Saturday 31 October 2009

இதய நோய் வருமா?-இந்த 5 பாயிண்ட் இல்லைன்னா ஓகேதான்!!

நம்மில் பலருக்கு இந்தக் குழப்பம் இருக்கும். பலருக்கும் திடீரென்று ஹார்ட் அட்டாக் வருகிறதே? எப்படி? ஏன்?

ஹார்ட் அட்டாக் வருவதை முன்னரே கண்டுபிடிக்க முடியாதா?

கண்டுகொள்ளலாம். அதற்கு சில வழிகள் உள்ளன. கீழே கொடுத்துள்ள ஐந்து தவறான அளவுகள் (கீழே கொடுத்துள்ள ஐந்தும் நார்மல் அளவுகள் அல்ல,  ரிஸ்க் அளவுகள்!!!) உள்ளதா என்று பார்த்தால் போதும்.

கீழெ உள்ள இருக்கக் கூடாத ரிஸ்க் அளவுகள்:

1.ரத்த அழுத்தம்- 130/85 க்கு மேல்.

2.அதிகாலை வெறும் வயிற்றில் சர்க்கரை-100 மி.கி/டி.எல் க்கு மேல்.

3.T.G.L டி.ஜி.எல்-கொலெஸ்ட்ரால்-150 மி.கி/டி.எல் க்கு மேல்.

4.H.D.L கொலஸ்ட்ரால்:

                       ஆண்களுக்கு 40 மி.கி/டி.எல் லுக்கு கீழ்

                       பெண்களுக்கு 50 மி.கி/டி.எல் லுக்கு கீழ்

5.இடுப்பு சுற்றளவு:

                       ஆண்கள்: 90 செ.மீ.க்கு மேல்

                       பெண்கள்: 85 செ.மீ.க்கு மேல்.

இந்த ஐந்து காரணிகளில் ஏதேனும் மூன்று உங்களுக்கு இருந்தால் இதய நோய் வரும் வாய்ப்புகள் உள்ளதாகக் கருதலாம்.  அதற்கான முறையான சிகிச்சை, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது அவசியம்..

Friday 30 October 2009

பேராண்மை-8!

 

வீட்டில் டி.வி.டி க்களிலேயே படம் பார்க்கும் இந்நாளில் பேராண்மை திரைப் படத்தை நான் தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. இந்தப் படத்தில் கண்ட சில முக்கிய விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

1.சராசரி தமிழ்க் கதாநாயகனுக்காகக் கதையை  மாற்றி அவருக்காக பிரத்தியேகக் காட்சிகளைப் புகுத்தி ஏகப்பட்ட பில்டப்பில் நடந்து வரும் கதாநாயகனை இதில் காணோம். 

2.பழங்குடி இன மக்கள் இந்தியக் காட்டுப் பகுதிகளில் துன்புறுத்தப் படுவதையும் இடம் பெயர்வதையும் சிறிதளவேணும் காட்ட முயன்றிருப்பது அருமை.

3.படம் ஆரம்பித்ததிலிருந்து கதாநாயகி எங்கே என்று தேடும் சராசரி தமிழ்ப் படபாணியிலிருந்து துணிச்சலாக விலகி நாயகி இல்லாத ஒரு தமிழ்ப் படம்! ஆச்சரியம்!

4.தமிழ் சினிமாவின் அத்தியாவசியப் பொருளான காமெடி ட்ராக்கை கையிலெடுத்தாலும் அடக்கி வாசித்திருப்பது டைரக்டரின் தைரியம்தான்.

5.கல்லூரிப்பெண்களின் துடுக்குத்தனங்களை நன்றாகச் சித்தரிக்கும்  அதே நேரம் இரட்டை அர்த்த வசனங்களைத் தவித்திருக்கலாம்.

6.மார்க்ஸியத்தை அவ்வப்போது தொடும் இயக்குனர் அதேபோல் பழங்குடியினர் பிரச்சினையையும் ஊறுகாய்போல் தொட்டிருக்கிறார். ஆகையினால் பழங்குடியினர் இடம்பெயருவதெல்லாம் மனதைத் தொடாமல் மேம்போக்காக உள்ளது.(படத்தின் மையக்கதை வேறு என்பது ஒரு காரணம்).

7.உடல் தகுதியில்லாத  கதாநாயகர்கள் போல் அல்லாமல் தற்கால தமிழ்க் கதாநாயகர்கள் உடல் விசயத்தில் அக்கறை காட்டுவது, சிக்ஸ்பேக் அமைப்புக்களுடன் வருவது வரவேற்கத் தகுந்த விசயம். ஜெயம் ரவியின் உடல் உழைப்பும் படத்தில் தெரிகிறது.

8.சரித்திரத்தில் இடம் பெறாத, பெயர் தெரியாத எண்ணற்ற வீரர்கள் காடுகளிலும் எல்லைப் புறத்திலும் தாய் நாட்டுக்காக உடல்,உயிர் இழக்கும் தியாகத்தைப் படமாக்க நினைத்திருப்பது போற்றப்பட வேண்டிய விசயம்.

தமிழ்ப் படத்துக்கே உரிய சில குறைகள் இருந்தாலும் அவற்றை நான் இங்கு எழுதவில்லை.

Thursday 29 October 2009

இன்றைய பெண்களின் பிரச்சினைகள்!-பாகம்-3.

அன்பின் நண்பர்களே!! பெண்களின் பிரச்சினைகள் என்று நாம் சொல்லும் வேளையில் ஆண்களும் அதில் பங்குள்ளவர்கள் பாதிக்கப்படுகிறவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே! அதே போல் இதில் பல பிரச்சினைகள் வேலைக்குப் போகும்,போகாத, சுயதொழில் செய்யும் பெண்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவாகவே இருப்பதையும் நாம் பார்க்கிறோம். ஆகையால் உறவுகளுக்குள் உள்ள பிரச்சினைகளைப் பார்க்கும்போது அவை குடும்பத்திற்குப் பொதுவானவையாகவும் அமைகின்றன!

மிகவும் எளிய பிரச்சினை என்று எண்ணும் விசயங்கள் கூட நம்மை மிகவும் பாதித்துவிடுகின்றன.முதலில் சரியான தூக்கம், எந்த வேளை உணவையும் தவிர்க்காமல் சரியான நேரத்தில் உண்பது, கொஞ்சம் உடற்பயிற்சி ஆகியவை உங்கள் தினசரிக் கொள்கையாக மாற்றிக் கொள்ளுங்கள்.

காலையில் உணவு சரியாக உண்ணாதவர்கள் அதன் பின் அன்றைய தினசரி வேலைகளைச் சரியாகச் செய்யமுடியாது. காரணம் உடலில் தேவையான அளவு சக்தி இருக்காது. உடலில் குளுக்கோஸ் (சக்தி) குறையும் போது, எரிச்சல், கோபம், வேலையைச் சரியாகச் செய்ய முடியாமை ஆகியவை ஏற்படுகின்றன! நீங்கள் நினைத்துப்பாருங்கள் காலையிலேயே வேலைகளைச் சரியாகச் செய்ய தெம்பும் சக்தியும் இல்லை என்றால் எப்படி நாம் அந்த நாள் முழுக்க உற்சாகத்துடன் இருக்கமுடியும். சிறிய விசயமாக இருந்தாலும் இதனை நாம் சரிசெய்து கொண்டால் அல்சர், சக்திக்குறைவு, சோர்வு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம். உற்சாகத்துடன் அலுவலகத்தில் வீட்டில் வேலை செய்தால் மகிழ்ச்சிதானே!

முப்பது வயது பெண்களில் பாதிப்பேருக்கு கர்ப்பம் தரித்தலில் பிரச்சினை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  வேலையின் காரணமாக புதுமணத் தம்பதிகள்கூட இப்பொழுது குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று கூறுவதைப் பார்க்கிறோம். பின்பு அவர்களே குழந்தை தரிக்கவில்லை என்று சிகிச்சைக்கு வருகிறார்கள்.இத்தகைய பிரச்சினைகளுக்கு  மிகவும் பொறுப்பான இரவு பகல் உழைக்கவேண்டிய கடினமான வேலையில் இருக்கும் பெண்களே ஆளாகிறார்கள். வேலைக்கும் வாழ்க்கக்கும் இடையில் ஒரு உறுதியான முடிவு எடுக்கத்தெரியாமல் தடுமாறுவதே இதன் முக்கிய காரணம்.

மண வாழ்க்கை என்ற ஒன்றை ஆரம்பித்து விட்டால் வேலைக்குச் செல்லும் பெண்கள் சில விசயங்களைத் தீவிரமாக ஆராய வேண்டும். கல்யாணத்துக்கு முன் இருந்ததுபோல் 24 மணி நேரமும் அலுவலக வேலையில் ஈடுபட முடியாது. அடுத்து நம் வாழ்வில் செய்ய வேண்டியது என்ன? அதற்கு நாம் எவ்வளவு நேரத்தை நாட்களை, மணிகளை ஒதுக்க வேண்டியிருக்கும் என்று திட்டமிட வேண்டும்.

கடினமாக இரவு பகல் உழைக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் பிரச்சினைகள், நாம் முன்பே பார்த்த பி.சி,ஓ.டி ஆகியவை மிக அதிகமாக ஏற்படுகிறது.

இவர்கள் தங்கள் வாழ்க்கை முறையைக் கட்டாயம் மாற்றிக் கொள்ளவேண்டும். உடல் எடை குறைத்தல், சர்க்கரை அளவைக் குறைத்தல், மன அழுத்தம், மனச்சோர்வுதரும் கடினமான வேலைகளைத் தற்காலிகமாவது குறைத்துக் கொள்ளுதல் ஆகியவையே மிக மிக அவசியமானவை.

ஒரு பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது போல் வேறு யாராலும் முடியாது. இதைப் பெண்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.  அதுவும் பெண் குழந்தைகள் என்றால் மிக அதிகமாக அம்மாவின் வழிகாட்டுதல், அரவணைப்பு மிக மிக அவசியமாக உள்ளது.

சாதாரண ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 40 வயதுப் பெண் ஒருவரின் வாழ்வைப்பார்ப்போம்.  அவர்  ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் முத்திரை பதிப்பவர். புதிய புதிய ப்ராஜெக்ட்களை வெற்றிகரமாக முடித்து உள்ளவர். தற்போதும் அந்தவேலையில் தொடர்ந்து இருப்பவர். இரவிலும் கம்பியூட்டரில் அமர்ந்து வேலை செய்வார். அவரின் பெண் குழந்தைகள் வளந்த்து வரும் நேரம். இதற்கிடையில் இன்னொரு பெரிய ப்ராஜெக்டில் பார்ட்னராக அழைப்பு வருகிறது. வீட்டிலும் பெண் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். தற்போது உள்ள வேலையே சிரமமானதுதான். ஆனால் தற்போது குழந்தைகளை அவர் இல்லாத போது கணவரும் கவனித்துக் கொள்கிறார்.

அவர் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அவர் என்ன செய்தார் என்பதையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

---------------------------------------------------------------------  

சில செய்ய முடிந்தசெயல் முறைகளைப் பார்ப்போம்.

1.உங்கள் அன்றாட செயல்களை அட்டவணைப் படுத்துங்கள்.

2.காலையில் நல்ல உணவு, மதியம் அளவான உணவு, இரவில் குறைந்த உணவு உண்பது சிறந்தது.

3.மல்டிவிட்டமின், கால்சியம் மாத்திரைகள் மருத்துவரைக் கேட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

4.பொழுதுபோக்குகளுக்குக் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

5.குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நேரம் ஒதுக்கவும்.

6.உங்கள் வாழ்க்கைத்துணை, மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் உங்கள் மனப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

-----------------------------------------------------------------------

Tuesday 27 October 2009

இன்றைய பெண்களின் பிரச்சினைகள்!-பாகம்-2

இன்றைய பெண்களின் பிரச்சினைகள்!-பாகம்-1

http://abidheva.blogspot.com/2009/10/1.html.

 

இன்றைய மருத்துவர்களின் நோயாளிகளை கவனித்தால் ஒன்று புலனாகும். 25-45 வயதுடைய பெண்களிடம் குறிப்பாக சில பிரச்சினைகள் அதிகரித்திருப்பதைக் காணலாம். அவை

1.உடல் சோர்வு

2.தூக்கமின்மை

3.சின்னச் சின்ன விசயங்களிலெல்லாம் எரிச்சல் படுதல்

4.உடல் வலி

5.மனச்சோர்வு

6.குற்ற மனப்பான்மை

7.இறப்பைப் பற்றிய சிந்தனை

8.தற்கொலை எண்ணங்கள் ஆகியவையே அவை. இதனை சாதாரண சோர்வு என்று எடுத்துக்கொண்டு சிகிச்சைபெறும் அவர்களின் பிரச்சினைகள் தீருவதில்லை. பெரும்பாலும் நிறைய மருத்துவர்களிடம் காட்டியும் பிரச்சினை சாதாரணமாகத் தீருவதில்லை.

அவர்களை ஆராயும்போது சரியான நேரத்தில் உண்ணாமை, சரியாகத் தூங்காமை,அதிகரிக்கும் உடல் எடை ஆகியவையும் காணப்படுகின்றன. வீட்டுக்குள்ளேயும்,அலுவலகத்துக்குள்ளேயும் வசிக்கும் பெரும்பான்மையான பெண்களுக்கு விட்டமின் டி குறைபாடு வருகிறது என்றால் நம்மால் நம்ப முடியாது.

பெரும்பான்மையான நகரப் பெண்கள் கிராமத்துப் பெண்களைவிட நடக்க, படிகளில் ஏற, தரையில் உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமப்படுவதின் காரணங்களில் இது முக்கியமானது.இதன் தொடர்ச்சியாக எலும்பு தேய்மானம், ஆஸ்டியோபோரோசிஸ்,இடுப்பெலும்பு சவ்வு விலகுதல் ஆகியவை மிக இளம் வயதிலேயே ஏற்படுகிறது.

தற்காலப் பெண்கள் ஆண்களுடன் போட்டியிட்டு பலதுறைகளிலும் சாதித்துவருகிறார்கள்.இதுவரை ஆண்கள் ஏற்றுக்கொண்ட அலுவலக முடிவுகள் எடுத்தல், அலுவலக சிக்கல்களுக்கு தீர்வுகாணுதல், அதிகப் பணத்தைக் கையாளுதல், சரியான நேரத்தில் பணங்களை செலுத்துதல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், இடம், பொருள்,சொத்துக்கள் வாங்குதல் ஆகியவை அவர்களுடைய புதிய உபரியான வேலைகளாகச்சேர்ந்துள்ளன.

இவை படிக்கும்போது எளிமையாகத்தோன்றும். ஆனால் நடைமுறையில் கையாளுவதற்கு மிகவும் கடினமானவை.
இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் பெரிய வேலைகளில் இடைவிடாத சந்திப்புகள், கான்ஃபரன்ஸ் என்றிருக்கையில் அவர்களால் இந்தப் பிரச்சினைகளுக்கு மருத்துவர்கள் கூறும் சிகிக்கைகளை நடைமுறையில் கடைப்பிடிக்க முடிவதில்லை.

இதனால் அவர்கள் இன்னும் அதிகமான மனச்சோர்வு, உடலும் மனமும் சக்தியிழத்தல் ஆகியவற்றுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிக்கப் படுகிறார்கள்.
இவற்றால் அவர்களுக்கு வரும் வியாதிகளத் தொகுத்தால் ஒரு நீண்ட பட்டியலே வருகிறது.
1.மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள், அதிக வலி,
2.சினைப்பை நீர்க்கட்டிகள்(பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்)
3.இளம் வயதிலேயே நீரிழிவுநோய்,
4.உயர் இரத்த அழுத்தம்
5.கருவுறாமை
6.உடல் எடை கூடுதல்
7.முடிகொட்டுதல்
8.தோலில் கொப்புளங்க்ள் தொன்றுதல்
9.கருச்சிதைவு
10.முகத்தில் முடி வளருதல்
11.ஒற்றைத் தலைவலி
12.ஆஸ்டியோபோரோஸிஸ்
13.பாலியல் பிரச்சினைகள் இவை அனைத்தையும் தனித்தனியாகவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளை சேர்த்தும் பார்ப்பூம்.முதலில்
முக்கியமான பிரச்சினையான பி.சி.ஓ.டி.(பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்) எனப்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் பற்றிப் பார்ப்போம். பி.சி.ஓ.டி - அதிகமாக ஆன் ட்ரோஜன் சுரப்பதால் கருமுட்டைகள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.இதனால் கர்ப்பம்தரிப்பதில்லை.
அதிக மன அழுத்தம் சுரப்புக்களை அதிகரிக்கிறது. இதனால் சக்கரை கூடுதல், தசைகள் இறுக்கம்,தாழ்ந்த மூச்சு, இதயத்துடிப்பு அதிகரித்தல் ஆகியவை ஏற்படுகின்றன.மன அழுத்தத்தால் 1.கோபம்,எரிச்சல் அதிகமாதல்,பசி அதிகமாதல், சந்தோசமின்மை, ஆகியவை ஏற்படுகின்றன.2.உடல் பருமனாதல்-வயிற்றில் கொழுப்பு அதிகமாகுதல் 3.சிலருக்கு பசியின்மை, அனோரெஃஸியா,புல்லீமியா போன்ற தீவிரமான வியாதிகள் ஏற்படுகின்றன.4.உடலுறவில் நாட்டமின்மை ஆகியவை ஏற்படுகின்றன. மனப் பிரச்சினைகள், உறவுப் பிரச்சினைகளை அடுத்துப் பார்ப்போம்.

Monday 26 October 2009

இன்றைய பெண்களின் பிரச்சினைகள்!-பாகம்-1

 

தற்கால சூழ்நிலையில் படித்த பெண்கள் வினோதமான சில பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்! சாதாரணமாக வேலைக்குச் செல்லும் இந்தியப் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சினைகள் இவைதான் என்று அறிய முடியாமல் தடுமாறுகிறார்கள்.

பெண்கள் இதுவரை ஆண்கள் செய்து வந்த பொறுப்புகளைக் கூடுதலாக ஏற்றுக் கொள்ளும்போது ஏற்படும் வாழ்வியல் வியாதிகள் சாதாரணமானவை அல்ல. அவை அவர்களால் வாழ முடியாத சூழ்நிலைக்குக் கொண்டுசெல்லும் அளவுக்கு தற்போது பூதாகாரமாக வடிவெடுத்துள்ளன!

68% இந்திய வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்வியல் வியாதிகளான

1.Anxiety-மன நிலைக் கலக்கம்

2.Fear-பயம்

3.Uneasyness-இயல்பாக இருக்கமுடியாமை

4.Hysteria-ஹிஸ்டீரியா- வீட்டிலும், அலுவலக டென்ஷன்களிலும்!

இவற்றால் உறவுகளை சரிவர பராமரிக்க முடியாமை(Battling Relationship Issues),

பணியிடச் சுமைகளைச் சமாளிக்க இயலாமை ( Not able to copeup with job and studies pressure)

வீட்டிலிருப்போரிடமிருந்தும், அலுவலகத்தில் உள்ளோரிடமிருந்தும் விலகிப்போதல் ஆகியவை ஏற்படுகின்றன.

இத்தகைய நோய்க்குறிகளை மிகவும் படித்த பெண்கள், மற்றும் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், கணவன் ஆகியோர் கூட உணர முடிவதில்லை. அப்படிக் கூறினாலும் தான் படித்தவர், தனக்குத் தெரியாததா? என்ற அதீத நம்பிக்கையினால்  பிறர் கூறுவதை ஒத்துக்கொள்ளவோ, அதனைக் கேட்டு அதன்படி சீரமைப்பு முயற்சிகளிலோ ஈடுபடுவதில்லை. அவர்கள் தங்களுடைய மனநிலைக் குழப்பங்கள், மனநிலைமாற்றம் ஆகியவற்றை உணருவது இல்லை என்பது ஒருபுறமிருக்க, தன்னுடைய பிரச்சினைகளுக்குப் பிறர்தான் காரணம் என்று எண்ணி அதீத கோபம் வெறுப்பு ஆகியவற்றைத் தன் குடும்பத்தாரிடம் காட்டி அவர்களிடமிருந்து விலகிச் செல்கிறார்கள்.

பெரும்பாலான பெண்கள் குடும்பம்,வேலை ஆகிய இரண்டின் அழுத்தத்தையும் தாங்க முடியாமல் அவதியுறுவதே இன்றைய பெண்களின் மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது.

இத்தகைய பிரச்சினைகள் இன்றைய இந்திய குடும்ப அமைப்பில் மிகப்பெரும் விரிசல்களை ஏற்படுத்துவதே மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

முந்தைய இந்தியக் குடும்ப அமைப்பில் குழந்தைகளைக் கவனிக்கவும், வீட்டைக் கவனித்துக் கொள்ளவும் பெற்றோர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய நகர்ச் சூழ்நிலைகள் அப்படி அமைவதில்லை.

பெண்களே பெரிய பொறுப்பான அலுவலகங்களின் உயரிய வேலையையும், கணவன், குழந்தைகள் என்ற  குடும்பத்தின் பொறுப்புக்களையும் சுமக்கும்போது ஏற்படும் மனவியல் அழுத்தங்கள் இன்றைய பெண்கள் முன் உள்ள மிகப்பெரிய சவால்! இதில் எத்தனை பேர் வெல்கிறார்கள், எத்தனை பேர் தோற்கிறார்கள் என்பதே எதிர்காலத்தில் குடும்ப அமைப்புகள் இருக்குமா? மெல்ல அழியுமா? என்ற கேள்விகளின் விடையாக அமையும்!  

இந்தப் பிரச்சினைகள் என்ன விளைவுகளை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படுத்துகின்றன என்பதனை அடுத்தடுத்த பகுதிகளில் அலசுவோம்!

Sunday 25 October 2009

சின்ன மருத்துவத் துளிகள்!

 

இன்று சில குறிப்புகள்:

1.ஓட்ஸில் நார்ச்சத்து உள்ளது. அதனால் அதனைக் காலை உணவாக சிலர் சாப்பிடுகின்றனர். உணவு போல் ஓட்ஸை அதிகம் சாப்பிட்டால் அது நல்லதல்ல. காயகறி சாலட்,பழம் இவற்றுடன் ஒரு சின்ன கப் ஓட்ஸ் சாப்பிடுவதுதான் நல்லது.

2.சிக்கன் மட்டனைவிட சிறந்ததா என்று கேட்கின்றனர் சிலர். சிக்கனில் மட்டனைவிட 4% கொழுப்பு குறைவு. அதேபோல் தரமான கோழிக்கறியா என்று அறிந்து வாங்குவது சிரமம். ஏனெனில் கறிக்கோழி பிராய்லர் விரைவில் எடைகூடுவதற்காக  என்னென்ன முயற்சிகள் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

3.கோழிக்கறியே ஆனாலும் எண்ணேயில் பொறித்து உண்பது கொழுப்பைக் கூட்டும்.

4.வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும்.  ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன.

5.ஷூவையும் வருடம் ஒருமுறை மாற்றவேண்டும். ஷூவின் உள்புறம் குதிகால் பகுதியி குழி விழுந்திருந்தால் ஷூ புதியது வாங்குவது நல்லது.

6.சக்கரை நோயாளிகளுக்கு அரிசி உணவைவிட கம்பு,ராகி, கோதுமை உணவு சிறந்ததா?

இல்லை ராகி கூழ், கோதுமை அனைத்தும் சக்கரையை ஏற்றத்தான் செய்யும். தனியாக தானியங்கள், மாற்றி மாற்றி உண்டாலும் உண்ணும் அளவைப் பொறுத்தே இரத்தத்தில் சக்கரை அளவு இருக்கும். கோதுமை உண்ணும் வட இந்தியர்களுக்கும் சக்கரை வியாதி நம் அளவுக்கு இருக்கிறதே!

7.குக்கர் சாதத்தில் சக்கரையை உடனடியாக உயர்த்தும் திறன் குறைவு. வடித்த சாதம் உடனடியாக சக்கரையை உயர்த்தும்.

Friday 23 October 2009

மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!

 

நம்ம ஊருக்கு மரபணு கத்திரிக்காய் வரப்போகுதுங்க! அமெரிக்காவோட மான்சாண்டோ கம்பெனியோட தயாரிப்பு இது!  உலகம் முழுக்க மரபணுக்கத்திரிக்காயை எதிர்க்கிறார்கள்! ஐரோப்பியர்கள் இந்தக் கத்திரிக்காய் வேண்டாம் என்கிறார்கள்! ஆனாலும் இந்தியாவில் ஒரு கம்பெனியின் கூட்டணியுடன் இந்தக் கத்திரிவிதைகளை இந்தியாவில் பரப்பத் தயாராகி விட்டார்கள்! 

மரபணு கத்திரிக்காய் என்றால் என்ன?   ஏன் அதை எதிர்க்கிறார்கள்?

நம்ம ஊர் கத்திரிக்காயில் பூச்சி விழுதாமே! அது அமெரிக்காக்காரனுக்கு கஷ்டமாப் போச்சாம்! இவன் குடுக்கப்போற காயில் பூச்சி விழாதாம்!

அதுக்காக பாசில்லஸ் துரிஞ்ஜெனிசிஸ்னு ஒரு பாக்ட்டீரியாவை இந்த கத்திரிச்செடியில் புகுத்தி விடுறாங்க!  என்னென்ன பூச்சிமருந்து வேணுமோ அதை நாம அடிக்க வேணாம். இந்த செடிக்குள்ள விட்ட பாக்டீரியாவே பூச்சி மருந்து ரெடி பண்ணிக்கும்.

இதுனால நமக்கு பூச்சிமருந்து செலவு இல்லையாம். நம்ம உழவருங்கமேல் அமெரிக்காவுக்கு  என்ன பாசம் பாத்தீங்களா?

ஏன்னா இது அமெரிக்க மான்சாண்டா என்கிற முட்டாள் கம்பெனியின் தயாரிப்பு! இதை வித்தாகணும் பாருங்க! 

புஷ்னு ஒரு ஆசாமி இருந்தான் பாருங்க.. அவன் காலத்திலேயே இதை ஏற்பாடு பண்ணியாச்சு. ஒபாமா என்ன பண்ணுவான்? அவன் சும்மா கையை சூப்பிக்கிட்டு பாத்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான்!

சரி! ஐரோப்பாவில் இதுக்கு என்ன சொல்றாங்க?

1. Wal-Mart Germany

2.Kellogg

3.Coop Switzerland

4.Marks and Spencer, UK

இந்த மெகா கடைகள் முதல் ஐரோப்பாவில் எல்லா இடங்களிலும் இந்த மரபணு மாற்றிய காய்களுக்கு பெரிய எதிர்ப்புங்க! அதனால் ஐரோப்பாவில் இதை விக்க முடியாம இந்தியாவோட கழுத்தைப் புடிக்கிறானுங்க!

சரி ஏன் நம்ம இது வேண்டாம் என்கிறோம்?

1.இந்தக் கத்திரிக்காய் சாப்பிட்டால்  மருந்துகளுக்குக் கட்டுப்படாத புது பாக்டீரியாக்கள் உருவாகும். ( உள்ள நோயே தாங்க முடியல! இது வேறயா!!)

2.கத்திரிக்காய் உள்ளே இருக்கும் பாக்டீரியா சும்மா இருக்குமா? சில  நச்சுப்பொருளை அப்பப்ப கக்கும். அது ரொம்ப டேஞ்சராம்.

3.இதனால் மனிதனுக்கு அலர்ஜி எதுவும் வருமான்னு இன்னும் டெஸ்ட் பண்ணலையாம்.( அதான் இளிச்சவாயனுங்க மேல பண்ணப் போறாங்களே!!!..இளிச்ச வாயனுங்க யாருன்னு கேக்கிறீங்களா?  அட நம்மதாங்க!!)

4.இந்தக் காயை தொடர்ந்து வருசக்கணக்கா சாப்பிட்டா ஏதாவது பிரச்சினை வருமான்னு கேட்டா பதில் யாருக்கும் தெரியாது!!

5.குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம். ஏன்னா இன்னும் சோதிக்கவில்லை!

6.இந்தச் செடிக்கழிவுகள் பட்டாம்பூச்சி, மின்மினிப்பூச்சியையும் சேத்துக் கொல்லுமாம்!!( இப்பவே மின்மினிப் பூச்சிகளைக் காணோம்!!).

7. 4000 வருசமா நம்ம விவசாயி இதைப் பயிரிட்டுப் பிழைப்பு நடத்துகிறார்கள். இந்தக் கத்திரி விதைகள் மிகக் குறைந்த சலுகை விலையில் கொடுக்கப்படும். ஆனால் விதையை சேமிக்கவோ மறுபடி உபயோகிக்க முடியாது. வேற வழியில்லாம நம்ம அந்த விதைக் கம்பெனிக்கு அடிமையாக வேண்டியதுதான்.( புதிய பொருளாதார காலனித்துவ அடிமைகள்!!).

8.நம்முடைய சொந்த கத்திரிச் செடிகளும் இந்தச்செடியின் மகரந்தத்தால் நாளடைவில் கெட்டுப்போகுமாம்.

9.நாளடைவில் கத்திரி விலை யானை விலையாகி நீங்களும் நானும் கத்திரிக்காய் வாங்க முடியாம போகும்.

மரபையும், மாண்பையும் கெடுக்கும் இந்தக் கத்திரிக்காய் நமக்குத் தேவையா?  இப்பொழுதே எதிப்புகள் ஆரம்பித்துள்ளன.

இதில் நம்மூர் பயோடெக் ஆசாமிங்க இது நல்லதுன்னு அறிக்கைவேறு வெளியிடுகிறார்கள்!!

நம்ம ஊர் அப்பாவி உழவர்களுக்கு அடி மேல் அடி! எவ்வளவோ அடி தாங்கி விட்டோம்.. இதையும் எதையும் தாங்குவோம்ங்கிறீங்க!!!

என் எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டேன். நாடே ஒன்று திரண்டால் இந்தியாவுக்குள் இது வருவதைத் தடுக்கலாம்!

சரி.. வாங்க! உள்நாட்டுக் கத்திரிக்காய் வகைகளை ஒருகை பார்ப்போம்.

888888888888888888888888888888888888888888888888888888888

இதையும் படிக்கலாம்: ஜெரி ஈசானந்தாவின் புதிய இடுகை: முல்லைப்பெரியார் -கொடுங்கனவின் கானல் நீர்

888888888888888888888888888888888888888888888888888888888

Tuesday 20 October 2009

காதலைத்தூண்டும் உணவுகள்-10!( சின்னப் பசங்க எல்லாம் கில்லி வெளையாடப் போங்கப்பா!!)

 

1.செலரி- செலரி இலையை வெட்டித் துண்டு துண்டாக்கி மென்று தின்னவேண்டியதுதான்!!  எப்படி இது தூண்டுது? ஆண்ட்ரோஸ்டிரோன் என்ற மந்திரப் பொருள் அதில் இருக்குங்க!!

2.சிப்பி,(Oysters)- கிராமத்தில் ஒரு காலத்தில் நத்தை, ஊமச்சி என்று மக்கள் அவித்துச் சாப்பிடுவார்கள். மக்களுக்குப் படிப்பறிவு இருந்ததோ இல்லையோ நத்தையில் சின்க், டோபாமின் என்கிற இரண்டு .....தூண்டும்  வஸ்துகள் இருக்குங்க!! ( பழைய காலத்து மக்கள் வெவரந்தான்!!!)

3.வாழைப்பழம்- இரவு சாப்பிட்டு சில ஆசாமிகள் நாட்டு வாழைப்பழம் இரண்டு சாப்பிடுவார்கள்.. பி விட்டமின், பொட்டாசியத்தோடு நமக்குத்தெரியாத வகையில் வாழைப்பழம் மேட்டரைத் தூண்டுதுங்கோ!!

4.பாதாம் போன்ற பருப்பு வகைகள்- பொதுவா அரபு நாட்டு சேக்குகள் விரும்பி சாப்பிடும் பொருள். உள்ளூர் சேக்குகள் அரேபியாவிலிருந்து வரும்போது விரும்பிக் கொண்டுவரும் பொருட்களில் சரக்குக்கு அடுத்து பாதாம், பிஸ்தாதான். காரணம்?...  எல்லாம் வெவரமாத்தான் !

5.முட்டை- படிப்பில் முட்டை வாங்கினாலும் இந்த விசயத்தில் முட்டை வாங்கக்கூடாதில்ல!! இதுவும் மேற்படி மேட்டருக்கு ரொம்ப உதவி செய்யும். மேலும் பி விட்டமின் வேற இருக்குங்க!

6.ஈரல்- கறிக்கடையில் பாருங்க. சிலர் ஈரல் மட்டும்  நூறு கிராம், இருநூறு கிராம் வாங்குவாங்க. நம்ம தனிக் கறியாக் குடுப்பான்னு வாங்கி வருவோம்.  சாமி!.....ஈரலில் குளூட்டமினோட வேறு சங்கதியைத் தூண்டும் வஸ்துகளும் அடக்கம். அடுத்த தடவை ஈரலும் கொஞ்சம் போடச் சொல்லுங்க!

7.அத்திப்பழம்- அடி ஆத்தி! எனக்கே இப்பத்தங்க தெரியும்!! ஏன் எப்படின்னு தெரியல! ஆனா யூஸ் பண்ணிப் பாருங்க!

8.பூண்டு- அல்லிசின் என்கிற வஸ்து பூண்டில் இருக்கு. அது ரத்த ஓட்டத்தைத் கூட்டுதாம்( எங்கேன்னு அப்பாவியாட்டம் கேட்கக் கூடாது!! ஹி! ஹி!). வாயில் பூண்டு வாடை அடிக்கும்.  டிக் டாக், பெப்பர்மிண்ட் ஏதாவது போட்டுக்கவேண்டியதுதான்!

9. சாக்கலேட்- சாக்கலேட் ரொம்பத்திங்கக்கூடாதுன்னு வீட்டில் திட்டுவாங்க. அதில் தியோபுரோமின், பினைல் எதிலமைன் ஆகிய மோடிமஸ்தான் அயிட்டங்கள் அதில் இருக்குங்க. குழந்தைகளுக்குக் குடுக்காதீங்க! நீங்க தின்னுங்க!

10.மாம்பழம்- சூட்டைகிளப்பிவிடும் சாப்பிடாதீங்கன்னு சொல்லுவானுங்க! தெரியாம சொல்லலை உண்மைதான்... அது இந்த சூட்டைத்தான்  கிளப்பிவிடும்!!!!

Monday 19 October 2009

பிரேதப் பரிசோதனை-( ரைகர் மார்டிஸ்)-மரணவிறைப்பில் அறியவேண்டியவை-9!

 Rigor Mortis (US)

 

பிரேதப் பரிசோதனை எனப்படும் போஸ்ட் மார்ட்டத்தில் முதலில் பார்ப்பது ’ரைகர் மார்ட்டிஸ்’ RIGOR MORTIS தான். ரைகர் மார்ட்டிஸ் என்றால் என்ன என்று பார்ப்போம்.

1.இறந்தவுடன் உடலில் ஏற்படும் விறைப்புத் தன்மைதான் ரைகர் மார்ட்டிஸ்! இறந்த உடலின் கைகள் கால்களை, முழு உடலையும்கூட  மடக்கினால் மடக்க வராது.

2.உடல் தசைகள் இறந்தவுடன் சுருங்கி விறைப்பதனால் இறந்த உடல் விறைக்கும். இதுவே ரைகர் மார்ட்டிசின் காரணம்.

3.ரைகர் மார்ட்டிஸ் உடலில் இருந்தால் குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டார் என்று உறுதியாக நாம் நம்பலாம்.

4.ரைகர் மார்ட்டிசை  வைத்துப் பொதுவாக இறந்த நேரத்தைக் கணக்கிடலாம். (துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றாலும் பிரேதப் பரிசோதனையில் அறிக்கையில் முதலில் எழுதப்படுவது இதுதான்).

5.ரைகர் மர்ட்டிஸ் இறந்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலிருந்து ஆரம்பிக்கும்.

6.இறந்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலிருந்து ஆரம்பிக்கும் ரைகர் மார்ட்டிஸ் வெயில் காலத்தில் 18- 36 மணிவரை இறந்த உடலில் இருக்கும்.

7.மழைக்காலத்தில் இறந்த ஒன்று அல்லது இரண்டுமணி நேரத்திலிருந்து ஆரம்பிக்கும்  ரைகர்மார்ட்டிஸ்  24-48 மணிநேரம் வரை இறந்த உடலில் இருக்கும்.

8.மேல் சொன்னவை பொதுவானவையே. வயது, இறப்பின் தன்மை, மேல்சொன்னதுபோல் தட்பவெப்பம் ஆகியவற்றைப் பொறுத்து ரைகர் மார்ட்டிசின் நேரங்கள் கொஞ்சம் கூடக் குறைய மாறலாம்.

9.ரைகர் மார்ட்டிஸை வைத்து இறந்தபோது உடல் எந்த நிலையிலிருந்தது என்று அறியலாம். ஏனெனில் ஒருவர் இறக்கும்போது கால்களை மடக்கி வைத்திருந்தால் அப்படியே கால்கள்  மடங்கிய நிலையிலேயே விறைப்பாக இருக்கும்!  

எளிமையாக பிணவிறைப்பு அல்லது மரண விறைப்பு என்று சொல்லப்படும் ரைகர் மார்ட்டிஸ் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.   கேள்விகளைக் கேளுங்கள்!!

தமிழ்த்துளி தேவா!

Sunday 18 October 2009

தீபாவளி!

 

இரண்டு நாள்

பலகாரங்களின் நெரிசல்

வயிற்றுக்குள்!!!

நேற்று வந்த தம்பி சொன்னான்

பேருந்திலும் ஒரே கூட்டம் என்று!

ஒன்றிரண்டு மிச்ச வெடிகளை

கட்டிலுக்கடியில் பதுக்குகிறான்

என் மகன் பிரிதொருநாள் வெடிக்க!

சமையல் ஆள் வரவில்லை,

கடையில் சாப்பிட்டுக்கலாம்,

புதுப்படம் எந்தக் காட்சி

போகலாம்?-இல்லாளின் கேள்வி!!

இவற்றுக்கிடையில்

மெதுவாய் நழுவிக்கொண்டிருந்தது

இந்த தீபாவளி!!!

Thursday 15 October 2009

ஈழத்தமிழர் பலமும், பலவீனமும்!

மணற்கேணி அரசியல் சமூகம் பிரிவுக்கு காரைக்குடி வலைஞர்கள்-லிலிருந்து அனுப்பிய கட்டுரை!!!

 

ஈழத்தமிழர் பலமும், பலவீனமும்!

நாம் எப்படி வாழ்வது? நம் வரலாறு எது?

நம்மை வாழ வைப்பது எது? நம்மை வீழ்த்தியது எது?

நம்மை வதைப்பது எது? நாம் எதற்காக போராட வேண்டும்?
ஈழத்தமிழரின் உரிமைப் போர் முற்றுப்பெற்று விட்டதா? அதன் பலம் எது?
பலவீனம் எது? தீர்விற்கான வழிகள் என்ன?

எம் நெஞ்சினில் உருவான
கேள்விகளுக்கு மனப்போராட்டத்தில் கிடைத்த பதில்கள் குறித்து எழுதுகிறேன்.

"போரிட வேண்டுமென்றால் தன்னிடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் அன்பு செய்ய பிறரிடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்". மார்க்ஸிய மேதை கார்ல் மார்ஸின் கருத்து. தனக்கு பலம் உள்ளது, எதிரியை வெல்ல முடியும் என்று நினைத்தால் நமக்கு துணையாக வரும் சக்திகளின் பலம், சூழல் ,காலம் இடம் நேரம் அறிந்து போராட இயலும். இந்த அடிப்படையில் ஈழ உரிமைப் போராட்டத்தின்
பலத்தை முதலில் ஆய்வோம்.

ஈழத்தின் வெகு அருகில் பெரும்பான்மை தமிழர்கள் வாழும் தமிழகம் உள்ளது. தமிழர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் உலகம் முழுவதும் பரவலாக
வாழ்கிறார்கள். இது உரிமைப் போராட்டத்தை உலக அளவில் எடுத்து செல்ல வழிகோலும். விடுதலைப்புலிகள் புதிதாக அமைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசு வலுவாக செயல்படுவதற்கு உதவும்.

உலகத் தமிழர்களின் பொருள் உதவி அறிவு
அரசியல் சார் உதவிகளும் தமிழீழ அரசுக்கு எளிதில் கிடைக்கும்.போராளிகளை பயங்கரவாதிகளாக சிங்கள அரசு உலக சமூகத்திற்கு சித்திரித்து வந்துள்ளது. தமிழீழப் போரில் தற்காலிக தோல்வியை பின்னடைவை விடுதலைப் போராட்டம் சந்தித்துள்ளது. அதன்பின் சிங்கள காட்டாண்டி அரசின் அரசு
பயங்கரவாத முகத்திரை அதன் செயல்பாடுகளால் கிழிந்து கோரமுகம் வெளிப்படையாக
தெரிய ஆரம்பித்து விட்டது.

உலகின் மனித உரிமை ஆர்வலர்கள் மக்கள்
விடுதலையை ஆதரிக்கும் சக்திகளும் அரசுகளும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு பேராதரவு  தரும் அரசியல் சூழல் உருவாகி உள்ளது. இதை
நேர்மையான சரியான திசை வழியில் பயன்படுத்திக் கொண்டு உரிமைப் போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும்.

துயரத்தில் தான் உண்மையான நண்பனைக் காண முடியும்.  ஈழப்போரில் பின்னடைவை
சந்தித்த பிறகு நமக்கு உண்மையான துணைவரும் சக்திகளையும் துரோகம் செய்யும்
சக்திகளையும் விரோதிகளையும் எளிதாக இனம் காணலாம்.

தெற்காசிய நாடுகளின் அனைத்து விதமான உளவுத்துறை இராணுவ உதவிகளால் வெற்றியடைந்த அகங்காரத்தில்
ஈழத்தமிழர்களுக்கு மனிதநேய உதவிகளை சிங்கள பேரினவாத அரசு மறுத்து வருவது
உலக சமுதாயத்தின் வெறுப்பிற்கு சிங்கள அரசு ஆளாகியுள்ளது.

இதை நமது பிரசார உக்திகளால் சரியாகப் பயன்படுத்தி கொண்டு உலக நாடுகளின் தார்மீக
ஆதரவைப் பெறலாம். உலகளாவிய விடுதலை இயக்கங்களின் ஆதரவை பெறுவதற்கும்
கூட்டு உழைப்பிற்கும் வலு சேர்க்கலாம்.
இயற்கையான ஈழ மண்ணின் காடுகள் அரசியல் போராட்டத்தினூடே ஆயுதப் போராட்டம்
தொடர்வதற்கும் வழிகோலும் என்பதும் வலிமையாகும்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் முதலான தெற்காசிய நாடுகளில் நடக்கும் விடுதலைப் போராட்டங்களும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் விடுதலைப்
போராட்டங்களும் நம் ஆய்விற்கு உட்படுத்தி நம் வெற்றிக்கு உதவும்வழிவகைகளைக் காண்பது வலிமை சேர்ப்பதாக அமையும்.

ஒரு சங்கிலியின் பலம் என்பது அதன் வலிவு குறைந்த வளையத்தைப் பொறுத்தே
அமைகிறது. பலத்தைக் குறித்த நம்பிக்கையினூடே பலவீனத்தைக் குறித்த எச்சரிக்கையும் மிகவும் முதன்மையானதாக உள்ளது. ஈழப் போராட்டத்தின்
பின்னடைவு தோல்வியல்ல என்ற உறுதியோடு பலவீனங்களை சரி செய்து கொள்ள அலசி
ஆய்வு செய்வோம்.

உலகமயமாக்கல் என்பது பல நாடுகளின் பொருட்கட்டமைப்பை சீர்கேடடையச்
செய்துள்ளது. பெரு வணிக பேரரசுகளும் இதில் விதிவிலக்கல்ல தேசீய இனங்களின்
விடுதலைப் பெருவணிக பேரரசுகட்கு இடையூராக இன்று தெரிவதால் அனைத்து கொலைக் களங்களையும் கொடுத்து மக்கள் உரிமை மீட்புப் போர்களையும் தேசிய இன விடுதலைப் போர்களையும் நசுக்குமாறு கட்டளை பிறப்பிக்கும் என்பதை சரிவர கணக்கிடாதது பெரிய பலவீனமாகிவிட்டது.

தெற்காசிய நாடுகளை ஒரே வணிக மண்டலமாக்க மேற்கூறிய பின்னனியில் இந்தியா
சீனா போன்ற நாடுகள் சிங்கள பேரினவாத அரசுக்கு அனைத்து உளவுத்துறை மற்றும்இராணுவ உதவிகளை செய்தது, செய்து வருகிறது. தெற்காசியா முழுமையையும் ஆதிக்கம் செய்ய இலங்கையின் புவியியல் அமைப்பு உதவும் என்பதும் உலக
நாடுகளின் உதவி கிடைக்க பெரும் வாய்ப்பாக அமைந்து விட்டது.

தளத்தின் பலம் தான் வெற்றியை முடிவு செய்யும். போராளிகளின் தலைவர்கள் இந்தியா உதவும் என்று நினைத்ததால் இந்திய உளவுத்துறையினரோடு தொடர்பு
கொண்டிருந்தார்கள். இது இன போராட்டத்திற்கு எதிரான துரோக குழுக்களையும்
சிங்கள அரசிற்கான ஒட்டுக்குழுக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தது.

புதிதாக அமைந்த நாடுகடந்த தமிழீழ அரசின் தலைவர் பத்மநாபன் இந்தியா உதவும்
நம்பிக்கையோடு பேசுவது கவலை கொள்ள வைப்பதாகும்.

மாறாக மலையகத் தமிழர்களையும் கருணாவின் ஒட்டுக்குழுக்களாலும் சிங்கள
அரசாலும் அச்சுறுத்தப்பட்டு ஈழமக்களின் பிரச்சனைக்கு போராடாமல் வாய்மூடி
மவுனியாய் உள்ள கிழக்கு மக்களையும் அரசியில் ரீதியாக இணைக்காமல் உள்ளது
மிகப்பெரும் பலவீனமாகும். ஈழப் போராட்டத்தின் ஆதரவு சக்திகள் (NDF) புதிய
ஜனநாயக முன்னணி போன்ற அமைப்புகளை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

இந்திய அரசை நம்பாதே!
இந்திய மக்களை நம்பு!

இலால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மலையகத் தமிழரின் குடியுரிமை ஒப்பந்தம்,
அன்னை இந்திராவின் கச்சதீவு ஒப்பந்தம், இராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்று பல ஒப்பந்தங்கள் இந்திய - இலங்கை அரசுகளால் போடப்பட்டது. அனைத்தும் தமிழருக்கும் ஈழதமிழருக்கும் எதிராகத் தான் இருந்தது இருந்து வருகிறது.

இந்திரா-ஜெயவர்த்தனா, இந்திரா-அதுலத்முதலி, இராஜீவ் - ஜெயவர்த்தனா, சோனியா - இராசபக்சே, மன்மோகனசிங் - இராசபக்சே, பசில்-ராசபக்சே,கோத்தபயா- இராசபக்சே சந்திப்பு காட்சிகளை ஊடகங்களில் பார்த்தாலே தமிழர்
எதிர்ப்பின் வலிமையை ஊகிக்கலாம்.

யாழ்கோட்டையில் சுற்றிவளைக்கப்பட்ட சிங்கள வீரர்களைக் காப்பாற்ற வாஜ்பாய் அரசு புலிகளுக்கு மிரட்டல் விடுத்ததும் ஆய்விற்குரியது. சிங்களப் பேரினவாத போர்ப்படைக்கும் தமிழீழ நாட்டின் போராளிகளுக்கும் நடந்த போரில் சிங்களஅரசு பெற்ற உதவிகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எளிய இந்திய மக்களின் விடுதலைக்கு போராடும் பொதுஉடமைக் குழுக்கள் இனக்குழுக்களை ஆய்வுக்குட்படுத்தி நேர்மையானவர்களை அடையாளம் கண்டு கூட்டு முயற்சியில் இறங்குவது இந்திய அரசிற்கு அழுத்தத்தைத் தரும்.

மாறாக, தமிழ்நாட்டு தலைவர்களால் இந்திய அரசுக்கு எந்த அழுத்தத்தையும் தர இயலாது என்பது தெளிவான ஒன்றாகும்.

!

இந்திய மக்களை நம்பு!!

என்பதே போராட்டத்தின்வலிமைக்கு உதவுவதாக அமையும்.எளிய மக்களின் உள்ளம் உயர செயல்பட வேண்டும்

காவியங்கள் ஊடகங்கள் அரசியல் பிழைப்பு வாதிகளின் செயல்பாடுகள் அனைத்தும்
காலம் காலமாக எளிய மக்கள் தங்களை ஒத்தவர்களின் பிரச்சனைகள் பற்றி
சிந்திக்காத வண்ணம் வாழ செய்துள்ளன.

அரிச்சந்திரன் மனைவி சந்திரமதி படும் துயரம் கண்டு அரசன் மனைவி துயரப்படுகிறாளே என்று துயரப்படுவார்கள். பதினான்கு வருடம் காட்டு
வாழ்க்கை வாழும் இராம இலக்குவன் மற்றும் சீதையை நினைத்து மனம் கலங்குவார்கள். இந்திரா அம்மையாரின் படுகொலைக்காகவும் இராஜீவ்
படுகொலைக்காகவும் கலங்குவார்கள், கொதிப்பார்கள்.

ஆனால் ஆயிரக்கணக்கான சீக்கியர் படுகொலைக்கும், இலட்சக்கணக்கில் கொலையுண்ட ஈழத்தமிழர்களின் படுகொலைக்கும்,மதக் கலவரத்தில் மாண்ட இஸ்லாமிய எளிய மக்களுக்காகவும்கொதிக்க மாட்டார்கள்.மாறாக சுப்ரமணியசாமி மீது எறிந்த முட்டை, தக்காளிக்கு பரிசாக வழக்கறிஞர்
சமூகமே காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளானது.

அடித்த காவலர்களும் அடிபட்டவழக்கறிஞர்களும் எளிய மக்கள். தமிழீழ நாட்டின் தேசீய தலைவர் பிரபாகரன்படுகொலை செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட உடனே
தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதனை எதிர்த்து கலகங்கள் நடந்தன.அவர் உயிருடன் உள்ளார் என்று ஈழ ஆதரவு தமிழ் தலைவர்கள் உறுதி கூறியதும் தமிழ் மக்கள் அமைதி காத்தார்கள். இனி ஈழ பிரச்சனைக்கு அவர் போராடுவார்
என்று தன் சொந்த வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டார்கள்.

எளிய மக்கள் தமது தலைவனிடத்தில் பிழை இராது என்று நம்புகிறார்கள் அதுவும்மக்கள் போராட்டத்தில் பெரிய தடைக்கல்லாக உள்ளது. பெரும்பான்மை மக்களின்தலைவர்கள் கலைஞரும், ஜெயலலிதா அவர்களும் இந்த அடிப்படையில் மக்களின்
கோபத்திற்கு ஆளாகவில்லை.

அதிகாரமில்லாத முதல்வர் பதவியில் இருந்தாலும், அந்த வரம்பிற்குள் தரவேண்டிய அழுதத்தையும் தராமல் துரோகம் செய்த கலைஞர் அவர்களை,
தொல்திருமாவளவன் போன்ற எளிய மக்களின் தலைவரும் நம்பி ஏமாந்தது இந்த அடிப்படையில் தான். வைகோ, இராமதாஸ், நெடுமாறன் போன்றார்கள் ஜெயலலிதா அம்மையாரை நம்பி ஏமாந்ததும் இந்த அடிப்படையில்தான்.

அரசியல் அதிகாரத்தில் இருந்து கலைஞர் துரோகமிழைத்தார். அதிகாரத்தில் இல்லை என்றாலும் வலிவுடைய எதிர்கட்சி தலைவர் எந்த போராட்டத்தையூம் நடத்தாமல் துரோகமிழைக்கிறார்.

காவிய நாயகி சீதையின் சிறைவாழ்விற்கு நோகாமல், ஈழப்பெண்கள் கற்பழிக்கபடுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டு துயரப்பட்டுக் கொதிக்கும்
மனநிலையை எளிய மக்கள் பெற ஈழ ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும்.

இராமனின் வன வாழ்க்கைக்கு வருந்தாமல் ஈழதமிழர்கள் தடுப்பு வதை முகாம்களிலும் சிறைகளிலும் காடுகளிலும் படும் சொல்லொணாத் துயருக்காகவருந்திப் போராடும் எண்ணத்தைப் பெற வழிவகைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழக தலைவர்கள் ஒற்றுமை, ஒற்றுமை என்று அறிவுரை கூறி ஒதுங்குகிறார்கள்.

ஒற்றுமைதனிலும் உயிர் பெரிது,

ஒற்றுமைதனிலும் உரிமை பெரிது

என்பதை மறைக்கிறார்கள், மறுக்கிறார்கள் என்பதை எளிய மக்களுக்குத் தெளிவாக்க வேண்டும். எளிய மக்களின் விழிப்பே ஏற்றமிகு உரிமைப் போருக்கு வழி.

1.தமிழ் ஈழ துரோகக் குழக்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது. இந்திய உளவுத்துறைக்கும் (RAW) சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அவர்களுக்கும் உள்ள இணைப்பை மனித உரிமை ஆர்வலர்களாக உள்ள சிங்கள ஐனநாயகசக்திகளோடும் நவசேனா மாதிரி ஈழப்போரட்டத்தை அங்கீகரிக்கும் அமைப்புகளோடும் இணைத்து உடைத்தெறிவது.

2.தனிநபர் துதி என்பது ஒரு கவர்ச்சி அரசியல். தனிநபர் பங்கு என்பது போராட்டத்திற்கு வலு சேர்க்கலாம். ஆனால் அதுவே வலிமையாகி விடாது என்பதைப் புரிந்து கொண்டு சிறியஅமைப்புகளானாலும் ஒத்த கருத்துடையவர்களை போராட்டத்தில் இணைத்து வழி நடத்துவது.

3.தமிழகத்து உரிமை போராட்டங்கள் வலுவடைய வழி காணுவதும் ஈழபோராட்டத்திற்கு தீர்வாக அமையும்.
தமிழக மீனவர் நலன்களை தமிழகத் தலைவர்கள் முதன்மைபடுத்துவது. இராஜீவ்காந்தியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனை, பொட்டு அம்மனை கைது செய்ய இந்தியா உரிமை கோருவதை போல இதுவரை சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட
படுகாயப்படுத்தப்பட்ட மீனவர்களின் காவல்துறை வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்.

வழக்கறிஞர் குழுமம் நீதிமன்றங்களை அணுகி சிங்கள ஆட்சியாளர்களைக் கைது செய்யும் ஆணையைப் பெற வேண்டும். மக்கள் போராட்டங்களை தமிழக
மீனவர்களுக்காக தமிழக அளவில் முன்னெடுப்பது இந்திய அரசுக்கு பெரும் அழுதத்தத்தைத் தரும்.

4.ஈழப் போராட்டத்தில் தமிழக மீனவர்களை ஈடுபடுத்துவதும் தமிழக மீனவர்களுக்கு போர் பயிற்சி ஆயுதங்கள் தர அரசை வற்புறுத்த வேண்டும். இது
கடல் பகுதியில் சிங்கள அரசின் மேலாதிக்கத்தைத் தடுத்து நிறுத்தும்.

5.நாடு கடந்த தமிழீழ அரசு திரு.தொல்திருமாவளவன், வை.கோ., மருத்துவர் இராமதாசு, தமிழர் தலைவர் ஐயா பழநெடுமாறன், அவர்களை அணுகி இந்திய அளவிலான அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவைப் பெற்றுதர நிர்பந்திக்க வேண்டும்.
தமிழீழத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேற நெருக்கடிகள் கொடுக்க வேண்டும்.

ஒற்றுமையை விட உயிர் பெரிது!
ஒற்றுமையை விட மானம் பெரிது!
ஒற்றுமையை விட உரிமை பெரிது!

இந்திய ஒற்றுமை என்ற பெயரால் இலங்கை ஒற்றுமை என்ற பெயரால் மக்களை
விலங்குகளினும் கேடாக நடத்துவது நேர்மையல்ல! முறையல்ல! என்று முழங்கி
ஈழஉரிமைப் போர் தொடர்க!
உலகத் தமிழர்கள் உரிமைப் போர் தொடர்க!
முற்றும்

Wednesday 14 October 2009

கொஞ்சம் தேநீர்- மௌனமாய்...

மக்கிச் சிதைந்த

சாளரங்களின்வழி

தரையெங்கும்

பரவியிருக்கிறது,

மவுனமாய் கசிந்த ஒளி,

 

சிதிலமடைந்த

கதவொன்றில் சிரித்தபடி

விளக்குடன்

வரவேற்கும்

செதுக்கப்பட்ட பதுமை!!

 

சிலந்தி வலைகளின்

பிடியில் உத்தரத்தில் தொங்கும்

என்றோ தொங்கவிடப்பட்ட

விளக்குகள்!

 

பூட்டப்பட்ட

சயன அறைக்குள்

பல சந்ததிகளின்

சூட்சுமம் பொதிந்த

பழைய கட்டில்!

 

இருளின் ஆழத்தில்

பாசிகளால் மறைக்கப்பட்டு,

சலனமற்றுக் கிடக்கிறது

இறைக்கப்படாத

தண்ணீர்,

 

காற்றின் அந்தரங்கங்களில்

கலந்து கிடக்கும்

என்றோ ஒலித்த

தாலாட்டு!

 

பூக்களைக் கொட்டியபடி

வாசலில் நிற்கும்

பூவரச மரம்,

 

தொங்கிக்கொண்டிருந்த

குருவிகளின் திசையறியாது,

வண்டு துளைத்து

மெலிந்த

தோட்டத்து ஒற்றை

மாமரம்!

 

கடந்துபோன

எச்சங்களின் நினைவைச்

சுமந்து கிடக்கும்

வண்டிப்பாதை!!

 

அரசமர இலைகளின்

சலசலப்பில்

சிதிலமடைந்த

செங்கற்களின் நடுவே

அமைதியாய்

காத்து நிற்கும் குலசாமி!

Sunday 11 October 2009

எங்கள் பல்கலைக் கழகத்துக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கு!!!

 

இந்தியா பல துறைகளில் முன்னேறியுள்ளது. இந்தியர்கள்கள் உலகின்  மிகத் திறமையானவர்கள், அவர்கள் எந்த விதத்திலும் பிறநாட்டவர்களுக்குக் குறைந்தவர்கள்  அல்ல என்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தற்பொழுதுகூட திரு. வெ.ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. மிக்க சந்தோசம்! ஒவ்வொரு முறை நோபல் பரிசு அறிவிக்கப்படும்போதும் என் மனதில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும். அதனைச் சொல்லுகிறேன்.

“Our university system is, in many parts, in a state of disrepair…In almost half the districts [340] in  the  country,  higher  education  enrolments  are  abysmally  low,  almost  two-third  of  our universities and 90 per cent of our colleges are rated as below average on quality parameters… I am  concerned  that  in many  states  university  appointments,  including  that  of  vice-chancellors, have been politicised and have become subject to caste and communal considerations, there are complaints of favouritism and corruption.” 
Prime Minister Manmohan Singh’s address at the 150th Anniversary Function of University of Mumbai, June 22, 20071 ”

மேலேயுள்ள பத்தியில் நமது பிரதமர். மன்மோகன் சிங் கூறியிருப்பதைப்பாருங்கள்.

1.இந்தியாதான் உலகிலேயே அதிக உயர்கல்வி நிலையங்களைக் கொண்டுள்ளது. 364 பல்கலைக் கழகங்கள்,17625 கல்லூரிகள்( இப்போது இன்னும் அதிகமாக இருக்கும்.

2. ஏறக்குறைய 164 உயர் ஆராய்ச்சி மையங்கள் இந்தியாவில் உள்ளன! ஆதாரம்: விக்கி.

இவ்வளவு நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள்  இருந்தும் ஏன் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களால் உயர் ஆராய்ச்சியில் பிரகாசிக்க முடியவில்லை?

3.ஒரு வியாதிக்கு மாத்திரையிலிருந்து, கம்பியூட்டர் பாகங்கள், அறுவைசிகிச்சைக் கருவிகள்,  நானோ தொழில் நுட்பம்வரை ஆராய்ச்சிகள் மிக அவசியம். எத்தனை காலம்தாம் நாம் அன்னியர்களுக்கு ராயல்டி கொடுத்துக்கொண்டு இருப்பது? 

4.ஏன் நமது அரசோ, அறிவியல் அறிஞர்களோ இதைப் பற்றி கருத்தில்கொள்ளவில்லை?

இதைப் பற்றி ஆராயும்போது சில கருத்துக்கள் கிடைத்தன.

1.ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது “ வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு இந்தியா வாருங்கள் “ என்று ஆராய்ச்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி இந்தியா வந்த ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். கொஞ்ச நாளிலேயே அவர்களுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களால் பெரும்பாலானோர் திரும்பிச்சென்றுவிட்டனர்.

2.ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் குறைந்த அளவு மாணவர்கள் ஆராய்ச்சித்துரைக்கு வருகிறார்கள்.

பிலிப்பைன்ஸ்-(31 percent), தாய்லாந்து-(19 percent), மலேசியா-(27 percent) சீனா- (13 percent) இந்தியா- 7-8 percent அமெரிக்கா-81 percent, இங்கிலாந்து-54 percent ஜப்பான் - 49 percent.

3.இந்திய அரசு மிகக் குறைந்த தொகையே உயர்கல்விக்கு செலவிடுகிறது. ஒரு மாணவனுக்கு,

மலேசியா-11790 அமெரிக்க டாலர்.

சீனா-2728$

பிரேசில்-3986$

இந்தோனேசியா-666$,

பிலிப்பைன்ஸ்-625$,

அமெரிக்கா-9629$,

இந்தியா-406$ !!!

4.அமெரிக்காவில் படிக்கும் உலக மாணவர்களில் 14% இந்தியர். அமெரிக்கா இதன்மூலம் 13.4 பில்லியன் டாலர் வருமானம் பெருகிறது.

நம் பல்கலைக்கழகங்களும் அரசும் போகும் போக்கில் இந்தியாவில் மாணவர்கள் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மிகச்சிரமம்.

இந்நிலையில் வெளிநாட்டுப்ப்ல்கலைக்கழகங்களை அனுமதித்தால் கல்வித்தரம் வளருமா? என்ற கேள்வியும் எழுந்து அதன்படி இந்தியாவில் 150 வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் வந்துள்ளன!!!கொடுமை என்னவென்றால் இந்தியாவில் இவற்றைக்கட்டுப்படுத்த சரியான விதிமுறைகள் இல்லை.

இவற்றில் பல பல்கலைக்கழகங்கள் 50 மாணவர்கள் மட்டுமே கொண்டுள்ளன! இவற்றிற்கு எப்படி பல்கலைக்கழக அந்தஸ்து தரப்பட்டது?ஏனென்றால் அவை 100% சொந்தப்பணத்தில் தொடங்கப்பட்டவை!!!?

ஆனால் சீனாவிலும், சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளிலும் அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறது.

சுட்டி: Full report on The Times of India site

இந்தியாவில் இந்த நிலை மாறவேண்டும். உலகத்தையே அரசுச் செலவில் சுற்றிவரும் துணைவேந்தர்களும், பேராசிரியர்களும், கல்வி அமைச்சர்களும் இதனைச் சற்று சிந்திக்க வேண்டும். 

காந்தி,நேருவிலிருந்து இன்றைய மன்மோகன் சிங், ப.சிதம்பரம் வரை நம் மாணவர்களின் தலைவிதியை எழுதுபவர்கள் ஹாவர்டிலும், ஆக்ஸ்போர்டிலும் படித்தவர்களே!!

எதிர்கால மாணவர்கள் தலைவிதியை கோணலாகி எழுதி மிக்க கடன்சுமையுள்ள குடிமகனாக மாற்றிவிடாதீர்கள்.

”என் பல்கலைக்கழகத்திற்கு, என் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பரிசுகிடைத்துள்ளது” என்ற செய்திகளைக் கேட்கும்நாள் எந்நாளோ?

Saturday 10 October 2009

பதிவர்களுக்குள் மோதல்.. பேட் டச்!

அன்பு நண்பர்களே!!

வேர்விட்டு நிற்கும் மரம் எங்கும் செல்ல இயலாது.

அது போல்  வெளியில் செல்ல இயலாமல் ஆஸ்பத்திரி, வீடு என்று கிடக்கும் எனக்கு கணினியில் எழுதி முகம் தெரியாத நண்பர்களின் பாராட்டுக்களைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி  அடைந்திருந்தேன்.

வேலைப்பளுவின் காரணமாக என்னால் யாருடனும் நேரம் செலவிட முடியாத காரணத்தால் சாட்டிங் முதல் யாருடனும் நட்புக் கொள்ள முயலாமல் இருக்கிறேன்.

அதே சமயம் என் மிகச்சிறிய வட்ட நண்பர்களிடம் சென்னை சென்று அங்கு நடக்கும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவேண்டும் என்ற என் ஆசையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அப்படியிருக்கும் சமயத்தில் சமீபத்தில் கெள்விப்படும் நிகழ்ச்சிகள்  மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளன!

முதலில் பெண்பதிவருடன் ஆபாச உரையாடல் என்ற பிரச்சினை!

அனானி பின்னூட்டங்கள் என்ற பிரச்சினை.

தற்போது நேரடியாகத் தாக்கிக் கொள்ளும் அளவுக்குச் சென்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

ஒருவரின் பதிவுகளில் உள்ள கருத்துக்கு மாற்றுக் கருத்துப் போட்டால் அவர் மனம் வருந்துமே என்று நான் கருத்துப்போடாமல் சென்று விடுவேன். அது பொறுப்பான செயல் இல்லை என்று எனக்குத்தெரியும்.

மேலும் நான் தனிநபர்களைத் தாக்கி எழுதுவதும் இல்லை!

எதிர்க் கருத்துக்களைப் போடுவதால் ஒருவர் இன்னொருவருவரைத் தாக்கும் அளவு செல்வது ஆச்சரியமாக உள்ளது. இது பதிவுலகத்தின் பலவீனத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக உள்ளது. பதிவுலகில் உள்ள நாம் மீடியாக்களால் கூர்ந்து நோக்கப்படும் வேளையில் இத்தகைய செய்கைகள் பின்னடைவை ஏற்படுத்துவதாகவே அமையும்.

ஏன் நமக்குப் பிரச்சினை என்று பதிவர்கள் பலர்  ஒதுங்கி கூகிள் குழுமங்கள் போன்ற குழுகளுக்குச் செல்வதும் அதிகரிக்கும்.

இப்படிப்பட்ட நிகழ்வுகளால் சென்னை வந்தாலும் பதிவர்களைச் சந்திப்பதில் எனக்கு ஏற்பட்டுள்ள தயக்கம் பல பதிவர்களுக்கும் ஏற்படும் என்று நினைக்கிறேன்.

இந்த நிகழ்வையும் நான் கண்டுகொள்ளாமல் செல்லலாம். ஆயினும் என் எண்ணத்தைச் சொல்லவேண்டும் என்ற உந்துதலாலேயே இங்கு சொல்கிறேன். இதை பொறுப்புடன் கவனிக்க வேண்டிய கட்டாயம் சென்னைப் பதிவர்களுக்கு உள்ளது.

”குட் டச் பேட் டச்”- ”ஏதாவது செய்யவேண்டும் பாஸ்” என்பது போல் இதற்கும் ஏதாவது அவசியம் செய்யவேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து சென்னை மூத்த பதிவர்கள்  விலகமாட்டார்கள் என்று நம்புகிறேன்! 

Friday 9 October 2009

பாலியல் தொல்லையும் பாலியல் கல்வியும்!

 

இன்று நாம் அனைவரும் பொதுவாக விவாதிக்கும் விசயங்களில் பாலியல் கல்வி முக்கியமானது. பாலியல் கல்வியை எங்கு ஆரம்பிப்பது, பள்ளியிலேயே பாலியல் கல்வியை ஆரம்பிக்கலாமா அல்லது கல்லூரியில் அதனை சொல்லித்தருவது சரியா என்பவை இன்னும் ஆய்வுக்குறியவையாக உள்ளன.

தற்போது பள்ளிகளைக் கவனிக்கும்போது பள்ளிக் குழந்தைகள் ‘காதல்’ என்ற விசயத்தைப் பற்றி சிறு வயதிலேயே அறிந்துவிடுகின்றனர். அந்தச்சொல்லின் முழு அர்த்தம் தெரியாவிட்டாலும் ஒரு குழப்பமும், ஆர்வமுமாக அதனை விவரிக்கின்றனர். இதனை அனுபவபூர்வமாக நாம் பல குழந்தைகளுடன் பேசும்போது அறியமுடிகிறது.

குழந்தைகளுக்கு நம்முடைய சிறப்பு கவனம் தேவை. குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியவர்களிடம்தான் குழந்தைகள் பொதுவாக அதிக நேரத்தைச் செலவிடுகின்றன. ஆகவே இவர்களுக்கு குழந்தைகளைக் காக்கவும், அறிவூட்டவுமான தார்மீகப்பொறுப்பு உள்ளது.

தாங்கள் வாழும் சூழ்நிலைகளால், பெரியவர்களை விட அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பலவீனமான நிலையில் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆகவே, மற்றெந்தப் பிரிவினரையும் விட, அவர்கள் சார்ந்த சமூகம் மற்றும் அரசாங்கங்களின் நடவடிக்கைகளாலும் நடவடிக்கையின்மையினாலும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை மிகவும் கவலை தருவதாக உள்ளது. குழந்தைகள் பாலியல்பற்றி அறியாதவர்கள், பெரியவர்களின் பாலியல் செய்கைகள்பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. குழந்தைகளுக்கு எப்படி பாலியலைப் பற்றித்தெரிய முடியும்?

பாலியல் காட்சிகளை குழந்தைகளுக்குக் காண்பித்தல், பெற்றோர் இரவில் குழந்தைகளுடன் ஒரே அறையில் படுத்துறங்கும் போது அவகள் தூங்குவதாக எண்ணி உறவில் ஈடுபடுதல், குழந்தைகளை காம இச்சையுடன் தொடுதல், காம இச்சையுடன் அந்தரங்கப் பகுதிகளைக் குழந்தைகளுக்குக் காட்டுதல் ஆகியவற்றின் மூலமாகவே குழந்தைகள் பாலியல் மனக் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

தாங்கள் பார்த்த காட்சிகளின் தாக்கத்தால் அவர்கள் சாதாரண குழந்தைகளைப் போல் உற்சாகத்துடன் படிக்கவோ, விளையாடவோ இயலாமல் குழப்பத்துடன் காணப்படுகிறார்கள். இப்படி இருக்கும் குழந்தைகளை தாய்மார்கள் பொறுப்புடன் கவனித்து மனநல சிகிச்சை அளிக்கவேண்டியது மிக அவசியம்.

இத்தகைய கொடுமைகள் பரவலாக ஏழை,பணக்காரர் வித்தியாசமின்றி நடந்தாலும் பண வசதி,படிப்பறிவு குறைவான சூழ்நிலைகளில் பிள்ளைகளுக்கு தன் கருத்தைக் கூறும் உரிமை கிடைப்பதில்லை. அவர்களின் கருத்துக்களுக்கு பெற்றோர் மதிப்புக் கொடுப்பதும் இல்லை. அதனால் நெருங்கிய உறவினர்கள் குழந்தைகளிடம் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதுபோல் நடித்து அவர்களின் அன்பைப் பெற்று அந்த உரிமையில் தவறான் செய்கைகளைச் செய்கிறார்கள். குழந்தைகளைப் பெற்றோரும் உறவினர்களின் பொறுப்பில் விடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சமீபத்தில் இந்தியாவுக்குப் படிக்க வந்த இளம்பெண் தன் அப்பாவின் நண்பர் வீட்டில் தங்கியிருந்து பாலியல் தொல்லை கொலையில் முடிந்ததை  பத்திரிக்கைகளில் படித்து இருப்பீர்கள். நெருங்கிய உறவினர்களே பாலியல் தொல்லையை மிக அதிக அளவில் கொடுக்கிறார்கள் என்பது புள்ளிவிபரங்கள் மூலமாக நமக்குக் கிடைக்கும் தகவல். மேலும் பெண் குழந்தைகளை மிகுந்த அக்கரையுடன் கவனிக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ஆண் குழந்தைகளிடம் நாம் அலட்சியப்போக்கைக் கடைப் பிடிக்கக் கூடாது.

பெண் குழந்தைகள் எந்த அளவுக்கு உடல் மற்றும் உணர்வு ரீதியாகக் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ, அதே அளவில் ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன. பெண் குழந்தை, சமுதாயத்தில் குறைவான அந்தஸ்தைப் பெற்றிருப்பதால் அவர்கள்தாம் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

ஆனால் ஆண் குழந்தைகள் பள்ளிகளில், வீடுகளில், உடல் ரீதியான தண்டனை அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள். பல சிறுவர்கள் இளம்  வயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது, விற்கப்படுவது போன்றவை நடக்கின்றன. இவர்களில் பலர் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் பல செக்ஸ் அத்துமீறல்களுக்கு உள்ளாகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் குடும்ப உறவினர்கள் தவிர குழந்தைகள் அதிக நேரம் செலவிடும் இடம் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்திற்கு பெற்றோர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் குழந்தைகளைப் பெற்றோர்கள் அனுப்பி வைக்கிறார்கள். குழந்தைகளை ஆசிரியர்கள் மிகுந்த பொறுப்புடன் கவனித்துக்கொள்வார்கள் என்று அவர்கள் நம்புவதால் அவர்கள் பள்ளியில் என்ன செய்கிறார்கள் என்று நாம் கவனிப்பதில்லை. நன்றாகப் படிக்கிறார்களா இல்லையா என்பதுமட்டுமே நமது சிந்தனையாகவுள்ளது. ஆயினும் பள்ளியிலும் சில புல்லுறுவி ஆசிரியர்கள் இருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது( சக ஆசிரிய பதிவர்கள் பொறுத்தருள்க! என் ஆசிரியர்களை நான் இன்றளவும் கடவுளாகவே மதிக்கிறேன்.)  பத்திரிக்கைகளில் வந்த ஒரு செய்தியைக் கீழே தருகிறேன்.

கோயம்புத்தூர்: மதுக்கரை என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயதுப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார், தலைமை ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

இது ஒன்றுமட்டும் அல்ல! தினமும் நாம் பத்திரிக்கைகளில் படிக்கும் செய்திகள் மிகவும் கவலை தருவதாக உள்ளன. பெண் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை போல் ஆண் குழந்தைகளையும் ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தும் ஆசிரியர்கள் பற்றியும் கல்வித்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

டில்லியை சேர்ந்த ஒரு சர்வதேச சமூக அமைப்பான, "ராகி' மேற்கொண்ட ஆய்வில், சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா மற் றும் கோவாவில் ஆங்கிலம் பேசும் 600 குழந்தைகளிடம் சர்வே எடுத்ததில், அவர்களில் 67 சதவீதம் பேர், ஏதாவது ஒரு கட்டத்தில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரிந்தது.

மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள், உடல் ஊனமுற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள், அவர்கள் இருக்கும் பலவீனமான நிலையால், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள்.  குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது என்பது, பாலினம், சமூகநிலை, இனம் ஆகிய அனைத்து நிலைகளிலும் இருந்துவருகிறது. நகரங்கள், கிராமப் பகுதிகள் என்ற எல்லா இடங்களிலும் நடக்கிறது.

ஜி.எஸ். மீனா, ஆர்.சி. ஜிலோஹா, மற்றும் எம்.எம்.சிங் ஆகியோர் இந்தியக் குழந்தைகள் மருத்துவ மையம் மற்றும் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் சமூக மருந்தியல் மற்றும் உளவியல் துறை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 2003 - 2004ஆம் ஆண்டில், டெல்லியிலுள்ள கண்காணிப்பு இல்லம் ஒன்றில் தங்கியிருந்த ஆண்களிடம், ஆய்வு நடத்தினர்.  அதன் ஆராய்ச்சியின் முடிவாக,"கண்காணிப்பு இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட தெருவோரச் சிறுவர்களின் பாலியல் வன்கொடுமை அனுபவங்கள்" என்ற ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்கள். இக்கட்டுரையில் பாலியல் வன்கொடுமை எந்த அளவுக்கு இருக்கிறது, எந்த முறையில் உள்ளது என்பதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

டெல்லியில் உள்ள இந்தக் கண்காணிப்பு  இல்லத்தில் உள்ள பெரும்பாலான சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். இந்த இல்லத்தில் இருந்தவர்களில் 38.1% பேர் பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் பாலியல் ரீதியான கொடுமை நடந்ததற்கான உடல் ரீதியிலான அடையாளங்கள் 61.1% பேரிடம் இருந்தன. 40.2% பேரிடம் அவர்கள் நடத்தையில் அதற்கான அடையாளங்கள் தெரிந்தன. 44.4% பேர் வன்புணர்ச்சிக்கு ஆளானவர்கள். 25% பேருக்குப் பாலுறவு நோய்களுக்கான அறிகுறிகள் இருந்தன.

குழந்தைகளிடம் தாய்மார்கள் அன்புடன் பழகி அன்றாடம் அவர்களின் பள்ளியில், அவர்கள் செல்லும் இடங்களில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வது மிக அவசியம். குழந்தைகளின் நலனைப் பேணவேண்டியது நம் கடமை என்பதால் அவர்களுக்கு பாலுணர்வு ,இணப்பெருக்க ஆரோக்கியம் பற்றிச் சொல்லித் தருவது மிக அவசியம், அது குழந்தைகளின் உரிமையும்கூட.

ஆனால் நிறையப் பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டு அறிவதில்லை. மாறாக குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் தாங்களே முடிவு செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை.அவர்களுடன் கலந்து பேச நாம் தயாராக இல்லாததால், இது பற்றிய பேச்சையே நாம் தவிர்த்துவிடுகிறோம். வாழ்க்கைக்குத் தேவையான கல்வியான இதைப் பற்றிக் குழந்தைகளுக்கு போதிக்க நாம் தயாராக வேண்டியது அவசியம்.

வெளிநாடுகளில் குழந்தைகளின் மீதான் பாலியல் பலாத்காரங்களை ஆராய்ந்து தகுந்த முறையில் வரையறை செய்து  அதனைச் சட்டமாக்கி கடும் தண்டனை தருகின்றனர். இந்தியாவில் அப்படி ஒரு விரிவான சட்டம் இல்லை. இப்போதுள்ள இந்தியச் சட்டத்தில், "குழந்தை செக்ஸ் அத்துமீறல் கொடுமைகள்' சேர்க்கப்படவில்லை. மேலும் ஆண்குழந்தைகளுக்கான வரம்புமீறல்களில் நம் சட்டங்களில் தெளிவு இல்லை.

நம் குழந்தைகள் பாலியல் துன்பங்களுக்கு ஆளாகாமலும்  மனோரீதியான அழுத்தம், உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகாமல் காக்கவேண்டியதும் நம் அனைவரின் கடமை.

”குட் டச்! பேட் டச்” பற்றிப் பேசவிருக்கும் நாம் நமது தார்மீகக் கடமையிலிருந்து தவறுவது குழந்தைகளுக்கு நாம் இழைக்கும் அநீதியாகும். உலக சுகாதார நிறுவனம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய  சில வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளது. அவை:

* எந்த உறுப்பும் மர்மமானதோ, ரகசியமானதோ இல்லை. ஆனால், அந்தந்த காலகட்டத்துக்கு சொல்லி உஷார் படுத்துவது நல்லது.

* யாராவது, குழந்தைக்கு முத்தம் கொடுத்தால் கூட குழந்தையை விட்டே தடுப்பது நல்லது.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளின் மார்பகம் உட்பட மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளை, யாரும் தொட விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

* குழந்தை வீட்டை விட்டு  அடிக்கடி வெளியில் போகிறாள் என்றால் அதனைக் கண்காணிக்க வேண்டும்.

* நம் தொலைக் காட்ச்சியில் திரையிடப்படும் சில நிகழ்ச்சிகளைப் பார்த்தும்கூட பிள்ளைகள் தவறான நடத்தைக்கு உட்படலாம். அதனால், அது சரி, இது தவறு என்று ஆரம்பத்தில் இருந்தே எச்சரிப்பதுடன், கண்காணிப்பது முக்கியம்.

* வெளியாட்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அவசியம் எச்சரிக்க வேண்டும்.

*  குழந்தைகளிடம் எந்த கட்டத்திலும், தவறு என்று தெரிந்தால், உடனே போன் செய்யவோ, வெளியேறவோ அட்வைஸ் செய்து வைக்க வேண்டும்.

நம் நாட்டிலா இப்படி? நம் ஊரில் இப்படியெல்லாம் நடக்காது என்று இந்த விசயத்தை ஒதுக்கிவிடாமல் நம் குழந்தைகளைக் காத்து வளமான எதிகால சமுதாயத்தை உருவாக்குவோம்.

Thursday 8 October 2009

மணற்கேணி போட்டிக்கு அனுப்பிய கட்டுரை-ஏமக் குறை நோய்(A I D S)

என்னுரை: இந்தக் கட்டுரை எழுத சந்தர்ப்பமளித்த போட்டியாளர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழில் தொழில்நுட்பச் சொற்கள், அறிவியல் சொற்கள் தற்போது  குறைந்த அளவிலேயே உள்ளன. தமிழில் மேற்படிப்புக்கள் கொண்டுவர தமிழ் ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்.

அவற்றுக்கு அடிப்படையாக முதலில்  அறிவியல் துறையில் உள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் சிறிதளவேணும் அறிவியல் கட்டுரைகள் எழுதவும் அதில் வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான பொருள் செறிந்த சொற்களை உருவாக்குவதும் அவசியமாகும்.

”நானும் முழுவதும் தமிழில் எழுதப்பட்ட தொழில்நுட்பக்கட்டுரை” என்ற தலைப்பில்  மருத்துவத்தில் எழுத ஆரம்பிக்கும்போது சாதாரண ஆங்கிலச் சொற்களைக் கூட தமிழ்ப்படுத்தாமல் இருப்பதைக் கண்டேன். நமது பாடப் புத்தகங்களும் அப்படியே உள்ளன.

இதனைப் பற்றிய விழிப்புணர்வை என்னுள் ஏற்படுத்தியது உங்கள் தலைப்புதான். நிச்சயமாக நிறைய அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் எழுத முடிவு செய்துள்ளேன்.  

தமிழில் கலைச் சொற்கள் படைக்க வேண்டியதும், தமிழை ஒரு அறிவியல் மொழியாக ஆக்குவதும் நம்முடைய கடமையாகும்.   

வான்பொறியியல், கடலியல்,கணினியியல்,வேளாண் தொழில்நுட்பவியல், ஆகிய இன்னபிற பல துறைகளில் அறிவியல் சொற்கள் அவசியம் தேவை. அவை அதுபோன்ற துறைகளில் ஈடுபடுவோருக்கும் படிப்போருக்கும் மிகுந்த பயனளிக்கும். ஆனால் வேறுதுறை சார்ந்தவர்கள் அதைப் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

ஆனால் மருத்துவத்துறை என்பது எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு துறை. ஏனெனில்  நோய்களைப்பற்றி மருத்துவர் மட்டும் அறிந்திருந்தால் போதாது. மக்கள் அனைவரும் இதைப்பற்றி அறிதல் அவசியம். ஏனெனில் இது அவர்களின் உடல், உயிர் சம்பந்தமானது.

ஆகையினாலேயே மருத்துவம் பற்றி எழுதுவது என்று முடிவு செய்தேன். அதிலும் எயிட்ஸ் எனப்படும் ஏமக்குறை நோய் பற்றி  அனைவரும் அறியவேண்டியது அவசியம். எயிட்ஸ் எவ்வாறு பரவுகிறது, உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது, எப்படி நாம் தற்காத்துக் கொள்வது ஆகியவை பற்றி தெளிவாக அறிய வேண்டும் என்பதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.

ஏமக்குறைநோய் (எயிட்ஸ்),  பற்றி  ஆராயும்போது அறிவியல் சொற்கள் அதிகம் காணப்படவில்லை. ஆகவே மிகுந்த ஆய்வுக்குப் பின்னே இந்த அறிவியல் சொற்களைக் கையாண்டு உள்ளேன். இவை படிப்பவருக்கு மிக இலகுவாக ஏமக்குறை நோய் பற்றி விளக்கும் என நம்புகிறேன்.

  ஏமக்குறை நோய்- A I D S

எயிட்ஸ் என்று அழைக்கப்படும் ஏமக்குறை நோய் மனிதனைத் தாக்கும் கொடிய நோய்களில் முக்கியமானதாகும். இது ஒரு தொற்றுநோய். முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் இந்நொய் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு இதன் சிக்கலான பரம்பரை அலகுத்தொகுப்பே(genome) காரணம். இந்த சிக்கலான அலகுத்தொகுப்பைத் தற்போது கண்டுபிடிக்கும் முறையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். 

இந்த ஏமக் குறை நோயானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் வருகிறது. முதலில் HIV என்றால் என்ன? AIDS என்றால் என்ன? என்று பார்ப்போம்.

H I V: எச்.ஐ.வி- என்பது மனிதனின் உடலில் ஏமக்குறை நோயை உருவாக்கும் நுண்கிருமியாகும். இது கிருமியின் பெயர்தானே தவிர வியாதி அல்ல. இதனை ஏமக்குறைத் தீ நுண்மம் (H I V - Human Immuno Deficiency Virus) என்று அழைக்கலாம்.

A I D S-எயிட்ஸ்- என்பது இந்த கிருமியால் உண்டாகும் நோயினைக் குறிப்பிடுகிறது.(நோய் அறிகுறிகளின் தொகுப்பு எனலாம்). இதனை நாம் ஏமக்குறை நோய் என்று அழைக்கலாம்.

 வரலாறு:

அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 1959ம் ஆண்டு முதன்முதலில் ஆப்பிரிக்காவில் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

1978 ல் அமெரிக்காவிலும் சுவீடனிலும் ஓரினச்செர்க்கை ஆண்களிடமும் தான்சானியா,ஹைட்டியில் ஆண்பெண் இருபாலரிடமும் காணப்பட்டது.

1980 ல் அமெரிக்காவில் 31 நபர்கள் ஏமக்குறைபாட்டு நோயால் இறந்தனர்.

ஏமக்குறைத்தீநுண்மம்

ஏமக்குறைத்தீநுண்மத்தின் பாகங்கள்:

Glycoprotein-மாவுப்புரதம்

Capsid- புரத உறை

Matrix- அடித்தளம்

Lipid Membrane- கொழுப்பு உறை

Reverse Transcriptase- எதிர்படியெடுக்கும் நொதி

1983ல் பிரெஞ்சு அறிவியல் அறிஞர்கள் இந்த தீநுண்மத்தைக் கண்டறிந்தனர்.

 ஏமக்குறை என்றால் என்ன?

ஏமக்குறை என்பது உடலின் நோய் எதிர்ப்பு முறையில் அதாவது தொற்றுநோய் தொற்றாமல் உடலுக்குள்ளேயே பாதுகாப்புத்தரும் அமைப்புகளின் தொகுப்பில் ஏற்படும் குறைபாடு ஆகும்.

ஏமக்குறைத் தீ நுண்மம் எவ்வாறு பரவுகிறது?

இது சீதச்சவ்வு வழியாகவும், இரத்தம் மூலமும், விந்துத் திரவம், யோனித்திரவம், தாய்ப்பால் மூலமும் பரவுகிறது.

(சீதச்சவ்வு(mucous membrane)-வாயிலிருந்து    ஆசனவாய் வரை உள்ள சிவந்த பகுதி மற்றும் ஆண் பெண் பிறப்பு உறுப்புகளின் உள்ளே உள்ள சிவந்த  மெல்லிய சவ்வுப்பகுதிகள்).

முக்கியமாக ஏமக்குறைத் தீநுண்மம் உடலுறவின் போது  யோனி, மலக்குடல் பகுதி மூலமாகவும், வாயில் உறவுகொள்ளும் போதும் பரவுகிறது. மேலும் குருதிப் பரிமாற்றம், குருதிதோய்ந்த ஊசிகள், ஊசிக்குழல்கள், தாயிடமிருந்து குழந்தைக்கு கர்ப்பத்தில், குழந்தை பிறக்கும் போது, தாய்ப்பாலூட்டும்போது பரவுகிறது.

உடலுறவின் மூலம்:  ஏமக்குறைத்தீ நுண்மம் உடலுறுவின் மூலம் பரவுவதே அதிகம். பிறப்பு உறுப்பின் சுரப்புக்கள்(sexual secretions), வாய்,குடல் போன்ற பகுதியின் சீதச்சவ்வு (mucous membrane)களின் நேரடித்தொடர்பாலும் இது எளிதில் பரவுகிறது.

ஏற்கெனவே பாலியல் நோய்கள் (sexually transmitted infections) இருந்தால் ஏமநோய்க்கிருமிகள் மிக எளிதாக பிறப்புறுப்பில் உள்ள புண்களின் (genital ulcer) மூலம் பரவிவிடுகின்றன.

தொடர்ந்து ஏமக்குறைநோயுள்ளோருடன் உடலுறவு கொண்டால் இத்தீநுண்மத்தின் எண்ணிக்கை பல்மடங்கு பெருகி( Increased Viral load) நோய் மிகவேகமாகப் பரவும். பலருடன் உடலுறவுகொள்ளும்போதும் இதேநிலைதான் ஏற்படுகிறது.

இரத்தம் மூலம்

1. போதைஊசிப்பழக்கம் உள்ளவர்கள் சுத்திகரிக்காமல் ஒரே ஊசிக்குழலை பலர் பயன்படுத்துவதால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.

2.பரிசோதிக்கப்படாத இரத்தம் செலுத்தப்படுவதன் மூலமும் பரவுகிறது.

பிரசவத்தின்போது:  பிரசவத்தின் கடைசிவாரங்களிலும், பிரசவத்தின்போதும், சிகிச்சை எடுத்துக்கொள்ளாத தாய்க்குப்பிறக்கும் குழந்தைக்கும் 25% நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

தாய் ஏமக்குறை நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொண்டு பிரசவம் அறுவை சிகிச்சை மூலம் நடந்தால் குழந்தைக்குத் தொற்றும் அபாயம் 1% மட்டுமே.  தாய்ப்பாலின் மூலம் தொற்றுதல் 4% ஆக உள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் எந்தெந்த முறையில் நோயாளிகளுக்கு எயிட்ஸ் ஏற்பட்டது என்று ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதன் முடிவுகள் சதவீதத்தில்

செக்ஸ் தொடர்பு              41.77%

இரத்தம் செலுத்தல்        17.37%

போதைஊசி மூலம்        14.85% மற்றவை                          26.1%

எச்சில்,கண்ணீர்,சிறுநீர் ஆகியவற்றில் ஏமக்குறைநோய்க் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதன் மூலம் பரவியதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

நோய் அறிகுறிகள்(symptoms): ஏமக்குறைநோய் தாக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக எந்தவிதமான நோய்க்குறிகளும் தோன்றுவதில்லை. இதனை நோய்க்குறிகள் தோனறாத நிலை (Asymptamatic infection)என்று அழைக்கிறோம். இந்த நிலையில் ஒருவருக்கு காய்ச்சல்,உடல் வலி, தொண்டை வலி ஆகியவை இருக்கலாம்.

இந்நோயை மூன்று  நிலைகளாகப் பார்க்கலாம்.

முதல் நிலை: . இது ஆறு வாரத்திலிருந்து மூன்று முதல் ஆறுமாதம் வரை இருக்கும். இது இக்கிருமி உடலில் நுழைந்ததிலிருந்து உடலில் நோய் நுண்ம எதிரி(Antibody)கள் தோன்றும் வரையிலான காலம் ஆகும். இந்தக் காலத்தில் ஒருவருக்கு நோய் இருப்பதை அறிய முடியாது. ஏறக்குறைய 96% நோயாளிகளுக்கு மூன்றாவது மாதத்திலிருந்து -P C R/ WestonBlot- போன்ற சோதனைகளின்மூலம் கண்டுபிடிக்கலாம். மிகச்சரியாகக் கண்டுபிடிக்க ஆறுமாதம் தேவை.

PCR-Polymerase chain reaction-Test-பலபடியாக்கல் தொடர் விளைவு சோதனை, அல்லது கூட்டணுத்தொகுப்பு தொடர் விளைவு சோதனை என்று இதை அழைக்கலாம். இதன் மூலம் பல நோய்களை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்து விடலாம்.

Weston blot test- நோய் எதிர்ப்பு புரத ஒற்று சோதனை- இதன் மூலம் ஒருவருக்கு ஏமக்குறை நோய் இருப்பதை உறுதி செய்யலாம்.

இரண்டாம் நிலை: இந்த நிலையில் உடலில் தொற்று நோய் அறிகுறிகள்  இருப்பது தெரியாது. ஏனென்றால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக நோயை எதிர்த்துப் போராடும். இந்த நிலையில் உதடுகள், தோல்,மற்றும், நுரையீரல் சம்பந்தமான நோய்க்குறிகள் தெரியலாம்.

மூன்றாம் நிலை:இந்த நிலையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கிருமியின் ஆதிக்கம் அதிகமாகும். ஒரு மாதத்துக்கு மேல் காரண்மில்லாமல் பேதி ஆவது, நோய்த்தொற்றுகள், காசநோயின் அறிகுறிகள் ஏற்படுதல் மற்றும் காசநோய் ஏற்படுதல். டாக்சோப்லாஸ்மோசிஸ் மூளையில், மூச்சுக்குழாய்,நுரையீரல்,உணவுக்குழாயில் பூஞ்சை நோய்(CANDIDA), மென்தசை கூர்அணுப்புற்று(Kaposis Sarcoma), ஆகியவை தோன்றும். இவை அனைத்தும் ஏமக் குறை நோயின் வெளிப்பாடுகள்.

ஏமக்குறை நோயின் தீவிரம் :  ஏமக்குறைநோயின் தீவிரத்தை இரத்தத்தில் உள்ள தைமஸ் வெள்ளையணுக்களின்(CD-4 ) எண்ணிக்கையை கணக்கிட்டு அறியலாம்.

C D 4 cells- T Lymphocytes-(தைமஸ் வெள்ளைஅணுக்கள்-4)தைமஸ் எனப்படும் கீழ்க்கழுத்துச்சுரப்பியில் உருவாகும் நிணநீர்க்கலன்கள்.

C D 4-கீழ்க்கழுத்துச்சுரப்பி நிணநீர்க்கலன்களின் மேல்புறம் காணப்படும் மாவுப்புரதம்.

இவற்றின் அளவை வைத்தே ஏமக்குறை நோயின் வீரியம் அறியப்படுகிறது. இவற்றின் அளவு 200 மைக்ரோ லிட்டருக்குக்குறைவாக இருந்தால் நோயாளியின் உடல் எதிர்ப்புசக்தி முற்றிலும் அழிந்துவிடுகிறது.

உரிய கூட்டுமருந்து சிகிச்சை இந்த நேரத்தில் பெறப்படாவிட்டால் நோயாளியின் உடலில் கிருமித்தொற்றிலிருந்து முழுமையான ஏமக்குறை நோய் பீடிக்க ஒன்பது முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகின்றது. மேலும் மருந்து உட்கொள்ளாதவரின் ஆயுள் ஏறக்குறைய ஒன்பதிலிருந்து பத்து மாதங்கள்தான்.

நோயின் தீவிரம்:

நோயாளியின் நோய் எதிர்ப்புத்திறன், வயது, காசநோய் போன்ற நோய்களும் தாக்குதல் ஆகியவற்றை வைத்து நோயாளிக்கு நோயாளி மாறுபடுகிறது.

நோய் உடலின் பலபாகங்களைத் தாக்குகிறது. அவற்றைப்பார்ப்போம்:

1.நுரையீரல்: நுரையீரல் அழற்சி(Pneumonia), நுரையீரல் வீக்கம், மூச்சுக்குழல் அழற்சி(Bronchitis) ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களில் உண்டாகிறது. ஆனால் இது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் நோயாளிகளில் காணப்படுவதில்லை.

காச நோய்: ஏமக்குறை நோயாளிகளில் பலர் காசநோய்க்கு ஆளாகின்றனர். ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மூச்சுக்காற்றின் வழியாக காசநோய்க்கிருமி எளிதில் நுரையீரலுக்குச்சென்று காசநோயை ஏற்படுத்துகிறது. நல்ல உடல் ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டவர்களுக்கு காசநோய் வருவதில்லை. ஏமக்குறை நோய்க்கு மட்டுமல்லாமல் இது பொதுவாக எல்லோருக்கும் பொருந்தும்.

ஆனால் காச நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்திவிடலாம். ஆயினும் பல முறை மருந்துகளை உபயோகித்து இடை இடையில் விட்டுவிடுபவர்களுக்கு காசநோயை குணப்படுத்துவது மிகச் சிரமமாகவே உள்ளது.

2.வயிறு குடல் தொற்றுக்கள்: தொடர்ந்து பேதியாவது பல காரணங்களால் ஏற்படுகிறது. இது உணவுப்பாதையில், குடலில்  சாதாரண நுண்கிருமித் தொற்றாலும், ஒட்டுண்ணிகளின்(Parasites) தொற்றாலும், வேறு தீநுண்மங்களாலும்(other Viruses) ஏற்படுகிறது. இது நோயாளியின் எதிர்ப்பு சக்திக் குறைவாலேயே ஏற்படுகிறது.

நோயின் ஆரம்பகட்டத்தில் வரும் பேதி பெரும்பாலும் எந்த தொற்றுநோயின் அறிகுறியாக இல்லாமல் ஏமக்குறையின் காரணத்தினால் ஏற்படுகிறது. அதன் பின் நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவுடன் வேறு நுண்கிருமிகள் தலையெடுத்து வளர்ச்சி அடைவதால் அவை குடலில் வளர்ந்து பேதியை உண்டாக்குகின்றன. நோய் முற்றிய நிலையில் குடலின் மேற்பகுதியில் உள்ள  குடலுறுஞ்சிகள் அல்லது விரலிகள்(Villus- plural:Villi) அழிந்துபோவதாலும் ஏற்படுகிறது. இதுவே நோயாளியின் குடலில் உணவுச் சத்துக்கள் உறிஞ்ச இயலாமல் மெலிந்துகொண்டே போவதற்குக் காரணமாகவும் அமைகிறது.

உணவுக்குழாயில் (Oesophagus)ஏற்படும் அழற்சி(Inflammation) பொதுவாக பூஞ்சை(Fungus)த் தொற்றுகளால் உண்டாகிறது.

3.நரம்புமண்டல பாதிப்புகளும் மன நிலையும்:

ஏமக்குறைநோயால் நரம்பு மண்டலத்தில் பல விதமான விளைவுகள் ஏற்படுகின்றன.

1.உறைமூளையழல்(Encephalitis)- மூளையின் உறையில் உண்டாகும் அழற்சி

2.இந்த உறைமூளையழலால் காய்ச்சல்,தலைவலி, சோர்வு, குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். நோய் தீவிரமாக இருந்தால் வலிப்பு, குழப்பம், ஆகியவை தோன்றி சிகிச்சையளிக்காவிடில் மரணமும் ஏற்படும்.

நோயின் தீவிரமான நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக பாதிக்கப்படும்போது- பரவும் மூளை வெண்பொருள் அழற்சி(Progressive leukoencephalopathy) உண்டாகி நரம்புஉறை நீக்கம் (Demyelination)ஏற்படுவதால் நரம்புகளில் தகவல் பரிமாற்றம் தடைபடுகிறது. இந்த நோய்க்குறி தோன்றிய சில மாதங்களே நோயாளி உயிருடன் இருப்பர்.

ஏமக்குறை மறதி கூட்டுக்குறிகள்(Aids Dementia complex)- மூளையில் (neurotoxins) நரம்பு நச்சுகள் ஏமக்குறை தீநுண்மத்தால் உண்டாகிறது. இதனால் பகுத்துணரும் அறிவு(Cognitive),போக்கு அல்லது நடத்தை(Behavior),உடலியக்கம்(motor) ஆகியவற்றில் நிறைய  மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனையே ஏமக்குறை மறதிக் கூட்டுக்குறிகள் என்கிறோம்.

இந்த ஏமக்குறை மறதிக்கூட்டுக்குறிகள் மேலைநாடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் இது மிகக் குறைவாகவே உள்ளது.

ஏமக்குறை நோயில்(mania) பித்து அல்லது வெறி,(bipolar disorder) இருமுனை மனப்பான்மை (மனவெழுச்சி, மனச்சோர்வு) ஆகியவையும் ஏற்படுகின்றன. தற்போது கூட்டு மருந்து சிகிச்சை முறையினால்(multi-drug therapy) கொடுக்கப்பட்டு வருவதால் இந்த மனக்குழப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றன்.

4.கட்டிகளும் புற்றுநோயும்: ஏமக்குறை நோயில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் வேறு கிருமிகள், தீநுண்மங்கள் மற்றும் ஒட்டுண்ணிகளால் வேறு நோய்களும் வருகின்றன. அவற்றில் கட்டிகளும்,புற்றுநோயும் அடங்கும். இத்தகைய தீநுண்மங்களில் மனித அக்கித்தீநுண்மமும் ஒன்று.

மனிதஅக்கி தீநுண்மம்-4(Human herpesvirus 4 (HHV-4):

இந்த மனித அக்கித்தீநுண்மத்தின் பெயர் herpein என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருளான ஊர்ந்து பரவுதல் என்பது இந்தத் தீநுண்மம் மெதுவாக பரவும் தன்மையைக் குறிக்கிறது.

மனித அக்கித்தீநுண்மம் 1964ல் அந்தோணி எப்ஸ்டீன் மற்றும் பார்(Anthony Epstein,Yvonne Barr) என்ற இரு அறிவிலாரால் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் பெயராலேயே எப்ஸ்டீன்-பார் தீநுண்மம் என்று அழைக்கப்படுகிறது.

மென்தசை கூர்அணுப்புற்று(kaposis sarcoma) :1981ல் இளம் ஓரினச் சேர்க்கையாளர்களில் ஊதா நிற கழலை(nodule)கள் தோலிலும், வாயிலும், இரைப்பைகுடல்,நுரையீரல் ஆகிய பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மென்தசை கூரணுப்புற்று என்று பெயர்.

நிணநீர் திசுக்கட்டி, வடிநீரகப்புத்து( Burkitt's Lymphoma)-1956ல்(Denis Parsons Burkitt) என்ற அறுவை சிகிச்சை நிபுணரால் நிணநீர் மண்டலத்தைத் தாக்கும் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தவகைப்புற்றானது நரம்புமண்டலத்தையும் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

மனித சடைப்புத்துத் தீநுண்மம்(Human papilloma Virus ) ஏமக்குறை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கர்ப்பவாய்ப்புற்றை(Cervical Cancer) உண்டாக்குகிறது.

மேலும் ஏமக்குறைநோய் பீடிக்கப்பட்டவர்களுக்கு

1.இரைப்பை குடல்நிணநீர் சுரப்பிப் புற்றுநோய்

2.மலவாய்ப் புற்று

ஆகியவை ஏற்படுகின்றன.

ஏமக்குறை நோய் உடலில் ஏற்படுத்தாத நோய்க்குறிகளே இல்லை எனலாம்.

சிகிச்சையின் குறிக்கோள்கள்:

இந்நோயைக்குணப்படுத்தும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆயினும் நோயின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உள்ளன. சிகிச்சையானது

1.நோயின் தீவிரத்திலிருந்து மீட்டு சாதாரண சகஜ வாழ்க்கைக்கு நோயாளியைக் கொண்டு வருவது.

2.நோயின் தீவிரமான விளைவுகளை நீக்குவது.

3.வேறு காசநோய் போன்ற எதிப்புசக்திக்குறைவால் வரும் நோய்களைக் குணப்படுத்துவது.

4.இரத்தத்தில் ஏமக்குறைத்தீநுண்மத்தின் எண்ணிக்கையைக் குறைத்தல்.

5.நோயாளியின் வாழ்நாளைக் கூட்டுதல்.

இத்தகைய கொடிய நோயைக் கண்டறிவது மிக அவசியம். ஆனால் மக்கள்  பரிசோதனைக்கு தாங்களாகவே வருவதில்லை.

இதற்காக இலவச பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலும் ஏழை, பணவசதி குறைந்தோரே பரிசோதனைக்கு வருகின்றனர்.

பெரும்பாலும் பண வசதி படைத்தோர், படித்து பதவிகளில் இருப்போர் அரசு நிறுவனங்களின் கணக்கெடுப்புக்கு, சோதனைகளுக்கு வருவதில்லை.  ஆகையினால் உண்மையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  பற்றிய சரியான கணக்கெடுப்பு இல்லை.

தனியார் மருத்துவமனைகளில் 70% மக்கள் சிகிச்சைக்குச் செல்கிறார்கள். அவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு எதுவும் இல்லை.

ஏமக்குறை நோய் பற்றிய விழிப்புணர்வு குறிப்பாக கிராமப்புறங்களிலும், படிக்காதவர்களிடமும்   குறைவாக உள்ளது. ஏமக்குறை நோய் பற்றிய விழிப்புணச்சியை இவர்களிடையே ஏற்படுத்துதல்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பு தற்போது குறைந்து வருகிறது. இதனை சீர் செய்தல்.

மாணவர்களுக்கும் இளம்வயதினருக்கும்  இதுபற்றிய விபரங்களையும் விளக்கங்களையும் பள்ளி, கல்லூரிகளில் போதித்தல், ஆகியவை மிக முக்கியமாகச் செய்யவேண்டியவை.

ஏமக்குறை நோய்க்கான மருந்துகள் விலை அதிகமுள்ளதால் அரசாங்கமே தற்போது இலவசமாக வழங்குகிறது. ஆயினும் நோயாளிகள் இந்நோய் உள்ளதைச் சொல்லாமல் பயந்து மறைப்பதால் உரிய சிகிச்சைகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

சமுதாயமும் இந்நோய் கண்டவர்களை வெறுத்து ஒதுக்குவதும், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததாலும் இந்த நோயாளிகள்  அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனால் வாழ்க்கையில் வெறுப்புற்று விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள்.

ஏமக்குறை நோய் உள்ளவர்களிடம் அன்பும் ஆதரவும் காட்டி அவர்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து அவர்கள் வாழும்வரை மரியாதையுடன் சாதாரண நோயாளிபோல் பாவிப்பது நமது கடமை. இந்த மனநிலையை நாம் ஏற்படுத்திக்கொண்டு நம்மைச்சார்ந்த எல்லோரிடமும் ஏற்படுத்துவதும் மிக அவசியமாக உள்ளது.

ஏமக்குறைநோயும் எதிர்காலமும:

இந்தியாவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரில் பத்தில் ஒருவர் குடும்பத் தலைவியாக இருக்கின்றனர்.

2007ம் ஆண்டுக் கணிப்பின் படி 33.2 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 330 000 சிறுவர்கள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இதனால் இறந்துள்ளனர். இதில் மூன்றில் ஒரு பகுதி ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியின் கீழ் வாழும் மக்கள் ஆவர்.

நேகோ என்ற இந்திய அரசு நிதியில் இயங்கும்  இந்திய தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு 29 லட்சம் பேரைப் பரிசோதித்தது. இதில் 49527 பேருக்கு ஏமக்குறைநோய் இருப்பது கண்டரியப்பட்டுள்ளது. இதில் ஏமக்குறைநோயின் தீவிர நிலையில் உள்ளோர் 3161 பேர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நேகோ& மாநில அரசுகளின் செயல்பாடுகள்:

1.மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் அனைத்திலும் தைமஸ் வெள்ளைஅணுக்கள்-4( CD 4) பரிசோதனை கருவி நிறுவப்பட்டுள்ளது. இலவசப் பரிசோதனை செய்யப்படுகிறது.

2.அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் ஏமக்குறைநோய் கண்டறியும் பரிசோதனை இலவசமாகச் செய்யப்படுகிறது.

3.அனைத்து தாலுகா மருத்துவமனையிலும் கர்பிணிப் பெண்கள் (கணவன் மனைவி இருவருக்கும்) ஏமக்குறைநோய் பற்றிய ஆலோசனையும், சோதனையும் இலவசமாகச் செய்யப் படுகிறது.

4.ஏமக்குறை எதிர்ப்பு மருந்துகள் அனைத்து தாலுகா தலைமை மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கொடுக்கப் படுகிறது.

5.ஏமக்குறைநோய் ஆலோசகர்கள் (HIV- Councellors), மக்கள் தொடர்பு பணியாளர்கள் (Out reach workers) ஆகியோரை அரசுமருத்துமனைகளில் பணியமர்த்தியுள்ளது.

6.சுய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி அளித்து அவர்களை ஏமக்குறைநோய்க் கண்டுபிடிப்பு, பராமரிப்பு ஆகியவற்றில் ஈடுபடுத்தியுள்ளது.

7.சமுதாய பராமரிப்பு மையம்(Community Care Centres  ) என்ற  ஏமக்குறை நோயாளிகளுக்கு பராமரிப்பு மையங்களை பரிட்ச்சார்த்த முறையில் தமிழகத்தில் சில இடங்களில் அமைத்துள்ளது. 

இது தவிர விளம்பரங்கள், கிராமப்புறங்களில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்றவற்றின் மூலமும் விழிப்புணர்வுத் திட்டங்களை அரசு மேற்கொண்டுள்ளது.

ஏமக்குறைநோயும் நமது கடமையும்:

1.ஏமக்குறை உள்ளதா என்று ஒவ்வொருவரும் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

2.திருமணத்துக்கு முன் இருபாலரும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுதல். இது சாத்தியமில்லை என்று வாதிட்டாலும் மருத்துவமனைக்கு வரும் புதிதாகத்திருமணம் ஆன நோயாளிகளில் பலர் புதிதாகத் திருமணம் ஆனவர்களாகவும், கருத்தரித்தவர்களாகவும்  இருப்பதைக் காண்கிறோம். இது தன்னைத் தாக்கிய நோயை ஒன்றுமறியாத தன்னை நம்பித் திருமணம் செய்பவருக்கும் பரப்பி ஏமாற்றுவதாகும்.

3.ஏமக்குறை உள்ளவர்களை விலக்கி வைக்காமல் அவர்கள் சிகிச்சை பெற உதவுதல்.

4.கல்லூரி இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஏமக்குறை நோய் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல்.

ஏமக்குறையின் தாக்கங்கள் நம் நாட்டில் இன்னும் பத்தாண்டுகளில் மிக அதிகமாக இருக்கும். இந்தியாவின் எதிர்காலம்  ஆரோக்கியமான இளைஞர்களை நம்பி இருக்கிறது.

ஏமக்குறை நோய் ஒழிப்பில் நம்மாலானதைச் செய்து    நோயற்ற வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! 

------------------------------------------------------------------------------

இந்தக் கட்டுரையில் ஏமக்குறை நோய் பற்றிய விபரங்களை முற்றிலும் தமிழ் அறிவியல் சொற்களை வைத்து எழுதியுள்ளேன். அவற்றுக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொற்களையும் கொடுத்துள்ளேன்.

அதோடு இது மிகப்பெரிய சமுதாயப்பிரச்சினையாக இருப்பதால் அதன் பின் ஏமக்குறைநோய்க்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும், ந்ம்முடைய கடமையையும்  இந்தக்கட்டுரையில் விவரித்துள்ளேன்.

தமிழ்த்துளி தேவா.

-----------------------------------------------------------------------------

Wednesday 7 October 2009

மதுரை பதிவர் சந்திப்பு-காணொளி!!

நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் அதனை எடுத்து செய்தல் சிறப்பு. அந்த வழியில் மதுரை பதிவர் சந்திப்பும் ஒரு சிறந்த குறிக்கோளுடன் ஆரம்பித்தது.பல வேலைகளின் காரணமாக என்னால் இந்தக் காணொளியை விரைவில் வெளியிட முடியவில்லை.
.


ஆம்! ”குட் டச்! பேட்டச்” என்று சென்னையில் நடத்தப்பட்ட அந்த சிறப்பு மிகுந்த நிகழ்வை மதுரையிலும் நடத்தலாமே என்ற எண்ணத்தில் இந்தப் பதிவர் கூட்டம் கூட்டப்பட்டது!மதுரை என்றாலேயே கூட்டத்திற்கான இடங்களை ஏற்பாடு செய்வது நம் அன்புப் பதிவர்” தருமி அய்யா” தான். இந்தமுறை அமெரிக்கன் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தார். அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் முழுக் கல்லூரியுமே நம் கைக்கு வந்தார்ப் போல் இருந்தது.

கூட்டத்தில்

1.மருத்துவர் ஷாலினியையே வரவழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அவர் சென்னையில் ஏற்கெனவே கலந்து கொண்டு சிறப்புச் செய்தவர் என்பதுவே காரணம்.

2.மூன்று வாரங்களுக்கு முன்பே அவருடைய அனுமதிபெறவேண்டும் என்பதால் இன்னும் தேதி முடிவு செய்யமுடியவில்லை.

3.சுய உதவிக் குழுக்கள், ட்ரஸ்டுகள், தொண்டுநிறுவனங்கள் ஆகியவற்றை இதில் இதில் ஈடுபடுத்துவதா? என்று ஆரம்பித்த விவாதம், மதுரையில் உள்ள திருநங்கைகள் நடத்தும் ஒரு அமைப்பை பங்குபெறச் செய்யலாமா? என்பதுவரை சென்று ஒருவாறாக முதல் கூட்டம் பதிவர்கள் மட்டுமே நடத்துவது என்ற தீர்மானத்துடன் முடிந்தது.

4.இதன் பயனாளிகள் மாணவர்கள், குழந்தைகள்தான். அவர்களுக்கு நாம் நேரடியாகச் சொல்ல முடியாது. அவர்களின் பெற்றோர்களையும் நாம் சந்திக்கமுடியாது, ஆகையால் குழந்தைகளின் கட்டாய நேரடித்தொடர்பாளர்களான ஆசிரியர்களை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

5.இதில் ஆர்வமுள்ள ஏனைய பிரிவினரையும் குறிப்பிட்ட அளவில் பங்குபெறச் செய்வது என்ற கருத்தும் முன்வைக்கப் பட்டது.

6.இது சம்பந்தமான தகவல்கள் அனைத்தையும் ஒரு தனித் தளமாக ஏற்படுத்தி அனைவரும் படித்துப் பயன்பெற ஏற்பாடு செய்வது என்ற கருத்தும் சொல்லப்பட்டது. யார் இதைச் செய்வது? என்பதில் இன்னும் இறுதி முடிவு செய்யவில்லை. மதுரை பதிவர்கள் என்றில்லாமல் யார் முன் வந்தாலும் நல்லதுதான்.

7. பதிவர் திரு.தருமி அவர்களால் இடம் மட்டும் அமெரிக்கன் கல்லூரியில் உள்ள கான்பரன்ஸ் ஹால் என்று உறுதி செய்யப்பட்டது.
8.ஏற்கெனவே மதுரைப் பதிவர் குழு சென்னையில் உள்ள பதிவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் இது சம்பந்தமான கருத்து உதவிகள், யோசனைகள் எல்லோரிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன.
9.மதுரை மட்டுமல்லாது பிற அகுதிகளிலிருந்தும் நம் பதிவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் முன் கூட்டியே கீழே கொடுக்கப்பட்டுள்ள  கைபேசிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
1.தருமி-9952116112
2..சீனா-9840624293
3.தேவன்மாயம்- 9751299554--
4.கார்த்திகைபாண்டியன் -9842171138
5.ஸ்ரீதர்-9360688993
5.ஜெரி ஈசானந்தா-9791390002

சந்திப்பின் விபரம்:

மதுரையில் ...
பதிவர்கள் சந்திப்பு
நாள்: 20.09.09 - ஞாயிற்றுக் கிழமை
காலம்: மாலை 4 மணி
இடம்: அமெரிக்கன் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில்

மரணத்தை வெல்லலாம்!!

அன்பு நண்பர்களே!

இதற்கு முந்தைய பதிவில் மாண்டவர் மீண்டால் என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். ஆச்சரியம் பாருங்கள் இன்றைய செய்தியில் “நானோ’ தொழில்நுட்பம் மூலம்  இன்னும் 20 ஆண்டுகளிலெயே மரணத்தை வெல்ல முடியும் என்று   செய்தி வந்துள்ளது!

இதைச் சொல்லியிருப்பவர் ஒரு பிரிட்டீஷ் விஞ்ஞானி. ‘ரே குர்ஸ்வீல்’,Raymond Kurzweil-என்ற அவர் இதுபற்றி நிறைய ஆய்வுகள் செய்துள்ளார்.optical character recognition (OCR), text-to-speech synthesis, speech recognition technology, போன்ற துறைகளில் விற்பன்னர்.இவருக்கு பதினாறு பல்கலைக்கழகங்கள் டாக்டரேட் பட்டம் வழங்கியுள்ளன!!(நம்மூர் பலகலைக் கழகங்கள் இல்லை!!)

.

நானோ தொழில்நுட்பத்தின்மூலம் ’நானோ படகு-nano boat’ என்ற நுண்ணிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நானோ போட் மூலம் உடலில் உள்ள கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியும். மேலும் இந்தக்கருவியை உடலில் செலுத்தி உடலில் இரத்தம் வராமல் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

இவருடைய தினசரி உணவு என்ன தெரியுமா? 150வித விட்டமின்கள்,10 கப் பச்சைத் தேனீர், 10 கிளாஸ் அல்கலின் தண்ணீர்!!( தண்ணீர் என்றவுடன் மக்கள் 10 கிளாஸ் ’தீர்த்தம்’ என்று போயிடாதீங்க!! இஃகி!! இஃகி!!)

நானோ தொழில்நுட்பம் மூலம் செயற்கைக் கண், செயற்கை மனித உறுப்புக்கள் செய்யமுடியும் என்பது உண்மை. ஆனால் மனித மரணத்தை நிறுத்தமுடியுமா?

எலியில் நீரிழிவு நோயைக் குணப்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார் ரே!! அதேபோல் பார்க்கின்சன் என்னும் நடுக்குவாதத்துக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ரே புதிய மூளைக்குள் வைத்து பர்கின்சனைக் குணமாக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறார். சாகாமல் இருக்கிறோமோ இல்லையோ இந்த பார்க்கின்சன் வியாதி வந்த நோயாளிகள் தினமும் மாத்திரை போடவில்லையென்றால் அவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது!!

நம்பிக்கைதானே வாழ்க்கை! 30 வயதில் இந்த விஞ்ஞானிக்கே நீரிழிவு நோய் வந்துவிட்டது. இப்பொழுது இவர் வயது 57.

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் இந்நாள் வரை நீரிழிவை வென்று மிகப்பெரிய விஞ்ஞானியாகவும் இருக்கிறார். அதற்காகவே நான் இவரைப் பெருமையுடன் வாழ்த்துகிறேன்!! போற்றுவோர் போற்றட்டும்! புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்!!!

Monday 5 October 2009

அந்தி நேரம் சந்திசாய...!

 

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிவிளையாடும் தஞ்சை மாநகரின் விடியாத ஒரு காலைப் பொழுது. மசமசவென்றிருந்த அந்த நேரம் திருவள்ளுவர் பேருந்து ஒன்று தன் பயணிகளை இறக்கி விட்டது.

அண்ணா பொறியியல் கல்லூரியில் இரண்டுமாத இயந்திரவியல் படிப்பில் ஃப்ளெமிஷ்,இங்கிலீஷ் பாண்டுகளைப் பாதிபடித்தும் படிக்காமலும்,

அண்ணா கல்லூரியின் ராகிங்கில் புகழ்பெற்ற “டு....கைக் கையில் பிடித்து முட்டிக்கால் போட்டு சீனியர்களுக்கு வணக்கம் சொல்லும்

” அந்தி நேரம் சந்திசாய,

அந்த மாமுனிவர்கள் தங்கள்

அடி .......... ....பிடுங்க..

.... ........... ............. ................”

என்ற பாடலை மட்டும் நன்கு மனப்பாடம் செய்திருந்த அவனும் அப்பொழுதுதான் புதிதாக வந்து இறங்கி அடுத்து என்ன செய்வது என்று அந்தப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தான். 

இராசராசன் முதல் புகழ்பெற்ற சோழ மன்னர்கள் உலாவந்த சோழப்பேரரசின் புகழ்பெற்ற தலைநகரான அந்தத் தஞ்சைதான் அவனுடைய எதிர்காலத்தை நிர்ண்யிக்கப் போகிறது என்ற சந்தோசத்துடன் பக்கத்திலிருந்த குழாயில் முகம் கழுவி விட்டு டீ ஒன்றை வாங்கிக் குடித்துவிட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு பஸ் எங்கே வரும் என்று விசாரித்து எதிரில் இருந்த நகரப் பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.

( சாண்டில்யன் போல் வர்ணணையுடன் பெரிய தொடர்கதைகள் எழுத என் சக கதை எழுதும் பதிவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!)

அன்றுமுதல் தஞ்சையில் எங்கு உணவருந்தினாலும் பாண்டிய நாட்டில் இல்லாத ஒரு ஊறுகாய் அவனுக்குப் பரிமாறப்பட்டது. அதுதான் மாவடு இஞ்சி ஊறுகாய். மிக வித்தியாசமான சுவையுள்ள அந்த ஊறுகாய் செய்முறையை சாஷிகாவின் பதிவில் கண்டேன்.

என் நினைவுகள் பின்னோக்கிச்சென்றதன் விளைவே இதற்கு முந்தைய பத்தியில் இருக்கும் வர்ணனை!

மேலே குறிப்பிட்ட ராகிங் பாடல் பலருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் என் ராகிங் நினைவுகளை பதிவுகளாகப் போடும் உத்தேசமும் உண்டு. பாடல் தெரியாவிட்டால் பாடல் ஈமெயிலில் அனுப்பப்படும்!!!

இந்த நினைவுகளைத் தூண்டிவிட்ட சாஷிகாவுக்கு தண்டணை உடனடியாக எனக்கு ஒருபாட்டில் மாஇஞ்சி ஊறுகாய் பார்சல் அனுப்புவதே!

ஆயினும் இன்னும் நான் இடுகையின் முக்கிய பகுதிக்கு வரவில்லை. ஆம்! சாஷிகா எனக்கும் மீண்டும் ஒரு விருது அளித்துள்ளார்.

 [BrilliantWebBlogAward.jpg]

கண்டும் காணாததுபோல் நான் இருந்தாலும் அவர் என்னை விடுவதாயில்லை! பின்னூட்டங்களில் வந்து மிரட்டி விருதை ஏற்றுக் கொள்ளவைத்துவிட்டார். மிக்க நன்றி சாஷிகா!! ( இந்த நினைவுகளுக்கும் பதிவுக்கும் காரணமாக இருந்ததற்கும்!!).

இதோ அவர் இடுகையில் உள்ள மாஇஞ்சி ஊறுகாய்!

 

மாங்காய் இஞ்சி ஊறுகாய்

Labels: ஊறுகாய் - Sunday, 4 October 2009

தே.பொருட்கள்:
மாங்காய் இஞ்சி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
செய்முறை :
* மாங்காய் இஞ்சியை கழுவி தோல் சீவி நறுக்கவும்.
*அதனுடன் உப்பு+கீறிய பச்சை மிளகாய்+எலுமிச்சை சாறு சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து மிளகாய்தூள் சேர்த்து உடனே ஊறுகாயில் கொட்டவும்.
*இதை உடனே செய்து சாப்பிடலாம்.
பி.கு:
மாங்காய் இஞ்சி பார்ப்பதற்க்கு இஞ்சி போலவே இருக்கும்,சுரண்டிப் பார்த்தால் மாங்காய் வாசனை வரும்.

இந்த விருதை என் இனிய பதிவர்களுக்கு அளிக்கிறேன்!!

அன்பு உள்ளங்களே! வருக! விருதினைப் பெருக!


வால்பையன்


 

சூரியன் சென்ஷி

பாலா

கோவி.கண்ணன்

S.A. நவாஸுதீன்

ஆ.ஞானசேகரன்

ஹேமா

சொல்லரசன்

க.பாலாஜி

நாணல்

அபுஅஃப்ஸர்

கபிலன்

வினோத்கெளதம்

ஆரூரன் விசுவநாதன்

மாண்டவர் மீண்டால்!!!

அன்பு நண்பர்களே!

”தற்காலிக இறப்பு நிலை”  அல்லது மூச்சை அடக்கி தற்காலிகமாக உடலை இறப்பு நிலைக்குக் கொண்டு செல்லுதல் என்பது நம் நாட்டில் நீண்ட காலமாக சித்தர்களும், யோகிகளும் கடைப் பிடித்துவரும் ஒரு யோக முறை. இந்தத் தற்காலிகமாக மூச்சை நிறுத்துதல், உடல் இயக்கத்தை மிகவும் குறைவான நிலைக்குக் கொண்டு செல்லுதல் பல நூற்றாண்டுகளாக அறியப்பட்டிருந்தாலும்  நவீன அறிவியலால் இன்னும் விளக்கப்படாத ஒரு விசயமாகவே இருக்கிறது.

இந்தக் கலையானது உலகம் முழுதும் யோகிகளால் செய்யப்படும் ஒரு செயல் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த நிலையில் நாம் பார்க்கும்போது ஒருவருடைய இதயத்துடிப்பு, சுவாசித்தல் ஆகியவை தற்காலிகமாக சில நிமிடங்களிலிருந்து சிலமணிநேரங்கள்வரை நிறுத்திவைக்கப்படுகிறது.

1987ல் Colonel Townshend கர்னல் டவுன்ஷெண்ட் என்பவர் புகழ்பெற்ற பிரிட்டிஷ் மருத்துவர்களின் முன்னிலயில் அரைமணி நேரம் மூச்சையும்,இதயத்துடிப்பையும் நிறுத்தி அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

மேல் சொன்ன கதை ஒன்றும் பிரமாதமில்லை. 1838ல் இந்திய யோகி ஒருவர் கல்கத்தாவிலுள்ள கிராமங்களில் நீண்ட சவ நிலைக்குச்சென்று பின் உயிர் திரும்பும் அதிசயத்தைச் செய்துகாண்பித்துப் பிரபலமடைந்திருந்தார். இதனை அப்போதிருந்த ஐரோப்பிய அதிகாரி காப்டன் வாட் முன்னிலையில் செய்துகாட்டச் சொன்னார்கள்.

மகாராஜா ரஞ்சித்சிங், காப்டன்.வாட் முன்னிலையில் அந்த யோகியின் உடலில் உள்ள துவாரங்கள் அனைத்தும் காற்றுப் புகாவண்ணம் மெழுகால் அடைக்கப்பட்டன! முழு நிர்வாணமாக ஒரு கோணிப்பையில் அவரை அடைத்து ராஜமுத்திரையிடப்பட்டு மரப்பெட்டியில் அந்தக்கோணிப்பையை வைத்துப் பூட்டி சீல் வைத்தனர். இந்தப் பெட்டியை காவல் அறையில் வைத்து 24 மணிநேரமும் காவல்வீரர்கள் காவல் காத்தனர். இதற்கு நடுவில் அடிக்கடி பெட்டியைத்திறந்து உடல் உள்ளே இருக்கிறதா? என்று பார்வையிட்டார் மகாராஜா.

நம்புங்கள்! பத்து மாதங்கள் கழித்து அத்துறவியைப் பெட்டியிலிருந்து வெளியில் எடுத்தனர். சிறிது வெண்ணீர் அவர் உடலில் ஊற்றப்பட்டது. துறவி கண் திறந்தார். எல்லோருடனும் சகஜமாகப்பேச ஆரம்பித்தார்.

மூவாச்சமாதி என்று இதனை நமது சமய இலக்கியங்கள் கூறுகின்றன.

 தயவுக்குறள் மூலமும் உரையும் என்ற பதிப்பில் மூச்சடக்கி பன்னெடுங்காலம் உயிருடன் கடவுளை தியானித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

தயவுக் குறள் 101-110 மூலமும் உரையும்

http://www.vallalarspace.com/Saravanaananda/Articles/1304

மூச்சடக்கி மெய்ம்மறந்து மூவாச் சமாதிருந்தும்

ஏச்சடக்கார்க் கீசனரு ளில்.

மூவா = அழியாத, மூச்சடக்கி பன்னெடுங்காலம் அழியாது உட்புதைந்து கிடத்தல் மூவாச் சமாதியாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது செயற்கையாக
சமாதி நிலையை ஏற்படுத்தமுடியுமா என்று ஆராய்கிறார்கள். துருவத்தில் வாழும்
வெண்கரடி பனிக்காலத்தைத் தூங்கியே கழிக்கும். அப்போது அது உண்ணாது; நீரருந்தாது; அதன் இதயத்துடிப்பு குறைந்துவிடும். இதை Hibernation என்று சொல்வார்கள். இந்த நிலையில் இருக்கும் வித்தையை துருவக்கரடி மட்டுமல்லாது நிறைய உயிரினங்கள்  கற்று வைத்துள்ளன!!

நாமும் மருந்துகளைச் செலுத்தி, அல்லது BioFeedback முறைகள் மூலம், அல்லது யோகசித்திப் பயிற்சிகளின்மூலம் இந்த நிலைகளைத்
தோற்றுவிக்கமுடியுமா என்று முயற்சிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.

இந்த ஆராய்ச்சியில் வெற்றிபெற்றால்

1.மனிதனின் ஆயுளை நீட்டிக்கலாம்.

2.மனிதனை இந்நிலைக்குக் கொண்டு சென்று விண்கலங்களில் ஏற்றி நீண்டதூர காலக்ஸிகளில் உள்ள கிரகங்களில் இறக்கி, உயிர்ப்பித்து மீண்டும் சமாதி நிலையில் ஒரு 10 வருடம் விண்பயணம் செய்து பூமியை அடையலாம்!! 

இந்த வித்தையை மனிதன் கற்றுவிட்டால் மனிதன் காலத்தை வென்றுவிடலாம்!! நடக்குமா?

Friday 2 October 2009

ஹாங்க் ஓவர்-குறைப்பது எப்படி?

முதலில் ஹாங்க் ஓவரில் என்னென்ன பிரச்சினைகள் வரும்? என்று பார்ப்போம். பெரும்பாலும் தலைவலிதான் அதிகம் இருக்கும்.

தலைவலிக்கு அடுத்து சோர்வு, குமட்டல், உடல் காய்ச்சல் அடிப்பதுபோல் இருப்பது, எச்சில் அதிகம் சுரத்தல், கவனமின்மை எல்லாம் வரும். இது நிறையப்பேருக்குத்தெரியும் என்று நினைக்கிறேன்!! இதற்கு மருந்து உண்டா? உண்டு! மருந்துன்னு கிடையாது.. ஆனா சில வழிமுறைகள் இருக்கு. என்ன என்ன வழிகள் என்று பார்ப்போமே!!

1.பழ ஜூஸ், தண்ணீர் ரொம்பத் தேவை! ஏன் என்றால் உங்கள் உடம்பில் தண்ணீர் குறைந்து விடும்!!(அந்தத் தண்ணி அடிச்சா...  சாதாத தண்ணி குறையும்!!எப்படி.....). நிறைய ஜூஸும், தண்ணியும் குடிங்க!!

2.காபி சாப்பிடவேண்டாம். இதுவும் உடலில் ஹாங்க் ஓவரைக் கூட்டும்.

3.ஜூஸில் ஆரஞ்சு ஜூஸ் நிறைய குடிங்க.

4. ஊறுகாய், டின் மீன் எடுத்து அடிங்க! ஹாங்க் ஓவர் குறையும்.

5.ஒரு ”பிளடிமேரி” காக்டெயில் அடிங்க!! பிளடி மேரின்னா

லெமன் ஜூஸ் -1 பங்கு

தக்காளி சாறு- 6 பங்கு,

வோட்கா-3 பங்கு,கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள்

மிக்ஸ் பண்ணினால் ”பிளடி மேரி”.

” பிளடி மேரி செய்ய வோட்கா இல்லையா? ஓகே !

விர்ஜின் மேரி”- விர்ஜின் மேரிக்கு ஆல்கஹால் தேவையில்லைங்க! என்ன வேணுங்கிறீங்களா?

1.3 அவுன்ஸ் தக்காளி சாறு

2.1/2 அவுன்ஸ் லெமன் ஜூஸ்

3.பெப்பர் தூள்.

4.அப்புறம் ஐஸ், .

மிக்ஸ் பண்ணி சாப்பிடுங்க!!

6.முதலில் ஒரு குளியல் போடுங்க!! முன்னாடியே சொல்ல மறந்துவிட்டேன். சரியா?

7.கொஞ்சம் சாதாரண உடல் பயிற்சி செய்யலாம். நல்லா பச்சைத் தண்ணி குடித்துவிட்டு ஒரு ஓட்டம் போனீங்கன்னா நல்லா இருக்கும்!!

8.தலைவலி மாத்திரை மட்டும் போடாதீங்க. ஈரல் கெட்டுப் போகும்.மேலும் வயிற்றில் இரத்தம் கசிவுகூட ஏற்படலாம்!!

இது போதும் என்று நினைக்கிறேன்!! வார ஓய்வை நல்லாக் கொண்டாடுங்க!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory