Sunday 31 October 2010

இன்சுலின் பம்ப்!இன்சுலின் பம்ப் என்பது தொடர்ந்து இன்சுலினை உடலுக்குள் செலுத்தும் ஒரு சிறிய கருவி. இதில் தேவையான இன்சுலின் மருந்து அடைக்கப்பட்டிருக்கும். சிறிய மோட்டார் ஒன்று மைக்ரோ சில்லினால் கட்டுப்படுத்தும் வகையில் இருக்கும்.இதில் உள்ள  மிகச் சிறிய உசி ஒன்று நம் உடலின் தோலுக்கடியில் பொருத்தும் வகையில் இருக்கும்.

இன்சுலின் பம்பின் வசதி என்னவென்றால் தினமும் பலமுறை  ஊசி குத்திக்கொள்ள வேண்டியது இல்லை. இதனை வயிற்றுப் பகுதியில் சுலபமாக பொருத்திக் கொள்ளலாம் . கருவி சிறிய செல்போன் போல் இருக்கும். அதனால் துணியில் பொருத்திக்கொள்ளலாம். வெளியே தெரியாது.  அதே போல் வீட்டுக்கு வராமல் வெளியிடங்களில் இருந்தால் அடிக்கடி மருந்து எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. உடலில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்று பார்த்து தேவையான அளவு எவ்வளவு என்று கருவியே கணக்கிட்டு விடும்.   

யாருக்கு இது தேவை?
 • முதல் வகை நீரிழிவு நோய் உள்ளோருக்கு 
 • சிறுநீரகம்,நரம்பு,கண், கால் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு 
 • நீரிழிவு நோயின் பின் விளைவுகள் உள்ளவர்களுக்கு 
 • சாதாரண சிகிச்சை மூலம் சர்க்கரையின் அளவு குறையாதவர்களுக்கு 
 • நீண்ட நாள் சர்க்கரை உள்ளவர்களுக்கு 
 • கர்ப்பிணிகளுக்கு
 • காரணமின்றி சர்க்கரை குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளவர்களுக்கு
இதன் முக்கிய பண்கள்:
 • சர்க்கரையின் அளவு   இரத்தத்தில் குறைந்து சரியான அளவுக்கு வரும் 
 • தாழ்நிலை சர்க்கரை ஏற்பட்டு மயங்கி விழுவது சீராகும் 
 • இரவில் தூக்கத்தில் சர்க்கரை குறைந்து விடுமோ என்று பயமின்றி உறங்கலாம் 
 • சரியான நேரத்தில் சாப்பிட முடியாதபடி பிசியாக வேலை செய்வோர் சற்று ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்போ பின்போ உண்ணலாம் 
 • வாழ்க்கைத் தரம் உயரும்.   
1970 களிலேயே கண்டு பிடிக்கப்பட்ட இந்தக் கருவி தற்போது இலட்சக் கணக்கான  மேல் நாட்டினரால் உபயோகப் படுத்தப்படுகிறது.
சரி! இவ்வளவு அருமையான இந்தக் கருவியை நாம் உபயோகிக்க முடியுமா?
முடியும்.  ஆனால் இக்கருவியின் விலை  பதினைந்து லட்ச ரூபாய். மாதம் இரண்டு ஆயிரம் ரூபாய்  மருந்துக்கு செலவாகும்.     

Tuesday 26 October 2010

உள்ள இன்சுலினைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

உடலில் உள்ள இன்சுலின் சுரக்கும் திறன் குறைவதாலேயே  இனிப்பு நோய் விரைவில் வருகிறது. பரம்பரையில் இனிப்பு நோய் இருந்தாலும் சில உணவுக்க் கட்டுப்பாடுகளால் நாம் நம் கணையத்தின் இன்சுலின் சுரக்கும் திறனைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
இனிப்பை  இர த்த த் தி ல்  அதிக மா க் கு வ து எது?
 • அரிசி
 • ராகி கேப்பை
 • சோளம் 
 • கம்பு
 • ஓட்ஸ்
 போன்ற தானிய  உணவு க ள்   அனைத்தும்  இர த்தத்தி ல்  அ தி கமா க்குகி ன்றன.
மே ற் கூ றிய வை   மா  வு ச்சத்து ப் பொரு ட்க ள்.  இவை      உட னடியாக ஜீர ண மாகி   குளு க் கோ ஸ்  ஆகிவிடுகிறது.  ஆகவே கணையம் அதிகம் இன்சுலினை  சுரக்க வேண்டியுள்ளது.
ஆகையினால் மாவுச்சத்துப் பொருட்களை அதிகம் உண்ணாமல் பிற வகை உணவுகளுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
 • சப்பாத்தி, 
 • பூரி
 • பொங்கல்,
 • இட்லி,
 • தோசை,
அனைத்தும்  மாவுச்சத்துப் பொருட்களே.  இவை செரிக்க அதிகம் இன்சுலின் தேவை.

இதற்கு என்ன செய்யலாம்?
 •  காலை  உணவு இட்லி எனில்  நான்கு இட்லிக்கு பதில்  இரண்டு இட்லி சாப்பிடலாம்.
 • இரண்டு இட்லிக்கு பதில் காய்கறி, சுண்டல், சாலட் சாப்பிடலாம்.
 இப்படி  உண்பதால் உடலுக்குத் தேவையான சக்தி இருக்காது என்று சிலர் கருதுகிறார்கள். அது தவறு. இன்சுலின் சுரப்பது பாதுகாக்கப்படுவதுடன்  உடலுக்குத் தேவையான விட்டமின்கள், நுண்ணுயிர் சத்துகள், நார்ச்சத்து , தாது உப்புகள்  ஆகியவை கிடைப்பதால்  உடல் சோர்வின்றி  அதிக நேரம் வேலை செய்ய முடியும் என்பதே உண்மை.

Friday 22 October 2010

தூக்கம்!அன்று எனக்கு 24 மணி நேரப்பணி. அதாவது காலையில் 7.00 மணிக்கு ஆரம்பித்தால் அடுத்த நாள் காலை 7.00 மணிவரை உள்ள  நோயாளிகளை நாம்தான் பார்க்க வேண்டும். பகல் வேலைகள் முடிந்து இரவு  மருத்துவமனைக்கு உள்ளேயே இருக்கும் ஓய்வறைக்குச் சென்றேன்.
பிரசவ வார்டு அருகில் குழந்தை எப்போது பிறக்கும் என்று எதிர்பார்ப்புடனும், பிறந்த குழந்தையின் உறவினர்கள் என்றும் பலர் ஆங்காங்கே வெறும் தரையில் துணியை விரித்தும், துணியை விரிக்காமல் கைலி, வேட்டியையே போர்த்திக் கொண்டும் தூங்க ஆரம்பித்திருந்தனர்.  கொசுக்களை விரட்ட அவர்களின் அருகில் கொசுவர்த்திச் சுருள்களும் ஆங்காங்கே புகைந்து கொண்டிருந்தன.
இதைப் பார்த்த எனக்கும் பாவமாகவும் இருந்தது. இந்தக் கொசுக்கடியில் குளிரில் வெறுந்தரையில் எப்படி நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.  குழந்தை பிறந்த சந்தோசத்தில் பலரும் சிரித்துப் பேசிக்கொண்டும் இருந்தனர். பணம், வசதி இல்லாத  சூழ் நிலையிலும் இவர்கள் எப்படி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டே அறை நோக்கிச் சென்றேன்.
ஏனோ சில நாள் முன்பு என்னுடன் படித்த மருத்துவ நண்பர்” மனம் விட்டுச் சிரித்தே ரொம்ப நாள் ஆகிறது என்று வருத்தத்துடன் பேசியது நினைவுக்கு வந்தது.
அறைக்குள் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன். ஏசி ஓடிக் கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய அறையில்  நான் மட்டும். வெளியில்  தரையில் படுத்திருந்தோர்  நினைவு வந்தது.
கொஞ்ச நேரத்தில் ஒரு விசம் குடித்த பெண்ணைத் தூக்கிக் கொண்டு பத்துப் பேர் வந்தனர். மருத்துவமனை ஊழியர் வந்து சொன்னார். சென்று பார்த்து சிகிச்சையை ஆரம்பித்தேன். அறைக்குத் திரும்பலாம் என்று எண்ணிய போது பாம்பு கடித்த இளைஞன் ஒருவனை ஆட்டோவிலிருந்து இறக்கினர். அவனது இரத்தத்தை சோதித்துப் பார்த்து  மருந்துகளைத் தொடர்ந்து ஏற்றிக் கொண்டிருந்தோம். வைரஸ் காய்ட்ச்சல் நேரமாதலால் நடு நடுவே காய்ச்சல் வந்தோர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது போலீஸ் வண்டி ஒன்று வந்து நின்றது. டாஸ்மாக்கில் தண்ணியடித்து விட்டு வண்டியோட்டியதாக நான்கு ஆட்களை வண்டியிலிருந்து இறக்கினார்கள்.  நான்கு பேருடனும் மல்லுக்கட்டி குடிபோதைச் சான்றிதழ்  எழுதிக் கொடுத்தேன். நால்வரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வண்டி கிளம்பியது.
சரியென்று அறைக்குள் வந்து படுக்கையில் படுத்தேன்.  உடல் அசதி கண்ணைப் பொத்தியது. அறைக்குள் வந்து 10 நிமிடம் தான் ஆகியிருந்தது.  கதவைத் தட்டும் சத்தம். கேட்டது. எழுந்து கதவைத் திறந்தேன்.அட்டெண்டர் “ அய்யா! ஆக்சிடென்ட் கேஸ்! சீரியசாக  மூன்று பேரை ஆம்புலன்சில் கொண்டு வந்திருக்கிறார்கள். சீக்கிரம் வாங்கையா! என்றான்”. பரபரப்புடன் கதவைத் திறந்து வந்தேன். மணியைப் பார்த்தேன். அட!  இரண்டு மணி!
அவசர் சிகிச்சைப்பிரிவை நோக்கி அவசரமாக நடந்தேன்!
வழியில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.

Saturday 16 October 2010

சரி! விடுங்க! நம்ம நேரம்!!

image

ஒரு  வாரம் முன்பு சாயங்காலம் 6 மணி இருக்கும்! அன்று  சனிக்கிழமை. வானம் சற்று மேகமூட்டமாக இருந்தது.

அந்த நேரத்தில் திடீரென்று சதுரங்கம் சொல்லித்தர என்னைச் சேர்த்து விடு என்று மகள் அடம் பிடிக்க ஆரம்பிக்கவும் வானம் இடி மின்னலுடன் குமுறவும் சரியாக இருந்தது. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள்தான் பயிற்சி வகுப்புகள்!  ஒரு வாரமாக வீட்டில் சொல்லி வருவதால் இன்று கிளம்பாவிட்டால் வீட்டில் குமுறி விடுவார்கள் என்பதால் சரி வருவது வரட்டும் என்று காரை எடுத்து விட்டேன்.

அதுவரை தூறிக் கொண்டிருந்த மழை காரைப் போர்ட்டிகோவிலிருந்து வெளியே எடுத்தவும் முழுவீச்சில் கொட்ட ஆரம்பித்தது.

சும்மாவே ஏழரை! மழை,இடியைக் கண்டவுடன் சும்மா இருப்பானா ஈ.பி.(E.B)? கரண்டைக் கட்டிங் போட்டுவிட்டான்.  சரி! இன்னைக்கி சகுனம் நல்லாத்தான் இருக்கு ! என்று எண்ணிக்கொண்டு “ வீட்டம்மாவிடம்” நாளைக்கு …. என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே அவரின் முகம் போன கொடூரத்தில் வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்ள பயந்து வண்டியை எடுத்து விட்டேன்.   

சரி! அட்ரஸ் என்னம்மா? என்று கேட்டேன். ”சுப்பிரமணிய புரம் நாலாவது தெருதான் வடக்குப் பக்கமா தெற்குப்பக்கமா என்று தெரியவில்லை போங்க பார்த்துக் கொள்ளலாம்” என்று வீட்டம்மாவிடமிருந்து  அசால்டாக பதில் வந்தது.

நம்ம ஊரில் எந்தக் கிறுக்கன் பேர் வைத்தான் என்று தெரியவில்லை, சுப்பிரமணியபுரத்தை இரண்டாக வகுந்து முதல் வீதி  வடக்கு, முதல் வீதி தெற்கு  என்று வரிசையாக ஏழு, எட்டுத் தெருக்களுக்கு   மொத்தமாகப் பேர் வைத்து விட்டான்.( நம் போல் தேடுகிறவனுக்குத்தானே சிக்கல் தெரியும்…)

நம்ம திறமை நமக்குத்தானே தெரியும் .பகலிலேயெ பசுமாடு…. கேஸ் நம்ம!  சரி! என்று  தைரியமாக வண்டியை எடுத்துவிட்டேன். வெளியே நல்ல இருட்டு. கார் கண்ணாடிகளிலோ நல்ல கருப்பு கூலிங் ஒட்டியிருந்தது.. பார்த்தீர்களா… எவ்வளவு சோதனை என்று. குருடன் வண்டியோட்டியதைப் போல் குத்து மதிப்பாக ஹெட்லைட் வெளிச்சத்தில் ஒட்டிக்கொண்டு போனேன்.  நாலாவது வீதி வந்து விட்டது.

ஏதாவது அடையாளம் உண்டா? என்று மனைவிடம் கேட்டேன். பார்க்குக்கு எதிர் வீடு, செஸ் சொல்லித் தரப்படும் என்று வெளியே போர்டு இருக்குமாம் என்று பதில் வந்தது.

நமக்குத் தெரிந்து புல்லே இந்த ஏரியாவில் இல்லையே! பார்க் ஏது? என்று குழப்பத்துடன் வண்டியை உருட்டிக் கொண்டு போனேன். அது தவிர பார்கெல்லாம் நம்ம ஊரில் பிளாட் போட்டு விற்று விடுவார்கள்!  ஒரு நாலு கிரவுண்ட் இடம் காலி காம்பவுண்டாக இருந்தது. காரை நிறுத்தினேன்.  உள்ளே பொட்டல், நாலு சிமிண்ட் பென்ச் இருந்தது. இதுதான் பார்க்கோ? குழப்பத்துடன் எதிரில் இருந்த வீட்டைப் பார்த்தேன். 

நல்ல வேளையாக எதிரில் இருட்டில் ஒரு நபர்  மரத்துக்குக் கீழ் நின்றிருந்தார். அந்த வீட்டில் போர்டும் இல்லை

“ சார்! பார்க் இதுதானா? “ என்றேன்.

”ஆமாம்! என்ன வேண்டும்?” என்றார். பார்க்குக்கு எதிர் வீட்டில் செஸ் சொல்லித்தருகிறார்களாமே? “ என்றேன்.

”எத்தனாவது வீதி?” என்றார்.

சுனா.புரம் 5 வது வீதி என்றேன்.

அப்படியா? இது 4 வது வீதி, நீங்க அடுத்த தெருவில் போங்க! ஒரு வீட்டில் வெளியில் போர்டு தொங்கும்” என்றார்.( ஆபத்தில்கூட கடவுள் வழி சொல்ல நமக்கு இந்த மழை இருட்டில் ஒரு ஆளை நிறுத்தி இருக்கிறாரே! என்னே உன் திரு விளையாடல்! என்று எண்ணிக்கொண்டு)  அந்த  ஆபத்பாந்தவனுக்கு  நன்றி சொல்லிவிட்டு அடுத்த தெருவுக்குப் போனேன்.

அவர் சொன்னது போல் போர்டுடன் வீடு!  அருகில் போய்ப் பார்த்தால்( கொட்டும் மழையில் குடையை வேறு விட்டுவிட்டு வந்து விட்டேன்) “ இவ்விடம் சமஸ்கிருதம் சொல்லித் தரப்படும் என்று போர்டு தொங்கியது. பக்கத்தில் ஒரு கடை!

அதில் “இங்கு செஸ் சொல்லித் தருகிறார்களா? என்றேன்.

இல்லையே! பாட்டுதான் சொல்லித்தருகிறார்கள் என்றான் அந்தக் கடை ஆசாமி!

அடையாளம் பார்க்குக்கு எதிரில் 5 வது தெருங்க என்றேன் .

சார்! என்ன நீங்க, இது 4 வது வீதி, பார்க்கெல்லாம் இங்கு இல்லை! அடுத்த தெருவுக்குப் போங்க, என்று நான் முதலில் தேடிய தெருவைக் காண்பித்தான்.  

ஒருத்தனுக்கும் தெரியவில்லையே! என்று குழப்பத்துடம் அந்தத் தெருவில் அலைந்து விட்டு மறுபடி முதலில் போன தெருவுக்குப் போய்ப் பார்க்குக்கு எதிர் வீட்டில் பார்த்து விடுவோம் என்று காரை விட்டு இறங்கினேன்.

வழி சொன்ன அன்பு நண்பர் “ என்ன சார்? கண்டு பிடிக்கலையா?” என்றார்.

”இந்த வீடா இருக்குமா? ஏனெனில் 5 வது வீதி இதுதானாம் என்றேன்.”

அப்படியா? ஒரு மணி நேரமா நிற்கிறேன், குழந்தைகள் யாரும் இங்கு வரவில்லையே! என்றார்.

சரி சார் இருங்க உள்ளே பார்ப்போம்! என்று காமபவுண்டுக்குள் மழையுடன் உள்ளே நுழைந்தேன்.

“இங்கு செஸ் சொல்லித் தரப்படும்” என்று சார்ட் பேப்பரில் எழுதில் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாதபடி கதவில் தொங்க விட்டிருந்தார்கள்.

வெளியில் நின்றிருந்த நண்பரிடம் கோபத்துடன் திரும்பினேன்.

சாரி! சார், நான் வாக்கிங் போக பார்க்குக்கு வந்தேன். சும்மா மழைக்கு ஒதுங்கினேன். இதுதான் 5 வது வீதியா? நான் ஒரு வருடமாக வாக்கிங் வருகிறேன், 4 வது வீதின்னு நினைத்துக் கொண்டிருந்தேன்” என்றார்.    

எனக்கு வந்த கோபத்தில்…….

சரி! விடுங்க! நம்ம நேரம்!!

Tuesday 12 October 2010

ஜெரி ஈசானந்தாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

அன்பின் நண்பர்களே!

இன்று பிரபல பதிவர், மதுரை தந்த பாசக்காரப் பதிவர், மதுரை மண்ணின் மைந்தர் ஜெரி ஈசானந்தாவுக்குப் பிறந்த நாள்!

மதுரை வலைப்பதிவர் குழுமம் சார்பாகவும் என் சார்பாகவும் அவர் எல்லா நலனும் பெற்று நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்!

http://jerryeshananda.blogspot.com/

பல ஞானிகளைப் போட்டோ எடுத்தால் படங்களில் சிலர் உருவம் தென்படாது என்று சொல்லுவார்கள்!

சமீபத்தில் இவரை எடுத்த போட்டோவில் இவர் தலையைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியதைக் கண்டு மதுரைக் குழுமமே வியந்து நின்றது.

இதோ அந்த போட்டோ!

எச்சரிக்கை! ரொம்பக் கூர்ந்து பார்க்கக் கூடாது! சொல்வதைக் கேட்காமல் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர்க்கு பார்வைக் கோளாறு ஏற்பட்டால்  நானோ குழுமமோ பொறுப்பல்ல!

 Jeri photo

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்     ஜெரி !

image

ஜெரியை வாழ்த்துவோர் கீழேயுள்ள இனிப்பை எடுத்துச் செல்லலாம்!!

image

தேவா.

Tuesday 5 October 2010

இந்தியா அபார வெற்றி!

image

இந்தியா ஒரு நாள் போட்டியில் வெல்வதைப்பார்த்திருப்பீர்கள்!

20/20 ல் வெல்வதைப் பார்த்திருப்பீர்கள்!

இன்று முடிந்த இந்தியா ஆஸ்திரேலியா முதல் 5 நாள்  போட்டி போல் பார்த்திருக்க முடியாது.

காலையில் விளையாட் ஆரம்பித்ததில் இருந்து ஆரம்பித்த பதட்டமும் என்ன நடக்குமோ என்ற ஆர்வமும் கடைசி வரை இருந்தது.

பாராட்டப்பட வேண்டிய வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மண்தான் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த வேளையில் 73 ரன்களை 78 பந்தில்  மன உறுதியுடன் அடித்திருக்கிறார். 

அத்துடன் வி.வி.எஸ் இடுப்புப் பிடிப்புடன் இன்று விளையாடினார். இஷாந்த் ஷர்மா முட்டிக் காயத்துக்கு ஊசி போட்டுக்கொண்டு வந்தார்.

வாழ்த்துகள் வி.வி.எஸ்!

Sunday 3 October 2010

வெற்று கலோரி-EMPTY COLORIES –என்றல் என்ன?

empty-calories[1]

  நாம் தினமும் புதுப்புது வார்த்தைகள், சொற்களை ஆங்கிலக் கட்டுரைகளில் பார்க்கிறோம்.  அந்த வார்த்தைகளைத் தமிழில் அறியச் செய்வது மிக அவசியம். “வெற்றுக்கலோரி உணவு” என்ற சொல்லும் அப்படித்தான். Empty clories அல்லது வெற்றுக்கலோரி உணவு என்றால் என்ன?

வெற்றுக்கலோரி உணவு என்பது அதிக கலோரியும் குறைந்த அத்தியாவசிய நுண் சத்துக்களும் கொண்ட உணவு ஆகும்.

வெற்றுக்கலோரி உணவுகளில் சில::

 • வறுத்த, பொரித்த கோழி
 • சிப்ஸ்
 • எண்ணெயில் பொரித்த உணவுகள்
 • துரித உணவு வகைகள்
 • மிட்டாய், பதப்படுத்தப்பட்ட இனிப்புகள்,ஐஸ்கிரீம்
 • பீர், வொயின், இதர மது வகைகள்
 • வெள்ளை கோதுமை ரொட்டி, அரிசி சாதம்
 • வெண்ணை, நெய்

மாறாக,

1225684_f520[1]

 • பொரித்த உணவுக்கு பதில் அவித்த உணவுகள்- அவித்த தோலில்லாத கோழி, அவித்த காய்கறிகள்
 • இனிப்பான குளிர்பானங்களுக்கு பதில்  புதிய இனிப்பு சேர்க்காத பழச்சாறுகக்
 • முழு தானிய ரொட்டிகள், முழு தானிய உணவுகள்- இவற்றில் நார்ச்சத்து மற்றும் நுண் சத்துகள் அதிகம் உள்ளன.
 • கொறிக்கும் உணவுகளூக்கு பதில் பழங்க்களைச் சாப்பிடலாம்.

Friday 1 October 2010

இன்சுலின் போடலாமா?

இன்றைய சர்க்கரை நோயாளிகளிடம் உள்ள பல் சந்தேகங்களில் மிக முக்கியமான ஒன்று மருத்துவர் இன்சுலின் போடச் சொல்கிறார். போடலாமா வேண்டாமா? என்பதுதான்.

 • நான்தான் சர்க்கரையையே சேர்த்துக்கொள்வதில்லையே!
 • தொடர்ந்து நடைப்பயிற்சி செய்கிறேனே?
 • உணவுக் கட்டுப்பாட்டை தீவிரமாகக் கடைப்பிடிக்கிறேனே,
 • வேப்பிலைக் கொழுந்து, குறிஞ்சாக்கீரை, நாவல்பழக் கொட்டைப்பொடி, பாகற்காய் ஆகியவற்றைத் தினமும் சாப்பிடுகிறேனே!

இவ்வளவு செய்து நான் தெம்பாக இருக்கிறேன். மருத்துவர் இன்சுலின் போடச் சொன்னாலும் நான் இந்த வழிகளில் சர்க்கரையைக் குறைத்துக் கொள்கிறேன். முன்பு எழுதிக் கொடுத்த மாத்திரைகளையே தொடர்ந்து சாப்பிடப் போகிறேன் என்று கூறுவோர் உண்டு.

மெல் சொன்னபடி நிறையப் பேர் குழம்பி இருப்பார்கள். யாருக்கு இன்சுலின் அவசியம்? என்று பார்ப்போம்.

 1. முதல் வகைச் சர்க்கரை நோய் உள்ளவர்கள்- முதல் வகைச் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குப் பிறவியிலேயே இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள்      image கணையத்தில் இல்லாது இருப்பதால் கணையம் இன்சுலினைச் சுரக்காது. ஆகையினால் இன்சுலினைத் தேவையான அளவு போட்டுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை 
 2. இரண்டாம் வகைச் சர்க்கரை நோயாளிகளுக்கு மாத்திரையானது சர்க்கரையைக் குறைக்க முடியாத நிலை ஏற்படும்போது- இரண்டாம் வகை நீரிழிவு நோயில் பீட்டா செல்களின் இன்சுலின் சுரக்கும் சக்தி குறையும் மற்றும் பீட்டா செல்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பிக்கும்.
 3. அவசர நோய் சிகிச்சையின் போது இரத்த சர்க்கரை அளவானது அதிகம் இருந்தால் இன்சுலின் போட்டுக் குறைக்க வேண்டும்.
 4. சர்க்கரை நோயினால் உடலில் உள்ள பல உறுப்புகள் செயலிழக்க ஆரம்பிக்கும். சிறுநீரகங்க்கள் பாதிப்பு ஏற்பட்டால் இன்சுலின் போட வேண்டி வரும்.
 5. சர்க்கரை  நோய் உள்ள பெண் கர்ப்பம் தரித்தால் இன்சுலின் மூலம் சர்க்கரையைக் குறைக்க வேண்டும்.
 6. இருதய அறுவை சிகிச்சையின்போது. அதன் பிறகும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவர.
 7. கண்ணுக்கு லேசர் அறுவை செய்துகொண்ட  சர்க்கரை நோயாளிகளுக்கு.
 8. பத்து வருடங்களுக்கு மேல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக மாத்திரைகளால் சர்க்கரையை குறைக்க இயலாது என்பதால்!]

எனவே பிறவியிலேயே  சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தகுந்த உட்ற்பயிற்சி உணவு முறை மூலம்  சர்க்கரை நோயிலிருந்து காத்துக்கொள்வதே சிறந்தது.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory