சின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று..
ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்போது உலகின் சில பரிசோதனைக் கூடங்களில் மட்டுமே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
சின்னம்மையைப் பற்றிய முக்கிய விபரங்கள் மட்டும் பார்ப்போம்.
1.சிக்கன் பாக்ஸ் எப்படிப்பரவுகிறது?
- இருமும்போதும் தும்மும் போதும் காற்றில் எச்சில்,சளி நுண் துளிகள் தூவப்படுகின்றன. இவற்றை சுவாசிப்போருக்கு இந்தத் தொற்று பரவுகிறது.( தும்மும் போதும், இருமும்போதும் கைக்குட்டை வைத்துக்கொள்ள வேண்டும்!)
- நோயாளியின் உடலில் தோன்றும் கொப்புளங்கள் உடைந்து அதில் உள்ள நிண நீர் பரவுவதன் மூலம்.
2.இது எந்த வயதினரை அதிகம் தாக்குகிறது?
- 10 வயதுக்குட்பட்டோரையே அதிகம் தாக்குகிறது.- ஆயினும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோயை எதிர்க்கும் திறன் அதிகம்.
- இளைஞர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் இந்நோய் தாக்கினால் விளைவுகள் சிறிது கடுமையாகவே இருக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கும்,லுகிமியா போன்ற நோய் உள்ளோரும் சிகிச்சை பலனளிக்காமல் இறப்பதும் உண்டு.
- இதன் நோய் காப்புக்காலம் (INCUBATION PERIOD) 14-21 நாட்களாகும்.
3.இந்நோயால் உடலில் எற்படும் விளைவுகள் என்ன?
- தோலில் சிவந்த தடிப்புகள் (RASHES)
- உடலில் வயிறு, மார்பு போன்ற மையப்பகுதிகளில் இத்தடிப்புகள் நோயின் இரண்டாம் நாளில் தோன்றும்.
- அதன் பிறகு முகத்திலும் பின்பு கை,கைல் போன்ற பகுதிகளிலும் தடிப்புகள் ஏற்படும்.
- தோல் கொப்புளங்கள் தோன்றி, பழுத்து, உடலில் அரிப்பும் ஏற்படும். கொப்புளங்களைச் சொறிவதால் தோலில் தழும்புகள் ஏற்படலாம்.
- இதன் முக்கிய அம்சம் பழுக்காத கொப்புளங்களிலிருந்து, பழுத்த கொப்புளம் வரை உடலில் ஒரே நேரத்தில் காணலாம்.
4.இதன் பிற விளைவுகள் என்ன?
- நோய் பொதுவாக கொடிய விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. எனினும் சில நேரங்களில் கீழ்க்காணும் விளைவுகள் ஏற்படலாம்.
- நிமோனியா
- இதயச் சுவரில் தொற்று (MYOCARDITIS)
- மேற்கண்ட இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளோருக்கு ஏற்படும்.
- மூளைத் தொற்று(மூளையழற்சி)
- சிறு நீரக பாதிப்பு
- மூட்டுகளில் சலம் பிடித்தல், எலும்பில் சலம்
நிறைய பாதிப்புகள் இருந்தாலும் மேற்சொன்னவையே முக்கியமானவை.
5.சிகிச்சை:
- பொதுவாக எந்த சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.
- நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளோருக்கு மருந்துகள் தேவைப்படலாம்.
- பாக்டீரியா தொற்று தோலில் ஏற்பட்டால் ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும்.
சின்னம்மை பற்றிய மிக அவசிய தகவல்களை மட்டுமே தொகுத்திருக்கிறேன். இன்னும் அதிகம் தகவலுக்கும் சந்தேகங்களயும் கேளுங்கள் பின்னூட்டங்களில்.
தமிழ்த்துளி தேவா.