Thursday, 8 April 2010

கொஞ்சம் தேநீர்-தொலைந்து போனவன்!

நேற்றிரவு

தொலைந்து போனவனைக்

கண்டேன்!!

 

தன் கூரிய

விருட்ச விரல்களால்

இரவைக் கிழித்துக்

கொண்டிருந்தான்.

 

கீழே நிழலாகக்

கிடந்த உடலகளினின்றும்

பீரிட்ட குருதி

அவன் கண்களூடாய்

வழிந்து கொண்டிருந்தது!

 

அவற்றின் அடங்காத

ஓலம்

வீங்கிப்போன அவன்

செவிப்பறைகளில்

அதிர்ந்து கொண்டிருந்தது.

 

புகையாய்க் கிளம்பிய

நர வீச்சம் தாளாமல்

அவன் நாசித்துவாரங்கள்

சிதறிக்கிடந்தன.

 

தன் முகம் காணச் சகியாது

உடலினின்றும்

தன் தலையைப்

பிய்த்தெடுத்தான்.

 

கைகளில் வழிந்த முகம்

என் முகத்தை

ஒத்திருக்க,

கிழிந்து கிடந்த

இரவின் ஊடாய்

அவனும் நானும்

மெதுவாகக் கரைந்து போனோம்.

Monday, 5 April 2010

முழங்கைக்குக் கீழ் அடிபட்டால்!

பொதுவாக எலும்பு முறிவு ஏற்பட்டால் விரைவாக தகுந்த சிகிச்சை பெற வேண்டியது மிக அவசியம். இதில்  தவறு செய்தால் வாழ்நாள் முழுக்க பாதிப்புடன் இருக்க வேண்டிவரும். அதே போல் நாம்  முழங்கைக்குக் கீழோ அல்லது முழங்கைப்பகுதியிலோ அடி பட்டால் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏன் என்பதற்கான  சில காரணங்களில் ஒன்றைக் கீழே தந்துள்ளேன்.

1.கையில் முழங்கைப் பகுதிக்குக் கீழ் அடிபட்டு வீக்கம் வலி, கை வளைந்து இருத்தல், கையைத் தூக்க முடியாமல் இருத்தல் ஆகியவை இருந்தால் அவசியம் நுண்கதிர்ப்படம் எடுக்க வேண்டும்.

2.முழங்கைக்குக் கீழ் இறுக்கமாகக் கட்டுப் போடக் கூடாது. எலும்பு மருத்துவரே மாவுக்கட்டுப் போட்டாலும் கை விரல்கள் வீங்காமல் கட்டு சரியாக உள்ளதா? அல்லது இறுக்கமாக உள்ளதா? என்று பார்த்துக் கொள்ள வேண்டும். கட்டு மிகவும் இறுக்கமாக இருந்தால் மருத்துவரை  உடன் பார்க்க வேண்டும்.

3.இறுக்கமான துணி கிழித்த வேட்டித் துண்டு ஆகியவற்றால் கட்டுப்போடக்கூடாது. எலும்பு மருத்துவர்கள் மாவுக்கட்டுப் போடும் முன் சாதாரண பஞ்சு அல்லது செயற்கைப் பஞ்சு சுற்றி அதன் மேல்தான் மாவுக்கட்டுப் போடுவார்கள்.அதனால் தோலுக்கும் மாவுக்கட்டுக்கும் இடையே ப்ஞ்சு இடைவெளி இருக்கும். ஆதலால் கட்டு கையை இறுக்காது.

4.அப்படிக் கட்டு இறுக்கமாக இருந்து நாம்   கவனிக்காமல் விட்டு விட்டால் கைக்குச் செல்லும் இரத்தம் அடைபட வாய்ப்புள்ளது.

5.இரத்த ஓட்டம் குறைந்தால் கை சூம்பிவிடும். இதனை ஆங்கிலத்தில் “Volkman’'s Ischemic Contracture”  என்று சொல்லுவார்கள்.

மேலேயுள்ள படத்தில் கை சுருங்கி விரல்கள், மணிக்கட்டு ஆகியவை நீட்டமுடியாமல் இருப்பதைப் பாருங்கள்.

6.இந்த வகை பாதிப்பில் கட்டுப்போட்ட பகுதியில் இரத்த ஓட்டம் நின்று விடுவதால் தசை, தசைநாண் ஆகியவை இரத்த ஓட்டமின்றி  சிறுத்து சுருங்கிப் போகின்றன. இதனால் அந்தக் கை உபயோகமற்றுப் போகின்றது.

7.இதற்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் பெரிய அளவுக்கு பலனளிப்பதில்லை.  ஆகவே இந்த நிலை வருவதைத் தடுப்பதே சிறந்தது.

தமிழ்த்துளி தேவா.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory