Monday 21 June 2010

சர்க்கரை நோயும்!களைப்பும்!சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது நோயின் அறிகுறிகள்! பல நேரங்களில் நாம் மாத்திரையோ, ஊசியோ சரியாக எடுத்துக்கொள்ளுவோம், சர்க்கரையின் அளவும் இரத்தம், நீர் ஆகியவற்றில் சரியாக இருக்கும். ஆனால் இவ்வளவு உணவுக்கட்டுப்பாடு மற்றும் மருந்துகளைச் சரியாகச் சாப்பிட்டும் சிலருக்கு,  உடல் அசதி, அன்றாட வேலைகளைக்கூடச் செய்ய முடியாமல் இருத்தல் ஆகியவை இருக்கும். சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் உடல் நலமாக இருக்கும் என்று நினைத்தால் அது சரியல்ல. உடலில் தோன்றும் அறிவுறைக்கு ஏற்ப சிகிச்சை பெறுவது மிக அவசியம்.
சர்க்கரை நோயாளிகள் அன்றாட வேளைகளைச் செய்வதற்கு சக்தி அவசியம். சர்க்கரையைக் குறைப்பதற்காக காலையில் வாக்கிங் சென்று விட்டு வந்து ஒன்று அல்லது இரண்டு இட்லியை உண்கிறார் என்றால் சர்க்கரை குறையும், ஆனால் அன்றாட வேலைகளைச் செய்வதற்கான சக்தி இருக்காது. அவரால் அலுவலக வேலைகளைச் சரிவரச் செய்ய முடியாது.
சர்க்கரை அதிகமாக இருந்தாலும் தேவையான அளவு உணவுகளை உண்ண வேண்டும். எப்படி சத்துக் குறைவு இருப்பதைக் கண்டு பிடிப்பது? உங்களால்

 • மாடிப்படி ஏறி இறங்க முடிகிறதா?(மூட்டுவலி உள்ளவர்களுக்கு சாதாரணமாகப் படிகளில் ஏறமுடியாது. அது வேறு....)
 • தரையில் அமர்ந்திருந்து இலகுவாக எழுந்துகொள்ள முடிகிறதா?
 • அன்றாட வேலைகளை அலுப்பில்லாமல்  செய்ய முடிகிறதா?
 • குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு நடக்க முடிகிறதா?
 • கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்கி வரமுடிகிறதா?
மேற்சொன்னவற்றைச் செய்ய முடிந்தால் உங்கள் உடல் தகுதியுடன் உள்ளது என்று அர்த்தம்.
 உதாரணமாக நடுத்தர வயதுடைய ஒருவருக்கு உடல் எடை75 கிலோ என்று வைத்துக்கொள்வோம். அவர் மருத்துவரை அணுகி சர்க்கரையைக் குறைக்க மருந்து,மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வருகிறார். சர்க்கரை நோய் குறையும் என்பதற்காக இவர் தினமும் நடைப்பயிற்சி செய்ய முயலுகிறார். ஆனால் அவரால் சாதாரணமாகக்கூட நடக்க முடியவில்லை, மூச்சுவாங்குகிறது( நிறையப்பேருக்கு இந்தப் பிரச்சினை உள்ளது..) என்கிறார். என்ன செய்வது? இது எதனால் இப்படி? என்றால் காரணம் அவர் உடல் தகுதி குறைவாக உள்ளது என்று அர்த்தம்!! உடல் தகுதி குறைவாக உள்ளவர்களால் நடைப் பயிற்சியில் ஈடுபட முடியாது என்பதுதான் உண்மை!
சர்க்கரை நோயாளிகள் அன்றாட உணவைத் தவிர்க்கக் கூடாது. கால சிற்றுண்டி, மதியம் சரியான நேரத்தில் அளவான மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றை அறிவுரையின்படி தவறாமல் உண்ணவேண்டும்.
நடக்க முடியாமல் உடல் தகுதியில்லாமல் இருப்பவர்கள் அன்றாடம் எவ்வளவு உணவு உண்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அவர்கள் ஒரு நாளைக்குத்தேவையான ஏறக்குறைய 1500 கலோரியைவிடக் குறைவாக உண்பார்கள். நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சில நேரம் ஒருவேளை உணவைத் தவிர்த்துவிடுவோரும் உண்டு. 
இப்படியுள்ளோருக்கு களைப்பு, உடல் சோர்வு,நடக்க முடியாமை ஆகியவை இருக்கும்.
இவர்களுடைய உணவில்{உடலில் சர்க்கரை அதிகமாக இருந்தாலும்} 1500 கலோரி இருக்குமாறு உணவை அதிகரிக்க வேண்டும். சரியான ஓய்வு மற்றும் தேவையான அளவு உறக்கம் ஆகியவை முக்கியம். இவற்றுடன் அறைக்குள் கை,கால்களை மடக்கி  நீட்டி இலகுவான பயிற்சி எடுத்துக்கொண்டால் போதும். பிறகு வராந்தாவில் மெதுவான நடைப்பயிற்சி என்று முறைப்படி, படிப்படியாகச் செய்தால் வியக்கத்தக்க முறையில் உடல் நலம் சீரடைந்து வெகுவிரைவில் களைப்பில்லாமல் நடைப்பயிற்சியில் ஈடுபட முடியும்.
ஆகையினால் உங்களுக்கு நடக்க இயலாம, அன்றாட வேளைகளைச் செய்ய முடியாத களைப்பு ஆகியவை இருந்தால் சரிவிகித உணவு உண்டு உடல் தகுதியை அதிகரித்துக் கொள்வதே அவசியம்!!!


Friday 18 June 2010

அதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா?

clip_image002

உணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிரபலமாகி வருகின்றன. அதே போல் சத்து டானிக்குகள், சத்துப் பவுடர்கள் எழுதி வாங்கி, அல்லது கடையில் வாங்கி உபயோகிப்போர் மிக அதிகமாகி வருகின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் மல்டி லெவல் மார்க்கெட்டிங்க் என்ற முறையில் புரத சத்து பவுடர்கள் மிக அதிக அளவில் ஏஜண்டுகளால் பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த நேரத்தில் அதிக புரதச்சத்து மிக்க உணவுகள் தேவையா? நாம் உண்ணும் உணவு தவிர உபரியாக புரோட்டின் டானிக்குகள், புரோட்டின் பவுடர்கள் தேவையா? அவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை நாம் தற்போது பார்ப்போம்.

பொதுவாக புரோட்டீன் பவுடர்கள், டானிக்குகளை இளைஞர்களும், உடல் பளு தூக்கும் பயிற்சியில் ஈடு படுவோரும் உபயோகப்படுத்துகின்றனர். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்காகவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இவை தகுந்த ஆலோசனை மற்றும் உடல் பரிசோதனைக்குப் பின் உண்பதில் தவறில்லை.

இன்று நடுத்தர மக்கள் நல்ல சத்தான உணவு உண்ணும் நிலை உள்ளது. மூன்று வேளையும் தேவையான அளவு உணவு உண்போருக்கு புரோட்டீன் தேவையான அளவு அந்த உணவுகளிலிருந்தே கிடைத்து விடுகிறது.

ஒரு நாளைக்கு எவ்வளவு புரோட்டின் ( புரதம்) தேவை?                                                                                        ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடல் எடைக்கு 1 கிராம் புரோட்டின் மட்டுமே தேவை. உடல் எடை 60 கிலோ உள்ள ஒருவருக்கு ஒரு நாளைக்கு 60 கிராம் புரோட்டின் போதுமானது. நாம் தினம் உண்ணும்                                      

 • பால்
 • குழம்பில், கூட்டுகளில் உபயோகிக்கும் துவரம் பருப்பு
 • தயிர்
 • பயறு வகைகள்
 • நிலக்கடலை
 • கொட்டை வகைகள்
 • ஆட்டுக்கறி
 • கோழிக்கறி
 • முட்டை வெள்ளைக்கரு

ஆகியவற்றில் புரதம் அதிகமாக உள்ளது. அதுவே நமக்குப் போதுமானது.                                                             

நம் உடலானது அதிக புரோட்டின் சத்தை உடலில் சேமித்து வைக்க முடியாது. உணவு செரித்து பகுதிகளாகப் பிரியும் போது இந்த அதிகமான புரதம் நைட்டிரஜனாக வெளிப்படுகிறது. இந்த நைட்டிரஜன் சிறுநீரகத்தாலும், கல்லீரலாலும் வெளிப்படுத்தப்படுகிறது. இது சிறுநீரக பாதிப்பையும், ஈரல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

மேலும் அதிகப் புரத உணவானது

 1. சிறு நீரகக் கற்களையும்,
 2. எலும்பு வியாதியான ஆஸ்டியோபோரோசிஸையும் 
 3. விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களை உடலில் குறைக்கிறது.
 4. ஈறு வியாதிகள்
 5. சோரியாஸில் உள்ளவர்கள் புரத, மிருகப்புரதச் சத்துக்களைக் குறைக்க வேண்டும்.
 6. அதிக புரத உணவுகள் இதய நோய் வரும் வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.

சக்கரை வியாதியை எடுத்துக் கொண்டால் கட்டாயம் மருத்துவரின் பரிந்துரையுடன்தான் புரோட்டின் பவுடரோ, டானிக்கோ உபயோகிக்கலாம்.

எடுத்துக் காட்டாக 15 ஆண்டுகள் சக்கரை நோயாளி ஒருவரின் இரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை முடிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 • இரத்த உப்பு, கிரியேட்டின் 2.2 மி.கி,
 • சிறுநீரில் புரதம் 300 மி.கி( சரியான அளவு- 150 மி.கி),

இவர் தன் உடல் எடை குறைவாக இருப்பதாக நண்பரிடம் சொல்லியுள்ளார்.   நண்பர் அவருக்கு ஒரு புரோட்டின் பவுடர் கொடுத்து இதை உண்டால் சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு எடை கூடி உடல் வலு ஏற்படும் என்று கூறியுள்ளார். அந்த 1 டின் புரோட்டின் பவுடர் விலை 2500 இவரும் அதனைச்சாப்பிட்டு வந்தார்.  மேல் சொன்ன அவருடைய இரத்த நீர் பரிசோதனைகளில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு சிறு நீரகம் நாளடைவில் பாதிக்கப்படும். அப்படி உள்ள இவர் இந்தப் புரோட்டின் பவுடர் உட்கொண்டால் சிறு நீரகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தாகி விடும்.

தகுந்த பரிசோதனைகள் இல்லாமல் அதிக புரோட்டின் உணவு உண்பதும், புரோட்டின் மாவுக்கள் உண்பதையும் தவிர்த்து உடல் நலத்துடன் வாழ்வோம்.

Wednesday 16 June 2010

நடைப் பயிற்சி- 10 கேள்விகள்!!

clip_image002

நடைப் பயிற்சி பற்றிச் சில முக்கிய விபரங்களைக் கேள்வி பதிலாகத் தொகுத்துள்ளேன். பத்து கேள்விகளாகத் தெரிந்தாலும் தகவல்கள் இக்கட்டுரையில் அதைவிட அதிகமாகவே உள்ளன. ஆகையால் படித்து மேலும் சந்தேகங்கள் இருப்பின் கேட்கவும்.

1.நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா?

நிச்சயம் சாப்பிடலாம்! கீழே கொடுத்துள்ளபடி முறையாகச் சாப்பிட்டு விட்டு நடக்கலாம் :

 • முழுதானிய ( ஓட்ஸ், அவல்,) சிற்றுண்டி
 • முழு கோதுமை பிரட்
 • வாழைப்பழம 
 • சாப்பிடுவது வயிற்றை நிரப்புவதாக இல்லாமல் குறைந்த அளவாக இருக்க வேண்டும்.
 • கொழுப்பு நிறைந்ததாக இருக்கக் கூடாது.
 • நடப்பதற்கு 1 மணிநேரம் முன்னதாக சாப்பிட வேண்டும்.
 • சாப்பிட்டால் நீரும் அருந்த வேண்டும்.

2.ஒரு மணிநேரம் நடந்தால் எவ்வளவு கலோரிகள் செலவாகும்?

இது நாம் நடக்கும் வேகம், தூரம், நடப்பவரின் உடல் வலு ஆகியவற்றைப் பொருத்து மாறு படும். பொதுவாக 300 கலோரிகள் செலவிடப்படும்.

3.நடையில் வேகம் எப்படி இருக்க வேண்டும்?

நடையை மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால் நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதே போல் நமது இதயத்தின் செயல்பாடும், இரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இதுவே உடலுக்கு நல்லது.

நடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீராகக் குறைத்து வந்து  மெதுவாக அமர்ந்து இருந்தால்  இதயமும் , இரத்த ஓட்டமும்  சீராகக் குறைந்து பழைய நிலைக்கு வரும். இதனால், அதிக களைப்பு, மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

4.நல்ல நடைப்பயிற்சி தூரம் எவ்வளவு?

பொதுவாக நல்ல உடல்நிலையிலுள்ளோர் 10 நிமிட நடையில் 1 கிலோமீட்டர் தூரம் நடக்கலாம். ஆனால் இது ஒவ்வொருவரின் உடல் நலம், நடக்கும் விதம், நடக்கும் நில அமைப்பு ஆகியவற்றினால் மாறும்.

5.நடக்கும் போது கைகளில் எடை வைத்துக் கொள்ளலாமா?

 • பளு இல்லா நடையே சிறந்தது.
 • கைகளில் எடையுடன் நடந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.
 • இரத்த அழுத்தம் கூடும்.
 • மூட்டுகளில் உள்ள ஜவ்வுகள் சேதமாகலாம்.
 • தனியாக எடை தூக்கும் பயிற்சி வைத்துக் கொள்வதே சிறந்தது.

6.நடக்கும் ஷூ எப்படி இருக்க வேண்டும்?

 • குதிகால் உயரம் கூடாது.
 • சரியாகப் பொருந்த வேண்டும்.
 • ஷூவின் அடிப்பாகம் வளையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
 • ஷூ எடை குறைவாகவும், காற்றோட்டத் தன்மையுடனும் இருக்க வேண்டும்.

7.ஷூவை எவ்வளவு நாட்களுக்கொருமுறை மாற்ற வேண்டும்?

6-12 மாதத்துக்கொருமுறை மாற்றுதல் நலம். அதிகம் நடப்போர் இதற்க்கிடையில் மாற்றலாம். கால் வியர்வையால் ஷூ பாதிக்கப்படும். ஆகையால் 2 ஷூ வைத்துக் கொண்டு ஒரு நாள் ஒரு ஷூவும், அடுத்த நாள் மறு ஷூவும் என உபயோகித்தால் ஷூவில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.

8.நடைபயிற்சியால் ஓட்டப் பயிற்சியில் கிடைக்கும் அளவு உடலுக்கு நலன் கிடைக்குமா?

கிடைக்கும். வேகமாக நடத்தலில் ஓட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைக்கின்றன.

9.நாம் நடக்கும் வேகத்தை எப்படிக் கணக்கிடுவது?

 • இதனைக் கருவிகளின் உதவி இல்லாமலேயே கணக்கிடலாம். 
 • ஒரு நிமிடத்துக்கு நீங்கள் நடைப்பயிற்சியின் போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்ளவும். அதனை 30 ஆல் வகுக்க வேண்டும் 
 • உதாரணத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 60 அடிகள் எடுத்து வைத்தால்,
 • 60/30= 2 , அதாவது உங்கள் நடைவேகம் ஒரு மணிநேரத்துக்கு 2 மைல். 
 • எல்லோராலும் அதிக வேகமாக நடக்க முடியாது. குறைந்த வேகத்தில் நடப்பதும் நடைப் பயிற்சியில் கிடைக்கும் முழுப் பலனையும் தரும்.
 • மேலும் சாதாரணமாக 2 மைல் வேகத்தில் நடப்பது,  மூட்டுக்களின் மேல்  குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துகிறது. 
 • ஆகையினால்  வயதானவர்கள், கால் வலியுள்ளவர்கள் மெதுவாக நடப்பதே போதும்.

10.நடைப் பயிற்சியின்போது கால் அரிப்பு ஏற்படுகிறதே, ஏன்?

குறைந்த இரத்த ஓட்டத்தினால் காலில் அரிப்பு ஏற்படலாம். அது நடக்க நடக்க இரத்த ஓட்டம் அதிகரித்து சரியாகிவிடும்.

பொதுவாக வியர்வையால் அரிப்பு அதிகரிக்கும். இப்படி இருந்தால் உங்கள் கால் தோல் வறட்சியாலும் இருக்கலாம். இதற்கு வாசலின் போன்ற தோலை உலர விடாமல் தடுக்கும் களிம்பு, எண்ணைகள் தடவலாம்.

Monday 14 June 2010

தசை நார்களும் நீரிழிவு நோயும்!!

clip_image002

சர்க்கர நோய் உடலில் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புக்களில் தசை நார் பாதிப்பும் ஒன்று.

பொதுவாக நாம் உண்ணும் உணவு சக்தியாக உபயோகப்படுத்தப்பட வேண்டும். அன்றாட நடவடிக்கைகளுக்கும், சிறு சிறு வேலைகளைச் செய்வதற்கும் நம் உண்ணும் உணவு செரித்து அதிலிருந்து கிடைக்கும் சக்தியே உபயோகப்படுத்தப்படுகிறது.. நம்மால் உபயோகப்படுத்தப்பட்டது போக மீதமான சக்தி அல்லது சர்க்கரை இரத்த்த்தில் இருக்கும்.

தசைகளில் வலியானது இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையானது தசை நார்களில் படிவதால் ஏற்படுகிறது.

நம் உணவின் சக்தியில் 60% தசை நார்களின் செயல்பாட்டுக்கு, அதாவது உடல் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றால் செலவழிக்கப்படவேண்டும். இதில் குறைவு ஏற்பட்டால்

 • தசைப்பிடிப்பு
 • கால், கை வலி
 • கெண்டைக் கால் வலி
 • குடைச்சல்
 • உடல் வலி

ஆகியவை ஏற்படும்.

இவ்வாறு ஏற்படும்போது சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் வலி அதிகம் ஏற்பட்டு கை கால்களைப் பிடித்து மசாஜ் செய்து விட்டால் வலி குறைவது போல் தோன்றும்.

இவற்றைச் சரிசெய்ய:

 • இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
 • தினமும் நடைப்பயிற்சி அவசியம்.
 • கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் உடற்பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய வேண்டும்.

நடைப் பயிற்சியைத் துவங்குவது எப்படி?                                                                                           நடைப் பயிற்சியை  எப்படித் துவங்குவது என்பது மிக முக்கியம். நாம் ஏற்கெனவே தினசரி நடைப் பயிற்சி செய்யும் நண்பரிடம் ”நாளை முதல் நானும் உங்களுடன் நடக்க வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அதன்படி காலை 5 அல்லது 5.30 க்கு எழுந்து, அவருடன் நடப்போம். இரண்டு நாள் அல்லது சில நாட்களில் இந்த முடிவுக்கு வந்து விடும்.  ஏனென்றால் அவர் ஏற்கெனவே நடை பழகியவர்.

 • அவர் வேகத்துக்கு நாம் ஈடு கொடுக்க முடியாது   
 • அவர் செல்லும் தூரம் நாம் நடக்க முடியாது.

அப்படியென்றால் எப்படி நடைப்பயிற்சியை ஆரம்பிப்பது?  

 • நடைப்பயிற்சியை மெதுவாகவும் எளிமையாகவும் ஆரம்பிக்க வேண்டும்,
 • முதலில் 10 ந்மிடம் நடந்து வீடு திரும்புங்கள்.
 • 1 வாரம் இது போல் செய்யவும்.
 • அடுத்த வாரம் 5 நிமிடம் கூட்டிக் கொள்ளவும்.
 •  நடப்பது த்ற்போது எளிமை ஆகிவிடுகிறது அல்லவா? ஒவ்வொரு வாரமும் 5 நிமிடம் கூடுதலாக நடந்து பழகினால் உங்கள் இலக்கை எந்தக் கஷ்டமும் இன்றி விரைவில் அடையலாம்.
 • நடப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டுவருவது சிரமமாக இருக்கும், ஆனாலும் அதைக் கடைப்பிடிப்பது அவசியம்.
 • பொதுவாக உடல் நலனுக்காக நடப்பவர்கள் 20-30 நிமிடங்கள் குறைந்த பட்சம் வாரத்தில் 4-5 நாட்கள் என்ற இலக்கை எட்டுமாறு வைத்துக் கொள்ளலாம்.
 • பேச்சு வேகத்தில் நடப்பது என்றால் என்ன? நாம் நடக்கும் போது மூச்சின் வேகம் அதிகரிக்கும். நடப்பது சிரமமாகத்தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் பேசிக்கொண்டே நடப்பது எளிதாக இருக்காது. நாளடைவில் பேசிக் கொண்டே நடப்பது எளிதாகி விடும். இது உங்கள் உடல் தகுதி அதிகரித்திருப்பதைக் குறிக்கும்.                

பிட்னெஸ் நடைப் பயிற்சி: ஏற்கெனவே நடைப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்போருக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் புதிதாகப் நடைப் பயிற்சியில் ஈடுபடும் முன் மருத்துவரின் ஆலோசனை அவசியம். நல்ல நடைபயிற்சிக்கான காலணி ஷூ அவசியம்.

அதே போல் நடப்பதற்கு முன் உங்கள் சர்க்கரை அளவு 100 மி.கி க்குக் கீழ் இருந்தால் ஏதாவது சிறு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். நடப்பதற்கு முன் இரத்தத்தில் சர்க்கரை 100 க்கு மேல் இருப்பது அவசியம்.

பிட்னெஸ் வாக்கிங்க் என்றால் என்ன?  கை,கால் மூட்டுக்களுக்கு அதிக பழு ஏற்படுத்தாமல் செய்யும் நடைப் பயிற்சியே இது. சாதாரண நடையையே கொஞ்சம் கால் எட்டிப் போட்டு நடக்க வேண்டும்.

இன்னொரு வகையில் கீழ்க்கண்டவாறு மாறி மாறி நடப்பதும் மிகப் பலன் தரும்:

 • மிதமான நடை- 5 நிமிடம்,
 • கொஞ்சம் வேகம் கூட்டிய நடை-2 நிமிடம்
 • அதிவேக நடை –1 நிமிடம் 
 • 20 நிமிடங்கள் இது போல் நடப்பது உங்கள் உடல் தகுதியைக் கூட்டும்.
 • மெதுவாக உங்கள் நடை வேகம், நடக்கும் நேரம், நடக்கும் தூரம் ஆகியவற்றைக் காலப்போக்கில் உங்கள் உடல் தகுதிக்கேற்றவாறு கூட்டிக் கொள்ளலாம்.

நடைப் பயிற்சி என்பது நீரிழிவு நோயாளிகள் மட்டுமில்லாமல் அனைவருக்கும் அவசியமான ஒன்று. தொடர்ந்து நடந்து நலம் பெறுவோம்!

Wednesday 9 June 2010

மாடு குத்தினால்?- கேஸ் ரிப்போர்ட்!!

IMG_3299

மஞ்சுவிரட்டு பற்றியும் அதில் காயம் ஏற்பட்ட ஒருவரின் கதையையும் எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். இந்தப் பதிவைப் பார்க்கவும்!

மஞ்சுவிரட்டு மைதானத்திலேயே ஆம்புலன்ஸ்கள் அவசர சிகிச்சைக்காக நிறுத்தப்பட்டு இருக்கும்.அதில் உள்ள குழுவினர் சிறு காயங்க்களுக்கு சிகிச்சை அளிப்பர்.ஆனால் வயிற்றிலோ நெஞ்சிலோ மாடு குத்தினால் மிகவும் ஆபத்து. அப்படிப்பட்ட பெரிய காயங்கள் ஏற்பட்டால் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல் வேண்டும். அங்கு அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். 

நன்கு படித்த இஞ்சினியர் ஒருவருக்கு மஞ்சுவிரட்டில் வயிற்றில் மாடு குத்திக் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவருடைய காயம் ஆழமாக இருந்ததால் குடல், ஈரல் போன்றவற்றில் காயம் இருக்கலாம் என்றும் ஆகையால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர்.

அவரோ எனக்கு ஏற்பட்டுள்ள சின்னக் காயத்திற்கு அறுவை சிகிக்கையா? மருத்துவர்கள் தேவையில்லாமல் அறுவை கிகிச்சை செய்கிறீர்கள் என்று குறை சொல்லி விட்டு மறுத்து விட்டு காயத்திற்குக் கட்டு மட்டும் போடுங்கள் நான் வெளியில் பார்த்துக் கொள்கிறேன்" என்று கட்டுப் போட்டுக் கொண்டு சென்று விட்டார்.

தற்போது நம் ஊரில் நோயாளியே தனக்கான சிகிச்சையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான் கொடுமை. அதனால்தான் பல வித கொடிய நோயுள்ளவர்களும் சிகிச்சை பெறாமல் சுதந்திரமாக நடமாடி எல்லோருக்கும் நோயைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

வயிற்றில் குத்துப்பட்ட இந்த நபரும் சிகிச்சையை மறுத்து வெளியில் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப் பட்டது.

அங்கு "நீ காசு சம்பாதிக்க நான்தான் கிடைத்தேனா? என்று அறுவை சிகிச்சையை  மறுத்து விட்டு வீட்டுக்குச்சென்று விட்டார். மறு நாள் வயிறு வீங்கி விட்டது. அன்று வீட்டில் உள்ளவர்கள் மதுரையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கால தாமதமான சிகிச்சை காலனை அழைத்து விட்டது. சரியான நேரத்தில் சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டு அறுவை சிகிச்சை செய்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார். தன் அரைகுறை அறிவாலும், பிடிவாதத்தாலும் தன் உயிரை இழந்தார் அவர்.

இது அத்துடன் நிற்கவில்லை. மஞ்சு விரட்டில் மாடு குத்தி  இறந்தால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்துவர். அந்த விசாரணையில் இவர் சிகிச்சையை மறுத்ததை அவருடைய நண்பரும், மனைவியுமே ஒத்துக் கொண்டனர். இல்லையென்றால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.இந்த விசாரணைக்கு நாங்களும், அந்தத் தனியார் மருத்துவமனை மருத்துவரும் பல கட்ட விசாரணையைக் கடக்க வேண்டியதாக இருந்தது.

சரி மாடு வயிற்றில் குத்தினால் ஏற்படும் பிரச்சினைகளைப் பார்ப்போம்.
1. மாடு வயிற்றில் குத்தினால் கல்லீரல், மண்ணீரல் குடல், இரைப்பை,பெரிய இரத்தக் குழாய்கள் ஆகியவற்றில்  காயம் ஏற்பட்டு அதிக அளவு இரத்தம் வெளியேறி விடுதல்.(HYPO VOLEMIA)                        2.மாட்டுக் கொம்பிலிருக்கும், மண், கிருமிகள் வயிற்றுப் பகுதியில் சென்று பெருகி செப்டிக் ஆகி வயிற்றிலுள்ள எல்லா உறுப்புகளும் செயலிழந்து இறப்பு நேரிடலாம்.(PERITONITIS)
3.இடது புற நெஞ்சில் ஆழமாகக் குத்துப்பட்டால் இதயம் கிழிந்து உடனே இறக்க வாய்ப்புள்ளது.                                 4.மார்பின் வலது புறக்காயத்தில் நுரையீரல் காயப்பட்டால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும்.

சிகிச்சை முறைகள்:
1.குத்து மிக ஆழமாகவும், நிறைய குத்துக்கள் இருந்தாலும் அறுவை சிகிச்சை, உயர் ஆண்டிபயோடிக் மருந்துகள்,

இரத்தம் அதிகம் வெளியேறியிருந்தால் இரத்தம் ஏற்றுதல் ஆகியவை.

அறுவை சிகிச்சையில் தற்போது பெரும்பாலும் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இத்தகைய காயங்க்களைச்சரி செய்யலாம். நுண்துளை அறுவை சிகிச்சை முறையில் செய்வது இயலாவிட்டால் ஓபன் அறுவை சிகிச்சை செய்வார்கள்.     .

ஒரு நிமிடக் கதை!

கவிதாவை இந்த இரண்டு வருடங்களில் இரண்டு நாட்களாகத்தான் அடிக்கடி நினைத்தான் சுரேந்தர். மனித உணர்வுகள் புரியாதவன் என்று இரண்டு வருடங்களுக்கு முன் சுரேந்தரிடமிருந்து பிரிந்து சென்று விட்டாள். அவளுக்கு மட்டும் புரிகிறதா?(அ) இந்தக் கம்பியூட்டர் யுகத்தில் மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தேவையில்லை என்று சுரேந்தரும் அலட்சியமாக இருந்து விட்டான்.ஆனால் குழந்தை சூர்யா? அவனை மாத இறுதி நாட்களில் வைத்துக் கொள்வதற்காகப் போராடி நீதிபதியின் அனுமதி பெற்று நேற்றுத்தான் கவிதாவின் வீட்டிலிருந்து காரில் அழைத்து வந்தான்.

வழிமுழுக்க குழந்தை மழலை மொழியில் என்னென்னவோ பேசிக் கொண்டே வந்தான். இந்த நான்கு வயதுக்கு மீறிய மூளை. இரண்டு கம்பியூட்டர் இஞ்சினீயர்களின்  குழந்தை அல்லவா? இரவு வீட்டுக்கு வந்தவுடன் சூர்யாவைக் கவர்ந்தது அந்த சமைக்கும் மிஷின்தான். ஒரு கோடி கொடுத்து சுரேந்தர் அமெரிக்காவிலிருந்து வரவழைத்தது. பட்டன்களைத் தட்டினால் என்ன உணவு வேண்டுமானாலும் அதுவே சமைத்துக் கொடுத்து விடும்.சமைத்துக் கொடுக்க அம்மா படும் அவஸ்தையை விதவிதமாகச் சொன்னான் சூர்யா. சுரேந்தரும் “எல்லா வீட்டிலும் இந்த மிஷின் வந்து விடும், அம்மாக்கள் ஆடும் ஆட்டம் அடங்கி விடும்” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடும் அப்பாவின் முரட்டுத்தனமான விளையாட்டு, அணி வித்தியாசமாக இருக்க சந்தோசமாகத் துங்கினான்.

காலை எழுந்திரிக்கும் போதே சுரேந்தருக்கு அவசரமாக வரச்சொல்லி அலுவலகத்தில் இருந்து போன் கால்கள் வர, சூர்யாவை எழுப்பி, சமைக்கும் மிஷினில் நேற்றுச் சொல்லித் தந்தபடி பட்டனை   அழுத்தச் சொல்லிவிட்டு ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாகக் கூறிவிட்டு ஓடினான்.

மிஷினிலிருந்து வந்த சுவையான உணவை சாப்பிட்டு சூர்யா குஷியாகியிருப்பான் என்று நினைத்துக் கொண்டே வந்து பார்த்தவனுக்கு ஆச்சரியம்! உணவு அப்படியே இருந்தது.”என்ன சூர்யா? சாப்பிடவில்லை” என்று கேட்டான். ”அம்மா ஊட்டினால்தான் நான் சாப்பிடுவேன். இந்த மிஷின் சமைத்துத் தருகிறது, ஆனால் ஊட்டி விட மாட்டேன் என்கிறது” என்றான் சூர்யா.

    சுரேந்தர் என்ன சொல்வதென்று தெரியாமல் விக்கித்து நின்றான்.  

( இது நான் எழுதிய கதை அல்ல!! )

Monday 7 June 2010

அன்பால் இணைந்த பதிவர்கள்-2

இதற்கு முந்தைய இடுகையைப் படிக்க சுட்டி:அன்பால் இணைந்த பதிவர்கள்!!

போன பதிவில் சிங்கைநாதன் எப்படி இருக்கிறார் என்று கேட்டிருந்தனர். அவர் மிக்க நலமுடன் இருக்கிறார். சந்திப்பின் போது பதிவர்களுக்கு தன் வீட்டில் செய்த பூசணி அல்வா வழங்கினார்.

clip_image002

திரு. ரவி வெட்டிக்காடு என்ற  http://vssravi.blogspot.com/ பதிவில்  ஒரு காலத்தில் எழுதி இருக்கிறார். தஞ்சையில் படித்து அமெரிக்காவில் வேலை செய்து தற்போது சிங்கப்பூர் அல்காடெல் கம்பெனியில் உயர் பதவி வகிக்கிறார். பதிவர் சந்திப்புகளில் கலந்து பெரும் பங்காற்றும் இவர் பதிவுகள் எழுத ஆரம்பிக்க வேண்டும்.

image

கீழே:மண்ணின் மைந்தன் முகவை ராம்குமார்.http://mugavairam.blogspot.com/ சிங்கையில் இவர் தமிழில் பேசுவதைக் கேட்கக் கேட்கத் தேன் வந்து பாயுது காதினிலே! என்றால் மிகையில்லை. தமிழர் இசை பற்றிய பரிசு பெற்ற கட்டுரையை செந்தமிழில் விமரிசனம் செய்தார். விருது வழங்கும் விழாவுக்கு தமிழரின் உடையில்( அதுதாங்க! வேட்டி, சட்டை) யில் வந்து அசத்தினார்.

image

இவரைப் பற்றிச் சொல்லவேண்டுமா? என்ன! நம் அம்மா அப்பா ஞானசேகரன் தான்!!http://aammaappa.blogspot.com/ தன் கெனான் கேமிராவில் எல்லோரையும் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார். திருச்சிக்காரர்.

image

கீழே: பாவம் கலர் கம்மியாக இருப்பவர் நம் அறிவிலி ராஜேஷ்!http://kirukkugiren.blogspot.com/( அதுதான் தெரியுமே என்கிறீர்களா?- எல்லாம் பதிவுலகுக்குப் புதியவர்களுக்காகத்தான்!

image

கீழே பயங்கரமாக சிரிப்பவர் பிரபல் பதிவர் ரோஸ்விக்!!http://thisaikaati.blogspot.com/ இந்தவாரம் வலைச்சரத்தில் கலக்குபவர். சிவகங்கைச் சீமைக்காரரான இவர் இருந்தாலே அந்த இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது!!

image

கீழே:இரா. நீதிப்பாண்டி(த்துரை) இனி ஆரம்பம்  http://pandiidurai.wordpress.com/ நாம் என்ற இதழை சிங்கையிலிருந்து வெளியிடுகிறார். சிங்கம்புணரிக்கருகில் காளாப்பூர்தான் இவர் ஊர்.

image

கீழே:கலந்துரையாடல்- சிங்கை கிழக்குக் கடற்கரைச் சாலைப் பூங்காவில்! அங்கு பார்பகியூவில் கோழி, காளான் ஹாட் டாக் ஆகியவை தயாரித்து அருமையான விருந்தும் வழங்கப்பட்டது. 

image

image

image

image

image

image

கடைசிப் படத்தில் சிகப்பு, நீலம் டிசட்டை அணிந்து உள்ளவர்கள்……. தெரியும் தானே!! அடுத்த பதிவில் பார்ப்போம்.. படங்களைத் தட்டி பெரிதாக்கிப் பார்க்கவும்.

தனியா மாட்டிக்கிட்டா சரண்டர்தான்!!

தமிழர் பண்டிகைகளில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் திருவிழாக்களின்போது மஞுவிரட்டு, அல்லது ஜல்லிக் கட்டு என்று மாடு பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் மதுரையில் அலங்காநல்லூரிலும், காரைக்குடி வட்டாரத்தில் சிறாவயல்  மஞ்சுவிரட்டும் பிரபலமாக நடைபெறும். அலங்காநல்லூரில் குறுகலான பாதையில் மாட்டை ஓட விடுவர். ஆனால் காரைக்குடி வட்டாரங்களில் பெரிய திறந்த வெளி மைதானத்தில் மாடுகளை விடுவார்கள்.

மஞ்ச்விரட்டு நடக்க்கும் ஊருக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிலிருந்து மஞ்சு விரட்டு அன்று  மருத்துவக் குழு ஆம்புலன்சுடன் செல்லும்.

முன்பெல்லாம் மாடு பிடிக்கும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கவே நாங்கள் செல்வோம்.

இப்போது அப்படி அல்ல!

 • மஞ்சு விரட்டு ஆரம்பிக்கும் முன்பே மாடு பிடிக்கும் வீரர்கள் மது அருந்தியுள்ளார்களா என்று கருவி மூலம் சோதிக்க வேண்டும்.
 • மாட்டுக்கும் சில நேரம் ஊற்றிக்  கூட்டிக்கொண்டு வருவார்கள். அதையும்  கால்நடை மருத்துவர் சோதிப்பார்.
 • தண்ணி அடிக்காத மாடுபிடி வீரர்களுக்கு ஒரே கலரில் பனியனும், மாட்டுக்குக் கழுத்தில் கட்டத் துண்டும் அளிக்கப்படும்.

இதில்  வேடிக்கை என்னவென்றால் பனியன் வாங்குவதற்கென்றே  ஒரு கூட்டம் வரிசையில் நின்று வாங்கிக் கொண்டு போய் விடும். அதே நேரம் உண்மையான மாடுபிடி வீரர்களுக்கு பனியன் இருக்காது. 200 பேருக்கு பனியன் கொடுத்தால் ஒரு 30 பேர்தான் பனியனுடன் களத்தில் இருப்பர். நேரம் ஆக ஆக பனியன் இல்லாத 50 பேர் உள்ளே இறங்கி மாடு பிடிக்க ஆரம்பித்து விடுவர். பொது மக்களும் வேடிக்கை பார்ப்பதற்காக தடுப்புக் கம்புகளுக்குள் புகுந்து வந்து விடுவார்கள்.

IMG_3298

மேலே: தனியாத் தான் நிற்கிறேன், வந்து பாருங்க என்று சவாலாக நிற்கும் மாடு!!

IMG_3299

மேலே:தனியா மாட்டிக்கிட்டா சரணடைவதைத் தவிர வழியில்லை!! ஆனாலும் மாடு நல்ல மாடு!

மேலே:நான் எடுத்த சிறிய காணொளி

பெரும்பாலும் மாடு குத்துவது கை, கால் ஆகியவற்றில் என்றால் சாதாரண சிகிச்சையே போதுமானது. ஆனால் வயிற்றிலோ, விலாப்பகுதி, நெஞ்சுப்பகுதி, முதுகுப்பகுதி ஆகியவற்றில் குத்தினால்தான் ஆபத்து. 

ஏனென்றால் நெஞ்சில் நுரையீரல், இதயம் ஆகிய உறுப்புகளில் காயம் ஏற்படலாம்.

வயிற்றில்  முதுகில் குத்தும் போது கல்லீரல், குடல், சிறுநீரகம், இரைப்பை  போன்றவற்றில் ஆழமாக காயம் ஏற்பட்டால் இரத்தமிழப்பு ஏற்படலாம். அல்லது குத்துப்பட்ட காயத்தில் தொற்றுக்கிருமிகள் இருந்து வயிற்றில் செப்டிக் ஆகி மரணம் ஏற்படலாம்.

மாடு குத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு கேஸ் ரிப்போர்ட்டுடன் அடுத்த பதிவில் எழுதுகிறேன்!!

Friday 4 June 2010

அன்பால் இணைந்த பதிவர்கள்!!

ந்தவித  விருப்பு வெறுப்புகளும் இல்லாத பதிவர்கள் சிங்கப்பூர்ப் பதிவர்கள். அவர்களுக்குள் ஈகோப் பிரச்சினைகளோ, வேறு விதமான பிரச்சினைகளோ இல்லை. அனைவரும் அன்பால் ஒன்றிணைந்தவர்கள். அவர்கள் எங்களை பாசத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்!!                    


ணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியின் வெற்றியாளர்கள் மூவரும் ஒரு வாரம் காலம் சிங்கப்பூரில் வெற்றியின் பரிசாக சுற்றுபயணம் மேற்கொண்டு நலமுடன் திரும்பினர்.
                    நலமுடன் திரும்பினரை ஏன் தடிமனான எழுத்திலிட்டிருக்கிறேன் என்றால்  வெற்றியாளர்கள் சிங்கை சென்ற இரண்டு நாட்களில் ஏர் இந்தியா மங்களூரில் விபத்துக்குள்ளான துயர நிகழ்வு. வெற்றியாளர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். 
                   இன்று காலை செய்தியில் கிங் பிசர் விமானமும் இன்னொரு விமானமும் நேருக்கு நேர் மோதல் தவிர்க்கப்பட்டது என்று செய்தி. மங்களூர் விமான விபத்துக்குப் பிறகு இதுவரை ஆறு விமான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாம். கொடுமை. ஏர் பஸ், போயிங் போன்ற சர்வதேச விமானங்களைத்தான் எல்லா நாடுகளும் உபயோகிக்கின்றன. அதை உபயோகிப்பதில் போதிய கவனமின்மைதான் காரணமா? இல்லை திறமையின்மையா? விமானத்தில் பெருந்தொகை செலுத்தி விமானப் பயணம் செய்யும் மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை கவலை அளிக்கிறது. 
                   ஏவுகணைத் தொழில் நுட்பத்தில் சாதிக்கும் இந்தியா சாதாரண பயணிகள் விமான சேவையில் கோட்டை விடுவது வருத்தமளிக்கிறது.


                  வெற்றியாளர்களின் இரண்டாம் நாள் நிகழ்வாக சிங்கப்பூர் வலைப்பதிவருகளுடன் சந்திப்பாக 23-05-2010 மாலை 4:30 மணிற்கு மேல் மேற்குகடற்கரை பூங்காவில் நடைப்பெற்றது. வெற்றியாளர்களும் சிங்கப்பூர் பதிவர்களும் தங்களின் மகிழ்வை பகிர்ந்துகொண்ட நிகழ்வு மிகச்சிறப்பாக இருந்தது. 


பொதுவாகவே சிங்கப்பூரில் எல்லா இடத்திலும் புற்கள், செடிகள்தான். இதில் பூங்கா என்றால் சொல்ல வேண்டுமா? இதில் பிளாஸ்டிக் டெண்டுகளுடன் இரண்டு நாள் விடுமுறைகளில் வந்து இளைப்பாறிச் செல்கின்றனர். 
 மேலும் இங்கு சிமெண்டால் கட்டப்பட்ட  இறைச்சி சுட்டு உண்ணும் வசதியான அடுப்புகளுடன் ஒரு சிறு குழு அமர்ந்து விருந்துண்ணும் அமைப்புகளும் இருக்கின்றன!! பதிவர்களுக்காக ஒரு விருந்தை பதிவுலக நண்பர்கள் அனைவரும் சமைத்து வழங்கினர். பார்பகியூ கோழியின் சுவை அற்புதம். சிங்கை நாதன் அல்வா செய்து கொண்டு வந்திருந்தார். அனைவரும் மிகுந்த மகிழ்வுடன் கலந்துரையாடி உண்டு மகிழ்ந்தனர்.


மேற்குக் கடற்கரைப் பூங்காவில் மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் சிறுவர், பெரியவர் என்றில்லாமல் அனைவரும் வித விதமான வண்ண வண்ணக் காத்தாடிகளை விட்டுக் கொண்டிருந்தனர். அனைத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது. அவற்றில் சிலவற்றின் புகைப்படம் கீழே.IMG_3561


கீழேயுள்ள படத்தில் இருப்பவர்தான் விஜய் என்கின்ற வெற்றிக் கதிரவன், நாடறிந்த சிங்கைத் தம்பி. சிங்கப்பூர் செல்லும் பதிவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். நமக்குத் தேவையானவற்றை மனங்கோணாமல் செய்து தருபவர். இவர் பிரமாதமான பயணக்கட்டுரைகள் எழுதுபவர். மணற்கேணி சிங்கைப் பதிவர்கள் தொகுத்த புத்தகத்தில் இவருடைய கட்டுரை இடம் பெற்றுள்ளது. என் மனதைக் கவர்ந்த இவர் சிங்கைப் பதிவர்களின் செல்லத்தம்பி!! 


IMG_3570

 IMG_3562                
IMG_3563
IMG_3565


IMG_3567


IMG_3568


IMG_3569


IMG_3563
IMG_3564மேலேயுள்ள படங்களில் சிகப்பு பனியனுடன் ஸ்டைலாக இருப்பவர் ஜோஸப் பால்ராஜ். என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே!! அவரைப் பற்றியும் இன்னும் சிங்கையிலுள்ள பதிவர்கள் பற்றியும் தொடர்ந்து எழுதுகிறேன்.

Wednesday 2 June 2010

என்ன எழுத?

ஒவ்வொரு முறையும்

வாசல்வரை வந்து

ஏமாந்து செல்கின்றன!!

 

வரிகளாய் மாற்ற முடியாத

எழுத்துக்களுடன்

இரவும் பகலும்

பிரசவத்துக்கு முந்திய வேதனை!

 

கர்ப்பம் கலைந்த

தாயின் வேதனையை

நான் சுமக்கிறேன்,

உருவெடுக்கும் வரிகள்

உங்களை

காயப்படுத்தி விடலாம் என்பதால்!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory