Showing posts with label சக்கரை வியாதி. Show all posts
Showing posts with label சக்கரை வியாதி. Show all posts

Wednesday, 14 July 2010

சர்க்கரை நோய் ஏன் வருகிறது? முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்!

சர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்.ஆயினும் சர்க்கரை நோய்
  • ஏன் சர்க்கரை நோய் வருகிறது?
  • என் பெற்றோருக்கு நீரிழிவு நோய் உள்ளது..எனக்கு வருமா?
என்ற கேள்விகளைப் பலரும் எழுப்புகின்றனர். இதற்கு நாம் அறிவியல் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். இக்கட்டுரை இந்த நோய் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோருக்கும், இந்நோய் பாதிக்கப்பட்டோருக்கும், நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்போர் குடும்பத்தினருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இங்கு மிகவும் விரிவாக அறிவியல் விளக்கங்கள் எழுதாமல் முடிந்த அளவு எளிமையாக எழுதியுள்ளேன். இதைப் படிக்கும் என் அன்பு நண்பர்கள், இத்தகைய கட்டுரைகளின் தேவை பற்றி எனக்குப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நீரிழிவு நோயைப் பொதுவாக  இரண்டு வகைப்படுத்தலாம்.
1.முதல்வகை நீரிழிவு நோய்
2.இரண்டாம் வகை நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் வரக்காரணங்கள்.
நீரிழிவு நோய் வர நிறையக் காரணங்கள் உள்ளன. 
  • மரபு வழி- அம்மாவுக்கு நீரிழிவு இருந்தால் 2- 3% பிள்ளைகளுக்கு வரலாம். அப்பாவுக்கு இருந்தால் 3% க்கு சற்று அதிகமாக வரலாம். தாய் தந்தை இருவருக்கும் இருந்தால் நீரிழிவு வரும் வாய்ப்புக்கள் இன்னும் அதிகம். 
  • உணவுக்குறைபாடு- குறைந்த புரத உணவு, நார்ச்சத்துக் குறைவான உணவு 
  • உடல் எடை, கொழுப்பு அதிகம்
  • உடலுழைப்பற்ற வேலை
  • மன அழுத்தம்
  • மருந்துகளால் - வேறு நோய்களுக்குக் கொடுக்கும் சில மருந்துகள்   நீரிழிவு நோயைத் தூண்டுபவை.
  • கணையத்தில் கிருமித் தொற்று.
  • இரத்த அழுத்தம்
  • இரத்தத்தில் கொழுப்பு அதிகமிருத்தல்
  • புகை பிடித்தல்- புகைக்கும் பழக்கம் உள்ளோருக்கு நிரிழிவு நோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம். அவர்களுக்கு கண் கோளாறும், மூட்டுத்தேய்வும் ஏற்படும். நீரிழிவு நோயாளிகள் அதிகம் புகைத்தால் வாழ்நாள் குறையும். 

முதல் வகை நீரிழிவு மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்களிடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் காணப்படுகின்றன. அவற்றைத் தெரிந்துகொண்டாலே நோய் பற்றி ஓரளவு தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முதல் வகை நீரிழிவு( Type 1 Diabetes Mellitus)
இரண்டாம் வகை நீரிழிவு(Type 2 Diabetes Mellitus)
இன்சுலின் உடலில் உற்பத்தியாகாது.
இன்சுலின் உடலில் உற்பத்தியாகும்.
நோய் வருவதைத் தடுக்க முடியாது.
நோய் வருவதைத் தடுக்கலாம்.
அதிக உடற்பயிற்சியாலோ, உணவுக்கட்டுப்பாட்டாலோ வராமல் தடுக்க முடியாது.
தடுக்கலாம்.
கணையத்தில் பீட்டா செல்கள் இருக்காது.
கணையத்தில் பீட்டா செல்கள் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளில் 15% பேர் இந்த வகையினர்.
85% பேர் இந்த வகையினர்!
சிறு வயதிலேயே ஆரம்பித்து விடும்.(குழந்தைகளிலும்!)
நடு வயதில் ஆரம்பிக்கும்.

இரத்த அழுத்தம், அதிக உடல் எடை ஆகியவற்றால் வரலாம்.நோயாளிகளில் 55% பேர் உடல் எடை அதிகமுள்ளவர்கள்.
நோய்க்குறிகளும், விளைவுகளும் கடுமையாக இருக்கும். குழந்தை பலகீனமாகவும், உடல் எடை குறைவாகவும் ஆகிவிடும். அதிக தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், பசிக்குறைவு,உமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படும்.  
.நோய்க்குறிகள்: கண் பார்வை மங்குதல், ஆறாத புண், தோல் அரிப்பு, அதிக தாகம், வாய் வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் வலி.
இன்சுலின் ஊசி அவசியம், தினமும் இருமுறை அல்லது அதற்குமேல் தேவைப்படும். ஊசிக்கேற்றவாறு உணவு முறைப்படுத்தி உண்ணவேண்டும். 
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மாத்திரைகள் ஆகியவற்றால் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
பின் விளைகளான சிறுநீரக பாதிப்பு, கண்பார்வைக் கோளாறு, இதயநோய், பக்கவாதம், காலில் ஆறாத புண் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
 இதிலும் பின் விளைகளான சிறுநீரக பாதிப்பு, கண்பார்வைக் கோளாறு, இதயநோய், பக்கவாதம், காலில் ஆறாத புண் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.


Wednesday, 7 July 2010

சாப்பிட்டபின் சர்க்கரை அதிகமா?

சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தம் சோதனை செய்யும்போது அதிகாலையில்  உணவு, பானங்கள் எதுவும் சாப்பிடாமல் 7.00 மணிக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவும் அதன்பின் உணவு சாப்பிட்டவுடன் 2 மணி நேரம் கழித்தும் பார்ப்பார்கள்.இதை ஆங்கில்த்தில் Fasting(வெறும் வயிற்றில்) and Postprandial(உணவுக்குப்பின்) Blood Sugar tests என்று குறிப்பிடுவார்கள். வெறும் வயிற்றில் சர்க்கரை 100-120 மி.கி./டெ.லி, இருப்பதே சிறந்தது.
ஆனால் சாப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் உணவு செரித்து இரத்ததில் சர்க்கரை அளவு கூடிவிடுகிறது. இந்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே இன்சுலினின் வேலை.

உணவு சாப்பிட்டவுடன் சர்க்கரையின் அளவு சாதாரணமாக 140 மிகி. க்குள் இருப்பது சிறந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு 160 மி.கி வரை இருந்தால் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று கொள்ளலாம்.
நாம் பெரும்பாலும் தானிய உணவையே உட்கொள்ளுவதால் உணவு செரித்தவுடன் இரத்தத்தில் சர்க்கரை கூடிவிடுகிறது. அதுவும் மதிய உணவாக நாம் குழம்பு, ரசம் மோர் என்று மூன்று விதமாக சாதம் உண்பதால் சர்க்கரை மிக அதிகம் கூடிவிடுகிறது. இதில் என்ன பிரச்சினை என்றால் மதியம் அதிகம் உண்டவுடன் எந்தவித வேலையும் இல்லாது தூங்கவும் செய்கிறோம். மதியம்  சாப்பிட்டவுடன் அதிகமாகும் சர்க்கரை இரத்தக் குழாய்களை நேரடியாக பாதிக்கிறது.
இதேபோல் இரவு உணவும் நாம் 9-11 மணிவரை உண்ணுகிறோம். இதனால் இரவு முழுக்க சர்க்கரையானது மிக அதிகமாக இருக்கும். இதுவும் உடல் உறுப்புக்களை பாதிக்கும்.
சாப்பிட்டபின் சர்க்கரை அதிகமாவதைத் தடுப்பது எப்படி?
1.      அதிக மாவுச்சத்துள்ள இட்லி,தோசை,சப்பாத்தி,பொங்கல், உப்புமா ,சேமியா போன்றவைகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
2.      நார்ச்ச்த்து அதிகமுள்ள காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3.      இரவில் மைதா தோசை,நான்,பரோட்டா,பிஸ்ஸா ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
4.      மதிய உணவில் சோற்றைக்குறைத்துவிட்டு காய்கறிகளை அதிகப்படுத்த வேண்டும்.
5.      இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிடுதல் நலம்.
6.      வாரம் இரண்டு முறை மதியம், இரவு சாப்பாட்டுக்குப்பின் சர்க்கரை சோதனை செய்து அதன்படி உணவை உண்ண வேண்டும்.

அதிகப்படியான சர்க்கரை இதயத்தில் என்ன விளைவுகளை உண்டாக்குகிறது?
  1. இதயத்தில் சுவர்களில் உள்ள இரத்தக்குழாயினை சேதப்படுத்துகிறது.
  2. இதயம் வேகமாகத்துடிக்கும் நேரங்களில் இரத்தக்குழாய்கள் விரிந்து கொடுத்து அதிக இரத்தத்தை இதய தசைகளுக்குப் பாய்ச்ச வேண்டும். ஆனால் சேதமடைந்த இரத்தக்குழாய்களால் விரிந்து கொடுக்க இயலாது. இதனால் இதயத்தின் செயல்பாது குறைகிறது.
  3. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புக்கள், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாகிறது.
 ஆகையால் சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதனை வீட்டில் இரத்த சர்க்கரைமானியால் சர்க்கரை நோயாளிகள் சோதித்துக்கொள்வதும் அதன்படி உணவு, மாத்திரைகள், உடற்பயிற்சி மேற்கொள்வதும் மிக நல்லது. 

Monday, 21 June 2010

சர்க்கரை நோயும்!களைப்பும்!



சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது நோயின் அறிகுறிகள்! பல நேரங்களில் நாம் மாத்திரையோ, ஊசியோ சரியாக எடுத்துக்கொள்ளுவோம், சர்க்கரையின் அளவும் இரத்தம், நீர் ஆகியவற்றில் சரியாக இருக்கும். ஆனால் இவ்வளவு உணவுக்கட்டுப்பாடு மற்றும் மருந்துகளைச் சரியாகச் சாப்பிட்டும் சிலருக்கு,  உடல் அசதி, அன்றாட வேலைகளைக்கூடச் செய்ய முடியாமல் இருத்தல் ஆகியவை இருக்கும். சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் உடல் நலமாக இருக்கும் என்று நினைத்தால் அது சரியல்ல. உடலில் தோன்றும் அறிவுறைக்கு ஏற்ப சிகிச்சை பெறுவது மிக அவசியம்.
சர்க்கரை நோயாளிகள் அன்றாட வேளைகளைச் செய்வதற்கு சக்தி அவசியம். சர்க்கரையைக் குறைப்பதற்காக காலையில் வாக்கிங் சென்று விட்டு வந்து ஒன்று அல்லது இரண்டு இட்லியை உண்கிறார் என்றால் சர்க்கரை குறையும், ஆனால் அன்றாட வேலைகளைச் செய்வதற்கான சக்தி இருக்காது. அவரால் அலுவலக வேலைகளைச் சரிவரச் செய்ய முடியாது.
சர்க்கரை அதிகமாக இருந்தாலும் தேவையான அளவு உணவுகளை உண்ண வேண்டும். எப்படி சத்துக் குறைவு இருப்பதைக் கண்டு பிடிப்பது? உங்களால்

  • மாடிப்படி ஏறி இறங்க முடிகிறதா?(மூட்டுவலி உள்ளவர்களுக்கு சாதாரணமாகப் படிகளில் ஏறமுடியாது. அது வேறு....)
  • தரையில் அமர்ந்திருந்து இலகுவாக எழுந்துகொள்ள முடிகிறதா?
  • அன்றாட வேலைகளை அலுப்பில்லாமல்  செய்ய முடிகிறதா?
  • குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு நடக்க முடிகிறதா?
  • கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்கி வரமுடிகிறதா?
மேற்சொன்னவற்றைச் செய்ய முடிந்தால் உங்கள் உடல் தகுதியுடன் உள்ளது என்று அர்த்தம்.
 உதாரணமாக நடுத்தர வயதுடைய ஒருவருக்கு உடல் எடை75 கிலோ என்று வைத்துக்கொள்வோம். அவர் மருத்துவரை அணுகி சர்க்கரையைக் குறைக்க மருந்து,மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வருகிறார். சர்க்கரை நோய் குறையும் என்பதற்காக இவர் தினமும் நடைப்பயிற்சி செய்ய முயலுகிறார். ஆனால் அவரால் சாதாரணமாகக்கூட நடக்க முடியவில்லை, மூச்சுவாங்குகிறது( நிறையப்பேருக்கு இந்தப் பிரச்சினை உள்ளது..) என்கிறார். என்ன செய்வது? இது எதனால் இப்படி? என்றால் காரணம் அவர் உடல் தகுதி குறைவாக உள்ளது என்று அர்த்தம்!! உடல் தகுதி குறைவாக உள்ளவர்களால் நடைப் பயிற்சியில் ஈடுபட முடியாது என்பதுதான் உண்மை!
சர்க்கரை நோயாளிகள் அன்றாட உணவைத் தவிர்க்கக் கூடாது. கால சிற்றுண்டி, மதியம் சரியான நேரத்தில் அளவான மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றை அறிவுரையின்படி தவறாமல் உண்ணவேண்டும்.
நடக்க முடியாமல் உடல் தகுதியில்லாமல் இருப்பவர்கள் அன்றாடம் எவ்வளவு உணவு உண்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அவர்கள் ஒரு நாளைக்குத்தேவையான ஏறக்குறைய 1500 கலோரியைவிடக் குறைவாக உண்பார்கள். நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சில நேரம் ஒருவேளை உணவைத் தவிர்த்துவிடுவோரும் உண்டு. 
இப்படியுள்ளோருக்கு களைப்பு, உடல் சோர்வு,நடக்க முடியாமை ஆகியவை இருக்கும்.
இவர்களுடைய உணவில்{உடலில் சர்க்கரை அதிகமாக இருந்தாலும்} 1500 கலோரி இருக்குமாறு உணவை அதிகரிக்க வேண்டும். சரியான ஓய்வு மற்றும் தேவையான அளவு உறக்கம் ஆகியவை முக்கியம். இவற்றுடன் அறைக்குள் கை,கால்களை மடக்கி  நீட்டி இலகுவான பயிற்சி எடுத்துக்கொண்டால் போதும். பிறகு வராந்தாவில் மெதுவான நடைப்பயிற்சி என்று முறைப்படி, படிப்படியாகச் செய்தால் வியக்கத்தக்க முறையில் உடல் நலம் சீரடைந்து வெகுவிரைவில் களைப்பில்லாமல் நடைப்பயிற்சியில் ஈடுபட முடியும்.
ஆகையினால் உங்களுக்கு நடக்க இயலாம, அன்றாட வேளைகளைச் செய்ய முடியாத களைப்பு ஆகியவை இருந்தால் சரிவிகித உணவு உண்டு உடல் தகுதியை அதிகரித்துக் கொள்வதே அவசியம்!!!










Monday, 14 June 2010

தசை நார்களும் நீரிழிவு நோயும்!!

clip_image002

சர்க்கர நோய் உடலில் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புக்களில் தசை நார் பாதிப்பும் ஒன்று.

பொதுவாக நாம் உண்ணும் உணவு சக்தியாக உபயோகப்படுத்தப்பட வேண்டும். அன்றாட நடவடிக்கைகளுக்கும், சிறு சிறு வேலைகளைச் செய்வதற்கும் நம் உண்ணும் உணவு செரித்து அதிலிருந்து கிடைக்கும் சக்தியே உபயோகப்படுத்தப்படுகிறது.. நம்மால் உபயோகப்படுத்தப்பட்டது போக மீதமான சக்தி அல்லது சர்க்கரை இரத்த்த்தில் இருக்கும்.

தசைகளில் வலியானது இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையானது தசை நார்களில் படிவதால் ஏற்படுகிறது.

நம் உணவின் சக்தியில் 60% தசை நார்களின் செயல்பாட்டுக்கு, அதாவது உடல் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றால் செலவழிக்கப்படவேண்டும். இதில் குறைவு ஏற்பட்டால்

  • தசைப்பிடிப்பு
  • கால், கை வலி
  • கெண்டைக் கால் வலி
  • குடைச்சல்
  • உடல் வலி

ஆகியவை ஏற்படும்.

இவ்வாறு ஏற்படும்போது சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் வலி அதிகம் ஏற்பட்டு கை கால்களைப் பிடித்து மசாஜ் செய்து விட்டால் வலி குறைவது போல் தோன்றும்.

இவற்றைச் சரிசெய்ய:

  • இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
  • தினமும் நடைப்பயிற்சி அவசியம்.
  • கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் உடற்பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய வேண்டும்.

நடைப் பயிற்சியைத் துவங்குவது எப்படி?                                                                                           நடைப் பயிற்சியை  எப்படித் துவங்குவது என்பது மிக முக்கியம். நாம் ஏற்கெனவே தினசரி நடைப் பயிற்சி செய்யும் நண்பரிடம் ”நாளை முதல் நானும் உங்களுடன் நடக்க வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அதன்படி காலை 5 அல்லது 5.30 க்கு எழுந்து, அவருடன் நடப்போம். இரண்டு நாள் அல்லது சில நாட்களில் இந்த முடிவுக்கு வந்து விடும்.  ஏனென்றால் அவர் ஏற்கெனவே நடை பழகியவர்.

  • அவர் வேகத்துக்கு நாம் ஈடு கொடுக்க முடியாது   
  • அவர் செல்லும் தூரம் நாம் நடக்க முடியாது.

அப்படியென்றால் எப்படி நடைப்பயிற்சியை ஆரம்பிப்பது?  

  • நடைப்பயிற்சியை மெதுவாகவும் எளிமையாகவும் ஆரம்பிக்க வேண்டும்,
  • முதலில் 10 ந்மிடம் நடந்து வீடு திரும்புங்கள்.
  • 1 வாரம் இது போல் செய்யவும்.
  • அடுத்த வாரம் 5 நிமிடம் கூட்டிக் கொள்ளவும்.
  •  நடப்பது த்ற்போது எளிமை ஆகிவிடுகிறது அல்லவா? ஒவ்வொரு வாரமும் 5 நிமிடம் கூடுதலாக நடந்து பழகினால் உங்கள் இலக்கை எந்தக் கஷ்டமும் இன்றி விரைவில் அடையலாம்.
  • நடப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டுவருவது சிரமமாக இருக்கும், ஆனாலும் அதைக் கடைப்பிடிப்பது அவசியம்.
  • பொதுவாக உடல் நலனுக்காக நடப்பவர்கள் 20-30 நிமிடங்கள் குறைந்த பட்சம் வாரத்தில் 4-5 நாட்கள் என்ற இலக்கை எட்டுமாறு வைத்துக் கொள்ளலாம்.
  • பேச்சு வேகத்தில் நடப்பது என்றால் என்ன? நாம் நடக்கும் போது மூச்சின் வேகம் அதிகரிக்கும். நடப்பது சிரமமாகத்தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் பேசிக்கொண்டே நடப்பது எளிதாக இருக்காது. நாளடைவில் பேசிக் கொண்டே நடப்பது எளிதாகி விடும். இது உங்கள் உடல் தகுதி அதிகரித்திருப்பதைக் குறிக்கும்.                

பிட்னெஸ் நடைப் பயிற்சி: ஏற்கெனவே நடைப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்போருக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் புதிதாகப் நடைப் பயிற்சியில் ஈடுபடும் முன் மருத்துவரின் ஆலோசனை அவசியம். நல்ல நடைபயிற்சிக்கான காலணி ஷூ அவசியம்.

அதே போல் நடப்பதற்கு முன் உங்கள் சர்க்கரை அளவு 100 மி.கி க்குக் கீழ் இருந்தால் ஏதாவது சிறு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். நடப்பதற்கு முன் இரத்தத்தில் சர்க்கரை 100 க்கு மேல் இருப்பது அவசியம்.

பிட்னெஸ் வாக்கிங்க் என்றால் என்ன?  கை,கால் மூட்டுக்களுக்கு அதிக பழு ஏற்படுத்தாமல் செய்யும் நடைப் பயிற்சியே இது. சாதாரண நடையையே கொஞ்சம் கால் எட்டிப் போட்டு நடக்க வேண்டும்.

இன்னொரு வகையில் கீழ்க்கண்டவாறு மாறி மாறி நடப்பதும் மிகப் பலன் தரும்:

  • மிதமான நடை- 5 நிமிடம்,
  • கொஞ்சம் வேகம் கூட்டிய நடை-2 நிமிடம்
  • அதிவேக நடை –1 நிமிடம் 
  • 20 நிமிடங்கள் இது போல் நடப்பது உங்கள் உடல் தகுதியைக் கூட்டும்.
  • மெதுவாக உங்கள் நடை வேகம், நடக்கும் நேரம், நடக்கும் தூரம் ஆகியவற்றைக் காலப்போக்கில் உங்கள் உடல் தகுதிக்கேற்றவாறு கூட்டிக் கொள்ளலாம்.

நடைப் பயிற்சி என்பது நீரிழிவு நோயாளிகள் மட்டுமில்லாமல் அனைவருக்கும் அவசியமான ஒன்று. தொடர்ந்து நடந்து நலம் பெறுவோம்!

Thursday, 18 February 2010

சில குறிப்புகள்- மருத்துவம்!

நடைப்பயிற்சி: நடைப்பயிற்சியைப் போல் சிறப்பான உடற்பயிற்சி இல்லை என்று சொல்லுவார்கள். அதுவும் சக்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள், உடல் எடை அதிகமுள்ளவர்கள் ஆகியோருக்கு இது மிகவும் சிறந்தது.

தற்போது நடக்கும்போது இரண்டு கைகளிலும் அரைக்கிலோ அல்லது கால்கிலோ மணல் மூட்டைகளை தூக்கிக்கொண்டு நடந்தால் தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். மேலும் நீண்டதூரம் நடப்பதைவிட குறைவான தூரத்திலேயே அதிக கலோரி செலவாகி எடை குறைப்பு, சக்கரை குறைப்பு ஆகியவற்றை எளிதில் செயல்படுத்த முடியும்.

ஆயினும் இதய நோயாளிகள்,மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு, காலில் புண் பொன்றவை உள்ளவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்பே இதனைச் செய்யலாம்.

இன்றைய இளைஞர்கள் அடிக்கடி வேலை நிமித்தம் வெளியில் சென்று கொண்டிருப்பதால் தினசரி இரண்டு அல்லது சில நேரங்களில் மூன்று வேளையும் வெளியில் சாப்பிடுகிறார்கள். அப்படிச்சாப்பிடுபவர்களுக்கு குடும்பத்தில் சக்கரை நோய் இல்லாவிட்டாலும் சக்கரை நோய் இளமையிலேயே வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

வெளியில் சாப்பிடும் உணவில்
குறைந்த நார்ச்சத்து, அதிக மாவுச்சத்து, அதிக உப்பு, அதிக மசாலா, அதிக எண்ணைக் கொழுப்பு ஆகியவை உள்ளன.

அதேபோல் சக்கரை நோயாளிகளுக்கு இட்லி,தோசை செய்யும்போது உளுந்து அதிகமாகவும், அரிசி குறைவாகவும் போடவேண்டும்.
ஆனால் உணவகங்களில் அரிசி அதிகம் போடுவார்கள்.
அதேபோல் சாம்பாரில் சக்கரை, பரோட்டாவில் மாட்டுக்கொழுப்பு, சப்பாத்தி மாவில் வாழைப்பழம் போன்றவை சேர்ப்பதாலேயே உடல் எடை அதிகரித்தல், சக்கரை கூடுதல் ஆகியவை ஏற்படுகின்றன!!

Tuesday, 3 November 2009

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

 

 

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.

சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1.கால்கள்:சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2.சிறுநீரகம்: சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3.வயிறு, குடல்:அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4.மூக்கு: சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

5.பல்,ஈறுகள்: பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6.கண்கள்: கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7.காது: காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.

இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள்  நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

Saturday, 12 September 2009

மூன்று மாதத்தில் உடலில் எவ்வளவு சக்கரை இருந்தது -ஒரு சோதனை!

 

சக்கரை வியாதி எவ்வளவு சாதாரணமாகிவிட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை அது பார்ப்பதில்லை!

ஒவ்வொரு 10 வினாடியிலும் ஒரு புதிய சக்கரை நோயாளி கண்டு பிடிக்கப்படுகிறார் என்பது ஒரு அதிர்ச்சியான உண்மை!!

சக்கரை நோயாளிகள் உடலில் சக்கரையின் அளவு 24 மணி நேரமும் சீராக இருக்க வேண்டும்!! ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடியவில்லை!!

இதனால் சக்கரையின் அளவானது உடலில் சில நேரங்களில் அதிகமாக இருக்கும். குறிப்பாக மதிய உணவு உண்டவுடன்!! ஏனென்றால் நம் உணவு முறையில் மதிய உணவில் கலோரிகள் அதிகம்!

”அப்படியானால் என் ரத்தத்தில் எவ்வளவு சக்கரை கடந்த சில மாதங்களாக இருந்தது?”  

என்ற கேள்வி எழும்!!

அதனைத் தெரிந்து கொண்டால் நிச்சயம் நமது உடலில் சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்று அறிந்து கொள்ளலாம்!!

அப்படி ஒரு சோதனை இருக்கிறதா? என்று கேட்டால் ”ஆம் உள்ளது” என்பதுதான் பதில்!!

அந்த சோதனையின் பெயர் என்ன? 

அந்த சோதனையின் பெயர் Hb A1c .

இந்த சோதனையின் மூலம் கடந்த இரண்டிலிருந்து மூன்று மாதங்களாக ரத்தத்தில் சக்கரை இருந்தது என்று அறியலாம்.

இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள்வரை! இவை இரத்தத்தில் இருந்தபோது அவற்றின்  உடல் மீது இரத்தத்தில் கலந்திருக்கும் சக்கரை ஒட்டி இருக்கும். அதிகம் சக்கரை இருந்தால் அதிகமாகவும் குறைய சக்கரை இருந்தால் குறைவாகவும் ஒட்டி இருக்கும்!  இதனை அளந்தால் சக்கரை நம் ரத்தத்தில் நான் சொன்னபடி கடந்த மூன்று மாதமாக எவ்வளவு இருந்தது என்று அறியலாம்!

இதன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

1. ஏழு அல்லது 7க்குக்கீழ்- சக்கரை அளவு மிகச்சரியாக உள்ளது.

2. ஏழுக்கும் எட்டுக்கும் இடையில் - 7%-8%- பரவாயில்லை. 7க்கு குறைக்க வேண்டும்!

3.எட்டுக்கும் 10க்கும் இடையில்-இரத்தத்தில் சக்கரை மிக அதிகம்!

4.பத்துக்கு மேல்->10% - உங்கள் சக்கரை அளவு மிக மிக அதிகம்!!

ஆகையினால் சக்கரை நோயாளிகள் மற்றும் என் சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளது என்போர் இந்த சோதனையை செய்து கொள்ளலாம்!!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory