------------------------------------------

Thursday, 25 June 2009

மதுவால் என்ன ஏற்படுகிறது?

மது அருந்தினால் உடலில் என்ன ஏற்படுகிறது என்று பார்ப்போம். ம்துவால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.

மதுவின் பொதுவான் மூலக்கூறு எதில் ஆல்கஹால். பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு எதில் ஆல்கஹால்(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.

1.ரம் --- 50-60%

2.விஸ்கி,பிராந்தி,ஜின் --40-45%

3.ஷெர்ரி,போர்ட் --20%

4.ஒயின் --10-15%

5.பீர் --4-8% பொதுவாக...

6.சாராயம் --40-50%

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது

1. கிளர்ச்சி (excitement) நிலை: முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும்,  சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும்.

ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்ததில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும்  மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது.

இரத்தத்தில் 20 மிகி ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.

இரத்தத்தில் 30மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும்போது

1.தசை கட்டுப்பாடு இழக்கும்.

2.தொடு உணர்வுகள் குறையும்.

3.சிந்தனை,புரிந்துணர்வு,மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.  

இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்

1. வாய் வார்த்தைகள் குளறுதல்,

2.நடையில் தள்ளாட்டம்,

3.அதிக மயக்கம்,

4.ஞாபக மறதி

5. அதிக குழப்பம்

ஆகியவை ஏற்படும்.

பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது.

கால நேர, தூர  மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஒட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.

(தொடரும்...)

--------------------------------------------------------------------------

தமிழ்மணம்,தமிழிஷில் வாக்கிடவும்.

----------------------------------------------------------------------------

Tuesday, 23 June 2009

ஈரான் பெண் கொலை- நேரடி வீடியோ- பார்க்கமுடியாதவர்கள் தவிர்க்கவும்!!


”ஏஞ்சல் ஆஃப் ஃப்ரீடம்”
ஈரானில் மட்டுமல்லாமல் உலகெங்கும் ஒலிக்கும் வார்த்தைகள். ஈரானில் தேர்தலுக்குப்பின் கலவரம் ஏற்பட்டு வருவது நாம் அறிந்ததே!ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிதா ஆகா-சுல்தான் என்ற ஓர் இளம்பெண்ணை இந்தக் கும்பல் கொன்றதாக அப்பெண்ணை மணக்க இருந்த கேஸ்பியன் மக்கான் என்பவர் கூறி இருக்கிறார்.
இந்த காணொளியில் அப்பெண் சுட்டுக் கொல்லப்பட்டு தரையில் கிடக்க பொதுமக்கள் சேர்ந்து அவருக்கு உதவிசெய்யும்பொழுது  அவருடைய மூக்கு,வாய் ஆகியவற்றிலிருந்து ரத்தம் கொப்பளிப்பதை நேரடியாக படம்பிடித்துள்ளார்கள்!
அவர் ஒன்றுதான் விரும்பினார்” அது ஈரான் மக்களுக்கு சுதந்திரமும் மக்களாட்சியும்” என்று அவரின் ஆண்நண்பர் கூறுகிறார்.இந்த வீடியோ உண்மையானதுதான் என்று நம்புகிறேன். அறிந்தவர்கள் சொல்லவும்!! 

தமிழ்த்துளி.தேவா.

Iran Tehran Wounded Girl Dying in Front of Camera 1 - Funny video clips are a click away

Monday, 22 June 2009

என் கவிதைகள்!!

என் கவிதை

உங்களுக்குப் பிடிக்கும்!

அதில் உங்களுக்கான்

தூண்டில்கள் இல்லை!ஒரு நெருங்கிய

நண்பன் போல்

அது உங்கள் நெஞ்சுக்குள்

புகும்!ஒரு பைன் மரக்காட்டைக்

கடந்து செல்லும்

பயணி போல்

என் கவிதை

உங்களைக் கடந்து செல்லும்!ஒரு குளிர்ந்த நீரோடை

போல்

உங்கள் கால்களை

தழுவிச்செல்லும்!உங்களிடம் அது

எதையும் வேண்டாது,

ஒரு இனிய

மாலைப்பொழுதுபோல்!!முகம் அறியாத

குயிலின் பாடல்போல்

கடந்து செல்லும்

இன்னொரு இடம்,

காலம் நோக்கி!!!தமிழ்த்துளி தேவன்மாயம்...

Saturday, 20 June 2009

சும்மா ஜாலியா!!

 

அழகிய படங்கள் சிலவற்றைப்பார்க்க நேர்ந்தது. படங்கள் பிரமிக்க வைக்கும் வண்ணம் இருந்தன. இதோ அவற்றை உங்களுக்காகத் தருகிறேன். பார்த்து ரசிக்கவும்..

1.க்ளென் கேன்யான் -- அமெரிக்க அரிசோனா, வுடா பகுதியில் உள்ளது.கொலராடோ நதியோட்டத்தால் உருவாகியுள்ளது இந்த அழகிய இடம்.

2. எவ்வளவு கற்பனைத்திறனுடன் இந்த புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது பார்த்தீர்களா?

3. சானியாவின் இந்தப்படம் எப்படி!! இப்படி சானியாவை நான் பார்த்ததில்லை.. நீங்கள்..?.

4. எந்தப்புண்ணியவான் வரைந்தான் என்று தெரியவில்லை. இப்படி ஒரு வீட்டில் இருப்பது என்று யோசித்தேன். தலை சுத்துதுப்பா!!.

5.பார்க்கத்திகட்டாத நம் நாட்டு அற்புதம்.

நான் இந்தக் கோணத்தில் தாஜ்மஹாலைப் பார்த்தேன். சுட்டேன்.நீங்களும் ரசியுங்கள்.

6.பெண் பதிவர்களே! பார்த்தீர்களா? இந்த வார இறுதியில் உங்கள் உள்ளம் குளிரவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப்படம்....யாரும் என்னைத் திட்டவேண்டாம்.......

மணமகன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டாடின் மகன். மகள் தாவூத் இப்ராஹிமின் மகள்!!

7.உலகின் மிகச்சிறிய மனிதர்..ஹெ பிங்பிங் என்ற பெயருள்ள இந்தக் குட்டி மனிதர் ரஷ்யாவின் நீளக்கால் அழகி ஸ்வெட்லானாவின் கீழ்!! இவரின் ஊயரம் 74.61செ.மீ.!!!!!ஸ்வெட்லானாவின் கால் நீளம் 132செமீ!! இரண்டுமே கின்னஸ் சாதனைகள்!!

8.என்ன வெளையாடுறீங்களா! மொக்கப் பதிவுக்கெல்லாம் எவன் ஓட்டுப்போடுவான்னு ஓடுனீங்க... சீவிடுவேன்! சீவி!!!

வார இறுதியை மகிழ்ச்சியாகக் கழியுங்கள் மக்களே!!

தமிழ்த்துளி தேவா...

-------------------------------------------------------------------------------

Thursday, 18 June 2009

மங்கையற்கு தந்தை செய்ய வேண்டியவை 14!!

அன்பின் வலை மக்களே!!

நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விசயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விசயங்கள் தெரிய வரும்.

2.மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?

3.கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது.தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.

4.ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், நண்பர்களாக எவ்வளவு பழகலாம், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்கௌங்கள்!

5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

6.கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

7.பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விசயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.

8.நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.

9.நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும்.

10.உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி,எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுதுபோக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.

11.புத்தகம்,கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.

12.உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.

13.இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்.

14.இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்!

--------------------------------------------------------------------------

பதிவு பிடித்திருந்தால் தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுக!

------------------------------------------------------------------------------

Tuesday, 16 June 2009

ஆபீஸ் செல்வோர் செய்யும் 5 தவறுகள்!!!

அலுவலகம் செல்லும் நம் மக்கள் செய்யும் ஐந்து முக்கிய தவறுகளைப் பார்ப்போம்.

1.காலை உணவைத் தவிர்த்தல்

காலையில் எழுந்து அவசரமா கிளம்பி ஒரு காபி அல்லது டீ மட்டும் குடித்துவிட்டு செல்பவரா நீங்கள்?

அலுவலகத்தில் எரிச்சல்,கடுப்பு,சரியா வேலை வேலை செய்யமுடியாமைதான் ஏற்படும்.

இதுக்கெல்லாம் என்ன காரணம்? உடலில் போதிய அளவு சக்தியின்மைதான். ஆங்கிலத்தில்

பிரேக்ஃபாஸ்ட் என்றால் பிரேக்கிங்க் தி ஃபாஸ்டிங்க் என்பார்கள்.அதாவது இரவு முழுக்க விரதம் இருந்து

காலையில் விரதம் முடிப்பது போல்!

காலையிலேயே உடலில் உண்ணாததால் சக்தி இருக்காது! மதியம் வருவதற்குள் மயக்கம்

வந்து விடும். என்ன செய்வீங்க? மதியம் கொஞ்சம் சேர்த்து சாப்பிடுவீங்க. அதனால் என்ன

ஆகுமென்றால் உடலில் சர்க்கரை அளவு கூடி விடும். இதாலும் அசதி,தூக்கம்தான் வரும்.

என்ன செய்ய வேண்டும்: 1 கப் பால், கொஞ்சம் கார்ன் ஃப்ளேக்ஸ் போல, ஒரு பழம் போதும்.

(தேவையென்றால் ஒரு முட்டை) என்று காலை உணவை முடிங்க!!

2.காபி,டீ: அளவுக்கு அதிகமா காபி,டீ சாப்பிடுவது. இது தொடர்ந்து குடிப்பவர்களுக்கு விடுவது

பெரிய சிரமமாக இருக்கும்.

காபி,டீ தொடர்ந்து குடிப்பவர்களுக்கு எரிச்சல், சக்தியின்மை ஏற்படும். இரவில் தூக்கம் கூட மாறி

மறுநாள் சுறுச்றுப்பு இருக்காது. சாப்பாடுடன் சேர்த்து சாப்பிட்டால் காபி இரும்புச்சத்தை உடலில் சேர

விடாது. அதனால் சத்துக்குறைவு ஏற்படும்.

என்ன செய்யலாம்: அடிக்கடி குடிப்பதை விடமுடியவில்லையா? கொஞ்சமா குடியுங்கள்!

3.தண்ணீர்- நிறைய அலுவலகங்கள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் நமக்கு தாகம் அதிகம்

எடுக்காது.இதனால் தண்ணீர் குடிப்பது குறைந்துவிடும். உடலும் அதற்கேற்ப மாறிவிடும். இதனால்

சில வருடங்களில் மலச்சிக்கல், சரியாக செரிக்காமல் போவது, வாயுத்தொல்லை, தண்ணீர் உடலில்

குறைதல், தோல் மினுமினுப்பு குறைதல் ஆகியவை ஏற்படும்.

என்ன செய்யவேண்டும்:அலுவலக மேஜையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும்.

அலுவலகம் முடிவதற்குள் ஒரு லிட்டரை முடித்துவிட வேண்டும். எவ்வளவு சுலபம் பாருங்க.

4.ரொம்ப பிஸியா?:மீட்டிங் மத்தியான நேரத்திலா? உங்களால் மதிய உணவு சாப்பிட

முடியவில்லையா! சரியான ஒரு நேரத்தை அதாவது 12.30-- 2.00 க்குள் தேர்ந்தெடுத்து அந்த

நேரத்தில் தினமும் சாப்பிட்டு விடுங்கள். இது அல்சர்,வாயுத்தொல்லை ஆகியவற்றிலிருந்து

உங்களைக்காப்பாற்றும். இது மேலும் அதிக உணவு உண்ணுதல், எடை அதிகரிப்பு ஆகியவற்றையும்

தடுக்கும்.

5.வார இறுதி: இந்த வார இறுதின்னாலே மக்களுக்கு குஷிதான்!! வாரம் முழுக்க கடின வேலை!!

வார இருதியில் கொண்டாட்டம்!!சூடான சோம பானங்கள், கெண்டகி சிக்கன் என்று அள்ளி

விளையாடுகிறீர்களா? கொஞ்சம் பொறுமை!! இந்த காம்பினேஷனெல்லாம் நீண்ட உடல் நலத்துக்கு

உதவாது. கொஞ்சம் அடக்கி வாசிங்க!!

என்ன செய்யலாம்: ஒவ்வொரு நாளுமே கொஞ்சம் வேலை முடிந்தவுடன் ரிலாக்ஸ் பண்ணவும்.

சின்ன மசாஜ்,விளையாட்டு, புத்தகம் .. என்று வார இறுதியை விட ஒவ்வொரு நாளும் ரிலாக்ஸ்

பண்ணிவிடுங்க!! அப்புறம் என்ன ஜாலிதானே!!

அன்பு மக்களே!! உங்களுக்காக சுட்டும், சுடாமலும் நிறைய விசயங்கள் தொடந்து எழுதுவேன்!!

படித்து மகிழுங்கள்!!

தமிழ்மணத்தில் ஓட்டுப்போட மறந்திடாதீங்க!!!

தமிழ்த்துளி தேவா...

Monday, 15 June 2009

ரொம்ப சூடான மச்சான்ஸ் & மச்சிக்களுக்கு!!

ரொம்ப சூடான மச்சான்ஸ் & மச்சிக்களுக்கு!!

சூடு தணிய......


கீழே போ!!

.

.

.

.

.

.

.

.

.

.

.

. இன்னும் கீழே ..

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

 
இப்போ ஓகேயா?   கூலாயிடுச்சா!!

வா மச்சி

வேலைக்குப்போகலாம்!

காலங்காத்தால

காத்து வாங்கினா எப்படி? ........................... :-)

தமிழ்த்துளி தேவா....

"குங்குமம்" பத்திரிக்கை இப்படி செய்யலாமா?

அன்பின் வலை மக்களே!!

வலைத்தளம் ஆரம்பித்ததிலிருந்து நிறைய எழுதுகிறோம். நம்முடைய பதிவு பலராலும் படிக்கப்படுவது நமக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது.வலையில் எழுதுவது துரித உணவு போல. எழுதியவுடன் வெளியிடுகிறார்களா? என்று காத்திருக்க வேண்டியதில்லை. நாமே வெளியீட்டாளர்.(எவ்வளவு பெரிய சங்கதி இது!!!).

அது மட்டுமல்ல. பத்திரிக்கைகளில் எழுதி படித்து அடுத்தவாரம் ”மடலில் உங்கள் படைப்பு நன்று” என்று யாராவது பதில் போடுகிறார்களா என்று காத்திருக்க வேண்டும். வலையில் நாம் போட்ட அடுத்த நிமிடமே நண்பர்கள் பின்னூட்டம் ஆரம்பித்துவிடுவார்கள்!! உடனே நாமும் பதில் கொடுக்கிறோம்.

ஆயினும் அச்சில் வெளியிடும் புத்தகம் கணினி பார்க்காதவரையும் சென்றடைகிறது. பல நாட்டினரும் படிப்பர். மேலும் ஆசிரியர்கள் நன்றாக இருந்தால்தான் வெளியிடுவார்கள்.

அந்த வகையில் என்னுடைய தலையணை மந்திரங்கள் 16!என்ற பதிவைக்  குங்குமம் 18.6.2009 இதழில் வெளியிட்டுஉள்ளார்கள்.  image

image

தலையணை மந்திரத்தை மூன்று பக்கங்கள் போட்டு இருக்கிறார்கள்.

இதனை எனக்குத்தெரிவித்த நண்பர் திரு.ரவிசங்கர்,ரவி ஆதித்யா,நான் பேச வந்தேன்!! 

அவர்களுக்கு மிக்க நன்றி! அவர் சொல்லவில்லை என்றால் நான் இதனைப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. வேறு யாராவது பின்பு சொல்லியிருப்பார்கள் என்பது உண்மை.

குங்குமம் பத்திரிக்கைக்கு நன்றி!!

ஆயினும் ஒரு மின்னஞ்சலாவது குங்குமம் எனக்கு அனுப்பி தெரிவித்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன்.

தமிழ்த்துளி.தேவன்மாயம்

Sunday, 14 June 2009

எதிர்கால கார்கள்!

எதிர்காலத்துக்கு நாம் என்ன விட்டுச்செல்லப்போகிறோம் என்று கவலையாக உள்ளது. சாதாரண குடிதண்ணீருக்கு சிரமப்படும் உலகில் தனி நீச்ச்ல் குளம் வைத்திருப்போர் வரை நாம் பார்க்கிறோம்.

எதிர்காலக்கார்கள் சுற்றுப்புறச்சூழல், எரிபொருள் சிக்கனம்,மாற்று எரிபொருள், ஒட்டுவதற்கு எளிமை ஆகியவற்றில் சிறந்ததாக இருக்க வேண்டும். அப்படி சில கார்களைப் பார்ப்போம்!!

1. Ying Hui Choo's Peugeot Blade,Peugeot ன் இந்தக்கார்

பின்புறமுள்ள காற்றாலையிலிருந்து சக்தியை மின் கலன்களுக்கு அளிக்கிறது.

2.Oskar Johansen's Peugeot 888 நடுவில் மடிந்து கொள்ளும். அதனால் நிறுத்தி வைக்க எளியது. மேலும் நாலாபுறமும் நன்றாக பார்க்கலாம். ஓட்டுவதற்கு எளியது.

3.Emre Yazici's lightweight 'EGO’ இரண்டு சக்கரங்களில் ஓடுவது. யாசி என்ற துருக்கியர் வடிவமைத்துள்ளார். இது மின்சக்தியால் ஓடும் ஒரு நபர் செல்லும் வாகனம். நிற்கும் இடத்திலேயே 180 கோணம் திரும்பும். நிறுத்திவைக்க மூன்றில் ஒரு பங்கு இடம் போதும்.

4.Tolga Metin என்ற அமெரிக்கர் வடிவமைத்த Peugeot Magnet என்ற இந்தக்கார் காந்த சக்தியால் ஓடக்கூடியது. ஏற்கெனவே காந்தப்புலத்தில் ஓடும் ஜப்பானின் அதிவேக தொடர்வண்டிகளின் பாணியில் இது அமைக்கப்பட்டுள்ளதாம்.

5.Woo-Ram Lee ,electric MoVille

இதுவும் ஒருவர் அமர்ந்து செல்லும் கார்தான். மூன்று மின்காந்த சக்கர உருளைகளால் ஓடும். இடத்தை அடைக்காமல் நிறுத்தலாம்.

6.Ke Guo என்ற சீனர் வடிவமைத்த கார். ஃபார்முலா 1 கார்கள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் பார்த்து ஒட்டுவதுபோல் கண்ணாடிகள் இதிலுள்ளன.

7.Michael Witus Schierup என்ற டென்மார்க் வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்டது. இதன் நீளத்தை மூன்று விதமாக குறைத்து கூட்டி அமைக்கலாம்!!! நெடுஞ்சாலையில் 16’5” அடி நீளமும்,நகர்புறத்தில் ஓட்டும்போது 12” நீளமும், வீட்டில் நிறுத்தும்போது இன்னும் நீளம் குறைவாகவும் மாற்றிக்கொள்ளலாம்!!

8. அர்ஜெண்டினாவச்சேர்ந்த Esteban Peisci வடிவமைத்த காரைப்பாருங்கள். இதில் சக்கரங்களுக்கு பதில் உருளைகள் மூன்று உள்ளன.எல்லாத்தையும் பார்த்துவிட்டீர்கள். உங்களுக்குப் பிடித்ததை சொல்லுங்க........... கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்த்துளி.தேவா.

------------------------------------------------------------------------------

தமிலிஷிலும்,தமிழ்மணத்திலும் ஓட்டு குத்துங்க!!

-------------------------------------------------------------------------

Friday, 12 June 2009

பிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்!!!

பிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும் பொருட்டு செய்யப்படுவதே பிரேதப் பரிசோதனை.

பிரேதப்பரிசோதனையின்போது உடலில் உள்ள காயங்கள், வெளிப்புறத் தோற்றம், ஆகியவை கவனிக்கப்படும்.

அதன் பின்னர் உடலுக்குள் உள்ள இதயம்,இரைப்பை,ஈரல்,நுரையீரல் சிறுநீரகங்கள் ஆகியவையும் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படும். ஆய்வில் உடலுறுப்புகளில் நஞ்சு இருந்தால் கண்டுபிடிக்கப்படும்.

இது ஒரு அரசு மருத்துவமனையின் சாதாரண நிகழ்வு. எவ்வளவுதான் சொன்னாலும் படங்கள் விளக்குவதுபோல் ஆகாது!!

படத்தில் நெஞ்சுக்கு நேராக கிழித்து உடல் உறுப்புக்களை எடுக்கும் காட்சியைப்பார்க்கிறீர்கள்!!

இவற்றில் சந்தேகங்களைக் கேட்கவும்!!

(நான் போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது எடுத்த படங்கள் இருக்கு. அதையும் போடவா?)

-------------------------------------------------------------------------------

தமிலிஷ்,தமிழ்மணத்தில் ஓட்டுப் போடவும்!

-------------------------------------------------------------------------------

Thursday, 11 June 2009

தன் மரணத்தை எழுதியவன்!!

இளைஞர்களிடைடே வன்முறை குணம் தற்போது அதிகம் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

ஆஸ்திரேலியா,கனடா நாடுகளில் இந்திய மாணவர்களுக்கு எதிரான வன்முறை மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

இலண்டனில் ஒரு மாணவன் தன் பள்ளியில் கற்பனை கட்டுரை ஒன்றை எழுதும்போது உணமையில் கத்தியால் குத்தப்படுபவர் எப்படி சித்திரவதைப் படுவார்கள் என்று தத்ரூபமாக எழுதினான்.

அவன் “ கத்தியால் குத்தப்பட்டு குளிர்தாங்காமல்  நடைபாதையில் கிடப்பதுபோலவும் தன்னுடைய சொந்த இரத்தம் கசிவதையும் குத்தியவனை வலியுடன் பார்ப்பதுபோலவும் அந்தக் கற்பனைக்கட்டுரையில் எழுதியிருந்தான்.

மேலும் தான் சொர்க்கத்துக்குப் போவது போலவும் அவனைக் கொலை செய்த மிருகவெறி பிடித்த அந்த நபரை தான் மன்னிப்பது போலவும் எழுதியிருந்தான்.

அந்தக்கட்டுரையிலேயே இப்படி இளைஞர்களின் வன்முறை புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு இதற்குக் காரணம் குடும்பத்தில் ஏற்படும் விவாகரத்துக்கள்தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளான்.

இதற்கு பெற்றோருக்கு அறிவுரை வழங்கும் வகுப்புகள் எடுக்கப் படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளான்.

(16 வயதுப் பையனுக்கு எப்படி ஒரு அருமையான சிந்தனை பாருங்க).

பள்ளி விட்டவுடன் பகுதி நேரமாக ஒரு வலைகணினி மையத்தில் வேலை செய்து வருகிறான் இந்தமாணவன்.

இப்படி வேலை செய்யும்போது இளைஞர்கள் குழு ஒன்று சைக்கிளைத் திருடுவதைத் தடுத்திருக்கிறான்.

இந்த மாணவன் பள்ளியிலும், வெளியிலும் நல்ல பெயர் பெற்றவனாம்.இவனுக்கு நண்பர்களும் அதிகம்.இவனுடைய சகோதரி நடிகை என்பதால் இவனும் நடிப்புக்கலை பயின்று வந்துள்ளான். ஒரு தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்துள்ளான்.

பென் கின்செல்லா என்ற இந்த மாணவன் இளைஞர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இவன் இலண்டனில் ஒருவருடத்தில்  கொலை செய்யப்பட்ட 17 வது இளைஞன்!!

கொலையாளி அல்லெய்ன் கொலைசெய்த சமயத்தில் 6 கஞ்சா உட்கொண்டுள்ளான். பென் கின்ஸ்லாவை அனைவருக்கும் பிடித்திருப்பது பொறுக்காமல் கொன்றதாகக் கூறியுள்ளான்.

 

கத்தியால் பதினோரு முறை குத்தியதில் ஒரு குத்து நேரடியாக மார்பெலும்பை பிளந்து இதயத்தில் பாய்ந்துள்ளது.

 

இந்த மூவர் குழுதான் கொலையாளிகள்.

இளைஞர்களின் வன்முறைக்கு எதிராக பதினாறு வயதிலேயே புள்ளி விபரங்களுடன் எழுதிய புத்திசாலி இளைஞன் வன்முறையாலேயே இறந்தது பரிதாபகரமானது.

பெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாகவும், போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகவும் மாற்றுவது கொடுமையிலும் கொடுமை.

பணத்துக்கும், காமத்திற்கும் பெற்றோர்களே அடிமையாகி வருவது மிகவும் வருந்தத்தக்கது. இத்தகைய பெற்றோர் என்று திருந்துவர்? 

இவர்கள் திருந்தினால்தானே இவர்கள் வீட்டிலுள்ள இளைஞர்களைத் திருத்தலாம்!!!

------------------------------------------------------------------------

தமிலிஷ்,தமிழ்மணத்தில் ஓட்டிடவும்!!

-------------------------------------------------------------------------

Wednesday, 10 June 2009

வறுகோழி மேலும் சில உண்மைகள்!!

என்னுடைய முந்தைய  பதிவுகெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்!! படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பது சரியான வார்த்தை.

கெண்டகிபோன்ற கோழி வறுவல்,விரைவு உணவுகள் கடை திறப்பதை நாம் தடுக்க முடியாது.

ஆனால் இவற்றில் உள்ள பொருட்களைப்பற்றிப் பார்ப்போம்.

1.ஆடோலய்ச்ட் ஈஸ்ட்(Autolyzed Yeast): ஈஸ்ட் என்பவை நம் குடலில் காணப்படும் உயிரிகள். ஆனால் விரைவு உணவுகள் குடலில் அதிக ஈஸ்டை உருவாக்கி அந்த அதிகமான நச்சுப் பொருட்கள் குடலின் மேற்பரப்பை பாதிக்கின்றன.

2. மோனோ சோடியம் குளூட்டமேட்Monosodium Glutamate:இது சுவைகூட்ட உபயோகிக்கப்படுகிறது. இது ஒரு நரம்புமண்டலத்தைத் தாக்கும் நச்சு. அல்சீமர்,பார்கின்ஸன்,கற்கும் திறன் குறைதல் ஆகியவற்றுக்கும் இந்தப் பொருளுக்கும் தொடர்பு உள்ளது.

3. Partially Hydrogenated Soybean and Cottonseed Oil: சோயா,பருத்தி எண்ணைகளில் ஒமேகா6 கொழுப்பு அதிகமாக உள்ளது. அதிக அளவு இந்த எண்ணை ஒமேகா6 கொழுப்பு இதய நோய்,புற்றுநோய்,மூளை செயல் குறைவு ஆகியவற்றை உண்டாக்கும்.

4.சுத்திகரித்த உப்பு: இயற்கையான கடல் உப்பு உடலுக்கு நல்லது. இதனை சுத்திகரிக்கும்போது சேர்க்கும் ரசாயனங்கள் உடலுக்கு உகந்ததல்ல! மிகவும் சுத்திகரிக்கப்பட்ட உப்பு பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

5.மால்டோ டெக்ஸ்ட்ரின்: இது ஒருவகை இனிப்பு. இது அதிகமாக சேர்க்கப்படுவதால் இனிப்பு சம்பந்தமான பிரச்சினைகள் வருகின்றன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும். மேலும் உடல் பருமனை அதிகரிக்கும்.

மேலும் இந்த உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கம் மேலைநாட்டுக்குழந்தைகளிடம் அதிகம் இருப்பதால் குழந்தைகளே உடல் பருமன் நோய்களால் பாதிக்கப் படுகிறார்கள்!!

இத்தகைய உணவு வேண்டுமா? என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.

சூப்பர் சைஸ் மீ படம் பற்றிய நண்பரின் பதிவை பார்க்கவும்!!

தமிலிஷ், தமிழ்மணத்தில் ஒட்டிடவும்!!

Tuesday, 9 June 2009

கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

கெண்டகி வறுகோழி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது.தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார்.

புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்கமுடியாத முடிவுகள் வந்துள்ளன!

என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை.

அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையே உபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை.

இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு,இறகுகள்,கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும்.

அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்!!

அந்தவகைக்கோழிகளின் சில படங்கள் கீழே...

 

இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள்.

அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதை ”கோழி” என்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது!!

நல்லா யோசிங்க.. கெண்டகி வறுவல் உண்ணும்முன்..

ஓட்டுகளை தமிழ்மணம், தமிலிஷில் போடுங்கள்!!

Sunday, 7 June 2009

பனங்குடி அப்பிச்சி!!

பள்ளிக்கூடத்தில் மதிய வகுப்பு ஆரம்பமாகியிருந்த்து.ஒன்பதாம் வகுப்பு பி பிரிவில் இரண்டாம் வரிசையில் உக்கார்ந்திருந்தேன்.வெளியில் வெய்யில் ஜன்னல் வழியே உள்ளே வந்து அனலாய் வீசியது.

ஆங்கிலப்பாடம் முகமது கவுஸ் வாத்தியார் உள்ளே நுழைந்தார். அவருக்கு என் மேல் ரொம்பப் பிரியம். நுழைந்தவர் என்னைப் பார்த்தார். “சேகர்”!என்று கூப்பிட்டார். “சார்” என்றேன்.

உன் அப்பிச்சிக்கு உடம்பு சரியில்லையாம். வீட்டுக்குப்போப்பா என்றார்."இல்லை சார் பள்ளி முடிந்து போகிறேன்"என்றேன்.

“இல்லைப்பா நீ போ”. உங்க அப்பிச்சிக்கு உடம்பு சரியில்லையாம். நீ போய் பார்த்துவிட்டு வா, உன்னைக்கூட்டிக்கொண்டு போக உன் சித்தப்பா வந்திருக்கார் வெளியே நிக்கிறார் பார்.. என்றார் வாத்தியார்.பனங்குடியிலிருந்து சித்தப்பா பெரியான் வகுப்புக்கு வெளியே வேப்பமர நிழலில் நின்றுகொண்டிருந்தார். இவர் இங்கெல்லாம் வரமாட்டாரே என்று எண்ணியவாறு அவரிடம் நடந்துபோனேன்

சித்தப்பா பதட்டமாக நின்று கொண்டிருந்தார்."என்ன சித்தப்பா?"என்றேன். என்னைக் கண்டதும் வலிய முகத்தில் பதட்டத்தை மறைத்து சகஜமாகப் பேசினார்.

”அபிச்சிக்குதாம்பா முடியல. நம்ம போகலாம் வா?”

என்றார். எனக்கு அழுகை வர ஆரம்பித்தது.அவரிடம் கேட்டதுக்கு ஒன்னுமில்லைப்பா, தடுமாறி விழுந்துவிட்டார். என்றார். ”அப்பிச்சியை காரைக்குடி கூட்டிவந்து வைத்தியம் பார்க்கலாமே சித்தப்பா என்றேன்.”

”அதெல்லாம் பார்த்துக்கலாம் வா. பார்த்துட்டு வேணுமின்னா காரைக்குடி கூட்டியாருவம்”என்று எட்டி நடைபோட்டார்.

சென்னையில் இருந்து நாங்கள் காரைக்குடி வந்து மூன்று மாதம்தான் ஆகிறது. அப்பாவை மாமா துபாய் கூட்டிக்கொண்டு போய்விட்டார். வறுமை தாங்காமல் அம்மா அழுது அண்ணனிடம் கெஞ்சி விசா வந்து அப்பாவும் ஒரு வழியாக வெளிநாடு போய்விட்டார். குமுதத்துக்கும்,ஆனந்தவிகடனுக்கும் கேள்வி பதில் துணுக்கு என்று எழுதிப்ப் போட்டுக்கொண்டு சைக்கிளில் போஸ்டல்&டெலிகிராப் ஆபீஸில் கிளார்க்காக போய் வந்து கொண்டிருந்தவருக்கு துபாய் என்றவுடன் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அவர் போனவுடன் டிசி வாங்கி எந்த பள்ளியிலும் இடம் கிடைக்காமல் முனிசிபல் பள்ளியில் சேர்ந்தேன். இதோ மூன்று மாதம் ஆகிவிட்டது.

வீட்டில் அம்மா, தம்பி,தங்கையெல்லாம் தயாராக இருந்தார்கள். கல்லல் வழியா பனங்குடி போற பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தோம். பஸ் கிளம்பியது.. என் நினைவுகள் பின் நோக்கிச் சென்றன.

பள்ளிக்கூடம் முழுப்பரிட்சை லீவு விட்டால் எல்லோரையும்போல் எனக்கும் கொண்டாட்டம்தான். தினமும் கோடம்பாக்கம் வடக்கு கங்கையம்மன் கொயில் தெருவிலிருந்து கிளம்பி சக்கரியா காலனியில் என்னோடு படிக்கும் விசுவையும் சேகரையும் கூட்டிக்கொண்டு கோடம்பாக்கம் ரயில்வே நிலையம் தாண்டி பசுல்லா ரோடு போனால் நான் படித்த ராமகிருஷ்ணா தெற்கு பள்ளி வந்துவிடும்.தினமும் நடந்துதான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.அப்பாவிடம் ஒரு ராலே சைக்கிள் இருந்தது. (அதனை நானோ அல்லது அப்பாவோ துடைத்துவிடுவோம் தினமும்.)அப்பா சைக்கிளில்தான் அலுவலகம் செல்வார்.எனக்கு சைக்கிள் கிடையாது{ஓட்டவும் தெரியாது}.

முழுப்பரிட்சை லீவுக்கு பனங்குடிக்குப் போவோம். பனங்குடியில்தான் அப்பத்தாவும் அப்பிச்சியும் இருக்கிறார்கள். எக்மோர் புகைவண்டிநிலையத்தில் வண்டியேறினால் நான் எப்படியும் ஜன்னல் இருக்கையைப் பிடித்துக் கொள்வேன்.வண்டி கிளம்பிப்போகும்போது கொஞ்ச நேரத்தில் அம்மா கட்டி வைத்த புளியோதரையும், தொட்டுக்க பருப்புத்தொவையாலும் எடுத்துத் தருவார்கள். பசியெல்லால் ரொம்ப இருக்காது.ஏன்னா புகைவண்டியில் போவதே இன்பம்! அதிலும் பனங்குடிக்குப் போவதென்றால் சொல்லவா வேணும். புகைவண்டியில் நான் இரவெல்லாம் தூங்காது ரயில் நிலையம் ஒவ்வொன்னா மனசுக்குள் எண்ணிக்கிட்டே வருவேன்.எங்க ஊர் வரைக்கும் எத்தனை ரயில்நிலையம்னு எனக்குத்தெரியும். நிறைய ஓட்டுவீடுகள் முகப்பில் மஞ்சள்முட்டைவிளக்கு எரிய வரிசையாகப் போகும்.

பனங்குடி வரப்போகுதுன்னாலே எனக்குத் தெரியும். திருச்சி தாண்டி பனைமரங்களாக வர ஆரம்பித்தாலே சந்தோசம் ஊற்றெடுக்கும். புதுக்கோட்டை,காரைக்குடி தாண்டினால் அப்பா பரபரப்பாகிவிடுவார். எங்கள் சட்டைகள் உள்ள பைகள்,பெட்டியெல்லாம் எடுத்து கதவோரம் வைத்துவிட்டு வெளியே பார்த்துக்கொண்டே வருவார். கல்லல்,அணைத்திடல் தாண்டியவுடன் பனங்குடி நிலையம் வந்துவிடும். ஐந்து நிமிடந்தான் வண்டி நிற்கும். அதற்குள் எல்லா பை,பெட்டியெல்லாம் இறக்கி வைத்துவிடவேண்டும்.

புகை வண்டி நிலையத்துக்கு அப்பிச்சி,அப்பத்தா ரெண்டுபேரும் வந்திருப்பார்கள். அப்பிச்சிக்கு முதுகு கூன் விழுந்து கம்பு வைச்சித்தான் நடப்பார். முகத்தில் திருநீறு பூசி,வெத்திலை போட்டு இருப்பார். இறங்கியவுடன் ”ஐயா! ராசா! நல்லா இருக்கீகளா?” என்று முத்தம் கொஞ்சுவார்.முத்தத்தில் வெத்திலை,திருநீறு வாசமெல்லாம் கலந்து இருக்கும்.

அப்பத்தா நல்ல வாட்ட சாட்டமா உயரமா இருப்பாங்க.நல்ல நிறம்,மூக்கு நுனியில் பெரிய மச்சம் ஒன்னு இருக்கும். ரவிக்கை போடமாட்டாங்க. ரெண்டு மூனு பெட்டிய முந்தானையால சும்மாடு மாதிரி சுருட்டி தலையில வைச்சுக்கிட்டு வரப்புல ரொம்ப சுளுவா நடப்பாக.

அபிச்சி வீடுகூரை வேயும்போது மேலேருந்து விழுந்து இடுப்பெலும்பு ஒடைஞ்சு போச்சாம். அதுனாலதான் ரொம்ப கூனிக்கிட்டே கம்பு ஊண்டி நடப்பார். ”நீங்க போங்க நான் வர்ரேன்” என்று வரப்புல உக்காந்து உக்காந்து கடைசியா வருவார். அபிச்சிதான் ஊரிலேயே எங்கவளவுல படிச்சவர்.கொஞ்சநாள் கொழும்புல தோட்டவேலை பார்த்துவிட்டு வயசாயிட்டதனால இங்கே வந்துவிட்டார்.

அபிச்சிக்கு தெரியாத வேலை கிடையாது. காலையில எந்திரிச்சி அவரா தன்னாங்கம்மாயிக்குப் போய் குளிச்சிட்டு சின்ன துத்தநாக வாளியில் தண்ணி தூக்கிக்கிட்டு வருவார். வந்து சாமி கும்பிட்டு வீட்டுக்கூரையிலிருந்து நீள் சதுர பையை எடுத்து அதைச்சுற்றியிருக்கும் கயிறை பிரிப்பார். அதில் கண்ணாடியும் வேறேன்னென்னமோ இருக்கும். நோட்டு,டைரி எடுத்து எழுதிக்கிட்டே இருப்பார். ஊரில் கொழந்தைங்க பொறந்த தேதி,வயசுக்கு வந்த தேதி,செத்த தேதியெல்லாம் குறிச்சு வச்சிருப்பார். காலையில் காச்சக்காரவுக வந்தா மந்திருச்சு திருநீர் குடுப்பார். நிறைய மந்திரப் புஸ்தகமா வச்சிருப்பார். காலையில மங்குல அப்பத்தா கஞ்சி ஊத்தித்தரும். குடிச்சிட்டு கொஞ்ச நேரத்தில் காட்டுக்கொடியை சீவி கூடை முடைய ஆரம்பிப்பார். இதுமட்டிமில்ல.. மீன்பிடிக்கிற கச்சா,கடகம்,கொட்டான்,ஓலைப்பாய் மொடையுறது எல்லாம் அப்பிச்சிக்குத்தெரியும்.

அப்பிச்சின்னா எனக்கு ரொம்பபிடிக்கும்.

அப்பத்தா வாசலை சாணிபோட்டு மொழுகிவச்சிருக்கும். நெல்லவிச்சி அதுலதான் காயப்போட்டிருப்போம்.அப்பிச்சி நல்ல கம்பு செதுக்கி வழுவழுன்னு செஞ்ச வில்லு இருக்கும். அதுல கல்லு வச்சி மேய வற்ற கோழியை அடிச்சு வெரட்டுவார். எனக்கும் சொல்லிக்குடுத்திருந்தார். வில்லுல கல்லு வச்சு கோழி வெரட்டுறது ரொம்பப் பிடிக்கும்....

அப்பிச்சிக்கிட்டே பணமே இருக்காது. சுருக்குப்பையில மூணுகாசு,ரெண்டு காசு, அஞ்சு காசு,பத்துக்காசு கொஞ்சமாவச்சிப்பார்.அதுலகூட நான் ஊருக்குப் போனா ரெண்டுகாசு,மூணுகாசெல்லாம் தருவார்.

சிலநாள் அப்பிச்சிக்கிட்ட காசு இருக்காது. ஊருக்குபோனா என்னைய பார்க்கவர்ர சொந்தக்காரங்க காசு குடுப்பாங்க. அதெல்லாம் சேத்து வச்சிருப்பேன். போன தடவை ஏங்கிட்ட காசு கேட்டார்.  அப்பத்தா அவரைத்திட்டிச்சு.”சும்மா இருங்க பேரன்கிட்டயெல்லாம் காசு கேக்காதீக.அதான் மயன் வெளிநாடு போயிருக்கில்ல. இன்னும் சரியான வேலை கெடைக்கலையாம். கெடைச்சவுடனே ஒங்களுக்குத்தான் அனுப்புவான்.” . என்று அதட்டிச்சு.”சம்பளம் எவ்வளவுளா தருவாக என்றார்” அப்பிச்சி.மாசம் மூவாயிரம் தருவாகளாம். “மூவாயிரம் கெடைக்குமா? நம்ம கஸ்டமெல்லாம் தீர்ந்துபோச்சு சோலச்சி!” என்று சந்தோசமாகச்சொன்னார்.

அப்பல்லாம் ரொம்பக்கஸ்டமுங்க.நாங்களே மெட்ராசில ரேசன் அரிசிதான் சாப்பிடுவோம்.அப்பா அம்பதோ,நூறோ ஊருக்கு அப்பத்தா அப்பிச்சிக்கு அனுப்புவாரு.

லீவு முடிஞ்சு திரும்பி ரயிலேறும்போது அப்பத்தா அப்பிச்சி எல்லாம் அழுவாக. எனக்கும் அழுகையா வரும்.நான் சேர்த்த ரெண்டு பைசா,அஞ்சு பைசாவெல்லாம் அப்பிச்சிக்கு குடுத்துவிட்டேன். அப்பிச்சி நான் சம்பாரிச்சு நிறைய காசு கொண்டுவற்றேன் அப்பிச்சி! என்று அழுகையினூடே சொல்லுவேன்.

காலம் யாருக்கும் தயவு காட்டுவதில்லை. இப்போது இந்த மூன்று மாதமாக காரைக்குடியில் இருந்தாலும் அபிச்சி வரமாட்டார். கூன்விழுந்துவிட்டதால் அவர் ஊர்களுக்குப் போவதில்லை.

நினைவுகளின் கனம் தாங்காமல் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.பஸ் நின்றுவிட்டிருந்தது. அண்ணே! எறங்குண்ணே என்ற தங்கச்சியின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். பஸ் புழுதியைக்கிளப்பிக்கொண்டு கள்ளம்பிஞ்சையில் சென்றது.அது கிளப்பிய புழுதி வேறு கண்ணில்பட்டு உறுத்தியது. அப்பிச்சிக்கு என்ன சித்தப்பா? ஒன்னும் சரியா சொல்லமாட்டேங்கிறீங்க? என்று சற்று வேகமாகவே கேட்டேன்.

”அட அது ஒன்னுமில்லைடா முந்தாநாள் கோணக் கம்மாயில குளிச்சிட்டு வரும்போது மயக்கமாயி விழுந்துட்டாரு, அதிலேயிருந்து ஒடம்பு கொஞ்சம் சரியில்லை, வாடா உன்னையெல்லாம் பாக்கணும்னு ஆசைப்படுறார்.”வெரசா போவோம் வா” என்று கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனார்.

வீடு வந்துவிட்டது. வாசலில் இருந்த வேப்பமர நிழலில் பங்காளிகள் சிலர் உக்காந்திருந்தனர். கிழக்குப்புறம் பூவரச மரத்தின் கீழ் கல்லுக்காலின் மேல் பனங்கைகள் போட்டிருந்தது, அதில் பக்கத்து வீட்டு மாயன்,விசுக்கான்,ஆதினமிளகியுடன் இன்னும் சிலர் அமர்ந்திருந்தனர். வாசலில் குனிந்து உள்ளே போனேன். ஓலை தலையில் தட்டியது. இடதுபுறம் திண்ணையில் அப்பிச்சி படுத்திருந்தார். திண்ணை மறைவாக தென்னந்தட்டி கீழேயிறக்கி திண்ணை நிழல் மறைவாக இருந்தது. பெண்கள் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். அதுவரை கட்டுக்குள் இருந்த அழுகை பொங்கிவந்தது.

”ஏம்பொறந்த ராசாவே!”

என்று அழுதுகொண்டிருந்த அப்பத்தா என்னைப் பார்த்ததும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது.

ஏ அய்யா! ”உங்களைப் பாக்க பேரம்மாரெல்லாம் வந்திருக்காக! கந்தொரந்து பாருங்க! ஏம்பெத்தராசா!”

கண்ணீருடன் அப்பிச்சியைப் பார்த்தேன். கண்களில் ஒளிமட்டும் இருந்தது. உடலில் அசைவு இல்லை. வலது கைக்கட்டைவிரல் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. கண்கள் ஏதோ எனக்குச் சொல்லுவதுபோல் எதையோ தேடுவதுபோல் இருந்தது. யாரோ ஒரு குவளையில் பால் கொண்டுவந்து தந்தார்கள். இன்னைக்கு முழுக்க சீவன் இழுத்துக்கிட்டு இருக்குப்பா! உன்னையெல்லாம் பார்க்கணும்னுதான் போல. கொள்ளிவைக்கிற பேரன் வந்திருக்கிறான் பாருங்க! என்று சாத்துரப்புக்கு சொல்லிவிட்டு ஊத்துப்பா அப்பிச்சிவாயில, பால ஊத்து. சாமிய வேண்டிக்கிட்டு ஊத்து! செத்து உங்கப்பிச்சி சாமியா இருந்து உங்களைக்காப்பாத்தோணும்...குரல் காதில் விழுந்தது. மெதுவாக பாலை வாயில் ஊற்றினேன்.

வாழ்நாளெல்லாம் ஏழ்மையில் உழன்ற அந்த கிராமத்துக்கலைஞன் தன் மகன் வெளிநாடு சென்று சம்பாதித்து செல்வச்செழிப்பில் வாழாமல் பத்துப்பைசாவுக்கும், நாலணாவுக்கும் ஏங்கிய மனதுடன் அடங்கிப்போனார்.வித்தை பல கற்ற அவரின் கட்டைவிரல் துடிப்பு மெதுவாக அடங்கியது!

Wednesday, 3 June 2009

மறதிநோய்,நடுக்குவாதம்(Alziemers&Parkinsons disease)-புதிய சிகிச்சை!!!

இந்த நூற்றாண்டு மருத்துவத்துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்தும் கண்டுபிடிக்கபட்டுள்ளன.அம்மை போன்ற பல நோய்கள் உலகநாடுகள் பலவற்றிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன.

மருத்துவத்துறையில் இன்னும் வளரவேண்டிய முக்கியமான துறை மூளைநரம்பியல் துறையாகும். பார்கின்சன்(நடுக்குவாதம்),அல்சீமர்(ஞாபக மறதி நோய்) ஆகியவை தற்போது மிக அதிகமாகக் காண்ப்படுகின்றன.

அல்சீமர் நோய் என்பது  ஞாபக மறதிநோய் ஆகும்.இது பெரும்பாலும் முதுமையில் வரும். ஆயினும் இதில் முதுமையில் வருவது,முதுமைக்குமுன் வருவது என்று இரண்டு வகைகள் உள்ளன. முதுமைக்கு முன் இந்த நோயாளிகளில் தூக்கம் வராமை(Insomnia) பெரும்பாலும் முதலில் ஏற்படும். பிற்பாடு இரவில் மன உளைச்சல்,குழப்பம் ஆகியவை உண்டாகும். முடிவெடுத்தல், பிரச்சினைகளை அலசுதல் ஆகியவற்றில் குறைபாடுகள் முதலில் ஆரம்பிக்கும். சற்றுமுன் நடந்தவைகள் மறந்து போதலில் ஆரம்பித்து நோய் தீவிரத்தின்போது எங்கு இருக்கிறோம், காலையா?மாலையா? என்பதுகூட தெரியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும். மூடு மாறுதல், உணர்ச்சிவசப்பட்டு கத்துதல் ஆகியவை ஏற்படும்.

பார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு முதலில் கைகளில் சிறு நடுக்கமாக ஆரம்பித்து பின் கால் உடல் என்று அனைத்துப்பாகங்களிலும் நடுக்கம் பரவும். முதலில் வலது அல்லது இடது கையில் ஏற்படும் நடுக்கம் அதிகமாக ஏதாவது ஒருகையில் இருக்கும்.சில வருடங்களில் அடுத்த கையிலும் தெரிய ஆரம்பிக்கும். வலது கையில் வரும்போது ஒருவருடைய கையெழுத்து அழகு குறைந்து கிறுக்கலாக மாற ஆரம்பிக்கும்.

இன்னும் இந்த நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.மருந்துகளால் நாம் இவற்றைக் கட்டுக்குள்தான் வைத்திருக்கமுடியும்.

அனைத்து நரம்பு நோய்களும் தொண்டை,குரல் வளை ஆகியவற்றைத்தாக்கும்.ஏனெனில் இந்தப் பகுதி மிக அதிகமான தசைகளைக்கொண்டது. அதே போல் நரம்புநோய்களில் சாதாரணமாக மூளையில் உள்ள நரம்பு செல்கள் அழிவு அதிகமாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.இவற்றில் மூளையில் உள்ள மொழி,இசை ஆகியவற்றின் நரம்புப் பாதைகள் மிகவும் சிக்கலானவை. நரம்பு நோய் தாக்கப் பட்டவர்களின் குரல் சத்தம் குறைதல்,விழுங்குவதில் சிரமம் ஆகியவை சாதாரணமாகக் காணப்படுகின்றன. இவை அவர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன.

இத்தகைய நரம்பு நோய்களுக்கு தற்போது இசையின் மூலம் சிறந்த முன்னேற்றம் காணமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். பார்கின்சன் வியாதியில் நடுக்கம், ஆட்களைக்கண்டால் மிக அதிகமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்படும். இதனால் இவர்கள் பெரும்பாலும் வெளியில் செல்லவோ, நண்பர்,உறவினர்களைச் சந்திக்கவோ விரும்பமாட்டார்கள். வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பார்கள்.  இசைப்பயிற்சியை ஆரம்பித்த பார்கின்சன்,மல்டிபிள் ஸ்க்ளெரோசிஸ்,ஸ்ட்ரோக் நோயாளிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் சிரத்தையான பயிற்சி மூலம் இசை நிகழ்ச்சி நடத்தும் அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். பாடுவது மிகச்சிறந்த குரல் வளைப் பயிற்சியாக உள்ளதால் இது அவர்களின் பாதிப்படைந்த குரலை சீர் செய்துள்ளது. மேலும் உற்சாகத்துடன் பிறருடன் சேர்ந்துபாடுவது அவகளின் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் பாடுவது நுரையீரல்களுக்கு மிகச்சிறந்த விரிந்து  சுருங்கும் திறனை அளிக்கின்றது.மேலும் சங்கீதம் கற்பதால் மூளையில் புதிய பாதைகள்,நரம்பு இணைப்புகள் உருவாகின்றன. ஸ்ட்ரோக்கால் கைகால் செயலிழந்தவர்கள் பியானோ,மிருதங்கம்,மேளம்,டிரம்ஸ் ஆகியவை கற்பதன்மூலம் விரைவில் நலம் கிடைக்கும்.

இப்படி சங்கீதத்தின் மூலம் மூளைஅழிவுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை Neurologic Music Therapy (NMT) என்று அழைக்கிறார்கள். இந்த சிகிச்சை முறையால் பார்கின்சனை குணப்படுத்தமுடியாது. ஆனால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளியை பயிற்சியின் மூலம் எல்லோருடனும் பழகவும்,தன்னம்பிக்கை அளிக்கவும் முடியும். வாழ்வில் நம்பிக்கை இழந்து வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளிகளுக்கு இதுவே பெரிய விசயம்தான்.

நீங்களோ, நானோ இந்த வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்தால் கட்டாயம் நோபல் பரிசுதான்.

என்னுடைய ஆண்கள் அமுதூட்டமுடியுமா? இடுகை யூத்விகடனில் வந்துள்ளது.யூத்விகடனுக்கு நன்றி.

தலையணை மந்திரங்கள் 16 க்கு தமிலிஷில் 26 ஓட்டுக்களும் 618 ஹிட்டும் அளித்துள்ளீர்கள். நல்ல பதிவுகளுக்கு மக்கள் தரும் ஆதரவு மீண்டும் நல்ல இடுகைகளை எழுதத் தூண்டுகிறது.( அதுக்காக மொக்கை போடமாட்டேன் என்று அர்த்தமில்லை! இஃகி! இஃகி! இஃகி..)

இந்த செய்திகளை அனைவரும் படிக்க தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டுப்போடவும்!!

Tuesday, 2 June 2009

தலையணை மந்திரங்கள்-16 !!

உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம். 

கணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது.

இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்!!எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்? என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!

1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்.

2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.

3.வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும்(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)

4.வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.

5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இல்லை. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!

6.கணவனை/காதலனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

7.உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன்  அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.

8.உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.

9.சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுக்கள்.

10.உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.

11.நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள். இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்ன? கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது?

12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.

13.கணவன் சில காகிதங்கள்,புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும். அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத்தோன்றும். ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். துப்புறவு மட்டும் செய்யுங்கள். எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை ஓய 2 நாள் ஆகும்.

14.உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.

15.உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்..  தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள்.  தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.

16.கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!!

நண்பர்களே! முடிந்தவரை சுருக்கமாக சொல்லமுயன்று உள்ளேன். இது பெண்களுக்காகக் கூறப்பட்டதாயினும் ஆண்களும் கடைப்பிடிக்க நிறைய இதில் உள்ளது.

பதிவு அனைவரையும் அடைய தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுங்கள்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory