Tuesday 29 December 2009

பெங்களூர்-என் உள்மன யாத்திரை!

சற்று அமர்ந்து யோசித்தால், நம் வாழ்வின் ஆரம்பக்கட்டங்களில் நமக்கு மிக முக்கியமான உதவிகளை நண்பர்கள், பக்கத்துவீடுகளில் வசித்த அன்புக்குரியோர்கள்  பலரும் செய்து இருப்பார்கள். அவை மிகச்சிறிய உதவிகளாக இருந்தாலும் ”காலத்தினாற் செய்த உதவிபோல்” அவை மிகவும் உயர்ந்தவை.

அந்த உயர்ந்த உதவிகளைச் செய்தவர்களில்  தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாதவர்கள் சிலரும் இருப்பர்.

அப்படி என் வாழ்வில் அதாவது என் இளமைப்பருவத்தில் எங்களுக்கு உதவிய, நான் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தேடும்  சிலரைப்  பற்றியும் அவர்களுடன் நான் வாழ்ந்து களித்த இடங்கள் பற்றியும்  இங்கு எழுதப்போகிறேன்.

என் அப்பாவுக்கு போஸ்டல்& டெலிகிராப் அலுவலகத்தில் வேலை.

வேலை மாறுதலாகி சென்னையிலிருந்து பெங்களூர் சென்றோம். அப்போது நாம் முதல் வகுப்பு படித்ததாக ஞாபகம். நாங்கள் வீடு பார்த்த இடம் ஸ்ரீராமபுரம்! தமிழர்கள் நிறைய இருந்த இடம். பெரும்பாலும் மக்கள் ஊதுபத்தி மாவை குச்சிகளில் அதற்கென இருக்கும்  சின்ன படிக்கும் மர பென்ச் போன்ற பலகையில் உருட்டி ஊதுபத்திகளைத் தயாரிக்கும் வேலையில் அதிகம் ஈடுபடுவர்! பெங்களூரில் வசிப்போருக்கு இது நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். பத்தி சுத்தும் குடும்பத்தில் இருக்கும்  குழந்தைகளில் மூக்கில் ஒழுகும் சளியே கருப்புக்கலரில் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆணும் பெண்ணும் பத்தி சுத்தி முடித்த இடைவேளைகளில் பீடி குடிப்பதையும் அப்போது அதிகம் கண்டிருக்கிறேன்.

அதே போல் கன்னட மக்களும், தமிழர்களும் மிகுந்த அன்புடனேயே அப்போது பழகிக் கொண்டிருந்தனர். என் இளமைப் பருவத்தில் என் மனதில் பதிந்ததாலோ என்னவோ கன்னட மொழி  எனக்கு மிகவும் பிடிக்கும். அதை அவர்கள் பேசுவதும் அழகு. ”என்ன செய்கிறாய்?” என்பதனை “ஏன் கண்ணா ஏன் மாடுதித்தியா?” என்று, ’கண்ணா’ என்று அழகாக அழைப்பார்கள். என் இளம் வயது கன்னட நண்பர்கள் மிகுந்த அன்புடையவர்கள்.

நாகராஜன், பெருமாள், லாரன்ஸ், ரபெக்கா டீச்சர், காந்தி வித்யா சாலை, என்று மனதில் ஆழ் அடுக்குகளில் புதைந்து கிடக்கும் மனிதர்களும் இடங்களும் என் மனதில் ஒரு அற்புதமான உலகத்தை சிருஷ்டித்துள்ளன.

இந்த அற்புத உலகை நானே உருவாக்கிக்கொண்டேனா? ..இல்லை, “எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும்” என்பதுபோல் இவை, மறைந்து போகும்  காலம் என்னும்  மாய பிம்பம் என்னுள் விட்டுச்சென்றவை. இது எனக்கு மட்டுமே தெரிந்த உலகம். நான் என் உள்ளக் கதவைத் திறந்து அடிக்கடி இதற்குள் செல்வேன்.அந்த என் உள்மனயாத்திரைகள் அற்புதமானவை. இதே போல் எல்லோருடைய உள்ளங்களிலும் தனி உலகங்கள் இருக்கும். நான் ரசித்த என் இளமைக் காலத்தை சிறிதளவேனும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  அங்கு நான் கண்ட தமிழர்களின் வாழ்க்கை ஏழ்மையும் சுவாரசியமும் நிறைந்ததாகவே என் இளமனதில் பதிவாகியுள்ளது. அந்த நினைவுகள் அற்புதமானவை. இன்றும் என் வாழ்வின் மிகஇனிய பகுதியாகவே அதை அசைபோடுகிறேன்.

இதைப் படிக்கும் பதிவுலக நண்பர்கள் பலரும் நான் எண்ணுவது போலவே பால்ய நினைவுகளை இனிமையாக நினைக்கிறார்களா என்று தெரியவில்லை!

ஆயினும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் உங்கள் கைகளுடன் என் கைகளை இணைத்துக் கொள்கிறேன். வாருங்கள் அன்பு நண்பர்களே!!!

(நிறைய எழுதினால்தான் பதிவிடலாம் என்று எண்ணியே பலநாட்கள் பதிவிடாமல் விட்டிருக்கிறேன். சின்னப் பதிவுகளையும் பதிவுலகம் வரவேற்கும் என்று நம்புகிறேன்! )

( தொடரும்..)

Wednesday 23 December 2009

வேட்டைக்காரன்!!

அன்பு நண்பர்களே!!

நேற்றிரவு வேட்டைக்காரன் படம் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது! ஒரு படம் கலைப்படமா இல்லை பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்டதா என்பது ஒரு படத்தைப் பார்க்கப் போகும் முன் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த விதத்தில் இது ஒரு பொழுதுபோக்குப் படம்.  அந்த மன நிலையில் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றதில் எனக்குத் தோன்றியவை.

1.விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் என்று காட்ட டைரக்டர் ஏகப்பட்ட பில்டப் கொடுத்து மிகவும் பிரயாசைப்பட்டிருக்கிறார். இது நாம் ரஜினி உட்பட எல்லா ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கும் நமது இயக்குனர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  கொடுத்தாகவேண்டிய கட்டாய ஃபார்முலா!! உங்களிடமோ என்னிடமோ இப்படி ஒரு படத்தை டைரக்ட் செய்யக் கொடுத்தால் இன்றைய ட்ரெண்டில் இதைச் செய்தாக வேண்டும். இல்லையென்றால் படத்திலிருந்து நம்மைத் தூக்கிவிடுவார்கள்!!

2.ஒரு வணிகப் படத்தில் விஜய் இந்தப் படத்தில் செய்திருப்பதைவிடச் சிறப்பாகச் செய்ய வழியில்லை.

3.படத்தில் விஜய் காஸ்ட்யூமில் இன்னும் அக்கரை காட்டி இருக்க வேண்டும். சில இடங்களில் சட்டைக்குப் பொருந்தாத காட்டன் கால்சட்டைகள் பொருந்தவில்லை.

4.கதாநாயகி கட்டாயம் வேறு ஒருவரைப் போட்டிருக்கலாம். முகபாவனைகள் தமிழ் செண்டிமெண்டுக்கு ஒத்துப் போகவில்லை.

5.காதல் சம்பவங்களை இன்னும் ரொமாண்டிக்காகப் பின்னியிருக்கலாம்.

6.படத்தில்  வன்முறை மிக அதிகமாகக் கையாளப் பட்டுள்ளது. இது தற்போது எல்லாத் தமிழ்ப்படங்களிலும் காணப்படும் விரும்பத்தகாத ஒன்று.

7.ஒரு நல்ல  போலீஸ் அதிகாரி போலீஸ் துறையினரின் உதவியுடனேயே தன் குடும்பம், கண் பார்வை இழப்பதும், குடும்பப் பெண்கள் ரவுடி செல்லாவால் கற்பிழப்பதும் நம் சமூக அமைப்பில் சாதாரண மக்கள் மற்றும் நல்ல போலீஸ் அதிகாரிகள்  மதிப்புடன் வாழ முடியாதோ என்ற அவ நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

8.எல்லாத் தமிழ்ப்படங்களிலும் காட்டப்படும்- டிட் ஃபார் டாட் வகை வில்லன் ஹீரோ பழி வாங்கும் ஃபார்முலா நிகழ்ச்சிகள் இந்தப் படத்திலும் கையாளப் பட்டிருப்பதால் அடுத்து என்ன செய்வார்கள் என்பதை படம் பார்க்கும் நாம் கணிக்க முடிகிறது.

9.படம் முடிந்தவுடன் என் மகன் சொன்னது” அப்பா!! படம் சூப்பர்! ஹிட்டுதாம்பா”.

Monday 21 December 2009

தமிழ் வலைப் பதிவுகள்- சில கருத்துக்கள்!

அன்பு நண்பர்களே!!

பதிவுலகத்தில் நாமும் தொடர்ந்து பல்வேறு விசயங்களை எழுதி வருகிறோம். அவற்றை உடனுக்குடன் தொகுத்து வெளியிட திரட்டிகளும் உள்ளன. பல திரட்டிகளில் பதிவுகளைத் திரட்ட தானியங்கி மின்னணுக்கருவிகளும் உள்ளன! நம் கருத்துக்களை எழுதி, அதனை அஞ்சலில் அனுப்பி, ஆசிரியர் குழு அதனைப் பரிசீலித்து அதன்பின் அதனை வெளியிடும் பழைய முறையை(தற்போதும் பத்திரிக்கைத்துறையில் உள்ள)விட மின்னல் வேகத்தில் இணையத்தில் பதிவிட நம் படைப்புகள் அடுத்த சில நொடிகளில் உலகமெங்கும் பார்க்கப்படுவது முன்னெப்போதும் நாம் கனவில்கூட நினைத்துப்பார்த்திருக்க முடியாத ஒன்று.

ஆயினும் நாம் என்ன எழுதுகிறோம் என்று அலசி ஆராயும் நேரமும், அவற்றை உடனடியாக அறிந்து முறைப்படுத்தி, தவறுகளைத் தடுக்கும் வசதிகள் தற்போதைய திரட்டிகளில் இருக்கிறதா? என்பது தெரியவில்லை.

அவ்வாறு செய்வது தேவையா? அது எந்த அளவுக்கு தமிழ் இணைய வளர்ச்சிக்கும்,பதிவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பது விவாதத்துக்குரிய விசயம்.

தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு ஈரோட்டில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பது பாராட்டுதலுக்கும் வரவேற்புக்கும் உரியது. பதிவர் சந்திப்புகளும் பதிவுலக நட்பும் பெருகிவருவது ஆக்க பூர்வமான ஒன்று. பதிவுலக நட்பில் எந்தவிதப் பாகுபாடும் இன்றி அனைவரும் கலந்து கொள்வதும் மிகவும் சிறப்பான விசயம்.

இது போன்ற பதிவர் சந்திப்புகளின் முக்கிய நோக்கங்கள் என்னவாக இருக்கவேண்டும்? அதாவது பதிவர்களின் இந்தச் சந்திப்புகள் ஒரு கலந்து மகிழ்தல் மட்டும்தானா? இல்லை அதையும் மீறிய இலக்குகள் உள்ளனவா? என்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

அவ்வாறு பார்க்கும்போது பதிவர்களின் இடுகைகளை தமிழ்ப்பத்திரிக்கை உலகம் தொடர்ந்து கண்காணித்து வருவது நம் இடுகைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற ஒரு பொறுப்புணர்வை நமக்குத்தருகின்றன! அதே போல் பல பத்திரிக்கைகள் நம் பதிவர்களின் பல படைப்புகளை வெளியிடவும் செய்கின்றன.

பல பதிவர்கள் பத்திரிக்கைக்களுக்குத் தொடர்ந்து எழுதும் நிலைக்குச் சென்றிருப்பதும், நிருபர்களாகப் பணிபுரிவதும் பாராட்டவேண்டிய ஒன்று.

பன்றிக்காய்ச்சல் போன்ற மிகவும் சிரமமான நேரங்களில் தமிழ்ச் செய்தித்தாள்கள் பத்திரிக்கைகளை விஞ்சிய செய்திகளையும் தகவல்களையும் உடனுக்குடன் தமிழ்ப் பதிவர்கள் தந்தனர். அவற்றைப் பத்திரிக்கைகளும் வெளியிட்டன.

பதிவுலகப் படைப்புகள் இணையம் என்ற (மாய?) உலகிலிருந்து அச்சுக்குச் செல்லும் அடுத்த கட்டத்தினை இணைய எழுத்தாளர்கள் அடைந்திருப்பது சமீப காலத்தில் நாம் காணும் ஒரு நிகழ்வு. பொன்.வாசுதேவன் அவர்களின் அகநாழிகை பத்திரிக்கையும், அகநாழிகை பதிப்பகமும் அப்பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்படும் இணைய எழுத்தாளர்களின் படைப்புகளும் நிச்சயம் புதிய இணைய பதிவர்களுக்கு உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

அதே போல் தமிழ்ப்பதிவுலகில் இலக்கியம் சம்பந்தமான இடுகைகளும், செய்தி, அரசியல், சினிமா போன்ற துறைகளிலும் சிறப்பான இடுகைகள் தொடர்ந்து பதிவிடப்படுகின்றன. அரசியல் பற்றி தனி நபர் அல்லாத வலுவான அமைப்புகளும், சில தனி நபர்களும் மிகத்துணிவுடன் பதிவுகள் எழுதுவதைக் காண்கிறோம். நேர்வினையோ, எதிர்வினையோ அரசியல், சினிமா போன்ற பிரிவுகளில் அச்சமின்றி வரும் பதிவுகள் அனைத்தும் எந்தவிதத் தய்க்கமுமின்றி எழுதப்படுகின்றன.

இவ்வாறு இருக்கையில் சட்டம், மருத்துவம் ஆகிய சில துறைகளில் இடுகைகள் மிகவும் குறைவாகவே பதிவிடப்படுகின்றன. கண்ணித் துறை போன்ற தொழில்நுட்பத் துறை சார்பாக வரும் பதிவுகளைக் கணக்கில் கொள்ளும்பொழுது மருத்துவம் சட்டம் சார்ந்த இடுகைகள் மிகக் குறைவு என்பது என் கருத்து.

இத்துறைகளில் இடுகைகள் குறைவு என்பதைவிட இத்துறைகளில் சில சட்டம் சார்ந்த இடுகைகளை பதிவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதும்போது சில பிரச்சினைகளையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அவ்வாறு பதிவர்கள் இன்னலில் சிக்கும்பொழுது அவர்களுக்குக் குரல் கொடுக்கவும், சட்ட ரீதியாக அவர்களுக்கு உதவவும் வலுவான அமைப்பு ஒன்று தேவையா? என்பதே இப்போதைய கேள்வி.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவர்களும், பதிவுகளும் அதிகரித்திருக்கும் நிலையில் இதன் முக்கியத்துவத்துவத்தையும் தேவையையும் நாம் ஆராய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஈரோட்டில் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கையும், பதிவர் சந்திப்புகளின் வெற்றியும் பதிவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், பதிவு சுதந்திரம் அவற்றிற்கான நெறிமுறைகள் ஆகியவற்றை வகுக்கவும் வழிவகுக்க வேண்டும் என்ற கருத்தை நான் இங்கு முன் வைக்கிறேன்.

அதேபோல் கோவையில் உலகச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் இணைய எழுத்தாளர்களுக்கு என்ன பங்கு உள்ளது? அதில் 2010 க்கான உலகத் தமிழ் இணைய மாநாடும் நடைபெறும் நடைபெறும் என்று தெரிகிறது. அதில் இணையப் பதிவர்களின் பங்கு என்ன? என்பதையும் நாம் உறுதிசெய்யவேண்டும். இதற்கான சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதா? அக்குழு முதல்வரைச் சந்தித்து இது பற்றிக்கலந்தாலோசிக்குமா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.இது பற்றி பதிவுலக முன்னோடிகள், ஆர்வலர்கள் ஆலோசிக்க வேண்டும்.

புனைப் பெயரில் பதிவுகளை எழுதினாலும் நாம் யார் எங்கிருந்து எழுதுகிறோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ளது போல் அனைத்துப் பிரிவுகளிலும் தமிழ் சிறக்கவேண்டும் என்பதே என் அவா. தமிழை இணையப் பதிவுகளே தமிழை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் சிறப்பான ஊடகமாகத் தெரிகிறது. அதற்குப் பதிவர்களின் வலிமையும் மிக அவசியம். வாழ்க தமிழ்!

Wednesday 16 December 2009

குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டால் ? அறியவேண்டிய-7 குறிப்புகள்!!

பொதுவாக மருத்துவம் என்பது பற்றி அறிவியல்பூர்வமாக நாம் அறிந்து கொள்வது மிக அவசியம். அதுவும் நம் குழந்தைகளுக்கு என்று வரும்போது இன்னும் எச்சரிக்கை தேவை!!
குழந்தைகள் கீழே விழும்போது முழங்கை எலும்பு முறிவு ஏற்பட்டால் என்ன செய்யக்கூடாது என்ன செய்யலாம்? என்று நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
1.குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டு வீக்கம், வலி காணப்பட்டால் அவசியம் எலும்பு உடைந்துள்ளதா? என்று எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பது சிறந்தது.
2.முழங்கையில் எண்ணை, வலிக்கான களிம்புகள் போட்டு தேய்த்துவிடக் கூடாது.அப்படிச்செய்தால் முழங்கையைச் சுற்றியுள்ள தசை, சவ்வுப்பகுதிகளில் உபரியான எலும்புகள் தோன்றி முழங்கை மடக்க விடாமல் தடுக்கும். இதற்கு மயோசைடிஸ் ஆஸ்ஸிபிகன்ஸ் என்று பெயர்(Myositis ossificans) என்று பெயர்.
3.எலும்பு உடைந்திருந்தால் நாட்டு வைத்தியம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் கை திரும்பி இணையும் அபாயம் அதிகம்.
4.முழங்கைக்கு சற்று மேல் எலும்பு உடைந்து இருந்தாலோ அல்லது முழங்கை எலும்பு விலகி இருந்தாலோ எலும்பு மருத்துவரிடம் காண்பித்தல் அவசியம்.
5.முழங்கைக்கு சற்று மேலே உடைந்திருந்தால் பல நேரங்களில் மருத்துவரிடம் கேட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே மிக நல்லது.
6.முழங்கை எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் உடைந்த வித்தியாசம் தெரியாத அளவுக்கு மிகச் சரியாகப் பொறுத்த முடியும்.
7.ஏற்கெனவே முழங்கை எலும்பு உடைந்து நாட்டுக் கட்டுப் போட்டு எலும்பு தவறாக இணைந்திருந்தாலும் அதையும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

Thursday 10 December 2009

அழித்துவிடு இவர்களை!

கண்ணுக்குத் தெரியாத
எதிகளின் இரவு
அணிவகுப்பு!

நினவா கனவா என்ற
நிலை புரியாத
அவஸ்தை!

எழ முடியாமல்
மூட்டுக்களை முடக்கும்
கயமைத் தனம்!

அனலாய்க் கொதிக்கும்
மூச்சு!
மாறி மாறி
உடலையும்
உள்ளதையும் சிதைக்கும்
வன்மம்!!

எதற்காக இந்த கொடூரம்?
எலும்பையும் சதையையும்
முடக்கி
மானுடத்தைச் செயலிழக்கும்
உன்னை யார் தண்டிப்பர்?

எந்த எதிரிகள்
ஏவிய பானம் நீ!!

எழுத்தில் சொல்ல முடியாத
அவஸ்தைக்கு
நீதான் காரணம் என்பதறிவாயா?

தான் என்ன செய்கிறோம்
என்று அறியாத
இவற்றிற்கு ஏன்
இவ்வளவு சக்தி?

இறைவா!
அழித்தி விடு இவர்களை!
உறக்கக் கலக்கத்தில்
நீ உருவாக்கிய
இவை எல்லா
உயிர்களையும் அழிக்குமுன்
நீ விழித்தெழு!!

Wednesday 9 December 2009

வைரஸ் காய்ச்சல்!

”காய்ச்சலுக்கு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்பெசல் ஊசி!!” என்று பதிவு போட்ட மறுநாளே வைரஸ் காய்ச்சல் படுக்க வைத்து விட்டது.
சரியாக நேற்றிரவு 3.00 மணிக்கு படுக்கையிலிருந்து விழிப்பு வந்தது. நெற்றி சுடுவது போல் இருந்தது. முழங்கால் இரண்டும் நகற்ற முடியவில்லை. இடுப்பு வலியோ அதை விட.காலை ஆறு மணிக்கு மேரி பிஸ்கட்டுடன் பால் சாப்பிட்டு மாத்திரை சாப்பிட்டேன். ஊசியும் போட்டுக் கொண்டேன்.( டாக்டருக்கே ஊசியா என்று கேட்கிறீர்களா?).ஓரளவு பரவாயில்லை. இதோ இப்போது உடல் கண கண என்றுள்ளது. இன்றிரவும் தூக்கமற்றுப் போகுமோ? தூக்கம் இல்லாமல் நினைவும்,கனவும் கலந்தார்ப் போல் காய்ச்சலுடன் கூடிய இரவு கொடியது. நோயாளிகளும் இப்படித்தானே அவதிப் படுவார்கள் என்று உணரும்போது மனம் வருத்தம் அடைகிறது. இந்தக் காய்ச்சல் இன்னும் நோய்வாய்ப் பட்டோருக்கு சிறந்த கவனிப்பையும், சிகிச்சையையும் அளிக்க உதவட்டும். ரொம்ப யோசிக்கவோ, எழுதவோ முடியவில்லை.
“ தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பார்கள். எனக்கு நன்றாகப் புரிகிறது.
மீண்டும் இழந்த ஆற்றல்களைச் சேகரித்துக் கொண்டு வருகிறேன். எவ்வளவு காய்ச்சலையும் தாங்கிப் பதிவு போடுகிறான்கப்பா!!என்று எண்ணத் தோன்றும். அதுவே பதிவுலகம் நமக்குத் தந்திருக்கும் உற்சாகம்.
வருகிறேன்.
தமிழ்த்துளி தேவா!

Saturday 5 December 2009

காய்ச்சலுக்கு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்பெசல் ஊசி!!

காய்ச்சல் இந்த முறை தீவிரவாதியின் தாக்குதல் போல் மக்களை வறுத்தெடுக்கிறது. தமிழகம் முழுவதும் காய்ச்சல் இருந்தாலும் காரைக்குடி வட்டாரத்தில் காய்ச்சல் வராதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

புயல் சின்னம் உருவாகுவதும், தூறல் போடுவதுமாக ஒரு வினோதமான இயற்கை விளையாட்டின் பலனாய் காய்ச்சல் உசுப்பிவிடப்பட்டிருக்கிறது!

குடும்பத்தில் ஒரு ஆளுக்கு வந்தால் போதும் எல்லோருக்கும் பரவிவிடுகிறது!! இதனால் அரசுமருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது. ஒரு முறை வந்தாலே இந்த வைரஸ் காய்ச்சல் ஆளைச்சாய்த்து விடுகிறது. பலரும் கை,கால் வீங்கிப்போய் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். அதில் தற்போது பலருக்கும் இரண்டாம் முறையாக வேறு வந்துகொண்டிருக்கிறது!!

பலருக்கும் இரத்தம் சோதித்தல், உள்நோயாளியாகச் சேர்த்தல், குளுக்கோஸ் ஏத்துதல் என்று படு பிஸியாக உள்ளன அரசு மருத்துவமனைகள்!!

பிரச்சினை என்னவென்றால் உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் அனைவரும் பெட் வேண்டும் என்று தினமும் குடுமிப் பிடிச்சண்டையாக உள்ளது!!பெட் கொடுக்க ரெகமெண்டேசன் போனிலும்,நேரிலும், தெரிந்தவர்,தெரியாதவர் என்று ஏகப்பட்ட குழப்பங்கள்!!
ஏழை என்றில்லாமல் தற்போது எல்லாத்தரப்பு மக்களும் வரிசையில் நின்று ஊசி போட்டுக்கொண்டு செல்கிறார்கள்.

ஜி.எச். பக்கம் வரமாட்டீங்களே!! இப்ப்ப வந்திருக்கீங்க! என்ன விசயம்? என்று நமக்குத் தெரிந்த வசதியுள்ள ஆசாமி ஒருவர் காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்டு மாத்திரை வாங்கிக்கொண்டு போகும்போது கேட்டேன். அவர் சொன்னதுதான் ஆச்சரியம்- ஜி.எச் சில்தான் இப்ப வந்திருக்கிற காய்ச்சலுக்கு மருந்து இருக்குன்னு ஊரெல்லாம் பேசிக்கிறாங்க, அதுதான் வந்தேன் ! என்றார்.
அடக் கொடுமையே!!

ஜி.எச்சில் கூட்டத்தைச் சமாளித்து ”இவ்வளவு பேருக்கும் மருந்து கொடுப்பது எப்படி? நிறையத்தேவைப்படுமே!! என்ன செய்வது?” என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படி ஒரு கோஷ்டி கிளம்பி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கிறது!!

அது பரவாயில்லை!!காய்ச்சல் இல்லாட்டியும் பரவாயில்லை எங்களுக்கும் வந்துவிடாமல் அந்த ஊசியைப் போடுங்கள் என்று கேட்கும் மக்களையும் சமாளிக்கவேண்டியுள்ளது!! எவ்வளவோ சமாளிக்கிறோம். இதைச் சமாளிக்க மாட்டோமா!!

Thursday 3 December 2009

சங்கரின் டி.வி. நிகழ்ச்சி!!

சங்கரின் நண்பர்கள் குழு அவன் ரூமிலிருந்த டி.வி.யின் முன் குழுமியிருந்தது. எல்லோரும் சந்தோச மூடில் மானிட்டருடன் சோடாவைக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொண்டைக்குள் தள்ளிக் கொண்டிருந்தனர். சிப்ஸ்,வறுத்த கடலை, வெட்டப்பட்ட கேரட், தக்காளிகள் ஒரு பக்கம் தட்டுகளில்.
”மாப்ஸ் ! நான் நடிச்ச புரோக்ராம் வரப்போகுது” எழுந்து சிகரெட் புகையின் நடுவில் உற்சாகத்துடன் கத்தினான் சங்கர்.
அனைவரும் அடுத்த அரை மணி நேரம் நிகழச்சியை ஆர்வத்துடன் பார்த்தார்கள்.
”வெல்டன் மாப்பிள்ளை” செமத்தியா நடிச்சிருக்கடா சங்கர் , ஆளாளுக்கு உற்சாகத்துடன் பாராட்டினர்.
”சரி! வாங்கடா ! சாப்பிடப் போவோம்” குழு இறங்கி அடுத்ததெருவை நோக்கி நகர்ந்தது.
” ஏண்டா மாப்பிள்ளை! நம்ம நிகழ்ச்சியை மக்கள் பார்த்திருப்பாங்களா?” இனிமேல் ஒரே ரசிகர் தொல்லையாயிடுமேடா! ரோட்டில் நடக்க முடியாதே” சங்கர் சரக்கின் உற்சாகத்துடன் ஓவர் படம் காட்டினான்..

தெரு முனையில் திரும்பினர். கொஞ்ச தூரத்தில் மெஸ்!! மெஸ்ஸிலிருந்து வந்த இருவர் சங்கர் குழுவை நோக்கி சந்தேகக் கண்ணுடன் நெருங்கினர்.
”சார் இப்ப டி.வி யில வந்தது நீங்கதானா?” அவர்களில் ஒருவன் கேட்டான். மூச்சில் மெல்லிய சரக்கு வாடை!!
’ஆமா’ சங்கர் சொன்ன அடுத்த வினாடி”ஏண்டா! அப்பாவி ஜனங்க பணத்தைப் போட்டா அபேஸ் பண்ணிட்டு சவடாலா நடந்து வரியே! நீதானே அந்த பைனாஸ் ஓனரு”
”அண்ணா ! இல்லீங்கனா அது கதை! – வார்த்தைகள் குழறி கைகால் நடுங்க ஆரம்பித்தது சங்கருக்கு!!
“ என்னடா கதை சொல்றே எங்களுக்கு, புடிடா அவனை” – அவன் சொல்லி முடிப்பதற்குள் சங்கர்&கோ சிட்டாய்ப் பறந்து விட்டனர்!!

Wednesday 2 December 2009

அவங்க பைத்தியமா? நாம் பைத்தியமா? -10!

எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று பொதுவாக சொல்லக்கேட்டிருப்போம்.

பித்துப் பிடித்தவன்பாடு கொடுமைதான்!. உண்மையில் தெருவோரங்க்களில் அனாதைகளாக குடும்பத்தவர்கள் கவனிக்காமல் அலையும் அவர்களைப் பார்க்கும் போது நமக்கு வருத்தமாகத்தான் உள்ளது!
அவர்களுக்கு உணவும் உறையுமிடமும் கொடுக்கவேண்டியது அரசின் கடமை!! போதுமான அளவு மனநோயாளிகளுக்கான காப்பகங்கள் நம் நாட்டில் இல்லை என்பதுதான் உண்மை.

இந்த இடுகையில் அதைப்பற்றி நாம் பார்க்கப்போவதில்லை. உண்மையில் பித்துப்பிடித்தவர்கள் ஒருபுறமிருக்க சட்டத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்து அதிலிருந்து தப்பிக்க பைத்தியம் போல் நடிக்கும் நபர்களைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

இவர்களால் மருத்துவர்களுக்கும் தலைவலிதான். ஏனென்றால் இவர்களை உண்மையான பித்தனா? இல்லை பொய்ப்பித்தனா என்று கண்டுபிடிக்க பல நேரங்க்களில் மருத்துவரும் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிவரும்.

பொதுவாக உண்மைப்பித்தனுக்கும், பொய்ப்பித்தனுக்கும் என்ன என்ன வேறுபாடு இருக்கும் என்று பார்ப்போம்!

1.திடீரென்று தமிழ்சினிமாபோல் "நான் எங்கே இருக்கிறேன்?" ஆசாமிகளை நடைமுறையில் பார்ப்பதா¢து! உண்மையான பைத்தியம் மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக முற்றிய நிலையை அடையும். திடீர்ப் பித்தர்கள் பெரும்பாலும் "பொய்ப்பித்தர்கள்"!!

2.உண்மையில் ஒருவனுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதற்குக் காரணம் இருக்காது( காதல் பைத்தியங்கள் இந்தக் கட்டுக்குள் அடங்க்காது!.) பொய்யாக நடிப்பவர்கள் பைத்தியமாக நடிப்பதற்கு காரணம் ஏதாவது இருக்கும். பல நேரங்க்களில் கி¡¢மினல் குற்றமாக இருக்கும்!

3.உண்மையான பித்தர்களின் பரம்பரையில் யாருக்காவது பைத்தியம் பிடித்திருப்பது, அல்லது மிகப்பொ¢ய நஷ்டம் என்று ஏதாவது இருக்கும். ஆனால் சூப்பர் ஆக்டிங்க் கொடுக்கும் கி¡¢மினல்களிடம் இதெல்லாம் இருக்காது!

4.உண்மையில் மன நிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகிவிட்டவர்களிடம் அறிகுறிகள் 24 மணி நேரமும் சீராக ஒரேபோல் இருக்கும். ஆனால் பித்தனாக நடிக்கும் ஆசாமிகள் ஆட்களைக் கண்டவுடன் ஓவர் "குணா கமல்" ஆக்டிங்க் கொடுப்பார்கள்,

5.உண்மையில் பித்துப் பிடித்தவர்களின் முகம் வித்தியாசமாக இருக்கும். வெறுமையான பார்வை காணப்படும். ஆனால் சீட்டிங்க்க் ஆசாமிகளின் முக பாவம் மாறிக் கொண்டே இருக்கும். வலுக்கட்டாயமாக முகத்தைப் பல கோணங்க்களில் வைத்துக்கொள்வார்கள்!

6.இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை உண்மையான பைத்திய நிலையில் இருக்கும். பொய்யாய் நடிப்பவர்கள் தூங்காமல் இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிப்பது கஷ்டம்.

7.உண்மைப் பித்தர் சோறு,தண்ணி தூக்கமில்லாமல் சுறுசுறுப்பாக இயங்க்குவர். ஆனால் நம்ம ஆள் சில நாளிலேயே சோர்வாகிப் படுத்துவிடுவார்.

8.உண்மைப் பித்தன் அழுக்காகவும், சுத்தபத்தமில்லாமல் இருப்பான். ஆனால் நம்ம "நடிகர்திலகம்" கொஞ்சம் சுத்தமாக இருப்பார்.

9.உண்மைப் பித்தனின் தோல்,உதடுகள் வரண்டு, சொரசொரப்பாக இருக்கும். பொய்யாய் நடிப்பவருக்கு அப்படி இருக்காது

10.உண்மைப் பித்தனை எத்தனை முறை வேண்டுமானாலும் சோதிக்கலாம். கண்டுக்க மாட்டான். பொய்யாய் நடிப்பவன் அப்படியில்லாமல் அடிக்கடி சோதித்தால் எ¡¢ச்சல்படுவான், கோபப்படுவான்.

இதெல்லாம் பொதுவாக காணப்படும் அம்சங்கள்!! இதை வைத்து நாம் பித்தன் உண்மையில் பாதிக்கப்பட்டவனா அல்லது நடிகனா என்று கண்டுபிடித்துவிடலாம்!!
Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory