Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Wednesday, 14 October 2009

கொஞ்சம் தேநீர்- மௌனமாய்...

மக்கிச் சிதைந்த

சாளரங்களின்வழி

தரையெங்கும்

பரவியிருக்கிறது,

மவுனமாய் கசிந்த ஒளி,

 

சிதிலமடைந்த

கதவொன்றில் சிரித்தபடி

விளக்குடன்

வரவேற்கும்

செதுக்கப்பட்ட பதுமை!!

 

சிலந்தி வலைகளின்

பிடியில் உத்தரத்தில் தொங்கும்

என்றோ தொங்கவிடப்பட்ட

விளக்குகள்!

 

பூட்டப்பட்ட

சயன அறைக்குள்

பல சந்ததிகளின்

சூட்சுமம் பொதிந்த

பழைய கட்டில்!

 

இருளின் ஆழத்தில்

பாசிகளால் மறைக்கப்பட்டு,

சலனமற்றுக் கிடக்கிறது

இறைக்கப்படாத

தண்ணீர்,

 

காற்றின் அந்தரங்கங்களில்

கலந்து கிடக்கும்

என்றோ ஒலித்த

தாலாட்டு!

 

பூக்களைக் கொட்டியபடி

வாசலில் நிற்கும்

பூவரச மரம்,

 

தொங்கிக்கொண்டிருந்த

குருவிகளின் திசையறியாது,

வண்டு துளைத்து

மெலிந்த

தோட்டத்து ஒற்றை

மாமரம்!

 

கடந்துபோன

எச்சங்களின் நினைவைச்

சுமந்து கிடக்கும்

வண்டிப்பாதை!!

 

அரசமர இலைகளின்

சலசலப்பில்

சிதிலமடைந்த

செங்கற்களின் நடுவே

அமைதியாய்

காத்து நிற்கும் குலசாமி!

Monday, 22 June 2009

என் கவிதைகள்!!

என் கவிதை

உங்களுக்குப் பிடிக்கும்!

அதில் உங்களுக்கான்

தூண்டில்கள் இல்லை!



ஒரு நெருங்கிய

நண்பன் போல்

அது உங்கள் நெஞ்சுக்குள்

புகும்!



ஒரு பைன் மரக்காட்டைக்

கடந்து செல்லும்

பயணி போல்

என் கவிதை

உங்களைக் கடந்து செல்லும்!



ஒரு குளிர்ந்த நீரோடை

போல்

உங்கள் கால்களை

தழுவிச்செல்லும்!



உங்களிடம் அது

எதையும் வேண்டாது,

ஒரு இனிய

மாலைப்பொழுதுபோல்!!



முகம் அறியாத

குயிலின் பாடல்போல்

கடந்து செல்லும்

இன்னொரு இடம்,

காலம் நோக்கி!!!



தமிழ்த்துளி தேவன்மாயம்...

Tuesday, 21 April 2009

கொஞ்சம் தேநீர்-15 -நிழல்!!

வலை நண்பர்களே!! இதற்கு முன் கொஞ்சம்

தேநீர்-14- நானும் என் நிழலும்

எழுதி இருந்தேன்!! ரசித்தவர் பலர்!!

சிலர் புரியவில்லை என்றனர்!

அந்தக் கவிதை இளமை விகடனில்

வெளியாயிற்று!!

http://youthful.vikatan.com/youth/thevanmayampoem16042009.asp

தற்போது அதே நிழலின் தாக்கத்தில்

ஒரு சிறிய சிந்தனை!!

-------------------------------------------------------------------------------

கொஞ்சம் தேநீர்-15-நிழல்!

கொஞ்சிப் பாலூட்டுகையில்

அன்னையின் மடியில்

மறைந்திருந்தது

என் நிழல்!

 

கைபிடித்து

கடைவீதி நடக்கையில்

தெரியவில்லை என் நிழல்!

என் அப்பாவின்

நிழலில் மறைந்திருந்து,

 

கவிதைப் போட்டியில்

பரிசு பெற்ற பாடலின்

வரிகளின் ஊடே

பொதிந்து கிடந்தது

தமிழ் ஐயாவின் நிழல்!

 

கல்லூரியில்

ஆய்வுக்கட்டுரையின்

அறிவியலின்

விரிவுகளில்

மறைந்து கிடந்தது

என் பேராசிரியரின் நிழல்!

 

தயங்கியும் மயங்கியும்

தள்ளாடிய

என் வாலிபம்

தஞ்சம் புகுந்தது

என் மனைவியின் நிழலில்!!

 

இன்னும் காத்திருக்கும்

வாழ்வின் வழிநெடுக

எண்ணிலடங்கா

நிழல்கள்!!

 

நிழல்கள்

இல்லாமல்

நிங்களோ நானோ

யாருமில்லை!!

-------------------------------------

 

பிடித்திருந்தால் தமிலிஷிலும்

தமிழ்மணத்திலும் தட்டுங்க!

Thursday, 16 April 2009

பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள்!!

 

 

அன்பின் வலை மக்களே!! நம்ம கஷ்டம் நமக்குத்தான் தெரியும்!! நாம் ருசியான பதார்த்தங்களை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போய், சரி வந்து சாப்பிடலாம் என்று வேலை முடித்து வந்து பார்த்தால் சட்டி காலி!!

நாமும் சரி குழந்தைகள் சாப்பிட்டு இருப்பார்கள் என்று விட்டுவிடுவோம்.

ஆனால் குழந்தைகளோ ஒருபுறம் அப்படியே உடல் பெருக்காமல் இருக்க நாம் எதிர்பாராத விதமாக எதிபாராத நபர் உடல் எடை கூடிக்கொண்டே போவது நமக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பது உண்மை!!

நடந்தது என்ன? ரேஞ்சில் துப்பறியப்போனால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்!!

சரி சொன்னாலும் குற்றம்!! மனசுக்குள்ள வைத்து இருக்கவும் முடியாமல் நாம் படும் அவதிக்கு வழிதான் என்ன?

பல வகையில் ஆராய்ந்ததில் பல அரிய அருமையான வழிகள் கிடைத்தன!! இவற்றைப் பயன்படுத்தி உடல் எடையை நாசூக்காக சொல்வது எப்படி என்று பார்ப்போம்!!

1.அம்மணியை வெளியே அழைத்துக்கொண்டு போவீர்கள்தானே?  நீச்சல் குளம், பீச், மால் என்று கொடியிடை மகளிர் உலாவும் இடங்களுக்காக அழைத்துச் செல்லவும்!! அம்மணிக்கு நாளைடைவில் நல்ல மாற்றம் தெரியும்!!( கூட்டிக்கொண்டுதான் போகனும்!! நீங்க பாட்டுக்கு ஓவரா லுக் விட்டுக்கிட்டு இருந்தீங்க  வீட்டுக்குப்போனவுடனேயே எதிர் விளைவுகளை சந்திக்க நேரும்!! அதற்கு நான் பொருப்பல்ல!!...)

2. நிச்சயதார்த்த போட்டோ, கல்யாண போட்டோக்களில் அம்மணி கொஞ்சம் ஒல்லியா இருப்பாங்க!! அதையெல்லாம் வெளியே எடுங்க!! அதில் அம்மணி உள்ள போட்டோக்களை மேசைமீது கண்ணில் படுமாறு போடுங்க, அடிக்கடி!! மேடம் கண்ணில் படும். நல்ல பலன் கிட்டும்!!

3.கொஞ்சம் ரிஸ்க் ஆன முறை!! அம்மணி அமரும் நாற்காலி, சோபா போன்றதில் உள்ள ஸ்குரூ, ஆணி போன்றவைகளை சந்தேகம் வராமல் (உங்கள் மேல்) லூஸாக்கி வைங்க! சேர் மெதுவா உடையும்! அம்மணி விழுவாங்க!! ப்ராக்டிகலா எடைகூடிவிட்டது உறைக்கும்!!( நீங்க ஸ்பாட்டில் இருக்கக் கூடாது!! எங்கேயாவது நின்று கொண்டு கெக்கே பிக்கேன்னு உளறினீங்க கதை கந்தல்!!)

4.ஒரு ஜாலி மூட் பார்த்து நீங்கள் முதன் முதலா எடுத்துக் கொடுத்த சுடிதார் , சேலை,ஜாக்கெட்டை போடச்சொல்லுங்க!! அம்மணியால் போடமுடியாது!! பார்த்துக்கொண்டே நீங்க வாயைத் திறக்காமல் இருக்கணும்!! செம எஃபெக்ட் இருக்கும்!

5. மெதுவா அப்படியே நடக்கும் போதெல்லாம் இடுப்பை  (டயரை) தட்டி விட்டு செல்லவும்!! வலிக்காமல் கிள்ளவும் செய்யலாம்!!  சொல்லாமல் சொல்றதுன்னா இதுதான்!!

6.இது நாம செய்ய வேண்டியது!! வீட்டில் காய்கறி , சாலட், கீரை பழவகைகள் போன்றவற்றை வாங்கி வந்து ஒரு ஆடு ரேஞ்சுக்கு உள்ளே தள்ளுங்க!! சாப்பாடு சிஸ்டமே மாறுது இல்லையா? உங்க பேரைச் சொல்லிதானே அவங்க உள்ளே தள்ளுகிறார்கள்!! இப்ப தன்னால் சமையல் முறையே மாறிவிடும்!!( புடிச்ச அயிட்டங்களை வெளியே ஆபீஸ் போகும்போது ருசிபாருங்க!! இஃகி! இஃகி!!)

7. ஒட்டல் போய் சாப்பிடுகையில் கொஞ்சமா ஆர்டர் பண்ணுங்க! நீங்களும் குறைய சாப்பிட்டு போதும்னு சொல்லுங்க!! அம்மணிக்கு தான் அதிகம் சாப்பிடுவது விளங்கும்!!

8.இது ஒரு முறை. நீங்களே உங்கள் உடலில் கொழுப்பு அதிகமாகிவிட்டது, தொப்பை போடுதுன்னு உடற்பயிற்சிகளில் இறங்குங்க!! உங்களுக்கும் பயன்! அம்மணியும் வாக்கிங்,பயிற்சின்னு ஆரம்பித்து விடுவாங்க!( குரங்கு தொப்பி கதைதானே!!)

9. யோகா பண்ணினா மனசு டென்ஷனில்லாமல் இருக்கும் என்று அம்மணிகளுக்கு எப்போதும் ஒரு எண்ணம் உண்டு!! யோகாங்கிற போர்வையைப் பயன்படுத்தி யோகாவுக்கு அனுப்புங்க!!நம்ம சொல்வதைவிட அங்கே சொல்றதை நல்லா கேப்பாங்க!! உங்களுக்கே சொல்லித்தர ஆரம்பித்து விடுவாங்க!

10.அம்மணியோட அளவைத்தெரிந்து கொள்ளுங்க!! அகஸ்மாத்தா வாங்கிவருவது போல அதைவிட ஒரு சைஸ் குறைவா ட்ரெஸ் வாங்கிக்கிட்டு வாங்க!! அதைப்போட்டுப்பார்த்தா நிச்சயம் சேராது. ஓ! இதுதானே உன் அளவுன்னு நினைத்தேன்னு ஒரு பீலா விடுங்க! இப்போ குண்டாயிட்டேன்னு அவுங்களே சொல்லுவாங்க!!

என்ன எல்லா முறைகளையும் சொல்லியாச்சு!! மிகச்சரியா செயல் படுத்தனும்!! கொஞ்சம் தப்பினாலும் உடம்பு ரணகளமாகி விடும்!! அதுக்கு நான் பொறுப்பல்ல!!

குத்துங்க தமிலிஷிலும் தமிழ்மணத்திலும்!!

Tuesday, 3 February 2009

தமிழா! தலைகுனிந்து நில்!

நேற்று அகஸ்மாத்தாக டி.வி.யின் முன் அமர்ந்து ம்தியம் சாப்பிட ஆரம்பித்தேன்.
கிரிக்கெட் மாட்ச் நேரடி ஒளிபரப்பு.நம்மதான் கிரிக்கெட்னா ஆணிஅடிச்சு உக்காந்திடுவோமே!

சோத்தையும் முடிச்சு ஒரு பாயையும் 4 தலகாணியும் போட்டு (கீழே படுத்துக்கிட்டே டி.வி. பாக்கிறதுதானே வசதி).....

,வாங்கிவந்த பலாச்சுளையில் 6 சுளையை தட்டில் வைத்து,.........
உக்கார்ந்து இருக்கோமா படுத்து இருக்கோமான்னு தெரியாத ஒரு நிலையில் தலகாணி மேல் சாய்ந்து மாட்ச் பார்க்க ஆரம்பிச்சேன்!!

கொஞ்ச நேரத்தில் ஆனந்தமான பரவச நிலை! அண்ணன் சேவாக் ஒரு பக்கம்,யுவராஜ் ஒரு பக்கம்! ஒரே வாண+வான வேடிக்கைதான்!!!
ஊடே ஊடே மாட்ச் நடக்கிற ஊரைக்காட்டுகிறான்,அது என்னங்க ஒரே கிளப்களும்,பளபளப்பான கட்டிடமும்,வெளிநாட்டு பயணிகளும்!!-உடனே அங்கே போகணும்போல...இருந்ததுங்க...

இதுல ஏதாவது சோகமா தெரிஞ்சதா உங்களுக்கு? இல்லைதானே!!

இதுதாங்க இப்ப என்னுடைய, நம்முடைய உண்மை நிலை!

செத்த வீட்டுல ரெண்டுநாள்,ஒருவாரம் அழுதுவிட்டு அப்புறம் எப்பவும் போல சோறாக்கி சாப்பிட்டு வேலைக்குபோகும் சராசரி மனிதர்தானே நான்..நாம் எல்லாம்.

இதை பகிரங்கமாக சொல்ல வெட்கப்பட்டாலும் உண்மை இதுதானே!!
மேலே நான் எழுதியதுபற்றி என் அன்பு சகோதரர்கள் யாரும் வருத்தப்படவேண்டாம்.

இனி விஷயத்துக்கு வருவோம்!

ஒன்றும் நடக்காததுபோல் இந்திய அணி இலங்கை செல்வதும் இந்தியாவும்,இலங்கையும் விளையாடுவதும்,ஒரு நிமிடம் நினைவுக்கு வந்தவுடன் தொலைக்காட்ச்சிபெட்டியை அணைத்து விட்டு அமர்ந்தேன்.

ஒரு பாகிஸ்தான் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வரமாட்டேன் என்று கூறுகிறான்.
ஆனால் இனப்படுகொலை நடக்கும் இலங்கைக்கு நாம் போய் சந்தோஷமாக விளையாடி வெற்றிகளை அனுபவிக்கிறோம்.

இதே இலங்கை நாட்டின் ஒரு பக்கம் பயங்கர இன அழிப்புப் போர்!
இன்னொருபுறம் அப்படியா?சண்டையா? எங்கே நடக்குது என்று கேட்கும் அளவுக்கு கேளிக்கையும்,விளையாட்டும்.
நினைக்கும்போது மனம் கசந்துபோய் இனம் புரியாத கவலை மனதில் ஏற்பட்டது..

தமிழர்கள் இந்தியாவிலும் சிறுபான்மையினர்தானோ?
இங்கும் நம் குரல் செல்லாதோ?

ஊடகங்கள் வழி பார்க்கும் எவரும் இலங்கையில்
ஒரு இனம் ஒடுக்கப்படுகிறது,

குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்!

பெண்கள் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள்.
தமிழ் மக்கள் அழிக்கப்படுகிறார்கள் என்று நம்ப் முடியுமா?

ஒருநாட்டின் அரசே பயங்கரவாதத்திலும்,இனஒழிப்பிலும் ஈடுபடும் போதும்,
அதற்கு ஆதரவாக ஊடகங்களும்,உலகநாடுகளும் செயல்படும்போதும்

நாம் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியாமல் கூக்குரல் இடமட்டுமே முடிந்த இழிநிலையில் இருப்பதும் கேவலமானதுதான்.

இன்னிலை தொடர்ந்தால் தமிழர் வரலாறு உலக வரலற்றின் கருப்புப்பக்கங்களில் இரத்த்கறை கொண்டு எழுதப்படும்.

இலங்கை தன் கலாச்சாரம்,பண்பாடு,வளம் எல்லாவற்றையும் இழந்து கொடுங்கோல் ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு,உணவின்றி இறக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் நிலைமையையே அடையும்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து சொல்லடா! என்று எட்டுத்திசையெங்கும் முழங்கிய
மகாகவி பாரதியும் கண்ணீருடன் இதைப்பார்த்துக்கொண்டுதான் இருப்பானோ?

Monday, 26 January 2009

கொஞ்சம் தேநீர்-6 முடிவில்லா வேட்கை!!


சாளரம் தாண்டி
மௌனமாய்
இழையும்
நிலவின் ஒளி!

எங்கிருந்தோ கமழும்
ஏதோ
ஒரு பூவின்
மணம்!

சாத்திய அறை
இருளில்
மின்னும்
உன் கண்கள்!

என் சுவாசமும்
உன் சுவாசமும்
ஒன்று கலக்கும்
அதிசய
சுரம்!!

உள்ளும்
புறமும்
மாறி மாறி வீசும்
உன் வாசம்!!

என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!

உனக்கும்
எனக்கும்
மட்டுமே தெரிந்த
ஆதி மொழி!

சொல்லியும்
சொல்லாமலும்
புரியும்
முடிவில்லா வேட்கை!!
Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory