இந்த மூன்றாம் பாகத்தைப் படிப்பதற்கு முன் முதல் இரண்டு பாகங்களைப் படிக்க விரும்பினால் கீழேயுள்ள சுட்டிகளை உபயோகிக்கவும்.
முதல் இடுகை:
வட்டு விலகல், டிஸ்க் ப்ரொலாப்ஸ்! (முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்)
இரண்டாவது இடுகை:
டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-2
தட்டுப்பிதுக்கம் மிக அதிகமாக முதுகின் கீழ்ப்பகுதியில் உள்ள நாரி முள்ளெலும்பில் அதிகம் ஏற்படுவதை அறிவோம். கழுத்துப் பகுதியில் உள்ள முள்ளெலும்பிலும் இது வரலாம். கழுத்து எலும்புத் தேய்மானம், விபத்தில் கழுத்தெலும்பு பாதிப்பு ஆகியவற்றினால் பொதுவாக கழுத்துப்பகுதியில் தட்டுப்பிதுக்கம் ஏற்படுகிறது. இதனை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
தற்போது முதுகின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் தட்டுப்பிதுக்கத்தைப் பற்றிப்பார்ப்போம்.
இந்த தட்டுப்பிதுக்கம் இளைஞர்களையே அதிகம் பாதிக்கிறது என்று பார்த்தோம்.
நோயாளிக்கு இதனால் என்ன உபாதைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
- முதுகு வலி- கீழ்முதுகுப்பகுதியில் வலி நடுப்பக்குதியில் , பக்கவாட்டில் அல்லது நடுப்பகுதி மற்றும் பக்கவாட்டில் காணப்படும்.ஓய்வு எடுக்கும் போது, படுக்கும்போது வலி குறைவாக இருக்கும். நடக்கும்போது, வேலை செய்யும்போது,இடுப்பை அசைத்து வேலை செய்யும்போது , தும்மும்போது, இருமும்போது வலி அதிகரிக்கும்.
- நியூரால்ஜியா, சயாடிகா – என்று மருத்துவர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். தட்டுப் பிதுக்கம் தண்டுவடத்திலிருந்து பிரிந்து வரும் நரம்பை அழுத்தும்போது கீழ்முதுகு வலியுடன் கால்,தொடை, பாதம் ஆகிய பகுதிகளிலும் வலி இருக்கும். இந்த வலி நரம்பு வலி ஆகையால் நியூரால்ஜியா என்றும் பொதுவாக தொடை, கால் பகுதியில் சயாடிக் நரம்பு இருப்பதால் சயாடிகா என்றும் அழைக்கப்படுகிறது.
- நரம்பு பாதிப்பு சில நேரங்களில் ஊசியால் குத்துவது போல் இருக்கும்.
- நரம்பு அழுத்தத்தால் தொடை, கால் பகுதியில் உள்ள தசைகள் பலவீனமாகலாம்
- அதே போல் முதுகைக் குனிந்து வேலை செய்வதில் மிகுந்த சிரமம் இருக்கும். பலரால் குனிந்து வேலை செய்ய முடியாது.
- அரிதாக இடுப்பு வலியுடன் குடல், சிறுநீர்ப்பை ஆகியவை செயலிழந்து போகலாம். இப்ப்படியிருந்தால் மலவாய்ப் பகுதியில் சுற்றில்லும் சுரணையில்லாமல் இருக்கும். இதனை உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லையெனில் மலக்க்குடல் மற்றும் சிறுநீர்ப்பை நரம்புகள் முற்றிலும் சேதமடையலாம்.
தட்டுப் பிதுக்கம் சிகிச்சை அளிக்கப்பட்ட சில வாரங்களில் வலி குறைந்து விடும். பத்தில் ஒருவருக்கு வலி குறையாமல் ஆறு வாரங்களுக்கும் மேல் தொடரும்.
பரிசோதனைகள்:
பொதுவாக தட்டுப்பிதுக்கத்தை மருத்துவர் நேரடியாக நோயாளியைப் பரிசோதிப்பதின் மூலம் கண்டுபிடித்து விடுவார். எனினும்
- நுண்கதிர் படம்
- எம்.ஆர்.ஐ ஆகியவை பொதுவாக எடுக்கப்படவேண்டும். இவை இரண்டில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மிகவும் துல்லியமானது. இந்த ஸ்கேன் மூலம் தட்டுப்பிதுக்கம் எந்த அளவிலுள்ளது, அறுவை சிகிச்சை அவசியமா அல்லது சாதாரண சிகிச்சை போதுமா என்பதை அறிந்து கொள்ளலாம்.