Friday 30 July 2010

பாம்பு கடி தெரியவேண்டியவை-10!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரியநேரத்தில் செய்யவேண்டியது அவசியம்.

உலகில் சுமார் 3500 வகை பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் 250 வகைதான் விசத்தன்மையுள்ளவை.

இந்தியாவில் சுமார் 216 வகைப்பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகைதான் விசமுள்ளவை.

ஒவ்வொரு வருடமும் ஏற்க்குறைய இரண்டு லட்சம் நபர்கள் பாம்புகடிக்கு ஆளாகிறார்கள்.அவர்களில் 15000-20000 பேர் விசத்தால் இறக்கிறார்கள்.

விசப்பாம்புகளில் நம் நாட்டில் முக்கியமானது நல்லபாம்பு(COBRA). இது படமெடுத்து ஆடும். இதன் படத்தில்( COBRA HOOD) இரண்டு கருப்பான கண் போன்ற அமைப்பு இருக்கும். கண் போன்ற அமைப்பில் சிறு தங்கநிற செதில்கள் காணப்படும்.சில பாம்புகளில் ஒற்றைக்கண் கூட உண்டு.  கருநாகத்தின் ப்டத்தில் கண் இருக்காது.

இறந்த் பாம்பில் படம் விரிந்து இருக்காது. இதற்கு அந்தக் கழுத்துப்பகுதி இணைப்புகள் இறுகி விடுவதே காரணம்.

நல்லபாம்பின் தாடையில் விசப்பற்கள் இரண்டு உண்டு. அதனருகில் ஒன்று அல்லது இரண்டு சிறு பற்கள் காணப்படலாம்.

நல்ல பாம்பின் விசக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்

நல்லபாம்பு விசமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விசமாகும்.

1.கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.

2.கடிவாயிலிருந்த் இரத்தத்துடன் நீர் கசியும்.

3.30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.

4.சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.

5. நடம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைகள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.

6.கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.

7.கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.

8.சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சுவிடுதல்( RESPIRATORY PARALYSIS) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவிலிருந்தாலும் பேசமுடியாது.

9.அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.

10.சிகிச்சை:  

 • முதலுதவி- கடிவாயின் மேல் சிறிது அகலமாக, பட்டையாக துணியால் கட்டலாம். அகலமாக அழுத்திக்கட்டுவதால் தோலுக்கடியிலுள்ள இரத்தத் தமனிகளின் வழியாக விசம் பரவுவது குறையும்.
 • கடித்த கால் அல்லது கைப்பகுதியை அசைக்காமல் வைக்க வேண்டும்.

மருந்துகள்:

 • விச முறிவு மருந்த் தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் உள்ளது. இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசதட்தையும் குணப்படுத்தும்.
 • விசம் அதிகமாக இருந்தால் செயற்கை சுவாசக் கருவிகள்(VENTILATOR) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் சிறந்தது.

நல்ல பாம்பு கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள்:

 1. அதிக அளவு விசத்தை பாம்பு கடித்து  உடலுக்குள் செலுத்துதல்,
 2. கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுவராமை, தகுந்த சிகிச்சை அளிக்காதது ஆகியவையே.

   உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.

நல்ல பாம்பு தவிர பிற பாம்புகடிகள் பற்றி அடுத்த இடுகைகளில் எழுதுகிறேன்.

Thursday 29 July 2010

அன்பால் இணைந்த பதிவர்கள்-4 மணற்கேணி!,ஜோதிபாரதி,கருணாகரசு,மனவிழிசத்ரியன்,நிஜமாநல்லவன்,ஜோ,பிரியமுடன்பிரபு,இராம.கண்ணப்பன்

..

சிங்கப்பூரில் மனவிழி சத்திரியன், கருணாகரசு ஆகிய இருவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் இணைபிரியா நண்பர்கள். பரபரப்பாக நேரமின்றி இயங்கும் சிங்கையில் இப்படிப்பட்ட நட்புகள் அமைவது மிகச் சிறப்பு. கீழேயுள்ள பத்தில் இருப்பது மனவிழி சத்திரியன், அதற்குக் கீழ் சிவகுமாரிடம் பரிசு பெறுபவர் அன்பு நண்பர் கருணாகரசு. கருணாகரசு கவிமாலை, பட்டிமன்றங்களில் பிரபலமான கவிஞர்.

clip_image002

மனவிழி சத்திரியன்

clip_image004

பரிசு பெறும் கருணாகரசு.

சிங்கப்பூரில் உண்மையாகவே நல்லவர் இவர்தான். நான் சொல்லத்தேவையில்லை, உங்களுக்கே தெரியும். சிரிப்பைத் தவிர இவர் முகத்தில் வேறு எதையும் பார்க்க முடியாது.

clip_image006

நிஜமா நல்லவன்

கடல்புறத்தான் ’ஜோ’ மணற்கேணி அமைப்பின் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் விரிவாக எடுத்துரைத்தார். மிக அமைதியான இவரும் நிஜமா நல்லவர்தான்.

clip_image008

ஜோ http://cdjm.blogspot.com/

ஜோதிபாரதி http://jothibharathi.blogspot.com/ அத்திவெட்டி அலசலில் நாட்டுநடப்புகளைத் தீவிரமான அலசுபவர். பிளாகர் அடையாளப் படத்தில் காண்பதை விட இளமையாகவும், இனியவராகவும் இருந்தார்.

ஜோதிபாரதி

அன்பும், ஆர்வமும் கொண்ட இளைஞர்களால் நிரம்பியுள்ளது சிங்கைப் பதிவர்களின் மணற்கேணி அமைப்பு. பரிசு பெற்ற கட்டுரைகளை ஆங்க்மோக்யோ நூலகத்தின் தக்காளி அறையில்

clip_image010

நடந்த கருத்தரங்கில் அக்குவேறு, ஆணிவேறாக அலசி, கட்டுரையாளர்களிடம் கேள்விகளைத் தொடுத்து பிரமிப்பில் ஆழ்த்தினர்.

தருமி ஐயா கட்டுரையை குழலி அறிமுகம் செய்வித்தார். இருபுற அலசல்கள், உணர்ச்சிகரமான அணுகல், நேற்றைய, இன்றைய நிலவரங்கள், வழக்குகள், புள்ளி விவரங்கள் ஆகியவை பற்றி குறிப்பிட்டார். இடப்பங்கீடு என்ற தலைப்பை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்.
அடுத்து மருத்துவர் தேவன்மாயத்தின் கட்டுரையை கோவி கண்ணன் ஆய்வு செய்தார். சரியான சொல்தேடலால்புரிதல் எளிதாகிறது என்பதிலிருந்து, நம் மேற்படிப்புகளைத் தமிழில் நடத்த முடியுமா என்ற வினாவையும் எழுப்பினார். இலங்கையில் மருத்துவம் தமிழில் சொல்லிக் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது.

பிரபாகரின் கட்டுரையை முகவை ராம் அறிமுகம் செய்வித்தார். கட்டுரையில் தமிழ் இசையின் முழு வரலாறு, பக்தி இசை, இசையில் சமயங்களின் ஈடுபாடுஇசை ஆர்வலர்களின் அளிப்புகள், அரசியலின் தாக்கம் என்பவற்றைக் கூறி இசை நோக்கிய பயணத்தின் அடுத்த அடிக்குச் செல்லும் சிறப்பான கட்டுரை என்று கூறி முடித்தார்.
அதன்பின் நடுவரின் குறிப்புகளும் வாசிக்கப்பட்டன. பிரபாகர் தன் ஏற்புரையில் தான் கட்டுரையில் எடுத்துக் கொண்டவைகளைப் பற்றியும், இசையைப் பற்றிய பொதுப்பார்வையையும், தமிழிசையின் இன்றைய நிலைப்பாடுகள், வேறுபாடுகள் பற்றியும் அளித்தவையும், குட்டி musical demo-வும் அவையோரைக் கட்டி வைத்தது. (நன்றி- உரை உதவி திரு.தருமி மேலும் இது பற்றி வாசிக்க: http://dharumi.blogspot.com/2010/06/397-1.html)

நல்ல வேளை இவர்கள் தமிழ்நாட்டில் இல்லை, இல்லையென்றால் கட்டுரையாளர்களுக்கு(எங்களுக்கு)ப் பெரும் போட்டியாக இருந்திருப்பர்.

சிங்கப்பூர் வாழையிலை செல்லப்பா(காரைக்குடி) - உணவகத்தில் நடந்த மணற்கேணி கட்டுரையாளர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் நிறைய இளம் பதிவர்களின் சுறு சுறுப்பான செயல்திறனைக் காண முடிந்தது.

பிரியமுடன் பிரபுவை அங்கு சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது. கூகிள் சாட்டில் என்னுடன் தொடர்ந்து கதைக்கும் இனிய நண்பர் பிரியமுடன் பிரபு.

clip_image012

பிரியமுடன் பிரபு.

மணற்கேணி அமைப்பு நம் இளம் பதிவர்களால் நடத்தப்படுவது போல் ‘வாசகர் வட்டம்” என்ற அமைப்பும் அங்கு செயல்படுகிறது. இதிலும் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உள்ளனர். இவர்களையும் தம் விழாக்களில் இணைத்துக்கொண்டது மணற்கேணி அமைப்பு. வாசகர் வட்ட முக்கிய நபரான இராம.கண்ணப்பன் பரிசளிப்பு விழா உள்ளிட்ட விழாக்களில் கலந்து கொண்டார்.

clip_image014

மேலே இராம.கண்ணப்பன் அவர்கள்!

சிங்கைத் தமிழ் எழுத்துகளின் வரலாறு பற்றி நம்முடன் சிறப்பாகப் பகிர்ந்து கொண்டார்.

Singapore banana leaf Appollo உணவகத்தின் உணவு வகைகள் மிகச்சுவையானவை. பெரிய இறால் வறுவல் முதல் அனைத்து வித உணவுகளையும் அனைவரும் ஒரு கை பார்த்தனர்.

clip_image016

clip_image018

அருமையான உணவு அது ஏனெனில் அது நம்ம காரைக்குடிக்காரரான திரு.செல்லப்பன் அவர்களால் நடத்தப்படுவது. Stomach is not the burial ground of all animals –என்பதற்கிணங்க அளவாகவே உணவை ருசித்தேன்.

தமிழ்த்துளி தேவா.

Tuesday 27 July 2010

அன்பால் இணைந்த பதிவர்கள்-3

 

 

அன்பால் இணைந்த பதிவர்கள்!

http://abidheva.blogspot.com/2010/06/blog-post_04.html

சிங்கம்டா!!

 http://abidheva.blogspot.com/2010/05/blog-post_31.html

அன்பால் இணைந்த பதிவர்கள்-2

http://abidheva.blogspot.com/2010/06/2.html

மணற்கேணி அமைப்பு சிங்கப்பூரில் உள்ள தமிழ் நண்பர்களால் தமிழ் வளர்க்கும் நோக்குடன் தொடங்கப்பட்டது. அரசியல், மொழி போன்று பல்வேறு தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகள் அதில் வருடா வருடம் நடத்தப்படுகின்றன். அவற்றில் வெற்றி பெறும் மூன்று கட்டுரையாளர்களுக்கு ஒரு வாரம் சிங்கப்பூர் சென்று வரும் வசதியை அவர்கள் செய்து தருகிறார்கள்.

விமானப்பயணம் பல முறை சந்தர்ப்பம் இருந்தாலும் பல்வேறு காரணங்களால செல்ல இயலாமல் இருந்த்து. அன்பான, துடிப்பன மணற்கேணி இளைஞர்களால் என் கனவு நனவானது. நன்றி மணற்கேணி. 

லிட்டில் இந்தியா: சிங்கப்பூர் சென்றவுடன் நம்மைக் கவர்ந்திழுப்பது லிட்டில் இந்தியா பகுதிதான். லிட்டில் இந்தியா என்று பெயர் இருந்தாலும் தமிழர்கள்தான் இங்கு அதிகம் . தென்இந்திய உணவுகளுக்குப் பிரபலமான ‘முருகன் இட்லிக்கடை’. கோமள விலாஸ், சகுந்தலா. அஞ்சப்பர், ஆச்சி ஆகிய உணவகங்கள் இங்குதான் உள்ளன.

clip_image002

காலை உணவு முருகன் இட்லிக்கடையில் சிறப்பாக இருந்தது. காபி நம் ஊரில் போல் இங்கு அளவுடன் தருகிறார்கள். சிங்கையில் பல உணவகங்களில் ஒரு காபி வேண்டும் என்று கேட்டால் ஒரு பெரிய குவளை நிறையத் தந்துவிடுவார்கள். ஆகையினால் இரண்டு நபர்கள் செல்லும்போது ஒரு காபி கேட்டு அளவைப்பார்த்து விட்டு தேவையைச் சொல்லுவதே நல்லது.

மதிய உணவு சகுந்தலா, ஆச்சி ஆகியவற்றில் சாப்பிட்டால் நம் ஊரில் சாப்பிடுவது போல் இருக்கும்.

clip_image004

சாப்பாடு கோழிசாப்பாடு, கறி சாப்பாடு. மீன் சாப்பாடு,இறால் சாப்பாடு என்று தருகிறார்கள். இறால் சாப்பாடு 7 சிங்கை டாலர்கள். இறால் நம் விருப்பம்போல் இறால் வறுவல் அல்லது இறால் தொக்கு என்று வாங்கிக்கொள்ளலாம். சாப்பாடு எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

எங்களுக்கு அருகில் அமர்ந்து மூன்று தமிழ் இளைஞர்கள் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மூன்று பேரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ’வேறு எதுவும் வேண்டுமா?’ என்று அந்த பணியாள் கேட்டு விட்டு பில்லைக் கொடுத்தான். மூவரில் ஒருவன் “ இப்பத்தான் சாப்பிட ஆரம்பித்துள்ளேன். போய் பிரியாணி கொண்டுவாப்பா” என்றான். மறுபடியும் பிரியாணி பாத்திரத்திலிருந்து எடுத்துப் பரிமாறினார்கள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அங்கு பிரியாணியும் அன்லிமிட். கிட்டத்தட்ட மூன்று பிளேட் பிரியாணியை முடித்தான் அந்த அன்புத் தமிழன்.( அவ்வளவு நேரம் நீ என்ன செய்தாய் என்றெல்லாம் கேட்கக்கூடாது...இஃகி! இஃகி!!)

அங்கிருந்த ஒவ்வொரு நாளும்

குழலிhttp://kuzhali.blogspot.com/,

கோவி.கண்ணன்http://govikannan.blogspot.com/

 

 

போன்றோரின் கவனிப்பும் அன்பும் சிறப்பாக இருந்தன. பொதுவகவே சிங்கையில் பணியாற்றும் தமிழ் நண்பர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். நமக்கு இருப்பது போல் மருத்துவ விடுப்புகள் அதிகம் அங்கு இல்லை. குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் போனால் மருத்துவ விடுப்புக்கு சம்பளம் இல்லையாம். மேலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் அவர்களால் அலுவலக நேரத்தில் மட்டம் போட இயலவில்லை. நமக்காக ஒருவர் மாற்றி ஒருவர் விடுப்பு எடுத்து கவனித்தது மிகவும் மனம் நெகிழ வைத்தது.

அறைக்கு வந்து அங்கிருந்த் வசதிகளைப்பார்த்து, நமக்கு என்ன வேண்டும் என்று விசாரித்து, கூடவே உணவகத்துக்கு அழைத்துச்சென்று மீண்டும் அறையில் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்ற விருந்தோம்பல் தமிழர் என்கிருந்தாலும் தன் வேர்களைத் துண்டித்துக் கொள்வதில்லை, மாறாக  த்மிழ்த்தாய் என்னும் ஆலமரத்துக்கு பலம் சேர்க்கும் ஒரு விழுதாகவே சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறார்கள்  எனறால் அது  மிகையில்லை!!

(இன்னும் வரும்- அடுத்த மணற்கேணி அறிவிப்பு வரும் வரை எழுதிக்கிட்டே இருப்போம்ல!!!- அதையும் தாண்டி எழுதுவேன் என்கிறீர்களா?, அதுவும் சரிதான்!!)

தமிழ்த்துளி தேவா.

Friday 23 July 2010

கொஞ்சம் தேநீர்- தொலைதல்!

சுயம் கிழிந்து
மன ஆழங்களில்
மவுனமாய்
கரைந்தோடும்
என் பொழுதுகள்!

வெம்மையை
வெட்டி வெட்டிச்
செதுக்குகிறேன்,
முழுமையடையாத
என் யுகத்தை!

உணர்வுகள் இறுகிய
முகங்களில்
சிதறிக் கழிகிறதென்
தேடல்கள்.

தவறி விழும்
கனவுகளைச் சேகரித்துப்
பதுக்குகிறேன்
சிதைந்து போன
என் பிம்பங்களில்1

உயிர் உறங்கும்
இருளிலும்
திசைகளைத்
தேடித் தேடி
தொலைந்து போகிறேன்
கனவுகளில்!

மதுரை பதிவர் சந்திப்பு- 20.07.2010

மதுரையில் பதிவர்கள் சந்தித்து சிறிது காலம் ஆகிவிட்டதே என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருந்தது. சிறு சிறு சந்திப்புகள் நிகழ்ந்தாலும் நான் அவற்றில்
கலந்துகொள்ள(கொல்ல!!) இயலவில்லை.
தற்போது வேறு வழியில்லை! பதிவுலகில் நட்புக்கு மிகுந்த மரியாதை தருபவரும், பதிவுலக நண்பர்களைச் சந்திப்பதற்கு தன் இந்தியப் பயணத்தில் அதிக காலம் செலவிடுபவருமான... ஆம் ! வேறு யார்? திரு.இராகவன் அவர்களின் வருகிறார் என்றால் அதை விட முக்கிய வேலை என்ன? - சென்றுதான் ஆகவேண்டும் என்பது நான் இப்போது எடுத்த முடிவல்ல, போன வருடம் நான் அவரை மதுரையில சந்திக்க இயலாமல் போனபோதே எடுத்த் முடிவு!
சீனா ஐயா தன்னுடைய துணைவியார்அம்மா.செல்விஷங்கர்
அவர்களுடன்
வந்து சேர்ந்தார். ஸ்ரீதர்,பாலகுமார், மதுரை சரவணன், ஜெரி, தேனி
சுந்தர் ஆகியநண்பர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.
காரைக்குடியில் இருந்து நானும் கடைசியாக தருமி ஐயாவும்
வந்து சேர்ந்து
கொண்டார்.
அண்ணன் இராகவனுடன் பேசும்போது நீண்ட நாள்
நண்பருடன் பேசிய
உணர்வு ஏற்பட்டது. மிகுந்த அன்பு மிக்க சகோதரர் ஒருவர்
கிடைத்த
மகிழ்வு எனக்கு.( வலையுலகில் நிறையப்பேருக்கு அவர்
பாசமிகு அண்ணன்!! ).
கலகலப்பான பேச்சுடன் உணவுக்கு விடுதியின் மொட்டை
மாடிக்குச் சென்றோம்.
சைவ உணவு , அசைவ உணவு என்று இரு அணிகளாகப்
பிரிந்து களத்தில் இறங்கினோம்.
ரொட்டி,பிரியாணியை முதலில் கொண்டு வராமல்
வறுவல்மீன், கோழிடிக்கா, இறால் ஆகியவற்றை
( இது உணவக தந்திரமோ?) முதலில் கொண்டு வந்து
வைத்தான் விவரமான சர்வர்.
பசியுடன் ஒரு மரியாதைக்காக பிரியாணி வந்தவுடன்
சாப்பிடலாம் என்று பார்த்தால் மக்கள் அசுர வேகத்தில்
இயங்கி தட்டுகளை காலி செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
பிறகென்ன! நானும் களத்தில் இறங்க
வேண்டியதாயிற்று.

உணவின் ஊடே தான் முன்பு உண்ட பழைய சாதம், தயிர்,
சின்ன வெங்காயத்தின் சுவையை இராகவன் நினைவு
கூர்ந்தார். ஆர்டர் செய்திருந்த வெண்ணெய் போன்ற
தயிர் சாதத்தையும் விடாது வழித்து அடித்தார்
( உணவை மிச்சம் வைக்கக் கூடாதில்ல!!)

ஜெரி ஈசானந்தா,இரா.நைஜீ, தருமி, சரவணன்
உணவு முடிந்து 9.45 போல் ”படம் எடுக்கும் படலம்”
ஆரம்பம்! அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொள்ள
சந்திப்பு இனிதே முடிந்தது.

மதுரை உணவகத்தில் இரா.நைஜீரியா கேட்ட வத்தக் குழம்பு மட்டும் கிடைக்கவில்லை( இராத்திரி 9.00 மணிக்கு
வத்தக்குழம்பு இல்லாமல் என்னய்யா ஸ்டார் ஹோட்டல் நடத்துறீங்க? என்று கேட்க நினைத்தேன், கேட்கவில்லை!!! . தலைவர் தொப்பையில்லாமல் வற்றிய வயிறுடன் சிக்ஸ் பேக்கில் இருக்க வத்தக் குழம்புதான் காரணமோ? அடுத்து
இந்த நைஜீரிய எக்ஸ்பிரஸ் செல்லும் ஊர்களில் சுவையான வத்தக்குழம்பு ஏற்பாடு செய்யுங்கள் மக்களே!!

இரவு 12.45க்கு காரைக்குடி வந்து உறங்கிப்போனேன்!!ஒளிப்படங்களைப்பார்க்கவும்!

Wednesday 14 July 2010

சர்க்கரை நோய் ஏன் வருகிறது? முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்!

சர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்.ஆயினும் சர்க்கரை நோய்
 • ஏன் சர்க்கரை நோய் வருகிறது?
 • என் பெற்றோருக்கு நீரிழிவு நோய் உள்ளது..எனக்கு வருமா?
என்ற கேள்விகளைப் பலரும் எழுப்புகின்றனர். இதற்கு நாம் அறிவியல் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். இக்கட்டுரை இந்த நோய் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோருக்கும், இந்நோய் பாதிக்கப்பட்டோருக்கும், நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்போர் குடும்பத்தினருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இங்கு மிகவும் விரிவாக அறிவியல் விளக்கங்கள் எழுதாமல் முடிந்த அளவு எளிமையாக எழுதியுள்ளேன். இதைப் படிக்கும் என் அன்பு நண்பர்கள், இத்தகைய கட்டுரைகளின் தேவை பற்றி எனக்குப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நீரிழிவு நோயைப் பொதுவாக  இரண்டு வகைப்படுத்தலாம்.
1.முதல்வகை நீரிழிவு நோய்
2.இரண்டாம் வகை நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் வரக்காரணங்கள்.
நீரிழிவு நோய் வர நிறையக் காரணங்கள் உள்ளன. 
 • மரபு வழி- அம்மாவுக்கு நீரிழிவு இருந்தால் 2- 3% பிள்ளைகளுக்கு வரலாம். அப்பாவுக்கு இருந்தால் 3% க்கு சற்று அதிகமாக வரலாம். தாய் தந்தை இருவருக்கும் இருந்தால் நீரிழிவு வரும் வாய்ப்புக்கள் இன்னும் அதிகம். 
 • உணவுக்குறைபாடு- குறைந்த புரத உணவு, நார்ச்சத்துக் குறைவான உணவு 
 • உடல் எடை, கொழுப்பு அதிகம்
 • உடலுழைப்பற்ற வேலை
 • மன அழுத்தம்
 • மருந்துகளால் - வேறு நோய்களுக்குக் கொடுக்கும் சில மருந்துகள்   நீரிழிவு நோயைத் தூண்டுபவை.
 • கணையத்தில் கிருமித் தொற்று.
 • இரத்த அழுத்தம்
 • இரத்தத்தில் கொழுப்பு அதிகமிருத்தல்
 • புகை பிடித்தல்- புகைக்கும் பழக்கம் உள்ளோருக்கு நிரிழிவு நோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம். அவர்களுக்கு கண் கோளாறும், மூட்டுத்தேய்வும் ஏற்படும். நீரிழிவு நோயாளிகள் அதிகம் புகைத்தால் வாழ்நாள் குறையும். 

முதல் வகை நீரிழிவு மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்களிடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் காணப்படுகின்றன. அவற்றைத் தெரிந்துகொண்டாலே நோய் பற்றி ஓரளவு தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முதல் வகை நீரிழிவு( Type 1 Diabetes Mellitus)
இரண்டாம் வகை நீரிழிவு(Type 2 Diabetes Mellitus)
இன்சுலின் உடலில் உற்பத்தியாகாது.
இன்சுலின் உடலில் உற்பத்தியாகும்.
நோய் வருவதைத் தடுக்க முடியாது.
நோய் வருவதைத் தடுக்கலாம்.
அதிக உடற்பயிற்சியாலோ, உணவுக்கட்டுப்பாட்டாலோ வராமல் தடுக்க முடியாது.
தடுக்கலாம்.
கணையத்தில் பீட்டா செல்கள் இருக்காது.
கணையத்தில் பீட்டா செல்கள் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளில் 15% பேர் இந்த வகையினர்.
85% பேர் இந்த வகையினர்!
சிறு வயதிலேயே ஆரம்பித்து விடும்.(குழந்தைகளிலும்!)
நடு வயதில் ஆரம்பிக்கும்.

இரத்த அழுத்தம், அதிக உடல் எடை ஆகியவற்றால் வரலாம்.நோயாளிகளில் 55% பேர் உடல் எடை அதிகமுள்ளவர்கள்.
நோய்க்குறிகளும், விளைவுகளும் கடுமையாக இருக்கும். குழந்தை பலகீனமாகவும், உடல் எடை குறைவாகவும் ஆகிவிடும். அதிக தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், பசிக்குறைவு,உமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படும்.  
.நோய்க்குறிகள்: கண் பார்வை மங்குதல், ஆறாத புண், தோல் அரிப்பு, அதிக தாகம், வாய் வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் வலி.
இன்சுலின் ஊசி அவசியம், தினமும் இருமுறை அல்லது அதற்குமேல் தேவைப்படும். ஊசிக்கேற்றவாறு உணவு முறைப்படுத்தி உண்ணவேண்டும். 
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மாத்திரைகள் ஆகியவற்றால் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
பின் விளைகளான சிறுநீரக பாதிப்பு, கண்பார்வைக் கோளாறு, இதயநோய், பக்கவாதம், காலில் ஆறாத புண் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
 இதிலும் பின் விளைகளான சிறுநீரக பாதிப்பு, கண்பார்வைக் கோளாறு, இதயநோய், பக்கவாதம், காலில் ஆறாத புண் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.


Sunday 11 July 2010

ஜோசப் பால்ராஜுக்கு வாழ்த்துக்கள்!!

அன்பின் நண்பர்களே!!

இன்று நம் நண்பர் மாரனேரி ஜோசப் பால்ராஜுக்குப் பிறந்த நாள்!!
 தஞ்சையில் பிறந்து சிங்கையில் பணிபுரியும் ஜோசப் பால்ராஜ் சிங்கப்பூர் மணற்கேணியின் முதுகெலும்புகளில் ஒருவர். 

“என்னை மாதிரி நாடு விட்டு நாடு போறவங்களை அதிகமா பாதிக்கறது தனிமைதான். அது எனக்கு இல்லை. நான் தனியாளில்லைன்னு எனக்கு உரக்கச் சொன்னது பதிவுலகம்தான். அதேமாதிரி எந்த நாடு, எந்த ஊர் போனாலும் இறங்கின உடனே என்னை வரவேற்கறது என் பதிவுலக நண்பர்கள்தான். அதைவிட வேறென்ன வேணும். சொல்லுங்க?”
என்று கூறும் இவர் தன் சிறப்பான பொதுத்தொண்டுகளால் பதிவுலகுக்குப் பெருமை சேர்ப்பவர். 
சிங்கைக்குச் சென்றிருந்த போது இங்கிருந்து விமானச் சீட்டு வாங்குவதிலிருந்து அனைத்துக்கும் உதவி செய்ததும் விமான நிலையத்துக்கே வந்து அழைத்துச் சென்றதும் மறக்க முடியாதவை. கடின வேலைகளுக்கிடையிலும் கிளம்பும்போதும் விமான நிலையம் வந்து வழியனுப்பிய அன்புள்ளம் கொண்ட,


இனிய நண்பருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

டிஸ்கி: யூசூப் பால்ராஜ் ஐய்யங்கார் என்றால் என்ன ஜோதிபாரதி??


தேவா..

Wednesday 7 July 2010

சாப்பிட்டபின் சர்க்கரை அதிகமா?

சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தம் சோதனை செய்யும்போது அதிகாலையில்  உணவு, பானங்கள் எதுவும் சாப்பிடாமல் 7.00 மணிக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவும் அதன்பின் உணவு சாப்பிட்டவுடன் 2 மணி நேரம் கழித்தும் பார்ப்பார்கள்.இதை ஆங்கில்த்தில் Fasting(வெறும் வயிற்றில்) and Postprandial(உணவுக்குப்பின்) Blood Sugar tests என்று குறிப்பிடுவார்கள். வெறும் வயிற்றில் சர்க்கரை 100-120 மி.கி./டெ.லி, இருப்பதே சிறந்தது.
ஆனால் சாப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் உணவு செரித்து இரத்ததில் சர்க்கரை அளவு கூடிவிடுகிறது. இந்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே இன்சுலினின் வேலை.

உணவு சாப்பிட்டவுடன் சர்க்கரையின் அளவு சாதாரணமாக 140 மிகி. க்குள் இருப்பது சிறந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு 160 மி.கி வரை இருந்தால் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று கொள்ளலாம்.
நாம் பெரும்பாலும் தானிய உணவையே உட்கொள்ளுவதால் உணவு செரித்தவுடன் இரத்தத்தில் சர்க்கரை கூடிவிடுகிறது. அதுவும் மதிய உணவாக நாம் குழம்பு, ரசம் மோர் என்று மூன்று விதமாக சாதம் உண்பதால் சர்க்கரை மிக அதிகம் கூடிவிடுகிறது. இதில் என்ன பிரச்சினை என்றால் மதியம் அதிகம் உண்டவுடன் எந்தவித வேலையும் இல்லாது தூங்கவும் செய்கிறோம். மதியம்  சாப்பிட்டவுடன் அதிகமாகும் சர்க்கரை இரத்தக் குழாய்களை நேரடியாக பாதிக்கிறது.
இதேபோல் இரவு உணவும் நாம் 9-11 மணிவரை உண்ணுகிறோம். இதனால் இரவு முழுக்க சர்க்கரையானது மிக அதிகமாக இருக்கும். இதுவும் உடல் உறுப்புக்களை பாதிக்கும்.
சாப்பிட்டபின் சர்க்கரை அதிகமாவதைத் தடுப்பது எப்படி?
1.      அதிக மாவுச்சத்துள்ள இட்லி,தோசை,சப்பாத்தி,பொங்கல், உப்புமா ,சேமியா போன்றவைகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
2.      நார்ச்ச்த்து அதிகமுள்ள காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3.      இரவில் மைதா தோசை,நான்,பரோட்டா,பிஸ்ஸா ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
4.      மதிய உணவில் சோற்றைக்குறைத்துவிட்டு காய்கறிகளை அதிகப்படுத்த வேண்டும்.
5.      இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிடுதல் நலம்.
6.      வாரம் இரண்டு முறை மதியம், இரவு சாப்பாட்டுக்குப்பின் சர்க்கரை சோதனை செய்து அதன்படி உணவை உண்ண வேண்டும்.

அதிகப்படியான சர்க்கரை இதயத்தில் என்ன விளைவுகளை உண்டாக்குகிறது?
 1. இதயத்தில் சுவர்களில் உள்ள இரத்தக்குழாயினை சேதப்படுத்துகிறது.
 2. இதயம் வேகமாகத்துடிக்கும் நேரங்களில் இரத்தக்குழாய்கள் விரிந்து கொடுத்து அதிக இரத்தத்தை இதய தசைகளுக்குப் பாய்ச்ச வேண்டும். ஆனால் சேதமடைந்த இரத்தக்குழாய்களால் விரிந்து கொடுக்க இயலாது. இதனால் இதயத்தின் செயல்பாது குறைகிறது.
 3. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புக்கள், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாகிறது.
 ஆகையால் சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதனை வீட்டில் இரத்த சர்க்கரைமானியால் சர்க்கரை நோயாளிகள் சோதித்துக்கொள்வதும் அதன்படி உணவு, மாத்திரைகள், உடற்பயிற்சி மேற்கொள்வதும் மிக நல்லது. 

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory