ஆறு மாதங்களுக்கு முன் என்னிடம் ஒரு பெண் நோயாளியை அழைத்து வந்திருந்தனர். அழைத்து வந்தவர்கள் என் நீண்ட நாள் நண்பர்கள். ஆனால் அந்தப்பெண்ணுக்கு 35 வயதிருக்கும். முகமெல்லாம் வீங்கி உடல் மெலிந்து, கண்களில் மரண பயத்துடன் இருந்தார்.
கொஞ்ச நேரம் கழித்தே அவரை எனக்கு அடையாளம் தெரிந்தது. அவரும் அவருடைய அக்காவும் தையல் கடை வைத்திருந்தனர்.கடினமாக் உழைக்கும் இருவரும் அடிக்கடி பக்கத்தில் உள்ள மருந்துக்கடையில் கை கால் வலிக்கு மாத்திரை வாங்கிச்சாப்பிடுவார்கள். 10-15 வருடமாக இது நடந்துவந்தது.
இந்த வயதில் அந்தப் பெண்ணிற்கு என்ன வியாதி? அதுதான் வலிநீக்கியால் உண்டாகும் சிறுநீரக செயலிழப்பு.( அனல்ஜெசிச் நெஃப்ரோபதி)
அன்பு நண்பர்களே! அனல்ஜெசிச் என்றால் வலிநீக்கி மருந்துகளைக் குறிக்கும். நெஃப்ரோ- என்றால் ”சிறுநீரகம் சார்ந்த” என்று கொள்ளலாம்.
1.எந்த மருந்துகளால் பொதுவாக வருகிறது?
- ஆஸ்பிரின்- aspirin
- பாரசிடமால்-acetaminophen
- புருஃபன்-ibuprofen
- டைக்ளோஃபெனாக்-Diclofenac sodium
- இது போன்ற பல வலிநீக்கிகளை உண்ணும்போது.
2.ஆண்,பெண் இருபாலரில் யாருக்கு அதிகமாக வருகிறது?
30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு.
3.இந்த நோயின் அற்குறிகள் என்ன?
- உடல் சோர்வு
- சிறுநீரில் இரத்தம்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- சிறுநீரின் அளவு குறைதல்
- முகம், உடல் வீக்கம்
- முதுகு இடுப்பின் பக்கவாட்டில் வலி
- சிலருக்கு மேலே சொன்னவை இல்லாமலும் இருக்கலாம்.
4.என்ன பரிசோதனைகள் செய்யலாம்?
- இரத்த யூரியாநைட்ரஜன் Blood Urea Nitrogen- 7-18மிகி/டெ.லிட்டர்
- கிரியேட்டினின் - Serum creatinine- 0.7-1.5மிகி%
- மேலும் பொதுவான இரத்தப்பரிசோதனைகள்.
5.இது வராமல் தடுப்பது எப்படி?
வலி நிவாரணிகளை அடிக்கடி உண்பதை நிறுத்த வேண்டும்.
வலி நீக்கிகள் இந்தியாவில் மருந்துக்கடைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. மருத்துவர்கள் தரும் மாத்திரைகளைவிட வீரியமான மருந்துகளை கடைகளில் தருகின்றனர். இதற்கு ஏழை மக்களில் பலர் அடிமையாகவே இருக்கிறார்கள்.
இது பற்றிய விழிப்புணர்வு மேலைநாடுகளில் ஏற்பட்டுள்ளதல் இதனால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகள் அங்கு குறைய ஆரம்பித்துள்ளன.
நம் நாட்டில் வலிநிவாரணியால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு மிக அதிகமாக உள்ளது. நாமும் விழிப்புணர்வு பெறுவோம்.