சிங்கப்பூர் என்ற பெயரைக் கேட்டாலே தமிழ் மணம் வீசுவதும் ஏதோ நமக்கு பக்கத்தில் உள்ள ஊர் மாதிரித் தோன்றுவது தவிர்க்க முடியாதது.
ஆனால் சிங்கம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்!! அப்படியானால் சிங்கத்துக்குத் தமிழில் என்ன பெயர்? அரிமா என்பதுதான் அது. ஏறு என்று ஆண் சிங்கத்தைக் குறிப்பது வழக்கம். ’ஆளி’ என்றும் சிங்கத்தைப் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடுகின்றனர்.
சிங்கம் என்ற பெயர் வட நாட்டிலிருந்து தமிழகம் வந்ததுபோல் தமிழ் நாட்டிலிருந்து சிங்கைக்கும் சென்று விட்டது.
சிங்கம் என்ற பெயர் சிங்கைக்குப் போனது அல்லாது தமிழ்ச் சிங்கங்கள் (அரிமா)க்கள் பலவும் சிங்கை சென்று விட்டன.( இந்தத் தமிழ்ச்சிங்கங்களை தமிழ்நாட்டில் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் இவர்களைப் பார்க்கும் போது வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. இந்தச் சிங்கங்கள் வேறு யாருமல்ல, ’மணற்கேணி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி சிங்கையில் வாழும் தமிழ்ப் பதிவர்களை ஒன்றிணைக்கும் ‘ தமிழ்ப் பதிவர்கள்தாம் அவர்கள்.
கடல் கடந்து செல்வது தமிழனுக்குப் புதிதல்ல. கடல் கடந்த தமிழர்களின் திறமையும் யாரும் அறியாததல்ல. அறிய வேண்டிய ஒரே ஒரு விசயம்- தமிழின் பால் அவர்களுக்குள்ள அன்புதான்.
இன்னும் 50 வருடங்களில் தமிழ் அருகி விடும் என்று ஏதோவொரு புள்ளியியல் மடையன் சொன்னான். அவன் சிங்கை சென்றால் தமிழ், தமிழ் நாட்டில் மட்டுமன்று உலகம் முழுதும் அழியா மொழியாய்த் திகழும் என்பதை உணருவான். இது உணர்ச்சி மிகுதியால் வந்த வார்த்தைகள் அல்ல! உண்மை உணர்வின் வெளிப்பாடு!!
சிங்கைப் பதிவர்கள் மணற்கேணி வெற்றியாளர்களை வரவழைத்துப் பாராட்டிப் பெருமைப் படுத்தியதை மறக்க முடியாது. இது வாழ்நாளில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச கவுரவம், அன்பு என்றே நான் கருதுகிறேன்.
(தொடர்ந்து எழுதுவேன்….)