விடுமுறை நாள் அது!
இன்னைக்காவது சண்டையில்லாமல் அதிகம் வாய் கொடுக்காமல்(மனைவியிடம்!!)அமைதியாக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்!
விடுமுறைன்னா நிறையப் பேருக்கு ஜாலியாக இருக்கும். நமக்கு அப்படி இல்லீங்க! வீட்டில் பெரிய சண்டைகள் வெடிக்கும் நாளே அதுதான் ( அனுபவஸ்தர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்!!)
கொஞ்சம் களைப்பாக இருப்பது போல் தோன்றியதால் சரி படுக்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன். தலையணை கொஞ்சம் அழுக்காக இருப்பது போல் தெரிந்தது. “என்ன தலையணையெல்லாம் அழுக்காக இருப்பதுபோல் தெரியுதே” என்றேன்.
ஹாலில் இருந்த என் மனைவி ”இப்பத்தானே துவைக்கப்போட்டேன். அதுக்குள்ளே அழுக்காகிவிட்டதா? போடுகிற சட்டையைத்தான் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அழுக்காக்கிக் கொண்டு வருகிறீர்கள், அதைத் தொவைக்கவே வேலைக்காரி கோவப்படுறா, இதுல தலைகாணி உறையெல்லம் அடிக்கடி துவைக்கப்போட்டா சொல்லாமலேயே வேலையை விட்டு நின்று விடுவாள்.”
“போடுற சட்டை பேண்டுதான் அழுக்காகுதுன்னா தலையுமா அழுக்கா ஆகும் ? ஒழுங்காகக் குளித்தால்தானே?”
(அய்யா!! அம்மா!! நீங்களே சொல்லுங்க, தலைகாணி அழுக்காயிருக்கேன்னு ஒரு வார்த்தைதான் கேட்டேன், அதுக்கு இவ்வளவு அர்ச்சனையா?” சரி விடுங்க! எனக்கு நாக்குல சனி!!!)
அதுக்கு மேல் பேசினால் ஆபத்து என்று தெரியாதா என்ன? தூங்குவது போல் ஆக்டிங்க் கொடுத்தேன். அப்படியே தூங்கியும் விட்டேன்.
மறுநாள் மதியம் கண்ணயரலாமே என்று படுக்கையில் சாய்ந்தேன். அட! தலையணை உறையைக் காணோம்!!
”ஏம்மா! தலைகாணி உறை ஒன்னு குடு படுக்கணும்” என்றேன்.
தலைகாணி மேல் துண்டை விரிச்சுப்படுங்க- என்று பதில் வந்தது.
”ஒரு உறையாவது குடும்மா!” என்றேன்.
”நீங்கதானே அழுக்கா இருக்குன்னு சொன்னீங்க, அதுதான் எல்லாத் தலைகாணி உறையையும் துவைக்கப் போட்டுவிட்டேன் – சும்மா துண்டை தலைகணி மேலே போட்டுக்கிட்டுத்தூங்குங்க!!தலைகாணி உறை காய்ஞ்ச உடனே எடுத்துத் தருகிறேன்!”
”அட! துவைக்கப்போடும்போது பாதியை இன்றைக்குத் துவைத்துவிட்டு பின்னொருநாள் மிச்சத்தைத் துவைக்கலாம் இல்ல! என்றேன்” கோபத்தை அடக்கிக் கொண்டு.
”ஆமா! வேலைக்காரி தலைகாணி உறை துவைக்கிறதே பெரிய விசயம், இதுல பாதி மிச்சம் வச்சா மீதி என்னைக்கித் துவைப்பாளோ? உங்களுக்கு என்ன தெரியும் என் கஷ்டம்! படுத்துக்கிட்டே ஒன்னொன்னாக் கேப்பீங்க, நான் கொண்டாந்து தரணும்!! நீங்க ஆடுற ஆட்டத்துக்கு நான் ஆடுவேன்! வேலைக்காரி ஆடுவாளா?” --- பேச்சின் வேகம் அதிகரிப்பது கண்டு உசாராகி அமைதியானேன்!
இரண்டு நாள் கழித்து காலை:
சாப்பிட்டுவிட்டு கிளம்பி வீட்டு ஹாலுக்கு வந்தேன். ஷூவை எடுத்து பிரஷால் தூசி தட்டினேன். மகனும் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தான்.
”அவனுக்கு ஸ்கூல் பஸ் வந்து விடும், உங்களுக்கு என்ன அவசரம்? அவன் ஷூவுக்கு கொஞ்சம் பாலீஷ் போடுங்க!! அவன் கருப்பு ஷூவைப் பாருங்க, கழுதைக் கலரில் இருக்கு! ஏண்டா? ஸ்கூலுக்குப் போறியா? இல்லை மாடு கீடு மேய்ச்சிட்டு வற்றியாடா? ” சுனாமி வேகத்தில் ஹாலுக்குள் பிரவேசித்தாள் என் மனைவி!
சரி! வாயை மூடிக்கொண்டு அவன் ஷுவுக்குப் பாலீஷ் போட்டேன்“அம்மா சாக்ஸ் எங்கேம்மா? என்றான் என் மகன்.
”வேலைக்கார அம்மாதான் நேத்து துவைக்கக் கொண்டு போனாங்க, நான் பார்க்கல. நீ தேடிப்பார் , எல்லாத்தையும் நான்தான் எடுத்துத் தரணுமா? துவைத்த துணியில் பார் என்றவுடன் அறைக்குள் ஓடி சாக்ஸுடன் வந்தான்.
இந்தாப்பா உன் சாக்ஸ் ( என்னிடம் நாலைந்து சாக்ஸுகள் இருந்தன!!) என்று ஒற்றை சாக்ஸாக நான்கு ஒற்றை சாக்ஸுக்களைத் தந்தான்.
ஏதாவது ஒரு கலரில் ஜோடியாக மாட்டுமா என்று பார்த்தேன். ஊகூம்! ஒன்றும் தேறவில்லை!
”என்ன இது எல்லாம் ஒத்தை சாக்ஸா இருக்கு” என்று மனைவியைப் பார்த்துக் கேட்டேன்.
”அட! என்ன இது! ஆமா!! பாதி சாக்ஸைத் துவைக்கச் சொன்னேன், வெலைக்காரி இப்படித் துவைத்து விட்டாளா?”
”நீங்கதானே பாதியை முதலில் துவைக்கச்சொல்லுன்னு சொன்னீங்க, அவ வந்தவுடன் நீங்களே கேளுங்க” சொல்லி விட்டு என் மனைவி கடகடவென்று தாங்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.
அப்பா உன் புளூ கலர் சாக்ஸ் என்னுதோட மேட்சா இருக்கு குடு நான் போட்டுக்கிட்டுப் போறேன் என்று என்னுடைய ஒற்றை நீல சாக்ஸையும் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான் என் மகன்!!!