Thursday, 8 October 2009

மணற்கேணி போட்டிக்கு அனுப்பிய கட்டுரை-ஏமக் குறை நோய்(A I D S)

என்னுரை: இந்தக் கட்டுரை எழுத சந்தர்ப்பமளித்த போட்டியாளர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழில் தொழில்நுட்பச் சொற்கள், அறிவியல் சொற்கள் தற்போது  குறைந்த அளவிலேயே உள்ளன. தமிழில் மேற்படிப்புக்கள் கொண்டுவர தமிழ் ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்.

அவற்றுக்கு அடிப்படையாக முதலில்  அறிவியல் துறையில் உள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் சிறிதளவேணும் அறிவியல் கட்டுரைகள் எழுதவும் அதில் வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான பொருள் செறிந்த சொற்களை உருவாக்குவதும் அவசியமாகும்.

”நானும் முழுவதும் தமிழில் எழுதப்பட்ட தொழில்நுட்பக்கட்டுரை” என்ற தலைப்பில்  மருத்துவத்தில் எழுத ஆரம்பிக்கும்போது சாதாரண ஆங்கிலச் சொற்களைக் கூட தமிழ்ப்படுத்தாமல் இருப்பதைக் கண்டேன். நமது பாடப் புத்தகங்களும் அப்படியே உள்ளன.

இதனைப் பற்றிய விழிப்புணர்வை என்னுள் ஏற்படுத்தியது உங்கள் தலைப்புதான். நிச்சயமாக நிறைய அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் எழுத முடிவு செய்துள்ளேன்.  

தமிழில் கலைச் சொற்கள் படைக்க வேண்டியதும், தமிழை ஒரு அறிவியல் மொழியாக ஆக்குவதும் நம்முடைய கடமையாகும்.   

வான்பொறியியல், கடலியல்,கணினியியல்,வேளாண் தொழில்நுட்பவியல், ஆகிய இன்னபிற பல துறைகளில் அறிவியல் சொற்கள் அவசியம் தேவை. அவை அதுபோன்ற துறைகளில் ஈடுபடுவோருக்கும் படிப்போருக்கும் மிகுந்த பயனளிக்கும். ஆனால் வேறுதுறை சார்ந்தவர்கள் அதைப் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

ஆனால் மருத்துவத்துறை என்பது எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு துறை. ஏனெனில்  நோய்களைப்பற்றி மருத்துவர் மட்டும் அறிந்திருந்தால் போதாது. மக்கள் அனைவரும் இதைப்பற்றி அறிதல் அவசியம். ஏனெனில் இது அவர்களின் உடல், உயிர் சம்பந்தமானது.

ஆகையினாலேயே மருத்துவம் பற்றி எழுதுவது என்று முடிவு செய்தேன். அதிலும் எயிட்ஸ் எனப்படும் ஏமக்குறை நோய் பற்றி  அனைவரும் அறியவேண்டியது அவசியம். எயிட்ஸ் எவ்வாறு பரவுகிறது, உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது, எப்படி நாம் தற்காத்துக் கொள்வது ஆகியவை பற்றி தெளிவாக அறிய வேண்டும் என்பதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.

ஏமக்குறைநோய் (எயிட்ஸ்),  பற்றி  ஆராயும்போது அறிவியல் சொற்கள் அதிகம் காணப்படவில்லை. ஆகவே மிகுந்த ஆய்வுக்குப் பின்னே இந்த அறிவியல் சொற்களைக் கையாண்டு உள்ளேன். இவை படிப்பவருக்கு மிக இலகுவாக ஏமக்குறை நோய் பற்றி விளக்கும் என நம்புகிறேன்.

  ஏமக்குறை நோய்- A I D S

எயிட்ஸ் என்று அழைக்கப்படும் ஏமக்குறை நோய் மனிதனைத் தாக்கும் கொடிய நோய்களில் முக்கியமானதாகும். இது ஒரு தொற்றுநோய். முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் இந்நொய் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு இதன் சிக்கலான பரம்பரை அலகுத்தொகுப்பே(genome) காரணம். இந்த சிக்கலான அலகுத்தொகுப்பைத் தற்போது கண்டுபிடிக்கும் முறையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். 

இந்த ஏமக் குறை நோயானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் வருகிறது. முதலில் HIV என்றால் என்ன? AIDS என்றால் என்ன? என்று பார்ப்போம்.

H I V: எச்.ஐ.வி- என்பது மனிதனின் உடலில் ஏமக்குறை நோயை உருவாக்கும் நுண்கிருமியாகும். இது கிருமியின் பெயர்தானே தவிர வியாதி அல்ல. இதனை ஏமக்குறைத் தீ நுண்மம் (H I V - Human Immuno Deficiency Virus) என்று அழைக்கலாம்.

A I D S-எயிட்ஸ்- என்பது இந்த கிருமியால் உண்டாகும் நோயினைக் குறிப்பிடுகிறது.(நோய் அறிகுறிகளின் தொகுப்பு எனலாம்). இதனை நாம் ஏமக்குறை நோய் என்று அழைக்கலாம்.

 வரலாறு:

அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 1959ம் ஆண்டு முதன்முதலில் ஆப்பிரிக்காவில் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

1978 ல் அமெரிக்காவிலும் சுவீடனிலும் ஓரினச்செர்க்கை ஆண்களிடமும் தான்சானியா,ஹைட்டியில் ஆண்பெண் இருபாலரிடமும் காணப்பட்டது.

1980 ல் அமெரிக்காவில் 31 நபர்கள் ஏமக்குறைபாட்டு நோயால் இறந்தனர்.

ஏமக்குறைத்தீநுண்மம்

ஏமக்குறைத்தீநுண்மத்தின் பாகங்கள்:

Glycoprotein-மாவுப்புரதம்

Capsid- புரத உறை

Matrix- அடித்தளம்

Lipid Membrane- கொழுப்பு உறை

Reverse Transcriptase- எதிர்படியெடுக்கும் நொதி

1983ல் பிரெஞ்சு அறிவியல் அறிஞர்கள் இந்த தீநுண்மத்தைக் கண்டறிந்தனர்.

 ஏமக்குறை என்றால் என்ன?

ஏமக்குறை என்பது உடலின் நோய் எதிர்ப்பு முறையில் அதாவது தொற்றுநோய் தொற்றாமல் உடலுக்குள்ளேயே பாதுகாப்புத்தரும் அமைப்புகளின் தொகுப்பில் ஏற்படும் குறைபாடு ஆகும்.

ஏமக்குறைத் தீ நுண்மம் எவ்வாறு பரவுகிறது?

இது சீதச்சவ்வு வழியாகவும், இரத்தம் மூலமும், விந்துத் திரவம், யோனித்திரவம், தாய்ப்பால் மூலமும் பரவுகிறது.

(சீதச்சவ்வு(mucous membrane)-வாயிலிருந்து    ஆசனவாய் வரை உள்ள சிவந்த பகுதி மற்றும் ஆண் பெண் பிறப்பு உறுப்புகளின் உள்ளே உள்ள சிவந்த  மெல்லிய சவ்வுப்பகுதிகள்).

முக்கியமாக ஏமக்குறைத் தீநுண்மம் உடலுறவின் போது  யோனி, மலக்குடல் பகுதி மூலமாகவும், வாயில் உறவுகொள்ளும் போதும் பரவுகிறது. மேலும் குருதிப் பரிமாற்றம், குருதிதோய்ந்த ஊசிகள், ஊசிக்குழல்கள், தாயிடமிருந்து குழந்தைக்கு கர்ப்பத்தில், குழந்தை பிறக்கும் போது, தாய்ப்பாலூட்டும்போது பரவுகிறது.

உடலுறவின் மூலம்:  ஏமக்குறைத்தீ நுண்மம் உடலுறுவின் மூலம் பரவுவதே அதிகம். பிறப்பு உறுப்பின் சுரப்புக்கள்(sexual secretions), வாய்,குடல் போன்ற பகுதியின் சீதச்சவ்வு (mucous membrane)களின் நேரடித்தொடர்பாலும் இது எளிதில் பரவுகிறது.

ஏற்கெனவே பாலியல் நோய்கள் (sexually transmitted infections) இருந்தால் ஏமநோய்க்கிருமிகள் மிக எளிதாக பிறப்புறுப்பில் உள்ள புண்களின் (genital ulcer) மூலம் பரவிவிடுகின்றன.

தொடர்ந்து ஏமக்குறைநோயுள்ளோருடன் உடலுறவு கொண்டால் இத்தீநுண்மத்தின் எண்ணிக்கை பல்மடங்கு பெருகி( Increased Viral load) நோய் மிகவேகமாகப் பரவும். பலருடன் உடலுறவுகொள்ளும்போதும் இதேநிலைதான் ஏற்படுகிறது.

இரத்தம் மூலம்

1. போதைஊசிப்பழக்கம் உள்ளவர்கள் சுத்திகரிக்காமல் ஒரே ஊசிக்குழலை பலர் பயன்படுத்துவதால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.

2.பரிசோதிக்கப்படாத இரத்தம் செலுத்தப்படுவதன் மூலமும் பரவுகிறது.

பிரசவத்தின்போது:  பிரசவத்தின் கடைசிவாரங்களிலும், பிரசவத்தின்போதும், சிகிச்சை எடுத்துக்கொள்ளாத தாய்க்குப்பிறக்கும் குழந்தைக்கும் 25% நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

தாய் ஏமக்குறை நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொண்டு பிரசவம் அறுவை சிகிச்சை மூலம் நடந்தால் குழந்தைக்குத் தொற்றும் அபாயம் 1% மட்டுமே.  தாய்ப்பாலின் மூலம் தொற்றுதல் 4% ஆக உள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் எந்தெந்த முறையில் நோயாளிகளுக்கு எயிட்ஸ் ஏற்பட்டது என்று ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதன் முடிவுகள் சதவீதத்தில்

செக்ஸ் தொடர்பு              41.77%

இரத்தம் செலுத்தல்        17.37%

போதைஊசி மூலம்        14.85% மற்றவை                          26.1%

எச்சில்,கண்ணீர்,சிறுநீர் ஆகியவற்றில் ஏமக்குறைநோய்க் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதன் மூலம் பரவியதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

நோய் அறிகுறிகள்(symptoms): ஏமக்குறைநோய் தாக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக எந்தவிதமான நோய்க்குறிகளும் தோன்றுவதில்லை. இதனை நோய்க்குறிகள் தோனறாத நிலை (Asymptamatic infection)என்று அழைக்கிறோம். இந்த நிலையில் ஒருவருக்கு காய்ச்சல்,உடல் வலி, தொண்டை வலி ஆகியவை இருக்கலாம்.

இந்நோயை மூன்று  நிலைகளாகப் பார்க்கலாம்.

முதல் நிலை: . இது ஆறு வாரத்திலிருந்து மூன்று முதல் ஆறுமாதம் வரை இருக்கும். இது இக்கிருமி உடலில் நுழைந்ததிலிருந்து உடலில் நோய் நுண்ம எதிரி(Antibody)கள் தோன்றும் வரையிலான காலம் ஆகும். இந்தக் காலத்தில் ஒருவருக்கு நோய் இருப்பதை அறிய முடியாது. ஏறக்குறைய 96% நோயாளிகளுக்கு மூன்றாவது மாதத்திலிருந்து -P C R/ WestonBlot- போன்ற சோதனைகளின்மூலம் கண்டுபிடிக்கலாம். மிகச்சரியாகக் கண்டுபிடிக்க ஆறுமாதம் தேவை.

PCR-Polymerase chain reaction-Test-பலபடியாக்கல் தொடர் விளைவு சோதனை, அல்லது கூட்டணுத்தொகுப்பு தொடர் விளைவு சோதனை என்று இதை அழைக்கலாம். இதன் மூலம் பல நோய்களை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்து விடலாம்.

Weston blot test- நோய் எதிர்ப்பு புரத ஒற்று சோதனை- இதன் மூலம் ஒருவருக்கு ஏமக்குறை நோய் இருப்பதை உறுதி செய்யலாம்.

இரண்டாம் நிலை: இந்த நிலையில் உடலில் தொற்று நோய் அறிகுறிகள்  இருப்பது தெரியாது. ஏனென்றால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக நோயை எதிர்த்துப் போராடும். இந்த நிலையில் உதடுகள், தோல்,மற்றும், நுரையீரல் சம்பந்தமான நோய்க்குறிகள் தெரியலாம்.

மூன்றாம் நிலை:இந்த நிலையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கிருமியின் ஆதிக்கம் அதிகமாகும். ஒரு மாதத்துக்கு மேல் காரண்மில்லாமல் பேதி ஆவது, நோய்த்தொற்றுகள், காசநோயின் அறிகுறிகள் ஏற்படுதல் மற்றும் காசநோய் ஏற்படுதல். டாக்சோப்லாஸ்மோசிஸ் மூளையில், மூச்சுக்குழாய்,நுரையீரல்,உணவுக்குழாயில் பூஞ்சை நோய்(CANDIDA), மென்தசை கூர்அணுப்புற்று(Kaposis Sarcoma), ஆகியவை தோன்றும். இவை அனைத்தும் ஏமக் குறை நோயின் வெளிப்பாடுகள்.

ஏமக்குறை நோயின் தீவிரம் :  ஏமக்குறைநோயின் தீவிரத்தை இரத்தத்தில் உள்ள தைமஸ் வெள்ளையணுக்களின்(CD-4 ) எண்ணிக்கையை கணக்கிட்டு அறியலாம்.

C D 4 cells- T Lymphocytes-(தைமஸ் வெள்ளைஅணுக்கள்-4)தைமஸ் எனப்படும் கீழ்க்கழுத்துச்சுரப்பியில் உருவாகும் நிணநீர்க்கலன்கள்.

C D 4-கீழ்க்கழுத்துச்சுரப்பி நிணநீர்க்கலன்களின் மேல்புறம் காணப்படும் மாவுப்புரதம்.

இவற்றின் அளவை வைத்தே ஏமக்குறை நோயின் வீரியம் அறியப்படுகிறது. இவற்றின் அளவு 200 மைக்ரோ லிட்டருக்குக்குறைவாக இருந்தால் நோயாளியின் உடல் எதிர்ப்புசக்தி முற்றிலும் அழிந்துவிடுகிறது.

உரிய கூட்டுமருந்து சிகிச்சை இந்த நேரத்தில் பெறப்படாவிட்டால் நோயாளியின் உடலில் கிருமித்தொற்றிலிருந்து முழுமையான ஏமக்குறை நோய் பீடிக்க ஒன்பது முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகின்றது. மேலும் மருந்து உட்கொள்ளாதவரின் ஆயுள் ஏறக்குறைய ஒன்பதிலிருந்து பத்து மாதங்கள்தான்.

நோயின் தீவிரம்:

நோயாளியின் நோய் எதிர்ப்புத்திறன், வயது, காசநோய் போன்ற நோய்களும் தாக்குதல் ஆகியவற்றை வைத்து நோயாளிக்கு நோயாளி மாறுபடுகிறது.

நோய் உடலின் பலபாகங்களைத் தாக்குகிறது. அவற்றைப்பார்ப்போம்:

1.நுரையீரல்: நுரையீரல் அழற்சி(Pneumonia), நுரையீரல் வீக்கம், மூச்சுக்குழல் அழற்சி(Bronchitis) ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களில் உண்டாகிறது. ஆனால் இது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் நோயாளிகளில் காணப்படுவதில்லை.

காச நோய்: ஏமக்குறை நோயாளிகளில் பலர் காசநோய்க்கு ஆளாகின்றனர். ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மூச்சுக்காற்றின் வழியாக காசநோய்க்கிருமி எளிதில் நுரையீரலுக்குச்சென்று காசநோயை ஏற்படுத்துகிறது. நல்ல உடல் ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டவர்களுக்கு காசநோய் வருவதில்லை. ஏமக்குறை நோய்க்கு மட்டுமல்லாமல் இது பொதுவாக எல்லோருக்கும் பொருந்தும்.

ஆனால் காச நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்திவிடலாம். ஆயினும் பல முறை மருந்துகளை உபயோகித்து இடை இடையில் விட்டுவிடுபவர்களுக்கு காசநோயை குணப்படுத்துவது மிகச் சிரமமாகவே உள்ளது.

2.வயிறு குடல் தொற்றுக்கள்: தொடர்ந்து பேதியாவது பல காரணங்களால் ஏற்படுகிறது. இது உணவுப்பாதையில், குடலில்  சாதாரண நுண்கிருமித் தொற்றாலும், ஒட்டுண்ணிகளின்(Parasites) தொற்றாலும், வேறு தீநுண்மங்களாலும்(other Viruses) ஏற்படுகிறது. இது நோயாளியின் எதிர்ப்பு சக்திக் குறைவாலேயே ஏற்படுகிறது.

நோயின் ஆரம்பகட்டத்தில் வரும் பேதி பெரும்பாலும் எந்த தொற்றுநோயின் அறிகுறியாக இல்லாமல் ஏமக்குறையின் காரணத்தினால் ஏற்படுகிறது. அதன் பின் நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவுடன் வேறு நுண்கிருமிகள் தலையெடுத்து வளர்ச்சி அடைவதால் அவை குடலில் வளர்ந்து பேதியை உண்டாக்குகின்றன. நோய் முற்றிய நிலையில் குடலின் மேற்பகுதியில் உள்ள  குடலுறுஞ்சிகள் அல்லது விரலிகள்(Villus- plural:Villi) அழிந்துபோவதாலும் ஏற்படுகிறது. இதுவே நோயாளியின் குடலில் உணவுச் சத்துக்கள் உறிஞ்ச இயலாமல் மெலிந்துகொண்டே போவதற்குக் காரணமாகவும் அமைகிறது.

உணவுக்குழாயில் (Oesophagus)ஏற்படும் அழற்சி(Inflammation) பொதுவாக பூஞ்சை(Fungus)த் தொற்றுகளால் உண்டாகிறது.

3.நரம்புமண்டல பாதிப்புகளும் மன நிலையும்:

ஏமக்குறைநோயால் நரம்பு மண்டலத்தில் பல விதமான விளைவுகள் ஏற்படுகின்றன.

1.உறைமூளையழல்(Encephalitis)- மூளையின் உறையில் உண்டாகும் அழற்சி

2.இந்த உறைமூளையழலால் காய்ச்சல்,தலைவலி, சோர்வு, குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். நோய் தீவிரமாக இருந்தால் வலிப்பு, குழப்பம், ஆகியவை தோன்றி சிகிச்சையளிக்காவிடில் மரணமும் ஏற்படும்.

நோயின் தீவிரமான நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக பாதிக்கப்படும்போது- பரவும் மூளை வெண்பொருள் அழற்சி(Progressive leukoencephalopathy) உண்டாகி நரம்புஉறை நீக்கம் (Demyelination)ஏற்படுவதால் நரம்புகளில் தகவல் பரிமாற்றம் தடைபடுகிறது. இந்த நோய்க்குறி தோன்றிய சில மாதங்களே நோயாளி உயிருடன் இருப்பர்.

ஏமக்குறை மறதி கூட்டுக்குறிகள்(Aids Dementia complex)- மூளையில் (neurotoxins) நரம்பு நச்சுகள் ஏமக்குறை தீநுண்மத்தால் உண்டாகிறது. இதனால் பகுத்துணரும் அறிவு(Cognitive),போக்கு அல்லது நடத்தை(Behavior),உடலியக்கம்(motor) ஆகியவற்றில் நிறைய  மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனையே ஏமக்குறை மறதிக் கூட்டுக்குறிகள் என்கிறோம்.

இந்த ஏமக்குறை மறதிக்கூட்டுக்குறிகள் மேலைநாடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் இது மிகக் குறைவாகவே உள்ளது.

ஏமக்குறை நோயில்(mania) பித்து அல்லது வெறி,(bipolar disorder) இருமுனை மனப்பான்மை (மனவெழுச்சி, மனச்சோர்வு) ஆகியவையும் ஏற்படுகின்றன. தற்போது கூட்டு மருந்து சிகிச்சை முறையினால்(multi-drug therapy) கொடுக்கப்பட்டு வருவதால் இந்த மனக்குழப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றன்.

4.கட்டிகளும் புற்றுநோயும்: ஏமக்குறை நோயில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் வேறு கிருமிகள், தீநுண்மங்கள் மற்றும் ஒட்டுண்ணிகளால் வேறு நோய்களும் வருகின்றன. அவற்றில் கட்டிகளும்,புற்றுநோயும் அடங்கும். இத்தகைய தீநுண்மங்களில் மனித அக்கித்தீநுண்மமும் ஒன்று.

மனிதஅக்கி தீநுண்மம்-4(Human herpesvirus 4 (HHV-4):

இந்த மனித அக்கித்தீநுண்மத்தின் பெயர் herpein என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருளான ஊர்ந்து பரவுதல் என்பது இந்தத் தீநுண்மம் மெதுவாக பரவும் தன்மையைக் குறிக்கிறது.

மனித அக்கித்தீநுண்மம் 1964ல் அந்தோணி எப்ஸ்டீன் மற்றும் பார்(Anthony Epstein,Yvonne Barr) என்ற இரு அறிவிலாரால் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் பெயராலேயே எப்ஸ்டீன்-பார் தீநுண்மம் என்று அழைக்கப்படுகிறது.

மென்தசை கூர்அணுப்புற்று(kaposis sarcoma) :1981ல் இளம் ஓரினச் சேர்க்கையாளர்களில் ஊதா நிற கழலை(nodule)கள் தோலிலும், வாயிலும், இரைப்பைகுடல்,நுரையீரல் ஆகிய பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மென்தசை கூரணுப்புற்று என்று பெயர்.

நிணநீர் திசுக்கட்டி, வடிநீரகப்புத்து( Burkitt's Lymphoma)-1956ல்(Denis Parsons Burkitt) என்ற அறுவை சிகிச்சை நிபுணரால் நிணநீர் மண்டலத்தைத் தாக்கும் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தவகைப்புற்றானது நரம்புமண்டலத்தையும் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

மனித சடைப்புத்துத் தீநுண்மம்(Human papilloma Virus ) ஏமக்குறை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கர்ப்பவாய்ப்புற்றை(Cervical Cancer) உண்டாக்குகிறது.

மேலும் ஏமக்குறைநோய் பீடிக்கப்பட்டவர்களுக்கு

1.இரைப்பை குடல்நிணநீர் சுரப்பிப் புற்றுநோய்

2.மலவாய்ப் புற்று

ஆகியவை ஏற்படுகின்றன.

ஏமக்குறை நோய் உடலில் ஏற்படுத்தாத நோய்க்குறிகளே இல்லை எனலாம்.

சிகிச்சையின் குறிக்கோள்கள்:

இந்நோயைக்குணப்படுத்தும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆயினும் நோயின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உள்ளன. சிகிச்சையானது

1.நோயின் தீவிரத்திலிருந்து மீட்டு சாதாரண சகஜ வாழ்க்கைக்கு நோயாளியைக் கொண்டு வருவது.

2.நோயின் தீவிரமான விளைவுகளை நீக்குவது.

3.வேறு காசநோய் போன்ற எதிப்புசக்திக்குறைவால் வரும் நோய்களைக் குணப்படுத்துவது.

4.இரத்தத்தில் ஏமக்குறைத்தீநுண்மத்தின் எண்ணிக்கையைக் குறைத்தல்.

5.நோயாளியின் வாழ்நாளைக் கூட்டுதல்.

இத்தகைய கொடிய நோயைக் கண்டறிவது மிக அவசியம். ஆனால் மக்கள்  பரிசோதனைக்கு தாங்களாகவே வருவதில்லை.

இதற்காக இலவச பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலும் ஏழை, பணவசதி குறைந்தோரே பரிசோதனைக்கு வருகின்றனர்.

பெரும்பாலும் பண வசதி படைத்தோர், படித்து பதவிகளில் இருப்போர் அரசு நிறுவனங்களின் கணக்கெடுப்புக்கு, சோதனைகளுக்கு வருவதில்லை.  ஆகையினால் உண்மையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  பற்றிய சரியான கணக்கெடுப்பு இல்லை.

தனியார் மருத்துவமனைகளில் 70% மக்கள் சிகிச்சைக்குச் செல்கிறார்கள். அவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு எதுவும் இல்லை.

ஏமக்குறை நோய் பற்றிய விழிப்புணர்வு குறிப்பாக கிராமப்புறங்களிலும், படிக்காதவர்களிடமும்   குறைவாக உள்ளது. ஏமக்குறை நோய் பற்றிய விழிப்புணச்சியை இவர்களிடையே ஏற்படுத்துதல்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பு தற்போது குறைந்து வருகிறது. இதனை சீர் செய்தல்.

மாணவர்களுக்கும் இளம்வயதினருக்கும்  இதுபற்றிய விபரங்களையும் விளக்கங்களையும் பள்ளி, கல்லூரிகளில் போதித்தல், ஆகியவை மிக முக்கியமாகச் செய்யவேண்டியவை.

ஏமக்குறை நோய்க்கான மருந்துகள் விலை அதிகமுள்ளதால் அரசாங்கமே தற்போது இலவசமாக வழங்குகிறது. ஆயினும் நோயாளிகள் இந்நோய் உள்ளதைச் சொல்லாமல் பயந்து மறைப்பதால் உரிய சிகிச்சைகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

சமுதாயமும் இந்நோய் கண்டவர்களை வெறுத்து ஒதுக்குவதும், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததாலும் இந்த நோயாளிகள்  அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனால் வாழ்க்கையில் வெறுப்புற்று விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள்.

ஏமக்குறை நோய் உள்ளவர்களிடம் அன்பும் ஆதரவும் காட்டி அவர்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து அவர்கள் வாழும்வரை மரியாதையுடன் சாதாரண நோயாளிபோல் பாவிப்பது நமது கடமை. இந்த மனநிலையை நாம் ஏற்படுத்திக்கொண்டு நம்மைச்சார்ந்த எல்லோரிடமும் ஏற்படுத்துவதும் மிக அவசியமாக உள்ளது.

ஏமக்குறைநோயும் எதிர்காலமும:

இந்தியாவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரில் பத்தில் ஒருவர் குடும்பத் தலைவியாக இருக்கின்றனர்.

2007ம் ஆண்டுக் கணிப்பின் படி 33.2 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 330 000 சிறுவர்கள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இதனால் இறந்துள்ளனர். இதில் மூன்றில் ஒரு பகுதி ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியின் கீழ் வாழும் மக்கள் ஆவர்.

நேகோ என்ற இந்திய அரசு நிதியில் இயங்கும்  இந்திய தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு 29 லட்சம் பேரைப் பரிசோதித்தது. இதில் 49527 பேருக்கு ஏமக்குறைநோய் இருப்பது கண்டரியப்பட்டுள்ளது. இதில் ஏமக்குறைநோயின் தீவிர நிலையில் உள்ளோர் 3161 பேர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நேகோ& மாநில அரசுகளின் செயல்பாடுகள்:

1.மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் அனைத்திலும் தைமஸ் வெள்ளைஅணுக்கள்-4( CD 4) பரிசோதனை கருவி நிறுவப்பட்டுள்ளது. இலவசப் பரிசோதனை செய்யப்படுகிறது.

2.அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் ஏமக்குறைநோய் கண்டறியும் பரிசோதனை இலவசமாகச் செய்யப்படுகிறது.

3.அனைத்து தாலுகா மருத்துவமனையிலும் கர்பிணிப் பெண்கள் (கணவன் மனைவி இருவருக்கும்) ஏமக்குறைநோய் பற்றிய ஆலோசனையும், சோதனையும் இலவசமாகச் செய்யப் படுகிறது.

4.ஏமக்குறை எதிர்ப்பு மருந்துகள் அனைத்து தாலுகா தலைமை மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கொடுக்கப் படுகிறது.

5.ஏமக்குறைநோய் ஆலோசகர்கள் (HIV- Councellors), மக்கள் தொடர்பு பணியாளர்கள் (Out reach workers) ஆகியோரை அரசுமருத்துமனைகளில் பணியமர்த்தியுள்ளது.

6.சுய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி அளித்து அவர்களை ஏமக்குறைநோய்க் கண்டுபிடிப்பு, பராமரிப்பு ஆகியவற்றில் ஈடுபடுத்தியுள்ளது.

7.சமுதாய பராமரிப்பு மையம்(Community Care Centres  ) என்ற  ஏமக்குறை நோயாளிகளுக்கு பராமரிப்பு மையங்களை பரிட்ச்சார்த்த முறையில் தமிழகத்தில் சில இடங்களில் அமைத்துள்ளது. 

இது தவிர விளம்பரங்கள், கிராமப்புறங்களில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்றவற்றின் மூலமும் விழிப்புணர்வுத் திட்டங்களை அரசு மேற்கொண்டுள்ளது.

ஏமக்குறைநோயும் நமது கடமையும்:

1.ஏமக்குறை உள்ளதா என்று ஒவ்வொருவரும் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

2.திருமணத்துக்கு முன் இருபாலரும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுதல். இது சாத்தியமில்லை என்று வாதிட்டாலும் மருத்துவமனைக்கு வரும் புதிதாகத்திருமணம் ஆன நோயாளிகளில் பலர் புதிதாகத் திருமணம் ஆனவர்களாகவும், கருத்தரித்தவர்களாகவும்  இருப்பதைக் காண்கிறோம். இது தன்னைத் தாக்கிய நோயை ஒன்றுமறியாத தன்னை நம்பித் திருமணம் செய்பவருக்கும் பரப்பி ஏமாற்றுவதாகும்.

3.ஏமக்குறை உள்ளவர்களை விலக்கி வைக்காமல் அவர்கள் சிகிச்சை பெற உதவுதல்.

4.கல்லூரி இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஏமக்குறை நோய் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல்.

ஏமக்குறையின் தாக்கங்கள் நம் நாட்டில் இன்னும் பத்தாண்டுகளில் மிக அதிகமாக இருக்கும். இந்தியாவின் எதிர்காலம்  ஆரோக்கியமான இளைஞர்களை நம்பி இருக்கிறது.

ஏமக்குறை நோய் ஒழிப்பில் நம்மாலானதைச் செய்து    நோயற்ற வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! 

------------------------------------------------------------------------------

இந்தக் கட்டுரையில் ஏமக்குறை நோய் பற்றிய விபரங்களை முற்றிலும் தமிழ் அறிவியல் சொற்களை வைத்து எழுதியுள்ளேன். அவற்றுக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொற்களையும் கொடுத்துள்ளேன்.

அதோடு இது மிகப்பெரிய சமுதாயப்பிரச்சினையாக இருப்பதால் அதன் பின் ஏமக்குறைநோய்க்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும், ந்ம்முடைய கடமையையும்  இந்தக்கட்டுரையில் விவரித்துள்ளேன்.

தமிழ்த்துளி தேவா.

-----------------------------------------------------------------------------

30 comments:

பீர் | Peer said...

ஏமக்குறை என்று பெயர் வரக்காரணம்?

அண்ணன் வணங்காமுடி said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

இய‌ற்கை said...

Informative.........வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ஜோ/Joe said...

அருமை ..உங்களுடைய உழைப்பு தெரிகிறது ..போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்!

நட்புடன் ஜமால் said...

இந்த பெயர் முதன் முறையாக கேள்வி படுகிறேன்.

வெற்றி பெற வாழ்த்துகள்.

தேவன் மாயம் said...

பீர் | Peer said...
ஏமக்குறை என்று பெயர் வரக்காரணம்?

08 October 2009 07:0///
நோய் எதிர்ப்புக் குறை என்று அர்த்தம்!!

தேவன் மாயம் said...

அண்ணன் வணங்காமுடி said...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

08 October 2009 07:0//

நன்றி! வணங்காமுடி!

தேவன் மாயம் said...

இய‌ற்கை said...
Informative.........வெற்றி பெற வாழ்த்துக்கள்...

08 October 2009 07:0//

நன்றிங்க!

தேவன் மாயம் said...

ஜோ/Joe said...
அருமை ..உங்களுடைய உழைப்பு தெரிகிறது ..போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்!

08 October 2009 07:05

மிக்க நன்றி!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
இந்த பெயர் முதன் முறையாக கேள்வி படுகிறேன்.

வெற்றி பெற வாழ்த்துகள்.///

நன்றி ஜமால்!

கோவி.கண்ணன் said...

சிறப்பாக இருக்கிறது. போட்டிகளைத் தவிர்த்துப் பார்த்தாலும் தமிழ் விக்கி பீடியாவில் ஏற்றுவதற்கு சிறப்பான ஒரு கட்டுரை.

வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

கோவி.கண்ணன் said...
சிறப்பாக இருக்கிறது. போட்டிகளைத் தவிர்த்துப் பார்த்தாலும் தமிழ் விக்கி பீடியாவில் ஏற்றுவதற்கு சிறப்பான ஒரு கட்டுரை.

வாழ்த்துகள்

08 October 2009 07:27///

நன்றி கோவி!உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி!

லவ்டேல் மேடி said...

டாக்டர்... வெற்றி பெற வாழ்த்துக்கள்...!!

வெற்றி பெற்றால் நாலு வலைப்பூ எழுத்தாளர்களுக்கு இலவசமா ட்ரீட்மென்ட் பாக்குறேன்னு வேண்டிக்கோங்க.. கண்டிப்பா வெற்றி உங்களுக்கே.....!!

எம்.எம்.அப்துல்லா said...

கண்டிப்பாக இந்தக் கட்டுரை வெற்றி பெரும். முன்கூட்டியே எனது வாழ்த்துகள் மருத்துவர் அண்ணே :)

க.பாலாஜி said...

மிகத்தேவையான தகவல்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது. புதிய தகல்கள்...

வாழ்த்துக்கள் அன்பரே....voted 2/2

தேவன் மாயம் said...

லவ்டேல் மேடி said...
டாக்டர்... வெற்றி பெற வாழ்த்துக்கள்...!!

வெற்றி பெற்றால் நாலு வலைப்பூ எழுத்தாளர்களுக்கு இலவசமா ட்ரீட்மென்ட் பாக்குறேன்னு வேண்டிக்கோங்க.. கண்டிப்பா வெற்றி உங்களுக்கே.....!!

08 October 2009 07:31///

மேடி!!உங்கள் வாக்குக்கு நன்றி!! இலவசமா ட்ரீட் குடுப்போம்!!

தேவன் மாயம் said...

எம்.எம்.அப்துல்லா said...
கண்டிப்பாக இந்தக் கட்டுரை வெற்றி பெரும். முன்கூட்டியே எனது வாழ்த்துகள் மருத்துவர் அண்ணே :)

08 October 2009 07:32///

அன்புக்கும் நல்ல வாக்குக்கும் நன்றி!!

தேவன் மாயம் said...

க.பாலாஜி said...
மிகத்தேவையான தகவல்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது. புதிய தகல்கள்...

வாழ்த்துக்கள் அன்பரே....voted 2/2

08 October 2009 07:33///

பாலாஜி ஆதரவே பெரிய பலம்!!

T.V.Radhakrishnan said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

பீர் | Peer said...

அப்ப.. போட்டி இன்னும் முடியலையா? வருஷக்கணக்கா நடக்கிற மாதிரி தெரியுது...

வாழ்த்துக்கள்... டாக்டர்.

தேவன் மாயம் said...

T.V.Radhakrishnan said...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

நன்றி நண்பரே!
08 October 2009 07:52


பீர் | Peer said...
அப்ப.. போட்டி இன்னும் முடியலையா? வருஷக்கணக்கா நடக்கிற மாதிரி தெரியுது...

வாழ்த்துக்கள்... டாக்டர்.///

நன்றி பீர்!

08 October 2009 08:38

ஜெரி ஈசானந்தா. said...

மிரட்டல் பதிவு. பரிசு கிடைக்க வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

வெற்றிபெற வாழ்த்துகள் சார்..

ஆ.ஞானசேகரன் said...

நல்ல உழைப்பு தெரிகின்றது.

Anonymous said...

மேலும் விவரம் அறிய முடிந்தது வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்...

வால்பையன் said...

மிக மிக பயனுள்ள கட்டுரை நண்பரே!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

சிங்கப்பூர் போகும் போது லிஸ்ட் வாங்கி செல்லவும்!

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான கட்டுரை.. வெற்றி பெற வாழ்த்துகள் தேவா சார்.. .

மங்களூர் சிவா said...

மிக மிக பயனுள்ள கட்டுரை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

வெண்ணிற இரவுகள்....! said...

//”நானும் முழுவதும் தமிழில் எழுதப்பட்ட தொழில்நுட்பக்கட்டுரை” என்ற தலைப்பில் மருத்துவத்தில் எழுத ஆரம்பிக்கும்போது சாதாரண ஆங்கிலச் சொற்களைக் கூட தமிழ்ப்படுத்தாமல் இருப்பதைக் கண்டேன். நமது பாடப் புத்தகங்களும் அப்படியே உள்ளன. //

ஆமாம் உண்மை நண்பரே

வெண்ணிற இரவுகள்....! said...

//”நானும் முழுவதும் தமிழில் எழுதப்பட்ட தொழில்நுட்பக்கட்டுரை” என்ற தலைப்பில் மருத்துவத்தில் எழுத ஆரம்பிக்கும்போது சாதாரண ஆங்கிலச் சொற்களைக் கூட தமிழ்ப்படுத்தாமல் இருப்பதைக் கண்டேன். நமது பாடப் புத்தகங்களும் அப்படியே உள்ளன. //

ஆமாம் உண்மை நண்பரே

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory