Monday 30 November 2009

ஒரு வருடம் முடிந்தது- 300+!!

வாழ்க்கை ஒரு நதி போல்தான் இருக்கிறது. ஒரு நதி எப்படித் தன் போக்கைத் தீர்மானித்துக் கொள்ள முடியாதோ அது போல் வாழ்வின் போக்கையும் நம்மால் தீர்மானிக்கவியலவில்லை. அது எனக்கு மட்டும்தானா அல்லது அனைவருக்குமான பொதுக் கோட்பாடா என்று எனக்குத் தெரியவில்லை.

நிகழ்வுகளும், மனிதர்களும் பனிபோல் மறைந்து கொண்டிருக்க வாழ்க்கை காலப்பயணியாய்ச் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தைத் தீர்மானித்தது யார்? அல்லது எது? என்ற கேள்விகள் பதிலில்லாமல், அனைவருடைய வாழ்விலும் தொக்கி நிற்கிறது!!

அந்நிகழ்வுகளின் தொடரில் ஒரு திருப்பத்தில் பதிவுலகம் என்ற பூஞ்சோலையும் எனக்கு அறிமுகமானது. கிடைத்த பொம்மையை விடாமல் பத்திரப்படுத்தும் ஒரு குழந்தையின் மகிழ்வுடன் நானும் என் வழியில் பதிவுலத்தை விடாது பிடித்துக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நாளும் பதிவிடுவதற்காக என் சிந்தனையின் ஒரு பகுதியை இதற்காக செலவழிக்கிறேன். என்னில் ஒரு பகுதியைப் பிய்த்து இடுகைகளில் சொற்களாய் நெய்கிறேன். அந்தச் சொற்கள் எத்தனை பேரை மகிழ்வித்தது என்று என் பின்னூட்டங்களில் தேடி  மகிழ்கிறேன்.

சில்லரையை எண்ணி எண்ணி மகிழும் மிட்டாய் வாங்கச் செல்லும் சிறுவனின் குதூகலத்தை எனக்கு இப்பதிவுலகம் தந்தது.

இது ஒரு சுகானுபவம்.

ஆயிற்று! நானும் பதிவுலகம் வந்து ஒரு வருடம் முடிகிறது.300 பதிவுகள் என்னால் எழுத முடிந்தது என்றால் அது நிச்சயமாக என்னைப் பாராட்டி ஊக்குவித்த  பதிவுலக நண்பர்களால்தான். முகம் அறியாத அவர்கள் அனைவரையும் என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  

என் எழுத்துக்கள் பெற்றுத்தந்த நண்பர்கள், என் பதிவைப் பின் தொடரும் 300 க்கு சற்றே அதிகமான தோழர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

இன்னும் நிறைய எழுதலாம். என் உணர்வுகளையெல்லாம் சொற்களாக வடிக்கும் வல்லமை  எனக்கு இல்லை. ஆயினும் நான் சொல்லாத சொற்களின் அர்த்தங்களை இந்த வரிகளைப் படிக்கும் உங்களால் உணர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது!! அதுவே என்னை இன்னும் நிறைய எழுதத் தூண்டும்.

அதற்கான உற்சாகத்தையும், உந்துதலையும் எனக்குத் தாருங்கள் நண்பர்களே!!

அன்புடன்,

’தமிழ்த்துளி’ தேவன்மாயம்!!

Friday 27 November 2009

பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

அன்பின் வலைச் சகோதர சகோதரிகளே!!!

உங்கள் அனைவருக்கும் என்

புனித பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!!

இன்று நம்ம வீட்டிலும் பிரியாணிதான்!!

தமிழ்த்துளி தேவா.

கொஞ்சம் தேநீர்- நான் உறங்க!

 

 

ஒரு சிறு அமைதி,

ஒரு சமாதானம் போதும்

நான் இன்று உறங்க!

 

ஒவ்வொரு நாளும்

போதுமான வார்த்தைகள்

வேண்டியிருக்கிறது,

நம் மனங்கள்

காதலில் முயங்க!!

 

கனம் தாளாமல்

இதயத்தில் சுவர்களில்

கசிந்துகொண்டிருந்தன,

உன்னுடன்

பேசாமல் மீதமிருந்த

சொற்கள்!

 

கேள்விகளால்

நிரப்பப்பட்ட

உன் கண்களின் தீவிரம்

தாளாமல்

குனிந்து பருகினேன்

உன் மவுனத்தை!

 

நெஞ்சின் ஓரங்களில்

மீதமிருந்த

பனித்துளிகளைத் திரட்டி

கடந்து போன நாளின்

வெம்மையைச் சொன்னேன்.

 

சாகசமும் சாதுர்யமுமாய்த்

தொடுக்கப்பட்ட வரிகளை

புனிதமான தேவதையின்

சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாய்!!

 

தட்டிலிருந்த பருக்கைகளுடன்

மெதுவாக, மீதமிருந்த

சொற்களும்

கரைந்து போயிருந்தன!!

 

உன் மூச்சுக் காற்றின்

கதகதப்பில்

மெதுவாய் உறங்கிப்போனேன்!!

Wednesday 25 November 2009

பெண்களே! வாழ்த்துக்கள்!!

வாழ்த்துக்கள் !! ஒவ்வொரு புதிய சாதனைகளைப் பெண்கள் படைக்கும்போதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதே நேரம் இந்தியாவின் மிகப் பெரிய ஆற்றலான மகளிர் சக்தி  இன்னமும் அடக்கு முறையாலும் பிற்போக்கு சிந்தனைகளாலும் வீட்டில் முடங்கிக் கிடப்பது வருந்துதலுக்குரியதாக உள்ளது.

இதை மாற்ற திறமையுள்ள பெண்கள் முன் வரவேண்டும். இத்தகைய பெண்களே நாளை இந்தியாவின் வல்லரசுக் கனவை நனவாக்குவார்கள்.

இந்தியாவில் முப்படைகளிலும் இரண்டாயிரம் பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ராணுவத்தில் உள்ளனர்.

ஆனால், போரின் போது, போர் முனைகளில் பணியாற்ற இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

அதேபோல, கடற்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள், போர்க்கப்பல்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுவது இல்லை.

விமானப்படையில் பெண் பைலட்டுகள் இருந்தாலும், அவர்கள் சரக்கு போக்குவரத்து விமானங்களை மட்டுமே இயக்குகின்றனர்.

இந்தத் தடைகளை உடைத்து புதிய சாதனையை இருவர் படைத்துள்ளனர்..

அவர்கள் சப் லெப்டினண்ட் அம்பிகா ஹூடா(ஹரியானா) மற்றும் ஷீலா ராணி ஷர்மா(உத்தரப்பிரதேசம்).

..

இருவரும் கப்பல்படையில் டார்னியர் விமானங்களை  ஓட்டி கடல் பகுதியை அலசுவர். அதுமட்டுமல்லாமல் இந்த விமானத்தில் குண்டுமழை பொழியும் வசதியும் உண்டு.

ரேடார் மூலம் கடலைக் கண்காணித்தல், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு சாதனம்க்களைக் கையாளுவது, விமானப்படையுடன் இணைந்து போர் விமானங்களின் வருகையைக் கண்டுபிடிப்பது போன்ற மிகத்திறமையான வேலையில் இவர்கள் தம் திறமையைக் காட்டி மேலும் பல பெண்கள் இத்தகைய நாட்டைக் காக்கும் சீரிய பணியில் ஈடுபட முன்னுதாரணமாக விளங்க வாழ்த்துவோம்!!

வாருங்கள்!! வரலாறு படையுங்கள்!!!

Tuesday 24 November 2009

கொஞ்சம் தேநீர் -அது!

 

 

ஏதுமற்ற சூன்யத்தில்

சஞ்சாரிக்கிறது மனது..

 

தேடலின் வழியில்,

பலரிடமும் புகுந்து

உருமாறி, உருக்குலைந்து,

அல்லது உருப்பெற்றுக்

கிடக்கும் பலவும்

நான் தேடிய

ஏதோவொன்றின் சாயலில்.

 

இடையிடையில் அறுந்து

நினைவுப் படுகைகளில்

ஒழுங்கற்றுக் கிடக்கும்

சிதிலங்கள் உருப்பெறாமல்,

மரணத்துக்கும் பிறப்புக்குமான

இடைவெளியில்

சுவாசிக்கத்

துடிக்கும் சிசுவின்

அவஸ்தையுடன்!

 

ஒன்றிணைந்தும்,

கூடியும் குறைந்தும்

ஏதோவொன்றாய் ஒவ்வொரு

நொடியும் உருக்கொள்ளும்

என்னிலிருந்தும்

உன்னிலிருந்தும்

அனைவரிடமிருந்தும்

பிறந்து கொண்டே இருக்கும்,

எல்லாவுமாகிய அது!

Monday 23 November 2009

படுக்கை அறைப் பாட்டு!

சில விசயங்களைப் பற்றிப் பேசுவதற்கு மிகவும் கூச்சப்படுவோம்.

பொதுவாகப் பேசக் கூச்சப்படும் விசயங்களையும் நாசூக்காகச் சொல்லுவோம். அப்படி ஒரு மேட்டரைப் பார்ப்போம்.

பொது இடங்களில் பேசவே சிலர் கூச்சப்படுவார்கள். சார் “ ஒரு பாட்டுப் பாடுங்க” என்று கேட்டால் ஓடி ஒளிபவர்கள் அதிகம்.

இப்படி ஓடி ஒளிபவர்களும் ரசித்துப் பாடும் இடம் உண்டு. உங்களுக்கே தெரியும்- குளியலறைதான் அது!!

கல்யாணம் ஆனவுடனேயே நம்ம ஊரில் ஒரு கொடுமை நடக்கும். என்ன என்றால் அட்வைஸ்! ஆளாளுக்கு உபதேசம்!!

முன்னேமாதிரி விளையாட்டுப்பிள்ளை இல்லை நீ!! இப்போ உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. உன் வேடிக்கை , விளையாட்டையெல்லாம் நிறுத்திவிட்டு குடும்பப் பொண்ணா, லட்சணமா நடந்துக்கணும்!! சரியா?”

சிரித்து கலகலப்பாக இருந்த சுடிதார்ப் பெண்ணை ஒரு நாளில் புரட்டிப்போடும் கல்யாணம் பெண்ணிடத்தில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.

எதற்காக ஒரு ஆணோ, பெண்ணோ திருமணத்துக்குப் பின் தன் சிறு சிறு விருப்பங்களை, சந்தோசங்களை இழக்க வேண்டும். இந்தச் சிறு சிறு சந்தோசங்கள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுப்பவை.

சினிமாப் பாடலை டி.வி யில் பார்க்கும்போது பாடலுடன் சேர்ந்து  ரசித்துப் பாடுவது ஒரு இளைஞிக்கோ  இளைஞனுக்கோ  பிடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனை திருமணமானவுடன் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும். சொல்லப் போனால் அப்படிப் பாடுவது நிச்சயம் மன இறுக்கத்தைக் குறைக்கும்.

குரல் எப்படி இருந்தால் என்ன!! எல்லோரும் லதா மங்கேஷ்கர் போலப்பாட முடியுமா? நீங்கள் லதாவின் குரலை ரசிப்பவராக இருக்கலாம்.

ஆனால் உங்கள் மனைவியின் குரல் அதை விட இனிமையாக இருக்கும். பாடச்சொல்லிக் கேட்டுத்தான் பாருங்களேன்!!

”என் மனைவி பாடமாட்டாளே!! கூச்சப்படுவாளே!” என்கிறீர்களா?   பாடுவார்கள்!! எல்லோரும் இருக்கும் ஹாலிலோ , பகலிலோ பாடக் கூச்சப்படலாம். ஆகையால் படுக்கும் போது நீங்கள் அவருக்காகவும் பாடுங்கள்!!  நிச்சயம் நெஞ்சுக்குள் பெய்யும் காதல் மழை!!!

”எப்படிச் சொல்கிறீர்கள்?” - என்கிறீர்களா? நானும் அவ்வப்போது பாடுகிறேனே!!!

என்னுடைய பேவரைட்” ராஜாப் பொண்ணு அடிவாடியம்மா, கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி!!”

உங்களுக்குப் பிடித்த  பாடலை நீங்களும் பாடுங்கள்!! நிச்சயம் வாழ்க்கையில் ஒரு சின்ன சந்தோசம் கூடும்!!

Saturday 21 November 2009

கட்டுப்படுத்த முடியாத சக்கரையா?

100% சக்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

பொதுவாகவே மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் ஒரு இடைவெளி உண்டு. அதாவது, மருத்துவர் உணவு இப்படியெல்லாம் சாப்பிடவேண்டும் என்று ஒரு கதைபோல் சொல்லுவார். நோயாளியும் வெகு சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வருவார். அவர் சொன்னதில் பாதிதான் நோயாளிக்குப் புரிந்திருக்கும்.

மருத்துவரைச் சந்தித்து நான்கு நாட்கள் கழித்து யோசித்தால் அதிலும் பாதி மறந்து போய் இருக்கும். இந்த இடைவெளியை நிரப்புவதில்தான் சக்கரையைக் குறைப்பதற்கான சூட்சுமம் இருக்கிறது.

இந்த சூட்சுமத்தைப் புரிந்துகொள்வதற்கு முன் நாம் உணவின் சத்துக் குறிப்பீடு பற்றி அறியவேண்டும். நாம் உண்ணும் உணவுகளில் இத்தனை கிராமுக்கு இவ்வளவு சத்துக்கள் உள்ளன என்ற அளவுதான் அது.

ஏன் இது முக்கியம் என்று கேட்கிறீர்களா? மருத்துவர் மதியம் ஒரு கப் சாதம் அல்லது ஒரு பிளேட் சாதம் சாப்பிடுங்கள் என்று கூறுவார். ஆனால் எவ்வளவு பெரிய கப், எவ்வளவு பெரிய தட்டு என்று அளவு தெரியாது.

உதாரணத்துக்கு கார்த்தி, ஸ்ரீதர்,அன்பு என்று மூன்று பேர் வீட்டிலிருந்து அவர்கள் சாப்பிடும் தட்டைபோய்ப் பார்த்தால் கார்த்தியின் தட்டு பெரிதாகவும் ஸ்ரீதரின் தட்டு நடுத்தரமாகவும் அன்புவின் தட்டு சிறியதாகவும் இருக்கும்.(ஒரு குத்து மதிப்பாகக் சொல்கிறேன்!!)

அதே போல் கப்பின் அளவும் வீட்டுக்கு வீடு மாறுபடும். இது போல் இட்லி.தோசை சப்பாத்தி ஆகியவற்றின் எடை, அளவுபற்றி நாம் சொல்லவேண்டியதில்லை. இதற்கு என்ன செய்யவேண்டும்?

உண்வை எடைபோட்டுச் சாப்பிடவேண்டும்! சக்கரை நோயாளிகள் அனைவரும் இப்படித்தான் செய்ய வேண்டுமா? என்றால் எல்லோரும் செய்தால் நல்லதுதான்.

ஆனால் யாருக்கு இத்தகைய கட்டுப்பாடு மிகவும் அவசியம்?

1.உடல் எடை குறையாமல் இருப்போர் 2.இன்சுலினைக் குறைக்க விரும்புவோர் 3.இன்சுலினிலிருந்து மாத்திரைக்கு மாற விரும்புவோர் 4.சக்கரை கட்டுப்பாட்டில் இல்லாதோர் 5.சக்கரை நோயின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோர் 6.எச்.பி.ஏ.1.சி-இரத்தப் பா¢சோதனை-7%க்கு மேல் உள்ளோர்.

எப்படி, எவ்வளவு எடைபோட்டு சாப்பிடவேண்டும் என்று பார்ப்போம்.

காலை டிபன்-150 கிராம்

மதியம்-250 கிராம் சாதம்,

இரவு-150 கிராம் டிபனுடன் 100 கிராம் பழங்கள்,100கிராம் சுண்டல்

மூன்று வேளையும் 200கிராம் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இதற்கு அவசியம் ஒரு நிறுக்கும் தராசு வேண்டும். அதே போல் தினமும் எடை போடவேண்டும். இப்படி எடை போட்டு சாப்பிட்டு வீட்டிலேயே சுய பரிசோதனைக்கருவி மூலம் இரத்த சக்கரை அளவைக் கணித்து அதன் படி உணவின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.

நினைவில் கொள்ளவும்- சக்கரை 24 மணி நேரமும் சரியான அளவு இருந்தால்தான் சக்கரை வியாதியின் பின் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியும்.

Wednesday 18 November 2009

ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? +18 !!

ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? படிப்பவர்கள் ஆச்சரியப்பட வேண்டாம்! திருமணமான ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? நிச்சயமாக சேர்ந்து குளிக்கலாம் என்று மனமொத்து வாழும் தம்பதியினரிடம் எடுத்த புள்ளி விபரங்கள் கூறுகின்றன!
 நம் நாட்டில் பொதுவாக சேர்ந்து குளிப்பது அபூர்வம். பெரிய குளியல் அறைகளோ, வீட்டில் நீச்சல் குளமோ இருக்காது. ஏன் குளிக்கும் பாத் டப் கூட நாம் உபயோகிப்பதில்லை! ஆனால் பிற நாடுகளில் படங்களில் பார்ப்பதுபோல் குளிப்பதையும் அனுபவித்துக் குளிக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க தற்போது விவாகரத்து என்பது இளம் தம்பதியினரிடம் அதிகமாகிவருகிறது. வேலைக்குச் செல்லும் தம்பதியர்களில் இது மிகவும் அதிகம்!

விவாகரத்துக்கு சொல்லப்படும் காரணங்களில் பெண் பெரும்பாலும் வரதட்சிணை கேட்கிறான், அடிக்கிறான் போன்ற காரணங்களைப் பொதுவாகச் சொல்லுவார்கள்.

இரண்டுபேருக்கும் மனசு ஒத்துவரலைன்னு சொல்லுவதும் உண்டு.இதையும் மீறி பாலியல் சிக்கல்களும், உளவியல் பிரச்சினைகளும் நிறைய இருக்கு. அவற்றையெல்லாம் மேலோட்டமாக கண்டுபிடித்து திருத்துவது கஷ்டமான வேலை.

சரி, அதையெல்லாம் வல்லுனர்களிடம் விட்டுவிடுவோம். பொதுவா ஏதாவது புதுசா இருக்கா? புதுசுதான் ஆனா பழசு!

அதுதான் மணப் பிரச்சினை! மணப் பிரச்சினைன்னா.... உடல் மணப் பிரச்சினை!! இதென்ன பிரமாதம்ன்னு சொல்றீங்களா? நான் சொல்லலைங்க!! மலேசியா அரசாங்க்கமே சமீபத்தில் சொல்லியிருக்கு.

பொதுவாகவே ஒருவருக்கு தன் உடலின் மணம் அவருக்குத்தெரியாது. பக்கத்தில் இருப்போர் கதிதான் அதோகதி. பக்கத்தில் இருக்கும் நமக்கே இப்படின்னா கணவன் மனைவிக்கு எப்படியிருக்கும்?.

நிறையப் பெண்களுக்கு சினிமாத் தியேட்டருக்குள் சூழ்ந்திருக்கும் சிகரெட் புகை பிடிக்காது. குமட்டும். அந்தத் தொடர் புகைவண்டி ஆசாமியிடம் " அப்பா! வெளியே போய் ஊதிவிட்டு வாப்பான்னா" அவன் நம்மை ஒரு பார்வை பார்த்துட்டு வெளியே போவான். இல்லைன்னா சிகரெட்டை நசுக்குவான்.

இது இப்படின்னா வெளியூர் போகும்போது சில கார் டிரைவர்கள் அவசரத்தில் குளிக்காம வண்டியில் ஏறிவிடுவார்கள். காருக்குள்ளே நம்ம உட்கார முடியாது. இதெல்லாம் நல்லாத்தெரிந்தும் நம்மில் பலர் நம்ம உடல் மணத்தின்மேல் அக்கரை காட்டுவதில்லை.

சில பேர் நான் பவுடரே போடமாட்டேன்னு பெருமையா சொல்லிக் கொள்வார்கள். அதுல என் உடம்பில் கெட்ட மணமே வராதுன்னுவேறு!! தமிழ் நாட்டில் சாப்பிட்டவுடன் தாம்பூலம் போடுவதும் இதற்காகத்தான்( இது எல்லாருக்கும் தெரியும்). மலேசியாவில் நடந்த ஆராய்ச்சியில் பத்தில் மூன்று கல்யாணங்கள் விவாகரத்தில் முடியுதாம். அதற்குக் கூறப்படும் காரணங்களில் உடல் மணமும் ஒன்று.
பொதுவாக நான் பார்க்கும் புது மணத்தம்பதியினரிடம் பெண்ணிடமோ, ஆணிடமோ நல்ல மணம் இல்லாமல் இருப்பது கண்டால் உடனே  கூறி அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அறிவுறை கூறிவிடுவேன். ஏனெனில்  பெரும்பான்மையானவர்களுக்கு இது பற்றிய விழிப்புண்ர்வு இருக்காது.

சேர்ந்து வாழும் தம்பதியினர் நல்ல துவைத்த சட்டை அணிவதையும், உடலில் சென்ட் போன்ற நறுமணப்பொருட்களை உபயோகிப்பதையும் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.தொள தொள உடைகளைவிட சரியான அளவுள்ள உடைகளே அவர்களுக்குப் பிடிக்குதாம்.

இதெல்லாம் எல்லோரும் செய்யலாம். கடைசியா ஒரு தம்பதியினர் சொன்னதுதான் ஆச்சரியம்!! ஆமாங்க, இருவரும் சேர்ந்து ஒன்றாகக் குளிப்பதுதான் அவர்கள் மணவாழ்க்கையின் ரகசியம் என்று கூறியிருக்கிறார்கள். சேர்ந்து ஒன்றாக வெளியில் செல்வதையே இன்னும் பலர் கடைப் பிடிப்பதில்லை. மனைவி அழகாக இல்லாத பலர் இன்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு மனைவியை அழைத்துச் செல்வதில்லை. அப்படியிருக்கும்போது சேர்ந்து குளிப்பது என்பது எவ்வாறு சாத்தியம். மிகவும் மனமொத்த தம்பதியினர் மட்டுமே இந்த அளவு அன்னியோன்னியமாக இருக்க முடியும்.
உடல் மணத்தில்  அக்கறை காட்டுதல் மிகவும் நல்லது. இதற்கு வாசனைத்திரவியங்கள் விலை அதிகமாகுமே என்று எண்ண வேண்டாம். புரூட் போன்ற டியோடரண்டுகளில் 24 மணிநேரம் உடல் நறுமணம் தரும் ஸ்பிரேக்களை  விற்கின்றன. ஆனால் தற்போது வரும் பாண்ட்ஸ் பவுடரே போதும். குளித்தவுடன் ஏதாவது ஒரு பவுடரை உடலில்  தடவினாலே போதும்.

மக்களே!! எல்லாத்தையும் கடைப்பிடிங்க!! உடல் மணத்தில் தம்பதியினர் கவனம் செலுத்துங்க.
ஜோக் நம் நாட்டுக்கு தம்பதிகள் சேர்ந்து குளிப்பது தேவையா? என்கிறீர்களா? இருக்கிற மக்கள் தொகையில். நம்ம நாடு தாங்குமா?.. !!! ஹி.... ஹி... ஹி..!!!

Tuesday 17 November 2009

மோசமானவைங்கள்ளேயே முக்கியமானவைங்க!!!

ஏர் இந்தியாவில் ஆப்பிரிக்காவில் இருந்து  வந்திறங்கிய நண்பனையும் அவன் நண்பர்களையும் என் நண்பர்கள் புடைசூழ வரவேற்றேன்.

வாடா மாப்பிள்ளை!! எப்படியிருக்கீங்க எல்லாம்? என்று வழக்கமான கேள்வியைக் கேட்டேன்.

அதுதான் பார்க்கிறாயே!! எப்படியிருக்காங்க நம்ம தோஸ்துங்கள்ளாம் பார்த்தியா?

அப்போதுதான் அவன் கூட வந்தவர்களைப் பார்த்தேன். எல்லாம் செம கெட்டப்பில் இருந்தார்கள்.  நமக்கு   ஆப்பிரிக்கா நண்பர்கள் அதிகம்!! நிறையப் பேரைத் தெரியும். இருந்தாலும் இவர்கள் போன முறை வந்தவர்கள்தான்.

கொடிய வியாதிகளில் ஆராய்ச்சி மாணவர்களான அவர்கள் இரண்டு குழுவாக இருந்தனர். இரண்டு குழுக்களிலும் நிறையப்பேர்  இளம் வயதினராகவும் நல்ல சக்திவாய்ந்தவர்களும்  இருந்தனர்.

இந்த இடத்தில் நாங்கள் யார் என்று கொஞ்சம்  சொல்லிவிடுகிறேன்.

நாங்கள் ஒன்றும் நாட்டுக்கு நல்லது செய்யும் ஆராய்ச்சியாளர்கள் அல்ல!!! இது மட்டும் இப்போது போதும்.

சரி!! நீங்கள் வந்திறங்கியது அரசாங்கத்துக்குத் தெரியுமா?  பயணம் எப்படி? ஏர் இந்தியா எப்படி? அடுக்குக் கேள்விகள் சரமாகத் தொடுத்தேன். கொஞ்சம் தெரியும். ஆனால் இப்போது இந்தக்குழு வந்திருப்பது தெரியாது என்று நினைக்கிறேன்.

ஏர் இந்தியாவில் மழையினால் கொஞ்சம் சிரமமாக இருந்தது. மற்றபடி ட்ராவல் ஓகேதாண்டா!!

சரி!! நீ ஏண்டா சோகமா இருக்கே!! ”எங்கேடா இந்தியாக் காரனுக்கு இந்தியாவில் எவன் பயப்படுகிறான். 

சரி வாங்க!! போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு வேலையை ஆரம்பிப்போம்!!

மனித உடலில்  புதுப் புது பிரச்சினைகளை உண்டாக்கும்  என் நண்பர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினேன் நான்!!

இவர்கள் தாக்கிய மனிதர்களிடமிருந்து எனக்கும் ரத்தம் கிடைக்கும் அல்லவா!!! ..ஹி   ...ஹி   ..ஹி!!

பின்குறிப்பு:

1.ஏர் இந்தியா- இந்தியக் காற்று!

2.இரண்டு குழுக்கள்- 1.சிக்குன் குன்யா 2. டெங்கு கொசு வைரஸ் குழுக்கள்!!

3.நான் - சாதாக்காய்ச்சல் கொசு!!

சும்மா மொக்கையாக எழுதியது!! சீரியஸா அறிவியல் பூர்வமா சிந்தித்து மணடையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

படிச்சிட்டு சிரிச்சுட்டுப் போங்க!

நகைச்சுவை, மொக்கை 

Sunday 15 November 2009

பிரேதப்பரிசோதன- நீரில் மூழ்கி இறப்பு!

 

சமீபத்தில் விஜய் டி.வி. "நடந்தது என்ன?" நிகழ்ச்சியில் தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து போராடும் ஒரு தந்தையைப் பற்றி ஒரு நிகழ்ச்சி வந்தது.

கல்யாணாமாகி சென்ற மகள் ஏரியில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுவதை மறுத்தும் போஸ்ட்மார்ட்டம் பற்றி சந்தேகப்பட்டும் பல கேள்விகள், சந்தேகங்கள் அதில் சொல்லப்பட்டன.

தண்ணீரில் மூழ்கி இறந்தால் எப்படி இறப்பு ஏற்படும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. ஆனால் அவசியம்  நாம் இதைப்பற்றித் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அறிவியல் விளக்கங்களெல்லாம் தெரியாவிட்டாலும் சில அடிப்படை விசயங்கள் நமக்குத் தெரிய வேண்டும்.

நாம் அதுபற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 150000 பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.

பொதுவாக தண்ணீரில் மூழ்கிய 4-8 நிமிடத்தில் இறப்பு ஏற்படுகிறது.

பிரேதப்பரிசோதனையில் தண்ணீரில் மூழ்கி இறந்ததைக் கண்டுபிடிக்கமுடியுமா?

நீரில் மூழ்கி இறந்த உடலில் பல வெளிப்புற உடல் மாற்றங்கள் இருக்கும். உதாரணமாக நீண்ட நேரம் தண்ணீரில் மூழ்கி இருந்தால் கையில் தோலெல்லம் சுருங்கிக் காணப்படும். இதுபோன்று நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் விடுத்து முக்கியமானவைகளை மட்டும் பார்ப்போம்.

தண்ணீரில் மூழ்கிய உடலில்

1.மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளியிருக்கும்.

2.கைகளில் செடி,கல் போன்றவை கெட்டியாகப் பிடித்து கை இறுக்கமாக மூடியிருக்கும்.

3.மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் நுரை காணப்படும்.

4.நுரையீரல் வீங்கி தண்ணீருடன் காணப்படும்.

5.தண்ணீர் இரைப்பை, குடலில் இருக்கும்.

6.ஏரி,குளத்தில் காணப்படும் டையடோம்ஸ் எனப்படும் நுண் தாவரங்கள் நுரையீரல் மற்றும் உடல் திசுக்களில் காணப்படும்.

இவற்றை வைத்துத்தான் பிரேதப் பா¢சோதனையில் நீரில் மூழ்கி இறந்ததைக் கண்டுபிடிக்கிறோம். சரி! அதுதான் இதை வைத்துக் கண்டுபிடிக்கலாம் என்கிறீர்களே!! அப்புறம் என்ன பிரச்சினை என்கிறீர்களா? பிரச்சினை உள்ளது.

தண்ணீரில் மூழ்குபவர் வாய்வழியாகத் தண்ணீர், தொண்டை, மூச்சுக்குழாய், நுரையீரல் ஆகியவற்றில் உறிஞ்சப்பட்டு நுரையீரல் வீங்கிக்காணப்படும். நுரையீரலில் நுரை,இரத்தத்துடன் அதிக அளவு நீர் இருக்கும்.  தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களிடம் 80%மேல் சொன்னது போல் நுரையீரல் வீக்கம் காணப்படும்.

தண்ணீரில் மூழ்குபவர் தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுக்காகப் போராடி இறக்கும்போது மேல்சொன்ன நுரையீரல் மாற்றங்கள் இருக்கும்.

ஆனால் தண்ணீரில் மூழ்குபவர் வேறுவிதங்களிலும் இறக்க வாய்ப்பு உள்ளது

கீழ்க்கண்டவாறு இறப்பவர்களில் மேலே சொன்னதுபோல் நுரையீரல் மாற்றங்கள் இருக்காது.

1.குளிர்ந்த நீர் உடலில் பட்டவுடன் நரம்புகள் தூண்டப்பட்டு ஏற்படும் உடனடி மரணம்.

2.தண்ணீரில் விழுந்தவுடன் மயங்கி இறத்தல்.

3.தண்ணீரில் விழுந்தவுடன் கல், பாறை போன்ற பொருள்மீது தலைமோதி உடன் மரணம்.

ஆகிய மேலே சொல்லப்பட்டவிதத்தில் இருந்தால் பிரேதப் பரிசோதனையில் மாற்றங்களிருக்காது. ஆகையால் ஒருவர் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா இல்லை தண்ணீரில் விழுவதற்கு முன்பே இறந்தாரா என்று கண்டு பிடிப்பது பிரேதப் பரிசோதனையில் சிரமமாகிறது.

பிரேதப் பரிசோதனை முடிவுகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தீவிர விசாரணை மூலமே இத்தகைய இறப்புக்களைக் கண்டுபிடிக்க முடியும்.

தண்ணீரில் மூழ்கி இறப்பதில் நிறைய விசயங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் சாரத்தை  சுருக்கமாக  நான் இங்கு கொடுத்துள்ளேன்.

உங்கள் கேள்விகளைப் பொறுத்து விளக்கங்களைத் தருகிறேன். 

Thursday 12 November 2009

தெற்கத்திக்கார்!! வடக்கத்திக்கார்!!!

தெற்கத்திக்கார், வடக்கத்திக்கார் - தலைப்பைப் பார்த்தவுடன் சிலருக்குப் புரிந்திருக்கும்!!

பலருக்கு இது என்னவென்றே தெரியாது!! சமீபத்தில் ஒரு கட்டுரை படிக்கும்போது எதையும் இயற்கையோடு சாப்பிட்டால் உடல் நலத்துக்குக் கெடுதல் குறைவு என்று.

சப்பாத்தி சாப்பிட்டும் நிறையப்பேர் சக்கரை குறையவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். காரணம் என்ன? தற்போது கோதுமை மாவு யாரும் கோதுமை வாங்கி அரைத்து உண்பது இல்லை. கோதுமை மாவாகவே பாக்கெட்டுகளில் வருகிறது. அதனையே வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். பாக்கெட்டில் வரும் மாவில் கோதுமை உமியானது நீக்கப்படுகிறது. அதன் தோல்பகுதி நீக்கப்பட்டு வெறும் மாவுப்பகுதி சலிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வருகிறது. இது சலிக்கப்படாமல் வாங்கி அரைக்கும் கோதுமை  மாவைவிட அதிகமாக சக்கரையை உயர்த்தும்!! ஆகையால் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை ரொட்டியே நல்லது.

அதேபோல் கோதுமை தோசை எடை அதிகம். அது சக்கரையைக்கூட்டும். 

கிராமங்களில் பாலிஷ் செய்யப்படாத  நீளமான அரிசியில் சோறு வடிப்பார்கள். அதற்கு வெள்ளைக்கத்தரிக்காயில் குழம்பு வைத்து சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும். அந்த நீளமான அரிசி வகையில் பிரபலமானவையே கார் அரிசி வகைகள். தற்போது நாம் சிறு பொன்னி வகை அரிசி உண்பதால் இந்தக் தெற்கத்தி, வடக்கத்திக்கார் வகைகள் நிறைய பயிரிடப்படுவதில்லை. அப்படிப் பயிரிட்டாலும் அவை கேரளாவுக்கு  நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. நாம் கர்நாடகா, ஆந்திரா பொன்னியை சாப்பிடுகிறோம்.

இந்த சின்ன தீட்டப்பட்ட அரிசியை சாப்பிட்டுப் பழகிய நாக்கு கார் அரிசியைச் சாப்பிடுமா? கேரளாக்காரர்களால் முடிகிறது, நம்மால் முடியவில்லை!!

Monday 9 November 2009

கொஞ்சம் தேநீர்-மழைக் காதல்!

image

உன் கண்களில்

தெறிக்கும் மின்னலில்,

இன்று பெய்யவிருக்கும்

மழைக்கான குறிப்புகள்!

 

சாளரம் தாண்டி அடிக்கும்

கூதல் காற்றில்

வாடையில் கிளர்ந்தெழும்

உன் உடலின்

மணம்!

 

உன் மோகச்சுரப்பிகளினின்றும்

பெருகும் காதல் மழையில்

மீண்டும் மீண்டும்

மூழ்கிப் பிறக்கிறேன்

நான்!!

 

கூரையில் பெய்யும்

மழையின் சத்தத்தில்

நம் இதழ் சுரங்கள்

புணர்ந்து பிறக்கும்,

நமக்கு

மட்டுமேயான

உயிர் ராகம்!!

 

மறைந்தும் நிர்வாணமாயும்

மழையை

வரவேற்கும்

உன் உடல் பூமி.

 

ஓசை வலுத்த

ஒரு கணத்தில்

புதைந்து கிடந்த

ஆழங்களில் பெய்தது

சிறு துளிகளால்

ஆன

அந்தப் பெருமழை!!!

Saturday 7 November 2009

அடிக்‌ஷன்! - குறுங்கதை!!

”ஏங்க !!! இங்கே ஒரு நிமிடம் வாங்களேன்” மனைவியின் குரல் கேட்டது.

அமைதியாக இருந்தான் ஸ்ரீ !

”கூப்பிட்டா உடனே வரமாட்டீங்களே!”  மனைவியின் குரலில் கொஞ்சம் காரம் ஏற ஆரம்பித்திருந்தது!!

இதுதான் எச்சரிக்கை மணி!! இனியும் எழுந்து உள்ளே போகாவிட்டால்  அடுத்து ......கடுகு தாளிப்பது போல் பொரிய ஆரம்பித்து விடுவாள்.

ஏற்கெனவே எழுத உட்கார்ந்து யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டாலும் ஒன்றும் பிடிபடாத கடுப்பு வேறு ஸ்ரீக்கு!!

சரி ! மனைவியின் அடுத்த குரல் வருவதற்குள் ஹாலுக்குள் நுழைந்தான்.

ஹாலில் டி.வி.ஓடிக்கொண்டிருந்தது!! மூத்த மகன் கார்த்தியும், இளையவன் அன்புவும் “ ஜெட்டிக்ஸ்” ல் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கையில் கரண்டியுடன் கோபாவேசத்துடன்  நிற்கும் மனைவியைப் பார்த்தவுடன் ஸ்ரீக்கே கைகால் லேசாக நடுங்க ஆரம்பித்தது!!

”இப்பப் பாருங்க மணி 8 ஆகுது!! 6 மணிக்கு படிக்கிறேன்னு உட்கார்ந்த ரெண்டு பேரும் இன்னும் படித்து முட்டிக்கலை” டி.வி தான் பார்க்கிறாங்க!!

உங்கப்பா சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க!! நீங்க சொல்லுங்க”

ஹாலில் அப்பா ’சீனா’ ஈசி சேரில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்துவிட்டு மீண்டும் பேப்பருக்குள் மூழ்கிவிட்டார்.

ஸ்ரீக்கு கட்டுரையை முடிக்க முடியாத எரிச்சல் வேறு!

”ஏண்டா! அம்மா சொன்னாக் கேக்க மாட்டிங்களா?” கோபத்துடன் கார்த்தியை ரெண்டு அப்பு அப்பினான. டி.வி.யை அணைத்தான்.

பசங்க ரெண்டு பேரும் பயத்துடன் புத்தகத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு படிக்கும் பாவனையில் இருந்தார்கள்.

“ இதிலேயே அடிக்ட் ஆகிட்டானுங்க!! இந்தட் டீவி கேபிளைக் கட் பண்ணாதாண்டா நீங்க சரியா வருவீங்க..”  கோபத்துடன் கத்தினான்.

’கப் சிப்’  ஹாலில் நிசப்தம்!!

சே!! அலுப்புடன் வந்து நான்கு மணி நேரமாக யோசித்தும் பாதி கூட முடியாத கட்டுரையை எழுத ஆரம்பித்தான் தன் பிளாகில்!!!

Thursday 5 November 2009

பிடித்ததும்!! பிடிக்காததும்!!!

இரண்டு நாட்களாக எதையுமே எழுதப் பிடிபடவில்லை! உண்மைதான். ஏதாவதொரு அலுவல் அல்லது சின்னப் பிரச்சினைகள்  இருந்தால்கூட மனது அதை ஒட்டியே சிந்திக்கிறது. அதை முடித்தால்தான் அடுத்தவேலை செய்யமுடிகிறது. 

பதிவுகள் பயன்பெறும் வகையில் இருக்கவேண்டும் என்று மனது சொல்கிறது. மொக்கையாக, ஜாலியாக எழுது என்று அதே மனதின் இன்னொரு பக்கம் சொல்கிறது.

அனேகமாக மனித மனமே இப்படித்தான் என்று நினைக்கிறேன். இதில் நம் மனதுக்கு, அறிவுக்கு தெரிந்த விசயங்களைக் கொண்டே நாம் பிடித்தது பிடிக்காதது என்று அபிப்பிராயப்படுகிறோம்.

அதே போல் ஒரு முக்கிய பிரமுகரை நாம் நேரில் சந்தித்துப் பேசிப் பழகி இருக்க மாட்டோம். உதராணம்: அரசியல்வாதிகள், திரைப்படத் துறையினர். ஆனால் அவர்களின்  செயல்களை நாம் பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் மூலம்தான் அறிந்துகொள்கிறோம். அனைவரும் அனைத்துச்செய்திகளையும் படித்திருப்பது என்பது சாத்தியமான ஒன்று அல்ல.

பதிவர்களை எடுத்துக் கொண்டால் பிடித்தவர் என்று பலர் குறிப்பிட்டிருக்கும் பலரை நான் படித்ததே இல்லை. எல்லோரும் எல்லோருடைய பதிவுகளையும் படித்திருக்க முடியாது. அப்படியே படித்தாலும் பதிவரின் எல்லாப் பதிவுகளையும் படித்திருக்க முடியாது. இதுவே உண்மை. ஆகையால் பிடித்தது பிடிக்காததை படிக்கும் நண்பர்கள் சீரியசாக( இதற்கு இணையான தமிழ்ச்சொல் சட்டென்று நினைவுக்கு வரவில்லை!!) எடுத்துக் கொண்டு பின்னூட்டமிட வேண்டாம் என்று நான் உங்களிடம் சொல்லமுடியாது. ஏனெனில் பல நேரங்களில் உணர்வுபூர்வமான பதில்களும், எதிர்வினைகளும் ஒரு  பதிவுக்கு ஒருவிதமான  சுவையையும், சுவாரசியத்தையும் ஊட்டுவது உண்மைதான். அதுவே பலருடைய கருத்துக்களையும் நாம் அறிந்துகொள்ளவும் உதவுகிறது. ”உங்கள் பதிவு அருமை” என்று வரும் பின்னூட்டங்களைவிட இவற்றில் அதிகம்தானே!!

சரி..சரி.. கத்தி போட்டது போதும்! என்று பலர் முனுமுனுப்பது கேட்கிறது!!!

பதிவர் நண்பர் பீர்  என்னை பிடித்ததும் பிடிக்காததும் எழுத அழைத்திருக்கிறார்.

என் பதிவுகளின் காட்டம் தாங்க முடியவில்லை அவரால்........

பீர் | Peer said...

டாக்டர், பதிவுகள் ரொம்ப சீரியஸா போய்கிட்டிருக்கு...
வாங்க, ஷார்ட் கமர்ஸியல் ப்ரேக் எடுத்துக்கலாம். உங்களை ஒரு தொடர் பதவி விளையாட்டிற்கு அழைத்துள்ளேன்.
பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

ஆயினும்

பிடித்த பதிவர்..பிடிக்காத பதிவர் ல் நர்சிம் என் இடுகைக்கு பதக்கம் அளித்து விட்டார்.
 
9.பிடித்த பதிவர் :இதில் பிடித்த பதிவு என்று இருக்க வேண்டும்.சமீபத்தில் டாக்டர் தேவன்மயம் எழுதிய விரிவான கட்டுரை பிடித்திருந்தது.
 

மிக்க நன்றி நண்பரே!! இத்தகைய பாராட்டுக்களே பதிவில் கிடைக்கும் மகிழ்ச்சி!!! வேறு என்ன வேண்டும் நமக்கு!!

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.          

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.                                                                       

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

இனி
1.அரசியல் தலைவர் :
 அ.கலைஞரிடம்:

பிடித்தது: அரசு ஊழியர் மீது அன்பு காட்டுவது!  ஏழைகளுக்கும் மருத்துவக்காப்பீடு அளித்தது.

பிடிக்காதது: ஈழத்தமிழர் விசயத்தில் விரைவான முடிவு எடுக்காதது!

ஆ. ஜெயலலிதாவிடம்:

பிடித்தது: மன உறுதி!

பிடிக்காதது: அரசு ஊழியர்கள்கள் மேல் அடக்குமுறையைப் பிரயோகித்தது, ஆடம்பரத்தை வெளிக்காட்டி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டது!

2.எழுத்தாளர்

நான் படித்ததில் அசோகமித்திரன் - தண்ணீர்!

தி.ஜானகிராமன்: மரப்பசு

லா.ச.ரா: அபிதா

மனைவியின் மரணம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட ஸ்டெல்லா ப்ரூஸின் - அது ஒரு நிலாக் காலம்!

பிடிக்காதது: எவருமில்லை! எல்லோருடைய எழுத்துக்களிலும் ஏதாவதொரு சங்கதி இருந்துகொண்டே இருக்கிறது...

3.கவிஞர்
பிடித்தவர் :கமலாதாஸ்,

பழமலய், சுகிர்தராணி

பிடிக்காதவர்:

நான்!! தொடர்ந்து கவிதை எழுத முயற்சித்தும் வார்த்தைகளையும் கருவையும் கலக்க முடியாததால்!!!

4.இயக்குனர்
மகேந்திரன்: உதிரிப்பூக்கள்!

மணிரத்தினம்: நாயகன்

கமலஹாசன்: விருமாண்டி


5.நடிகர்
பிடித்தவர் :

சிவாஜி: மிகைநாடிய கலைஞனாக இருந்தாலும் ! பாசமலர், பாவமன்னிப்பு ..... இன்ன பிற!!

கமலஹாசன்: நாயகன், விருமாண்டி...

ரஜினி: இமயமலையின் இடுக்குக் குகைக்குள் நுழைந்தது ஒரு ஆச்சரியம்!


6.நடிகை
பிடித்தவர் : பத்மினி- தில்லானா மோகனாம்பாள்

ஷோபா: முள்ளும் மலரும், பசி

ஸ்ரீதேவி: மூன்றாம் பிறை

 

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா

பிடிக்காதது: பிடிக்கவில்லை என்று எழுத!!( கலைஞர், ஜெ தவிர!!)

 

தொடர அழைப்பது
1.நேசமித்திரன் http://nesamithran.blogspot.com/2009/11/blog-post_04.html 

2. அம்மா அப்பா-ஆ.ஞானசேகரன்

3.மேனகா சாத்தையா-.Mrs.Menagasathia.

4.ஹரிணிஅம்மா-http://www.hariniamma.blogspot.com/

5.கிரி -கிரி Blog

தமிழ்த்துளி தேவா

Tuesday 3 November 2009

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

 

 

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.

சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1.கால்கள்:சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2.சிறுநீரகம்: சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3.வயிறு, குடல்:அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4.மூக்கு: சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

5.பல்,ஈறுகள்: பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6.கண்கள்: கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7.காது: காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.

இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள்  நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory