Tuesday, 29 December 2009

பெங்களூர்-என் உள்மன யாத்திரை!

சற்று அமர்ந்து யோசித்தால், நம் வாழ்வின் ஆரம்பக்கட்டங்களில் நமக்கு மிக முக்கியமான உதவிகளை நண்பர்கள், பக்கத்துவீடுகளில் வசித்த அன்புக்குரியோர்கள்  பலரும் செய்து இருப்பார்கள். அவை மிகச்சிறிய உதவிகளாக இருந்தாலும் ”காலத்தினாற் செய்த உதவிபோல்” அவை மிகவும் உயர்ந்தவை.

அந்த உயர்ந்த உதவிகளைச் செய்தவர்களில்  தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாதவர்கள் சிலரும் இருப்பர்.

அப்படி என் வாழ்வில் அதாவது என் இளமைப்பருவத்தில் எங்களுக்கு உதவிய, நான் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தேடும்  சிலரைப்  பற்றியும் அவர்களுடன் நான் வாழ்ந்து களித்த இடங்கள் பற்றியும்  இங்கு எழுதப்போகிறேன்.

என் அப்பாவுக்கு போஸ்டல்& டெலிகிராப் அலுவலகத்தில் வேலை.

வேலை மாறுதலாகி சென்னையிலிருந்து பெங்களூர் சென்றோம். அப்போது நாம் முதல் வகுப்பு படித்ததாக ஞாபகம். நாங்கள் வீடு பார்த்த இடம் ஸ்ரீராமபுரம்! தமிழர்கள் நிறைய இருந்த இடம். பெரும்பாலும் மக்கள் ஊதுபத்தி மாவை குச்சிகளில் அதற்கென இருக்கும்  சின்ன படிக்கும் மர பென்ச் போன்ற பலகையில் உருட்டி ஊதுபத்திகளைத் தயாரிக்கும் வேலையில் அதிகம் ஈடுபடுவர்! பெங்களூரில் வசிப்போருக்கு இது நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். பத்தி சுத்தும் குடும்பத்தில் இருக்கும்  குழந்தைகளில் மூக்கில் ஒழுகும் சளியே கருப்புக்கலரில் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆணும் பெண்ணும் பத்தி சுத்தி முடித்த இடைவேளைகளில் பீடி குடிப்பதையும் அப்போது அதிகம் கண்டிருக்கிறேன்.

அதே போல் கன்னட மக்களும், தமிழர்களும் மிகுந்த அன்புடனேயே அப்போது பழகிக் கொண்டிருந்தனர். என் இளமைப் பருவத்தில் என் மனதில் பதிந்ததாலோ என்னவோ கன்னட மொழி  எனக்கு மிகவும் பிடிக்கும். அதை அவர்கள் பேசுவதும் அழகு. ”என்ன செய்கிறாய்?” என்பதனை “ஏன் கண்ணா ஏன் மாடுதித்தியா?” என்று, ’கண்ணா’ என்று அழகாக அழைப்பார்கள். என் இளம் வயது கன்னட நண்பர்கள் மிகுந்த அன்புடையவர்கள்.

நாகராஜன், பெருமாள், லாரன்ஸ், ரபெக்கா டீச்சர், காந்தி வித்யா சாலை, என்று மனதில் ஆழ் அடுக்குகளில் புதைந்து கிடக்கும் மனிதர்களும் இடங்களும் என் மனதில் ஒரு அற்புதமான உலகத்தை சிருஷ்டித்துள்ளன.

இந்த அற்புத உலகை நானே உருவாக்கிக்கொண்டேனா? ..இல்லை, “எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும்” என்பதுபோல் இவை, மறைந்து போகும்  காலம் என்னும்  மாய பிம்பம் என்னுள் விட்டுச்சென்றவை. இது எனக்கு மட்டுமே தெரிந்த உலகம். நான் என் உள்ளக் கதவைத் திறந்து அடிக்கடி இதற்குள் செல்வேன்.அந்த என் உள்மனயாத்திரைகள் அற்புதமானவை. இதே போல் எல்லோருடைய உள்ளங்களிலும் தனி உலகங்கள் இருக்கும். நான் ரசித்த என் இளமைக் காலத்தை சிறிதளவேனும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  அங்கு நான் கண்ட தமிழர்களின் வாழ்க்கை ஏழ்மையும் சுவாரசியமும் நிறைந்ததாகவே என் இளமனதில் பதிவாகியுள்ளது. அந்த நினைவுகள் அற்புதமானவை. இன்றும் என் வாழ்வின் மிகஇனிய பகுதியாகவே அதை அசைபோடுகிறேன்.

இதைப் படிக்கும் பதிவுலக நண்பர்கள் பலரும் நான் எண்ணுவது போலவே பால்ய நினைவுகளை இனிமையாக நினைக்கிறார்களா என்று தெரியவில்லை!

ஆயினும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் உங்கள் கைகளுடன் என் கைகளை இணைத்துக் கொள்கிறேன். வாருங்கள் அன்பு நண்பர்களே!!!

(நிறைய எழுதினால்தான் பதிவிடலாம் என்று எண்ணியே பலநாட்கள் பதிவிடாமல் விட்டிருக்கிறேன். சின்னப் பதிவுகளையும் பதிவுலகம் வரவேற்கும் என்று நம்புகிறேன்! )

( தொடரும்..)

Wednesday, 23 December 2009

வேட்டைக்காரன்!!

அன்பு நண்பர்களே!!

நேற்றிரவு வேட்டைக்காரன் படம் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது! ஒரு படம் கலைப்படமா இல்லை பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்டதா என்பது ஒரு படத்தைப் பார்க்கப் போகும் முன் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த விதத்தில் இது ஒரு பொழுதுபோக்குப் படம்.  அந்த மன நிலையில் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றதில் எனக்குத் தோன்றியவை.

1.விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் என்று காட்ட டைரக்டர் ஏகப்பட்ட பில்டப் கொடுத்து மிகவும் பிரயாசைப்பட்டிருக்கிறார். இது நாம் ரஜினி உட்பட எல்லா ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கும் நமது இயக்குனர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  கொடுத்தாகவேண்டிய கட்டாய ஃபார்முலா!! உங்களிடமோ என்னிடமோ இப்படி ஒரு படத்தை டைரக்ட் செய்யக் கொடுத்தால் இன்றைய ட்ரெண்டில் இதைச் செய்தாக வேண்டும். இல்லையென்றால் படத்திலிருந்து நம்மைத் தூக்கிவிடுவார்கள்!!

2.ஒரு வணிகப் படத்தில் விஜய் இந்தப் படத்தில் செய்திருப்பதைவிடச் சிறப்பாகச் செய்ய வழியில்லை.

3.படத்தில் விஜய் காஸ்ட்யூமில் இன்னும் அக்கரை காட்டி இருக்க வேண்டும். சில இடங்களில் சட்டைக்குப் பொருந்தாத காட்டன் கால்சட்டைகள் பொருந்தவில்லை.

4.கதாநாயகி கட்டாயம் வேறு ஒருவரைப் போட்டிருக்கலாம். முகபாவனைகள் தமிழ் செண்டிமெண்டுக்கு ஒத்துப் போகவில்லை.

5.காதல் சம்பவங்களை இன்னும் ரொமாண்டிக்காகப் பின்னியிருக்கலாம்.

6.படத்தில்  வன்முறை மிக அதிகமாகக் கையாளப் பட்டுள்ளது. இது தற்போது எல்லாத் தமிழ்ப்படங்களிலும் காணப்படும் விரும்பத்தகாத ஒன்று.

7.ஒரு நல்ல  போலீஸ் அதிகாரி போலீஸ் துறையினரின் உதவியுடனேயே தன் குடும்பம், கண் பார்வை இழப்பதும், குடும்பப் பெண்கள் ரவுடி செல்லாவால் கற்பிழப்பதும் நம் சமூக அமைப்பில் சாதாரண மக்கள் மற்றும் நல்ல போலீஸ் அதிகாரிகள்  மதிப்புடன் வாழ முடியாதோ என்ற அவ நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

8.எல்லாத் தமிழ்ப்படங்களிலும் காட்டப்படும்- டிட் ஃபார் டாட் வகை வில்லன் ஹீரோ பழி வாங்கும் ஃபார்முலா நிகழ்ச்சிகள் இந்தப் படத்திலும் கையாளப் பட்டிருப்பதால் அடுத்து என்ன செய்வார்கள் என்பதை படம் பார்க்கும் நாம் கணிக்க முடிகிறது.

9.படம் முடிந்தவுடன் என் மகன் சொன்னது” அப்பா!! படம் சூப்பர்! ஹிட்டுதாம்பா”.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory